பதினாறின் பெருமை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பதினாறு உத்க்ருஷ்டமான [மிக்க உயர்வு பொருந்திய] நம்பர். “ஷோடச கலா பூர்ணம்” என்பது. ஷோடசம் – பதினாறு. அமாவாஸ்யையில் ஆரம்பித்து பௌர்ணமி வரை பதினாறு கலைகள். பதினாறாவது கலையை அடைகிறபோதே சந்திரன் பூர்ண சந்திரனாவாது. ஒரளவுக்கு விரிவாக நாம் பண்ணுகிற பூஜை ஷோடசோபசாரம் என்கிற பதினாறு வித உபசாரங்களைக் கொண்டாக இருக்கிறது. ஸப்த மாத்ருகா என்று ஏழு தேவிகளைச் சொல்கிற மாதிரி ஷோடச மாத்ருகா என்று பதினாறு தேவதைகள் உண்டு. அம்பாள் ராஜராஜேச்வரி மந்த்ரங்களிலே ஷோடசாக்ஷரீதான் உச்சி. அதனால் அம்பாளுக்கு ஷோடசீ என்று ஒரு பெயர்.

அம்மாவுக்கு ஷோடச அக்ஷரம், பிள்ளைக்கு – பிள்ளையாருக்கு – ஷோடச நாமாக்கள்.

‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழணும்’ என்று ஆசீர்வாதம் பண்ணுவது தமிழ் தேச வழக்கு. வேதத்தில் ஒரு ஸுமங்கலிக்கு என்ன ஆசீர்வாதம் சொல்லியிருக்கிறதென்றால், “பகவானே! இவள் பத்துக் குழந்தைகளைப் பெத்துக் கொண்டு [பெற்றுக் கொண்டு] அப்புறம் பதியையும் பதினோராவது குழந்தையாக ‘ட்ரீட்’பண்ண வை!” என்று உள்ளே ரொம்ப அர்த்தம் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறது1. தமிழ் வழக்கில் “பதினாறும் பெற்று” என்று இருக்கிறது. ‘ஃபாமிலி ப்ளானிங்’ யுகம்! சொன்னாலே உள்ளே தள்ளிவிடுவார்களோ?’ என்று பயமாயிருக்கிறது!

ஆனால் ‘பதினாறும் பெற்று’ என்பது குழந்தை பெற்றுக் கொள்வதை குறிக்கவில்லை என்றும், வாழ்க்கை நல்லவிதமாக இருப்பதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களையே குறிக்கின்றனவென்றும் சொல்கிறார்கள். ‘பெரும் பேறு பெறுவது’ என்று ஒரு phrase [சொற்றொடர்] இருக்கிறது. ‘பெறப்படுவது’ தான் ‘பேறு’. பிரஸவ காலத்தைப் பேற்றுக்காலம் என்பது அதனால்தான். ‘பெரும் பேறு’ என்கிறபோது ரொம்ப பாக்யவசமான ஒன்று, அத்ருஷ்டவசமான ஒன்று என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். நாமாக ஒன்றும் பாடுபடாமல் ஈச்வராநுக்ரஹத்தால் ‘பெற்றுக் கொள்வதை’யே இங்கே ‘பேறு’ என்பது. ‘Gifted’ என்று இதே அர்த்தத்தில் அவர்களும் [மேநாட்டினரும்] சொல்கிறார்கள். இம்மாதிரியான பதினாறு பேறுகளைப் பெறுவதில்தான் ‘பதினாறும் பெற்று’ என்பது. ஈச்வரன் அருளில் தன்னியல்பாகக் கிடைப்பவை மட்டுமின்றி நாமாக முயற்சி பண்ணி, உழைத்துப் பெறக் கூடியனவும் இவற்றில் உண்டு. யோசித்துப் பார்த்தால், நாம் ஒன்றும் செய்யாமல், பிறக்கும்போதே அவன் கொடையாகக் கிடைப்பதுங்கூட, பூர்வ ஜென்மாவில் நாம் இருந்ததையும் பண்ணினதையும் வைத்து அவன் கொடுத்ததுதான் என்று தெரியும். நம் கர்மாவுக்காக கிடைக்க வேண்டிய நல்லதுகளையே அவன் கருணையால் கொஞ்சம் ‘கூடப் போட்டு’க் கொடுத்திருக்கலாம். அப்படிப் பேறு பெற்றவனை அத்ருஷ்டக்காரன் என்கிறோம். நம் அறிவால் காணமுடியாமல் அ-த்ருஷ்டமாக (அ-த்ருஷ்டம் என்றால் ‘காண முடியாதது’ என்றே நேர் அர்த்தம்) உள்ள பூர்வ ஸுக்ருத பலனைத்தான் சாஸ்த்ரம் அத்ருஷ்ட பலன் என்பதே!

