முடிவான நிலையை விடுதலை என்று மட்டும் சொல்வதேன் ? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆனாலும் பொதுவாகவே ஸத்ய ஸாக்ஷாத்காரத்தை விட பந்த மோசனத்திற்கே முக்யம் கொடுப்பதாக ஆகித்தான் முடிவாக அடையவேண்டிய பூர்ண நிலைக்கே ‘மோக்ஷம்’ என்றும் ‘முக்தி’ என்றும் பேர் கொடுத்திருக்கிறது. அந்த வார்த்தைகள் நாம் எந்த நிலையை அடைகிறோமோ அதைச் சொல்லவில்லை. எதை விடுகிறோமோ அதைத்தான் சொல்கிறது. ‘விடுபட்ட நிலை’ என்பதுதான் மோக்ஷம், முக்தி என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம். ‘வீடு’ என்று தமிழில் சொல்வதை விடுபடுவதை வைத்துத்தான். ‘லிபரேஷன்’ என்பதும் அப்படியே! ‘முச்’ என்று ஒரு தாது, அதாவது வேர்ச்சொல். அதற்கு ‘மோச்’ என்றும் ஒரு ரூபம் உண்டு. அந்த தாதுவுக்கு அர்த்தம் ‘விடுபடுவது’. ‘முச்’சை வைத்து உண்டான பெயர்ச்சொல் ‘முக்தி’. அதிகம் வழக்கில் இல்லாவிட்டாலும் ‘முகு’ என்றும் ஒரு பெயர்ச்சொல் உண்டு. ‘முகு’வான விடுதலையைத் தருபவனே ‘முகுந்தன்’, ‘மோச்’சை வைத்து உண்டான பெயர்ச்சொல் ‘மோக்ஷம்’, ‘மோசனம், ‘விமோசனம்’ ஆகியன. ஆகக்கூடி இவை எல்லாமே ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதைச் சொல்கிற வார்த்தைகளாக இருக்கின்றனவேயொழிய விடுபட்ட பின் கிடைக்கும் பேரானந்தத்தைச் சொல்கிறவையாக இல்லை! முடிவான நிலையை இப்படி விடுதலை என்று மாத்திரம், ஏதோ ஒன்றிலிருந்து விடுபடுவதாக மாத்திரம் சொல்வது ஏன்? விடுபட்டபின் எதையோ ஒன்றை அடைகிறோமே – ப்ரஹ்மமாகவே ஆகிற ஸாக்ஷாத்காரத்தை அடைகிறோமே – அதை வைத்துப் பேர் சொல்லாதது ஏன்?

ஏன் என்றால் இரண்டு காரணம் தோன்றுகிறது. ஒன்று  : அந்தப் பேரானந்தத்தை உள்ளபடிச் சொல்ல வார்த்தை இல்லை என்பதாலேயே இப்படி வைத்து விட்டது என்று சொல்லலாம்.

இன்னொரு காரணம் என்னவென்றால் …..

ஒவ்வொரு மத ஸித்தாந்தத்திற்கும் முக்யமான ப்ரமாண நூலாக ஒரு ஸுத்ர புஸ்தகம் இருக்கும். அதில் அந்த ஸித்தாந்தக் கோட்பாடுகளையெல்லாம் ரொம்பவும் சுருக்கமான வாக்கியங்களில் சொல்லியிருக்கும். அப்படி நம்முடைய வேதாந்த ஸம்பிரதாயத்திற்கு உள்ள புஸ்தகம் ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ என்பது. அதில் முதல் ஸுத்ரத்திலேயே புஸ்தகம் எதைக் குறித்தது, அதன் ஸப்ஜெக்ட் என்ன என்று சொல்லியிருக்கிறது. “ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸை” என்று அதைத் தெரிவிக்கிறது. “ஜிஜ்ஞாஸை” என்றால் “அறிகிற ஆவல்”. இங்கே “ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸை” என்று சொல்லியிருப்பதற்கு “ப்ரஹ்மத்தை அறியும் ஆவலோடு செய்யப்படும் விசாரணை” என்று அர்த்தம். இப்படிப் புஸ்தகத்தின் ஸப்ஜெக்டாகச் சொல்லியிருப்பதுதான் அந்த புஸ்தகத்தைப் பிரமாணமாகக் கொண்ட மதஸ்தருக்கு லக்ஷ்யமான ஆப்ஜெக்ட் ! வேதாந்த மதஸ்தர்களான நம்முடைய ஆப்ஜெக்ட் – அதாவது லக்ஷ்யம் – என்னவென்றால் ப்ரஹ்மத்தை அறிவதுதான். அறியணுமென்ற ஆவல் இருந்தால்தானே அறிய முயற்சி செய்வோம்? அதனால் முதலில் அப்படிப்பட்ட அறிகிற ஆவல் – ஜிஜ்ஞாஸை – இருக்க வேண்டுமென்றாகிறது. அதாவது நான் என்ன காட்ட வந்தேனென்றால்: நம்முடைய வேதாந்த மதத்தின் ப்ரமாண ஸூத்ரத்தில் நம்முடைய லக்ஷ்யமாக ப்ரஹ்மத்தை அறிவதே சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்மத்தை அறிவதென்பது அநுபவிப்பதுதான். ஆகையால் ப்ரஹ்மஸாக்ஷாத்காரந்தான் நம்முடைய மதத்தின் லக்ஷ்யம். அந்த லக்ஷ்யத்தில் நம்மைச் சேர்ப்பிப்பதற்காகவே அந்த ஸூத்ர புஸ்தகம் ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரித்து, அதைக் குறித்த விஷயங்களை நமக்குச் சொல்லப் போகிறது என்று முதல் ஸூத்ரம் தெரிவிப்பதாகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்ன என்றால், ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்ட மோக்ஷத்தைச் சொல்லப்போவதாக இங்கே புஸ்தக ஸப்ஜெக்டைச் சொல்லாமல், விடுபட்ட பின் கிடைக்கிற ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தைச் சொல்லியிருப்பதுதான். கெடுதலான ஸம்ஸாரம் போகிறது என்ற ‘நெகடிவ்’ அம்சத்தை மாத்திரம் தெரிவிக்கும் ‘மோக்ஷ ஜிஜ்ஞாஸை’யைச் சொல்லாமல், நல்லதான ப்ரஹ்மஞானம், ப்ரஹ்மாநுபவம் என்ற ‘பாஸிடிவ்’ அம்சத்தைத் தெரிவிப்பதாக ‘ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸை’என்று சொல்லியிருக்கிறது.