எந்த ஒரு வழிபாடும் ஆரம்பிக்கும்போது ‘இதற்காக இந்தப் பூஜை பண்ணுகிறேன்’ என்று ‘ஸங்கல்பம்’ செய்து கொள்ள வேண்டும். ‘எதற்காக’ என்றால், ஸஹகுடும்பம் [தன் குடும்பம் முழுதும்] க்ஷேமம்-ஸ்தைர்யம் (ஸ்திரத் தன்மை, Stability என்பது) வீர்யம் – விஜயம் – ஆயுஸ் – ஆரோக்யம் – ஐச்வர்யம் ஆகிய எல்லாவற்றிலும் அபிவிருத்தி காண்பதற்காக என்று, ஏழு சமாச்சாரங்களைச் சொல்லி, அப்புறம் தர்ம – அர்த்த – காம – மோக்ஷம் என்ற நாலு புருஷார்த்தங்கள் ஸித்திப்பதற்காகவும் – ஏழும் நாலும் பதினொன்றாச்சு – அப்புறம், ‘இஷ்ட காம்யார்த்த ஸித்த்யர்த்தம்’ என்பதாக ‘மனோரதங்களின் பூர்த்தியை வேண்டி’ என்று ஒன்று – இதோடு பன்னிரண்டாச்சு – ஸமஸ்த மங்களங்களும் கிடைப்பதற்காக, ஸமஸ்த துரிதங்களும் (அதாவது பாபங்களும்) ஒடுங்கிப் போவதற்காக என்று மேலும் இரண்டைக் கூட்டி, இதோடு பதிநான்கு விஷயங்களாச்சு – அப்புறம் புத்ர பௌத்ரர்கள் அபிவிருத்தியாவதற்காக என்று பதினைந்தாவது; கடைசியாக எந்த ஸ்வாமிக்குப் பூஜையோ அவருக்கு ப்ரீதி ஏற்பட்டு அவர் ப்ரஸாதத்தால் நம் அபீஷ்டம் எல்லாம் நிறைவேறணும் என்று பதினாறு விஷயங்களைப் ப்ரார்த்தித்து ஸங்கல்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் லௌகிகம் ஜாஸ்தி இருக்கிறதென்று நினைப்பவர்கள் முடிவாக, இன்னும் இரண்டு சேர்த்துக் கொள்வார்கள். ஞானம், வைராக்யம் என்ற இரண்டு ஸித்திப்பதற்காக (‘ஞான வைராக்ய ஸித்யர்த்தம்’) என்று சேர்த்துக் கொள்வார்கள்.

“பதினாறும் பெற்று” என்று தமிழ் வழக்கில் சொல்லும் பதினாறில் ஏறக்குறைய இப்போது நான் சொன்ன பதினாறு ஸமாச்சாரங்களும் வந்துவிடுவதாக ஞாபகம். சரியாக நினைக்கவில்லை. ‘வீர்ய – விஜய’ என்று இதில் வருவது போலவே ‘வீறு – விசயம்’ என்று அதில் அடுத்தடுத்து வரும் என்று மட்டும் ஞாபகமிருக்கிறது2.

பேறுகள் பதினாறு, பிள்ளையாருக்குப் பேர்கள் பதினாறு!


1 ரிக் வேதம் 10.85.45

2 தமிழ் வழக்கிலுள்ள பதினாறு பேறுகளைப் பற்றிய தனிப்பாடல்:

துதிவாணி, வீறு, விசயம், சந்தானம், துணிவு, தனம்,

மதி, தானியம், சௌபாக்யம், போகம், அறி(வு), அழகு,

புதிதாடு பெருமை, அறம், குலம், நோயகல் பூண்வயது

பதினாறு பேறும் தருவாய் மதுரை பராபரனே.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is எல்லா இடையூறும் நீங்க உபாயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஷோடச நாம சுலோகங்கள்
Next