வேதாந்த மதத்தின் ஆதார ஸூத்ரம் இப்படி இருந்தாலும், மோக்ஷம், மோக்ஷம் என்றே வெகுவாகச் சொல்வதாக ஏன் ஏற்பட்டதென்றால் ….. முன்னே ஒன்று சொன்னேன்; இன்னொரு காரணமும் தோன்றுகிறது. வேத வேதாந்தக் கருத்துக்கள் தோன்றிய ஆதிகாலத்திலேயே பிற்பாடு பௌத்தம், பாதஞ்ஜலம் (அதுதான் யோக சாஸ்திரம்) , நியாயம் [தர்க்கம்] என்றெல்லாம் உருவான மதங்களின் கருத்துக்களும் முளை விட்டிருக்கின்றன. மநுஷ்ய ஸமுதாயம் என்ற ஒன்று இருந்தால் அதில் எப்போதுமே பல தினுஸான அபிப்ராயங்களும் கொஞ்சம் கொஞ்சமாவது இருந்து கொண்டுதானிருக்கும். அப்படியிருப்பதில் வேதத்திலேயே ‘வைதிகம்’ என்று சொல்லப்படும் நம்முடைய மதத்திற்கு வித்யாஸமான அபிப்ராயங்களும் கொஞ்சங் கொஞ்சம் ஒவ்வோரிடத்தில் ஜாடைமாடையாகத் தெரிகிறது. பிற்காலத்தில் வித்யாஸம் நன்றாகவே செய்யப்பட்டு, அதை உடைத்துக் காட்டியே வேறே மதங்கள் உண்டாயிருக்கின்றன. இவற்றில் அடிநாஸ்திகமான லோகாயத மதத்தைத் தவிர மற்ற எல்லா மதங்களுமே ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுவதைத்தான் ஒரே மாதிரி மையமான விஷயமாகச் சொல்லியிருக்கின்றன. ‘ஸ்வாமியுமில்லை, ஆத்மாவுமில்லை. சாவுக்கு அப்புறம் கர்மைவை அநுபவிக்க எதுவுமில்லை. ஆகையினால் இஷ்டப்பட்டபடி உண்டு, உடுத்திக் கொண்டு கேளிக்கையாக இருக்கலாம்’ என்று சொல்லும் லோகாயத்தை ‘மதம்’ என்று பொதுவாகச் சொல்லப் படுவதிலேயே சேர்ப்பதற்கில்லையாதலால் அதை விட்டு விடலாம். ஆகையால் சுத்த வேதாந்தத்திற்கு வித்யாஸமான எல்லா மதங்களும் ஸம்ஸார விடுதலையைச் சொல்கின்றன என்று சொல்லி விடலாம். ஆனால் எல்லா மதங்களும் அந்த விடுதலைக்கப்புறம் பிரம்ம ஸாக்ஷாத்காரமான ஸச்சிதானந்த நிலை கிடைப்பதைச் சொல்கின்றனவா என்றால், அதுதான் இல்லை! பௌத்தம் முடிவில் எல்லாம் சூன்யமாய் விடுகிற ‘நிர்வாண’த்தைச் சொல்கிறது. ந்யாய மதம் – அதோடயே சேர்த்துச் சொல்லப்படும் வைசேஷிக மதமும்தான் – துக்கம் நிவிருத்தியாகும் ‘அபவர்கம்’ என்பதை முடிவான லக்ஷ்யமாகச் சொல்கின்றன. அது துக்கம் நிவிருத்தியாகும் நிலை என்றுதான் சொல்கின்றனவே தவிர ஸுகம் நிறைந்த நிலை என்று சொல்லவில்லை. ஸம்ஸார பந்தம் போனதால் துக்க நிவ்ருத்தி. ஆனால் அதை ஸுக ப்ராப்தி என்று சொல்லாததால், ஒரு கஷ்டமும் தெரியாமல் ஜடமாக இருக்கும் நிலையாக நினைக்கவும் இடமிருக்கிறது. ஸாங்கியத்தின் லக்ஷ்யமான ‘கைவல்ய’த்திலும் பிரகிருதி என்கிற மாயையின் ஆட்டத்திலிருந்து விடுதலை மட்டுமே குறிக்கப் படுகிறதே தவிர பாஸிடிவான ஆனந்த ஸ்திதி சொல்லப் படவில்லை. பாதஞ்ஜல யோகத்திலும் முதல் ஸூத்ரத்தில் லக்ஷ்யத்தைச் சொல்லும்போதே ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் என்று பாஸிடிவாகச் சொல்லாமல் சித்த ஒட்டத்தை அடக்குவது என்று நெகடிவாகவே சொல்லியிருக்கிறது! மாயையின் பாதிப்பும், ஸம்ஸார பந்தமும் சித்த ஓட்டத்தினால்தானே நமக்கு உண்டாகிறது? ஆகையால் சித்தத்தைப் பட்ட கட்டை மாதிரி ஆக்கிக் கொண்டு விட்டால் கிடைக்கும் பந்த மோக்ஷத்தைத்தான் அந்த மதமும் சொன்னதாகிறது.

இந்த எல்லா மதங்களுக்கும் வித்து ஆதிகாலத்திலிருந்தே இருந்திருக்கிறது. அதனால்தான் நம்முடைய வேதாந்த மதமும் எல்லா மதங்களுக்கும் ‘காம’னான ஸம்ஸார நீக்கமாகிற ‘மோக்ஷம்’ என்பதையே லக்ஷ்யமாகச் சொன்னது. இப்படி ஒரு காரணம் தோன்றுகிறது.

வேதாந்த வழியில் போய் அந்த மோக்ஷத்தைப் பெறுகிற போது அது தன்னால் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரமாகத் தானிருக்கும். அங்கே [பிரம்ம ஸாக்ஷாத்காரத்திலே] ஒருத்தன் புதுசாக ப்ரஹ்மம் என்று ஏதோ ஒன்றை ஸாக்ஷாத்கரிக்கவில்லை. ஸுக ‘ப்ராப்தி’ என்று சொல்லும் படியாகப் புதுசாக எந்த ஆனந்த – ஸச்சிதானந்த – ஸ்திதயையும் ‘அடைய’வுமில்லை. எப்போதுமே ஜீவன் ப்ரஹ்மமாக இருப்பவன்தான்; ஸச்சிதானந்த கனமாக இருப்பவன்தான். ஆனாலும் அப்படியிருப்பது அவனுக்குத் தெரியாதபடி மாயை பந்தப்படுத்தியிருந்தது. ஸாதனையெல்லாம் பூர்த்தியாகப் பண்ணியவுடன் அந்த பந்தம் கத்தரித்துப்போகிறது. மாயையிலிருந்து அவன் விடுபடுகிறான்; அதாவது மோக்ஷம் அடைகிறான். உடனே ஆடமேடிக்காகத் தன்னை நிஜ ஸ்வரூபமான ப்ரஹ்மமாக தெரிந்துகொண்டு விடுகிறான். ஸாதனையெல்லாம் மாயை போவதற்கே, மாயையிலிருந்து விடுதலைக்கே ஒழிய, ஸச்சிதானந்த ப்ரஹ்மத்தை உண்டு பண்ணவோ, அதை அடையவோ, அல்லது அது ஸம்பந்தமாக ஏதொன்றும் பண்ணுவதற்கோ இல்லை. அதை உண்டு பண்ண முடியாது. அழிக்கவும் முடியாது. எப்போதுமே இருப்பது அது. ஸ்வயம் ஸித்தமாக – கைவசத்திலேயே – எப்போதும் உள்ள அதை ‘அடைவது’ என்பதற்கும் இடமில்லை.

இப்படிப் பார்த்தால், ஸாதனையினால் நடப்பது மாயாபந்தத்தை உடைத்துப் போடும் விடுதலையே என்பதால் ஸாதனா லக்ஷ்யத்தை மோக்ஷம் என்று சொல்வதும் நியாயந்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முமுக்ஷ§த்வம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  முமுக்ஷ§ : ஆசார்யாள் தரும் லக்ஷணம்
Next