முமுக்ஷு : ஆசார்யாள் தரும் லக்ஷணம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

மாயையிலிருந்து விடுபட்டு ப்ரஹ்மமாவதிலேயே பூரா மனஸையும் செலுத்தி அதே ஈடுபாடாக இருப்பது தான் முமுக்ஷுதை. அப்படி இருப்பவன் முமுக்ஷு.

அஹங்காராதி தேஹாந்தான் பந்தான் – அஜ்ஞாந கல்பிதான்
ஸ்வஸ்வரூபாவபோதேந மோக்துமிச்சா முமுக்ஷுதா ||

என்பது ஆசார்யாள் விவேக சூடாமணியில் கொடுத்திருக்கும் டெஃபனிஷன் 1. இங்கே ஆசார்யாள் விடுபட வேண்டிய மாயை, விடுபட்ட அப்புறம் அநுபவிக்கிற ஸ்வரூப ஸாக்ஷாத்காரம் இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

அஞ்ஞானம் என்பதே மாயை. மாயையால்தான் பரமாத்மாவுக்கு வேறேயாக தனியாக ‘நான்’ என்று ஒன்று இருப்பது போன்ற அஹங்காரம் கற்பிக்கப்படுகிறது. அனர்த்த பரம்பரைக்கு இந்த அஹங்காரம்தான் ஆரம்பம். ஸுக்ஷ்மமாக எண்ண ரூபத்திலே இருக்கும் அந்த அஹங்காரத்தில் ஆரம்பித்து ஸ்தூலமக ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கும் தேஹத்தில் போய் அந்தப் பரம்பரை முடிகிறது. தேஹத்தையே ‘தான்’ என்று நினைக்கப் பண்ணுவது அஞ்ஞானத்தின், அதாவது மாயையின், முடிவான கார்யம். பரம ஸுக்ஷ்மமான அஹங்காரத்திலிருந்து நன்றாகத் தெரிகிற ஸ்தூல தேஹம் ஈறாக அஞ்ஞானமானது பந்தங்களைக் கல்பித்து ஜீவனைக் கட்டிப் போட்டிருக்கிறது. இதைத்தான் ‘அஹங்காராதி தேஹாந்தான் பந்தான் அஜ்ஞான கல்பிதான்’ என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து, இந்தக் கட்டிலிருந்து, விடுபடுகிற ஆசையே – ‘மோக்தும் இச்சா’: விடுபட வேண்டுமென்ற இச்சையே – ‘முமுக்ஷுதா’: முமுக்ஷுதை எனப்படுவது. இதுதான் மோக்ஷத்தின் நெகடிவ் டெஃபனிஷன். முடிவான நிலை பாஸிடிவாக என்ன என்பதையும் மறக்காமல் [ச்லோகத்தின்] நடுவிலேயே பதிந்து வைத்திருக்கிறார், ‘ஸ்வஸ்வரூபாவபோதேன’ என்று போட்டு! ஸ்வஸ்வரூப அவபோதம். “அவபோதம்” என்றால் விழித்துக் கொள்வது. அஞ்ஞான இருட்டிலிருந்து ஞான விழிப்புப் பெறுவது. எதைப் பற்றிய ஞானம்? “ஸ்வ-ஸ்வரூப”த்தைப் பற்றியதுதான் – அதாவது “தன்னுடைய நிஜமான தன்மையான ஆத்மாவைக் குறித்து”. “ஆத்மாவை குறித்த” என்பதைவிட “ஆத்மாவேயாகிய” ஞான விழிப்பு என்பது இன்னும் பொருத்தம். Awareness என்கிறார்களே, அப்படிப்பட்ட விழிப்புற்ற தன்னறிவும் ஆத்மாவும் வேறேவேறே இல்லை; இரண்டும் ஒன்றுதான். மாயை என்பது அஞ்ஞானம் என்றால் ப்ரஹ்மம் என்பது ஞானம். அந்த ஞானம்தான் ஸ்வஸ்வரூப அவபோதம்.

பந்தத்திலிருந்து விடுபட வேண்டுமென்பது, அதோடு முடிந்து போகிற லக்ஷ்யமில்லை. ‘பந்தம் கஷ்டமாயிருக்கிறது. அதனால் அது போகட்டும். அப்புறம் கஷ்டம் தெரியாமல் கல்லு, மண்ணு மாதிரி எப்படி வேண்டுமானாலும் இருப்போம்’ என்பதாக பந்த மோக்ஷத்தையே முடிவாக – end in itself ஆக- நினைப்பவனை நம்முடைய ஆசார்யாள் முமுக்ஷு என்று சொல்ல மாட்டார். சித்தவ்ருத்தி நிரோதமே [சித்த ஒட்டத்தை அடக்குவதே] போதுமென்று பதஞ்சலி சொல்லி, விட்டுவிட்ட மாதிரி ஆசார்யாள் விடமாட்டார். “ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸை” அல்லவா அவருடைய மூல ஸுத்ரத்தின் ஸப்ஜெக்டும் ஆப்ஜெக்டும்? ஆகையால் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டாகவே – ஜீவாத்மா தன்னைப் பரமாத்மாவுக்கு அபேதமாக தெரிந்து கொள்ளும் ஸ்வஸ்வரூப அவபோதத்தின் பொருட்டாகவே – அஞ்ஞான பந்தத்திலிருந்து விடுபடத் தாபத்தோடு ஆசைப்படுவதைத்தான் அவர் முமுக்ஷுதை என்பார்; அப்படி ஆசைப் படுபவனைத் தான் முமுக்ஷு என்பார். இந்த ச்லோகத்திலிருந்து அது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. “ஸ்வஸ்வரூபாவபோதேன” என்றால் “ஆத்ம ஞான விழிப்பினால்” என்று அர்த்தம். அப்படிப்பட்ட விழிப்பால் அஞ்ஞான பந்தத்திலிருந்து விடுதலை பெற இச்சிக்க வேண்டும் என்கிறார். இப்படிச் சொன்னதால் ‘முதலில் ஸாக்ஷாத்காரம் (அதுதான் இங்கே சொல்லியிருக்கும் அவபோதம்’) . அப்புறம் அதனால் பந்தமோக்ஷம். இத்தனை நாழி சொன்னதற்கு நேர்மாறாகப் பாஸிடிவான ஸாக்ஷாத்காரமும் முடிந்த முடிவாக நெகடிவ் மோக்ஷத்தில் தான் கொண்டு விடுகிறது’ என்று அர்த்தம் பண்ணி விடக்கூடாது. வேதாந்த மதத்தின் லக்ஷ்யத்தை அறிந்த யாரானாலும், ஆசார்யாளின் புஸ்தகங்களையெல்லாம் பார்த்து அவருடைய ஹ்ருதயத்தை அறிந்த யாரானாலும், அப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ள மாட்டார்கள்.

பந்தமோக்ஷம், ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஆகிய இரண்டில் எது முன்னாடி, எது பின்னாடி என்பதே கிடையாது. இரண்டும் சேர்த்து ‘ஸைமல்டேனிய’ஸாக உண்டாகிறவை. நல்ல இருட்டிலே ஒரு நெருப்புக் குச்சியைக் கிழிக்கிறோம். வெளிச்சம் உண்டாகிறது, இருட்டுப் போகிறது. வெளிச்சம் உண்டாகிக் கொஞ்ச நாழி கழித்தா இருட்டு போகிறது. இரண்டும் ஒரே காலத்தில்தான் நடக்கின்றன?

ஆனாலும் ஒன்று கவனிக்கணும். இருட்டு போய் அதே ஸமயத்தில் வெளிச்சம் உண்டாகவில்லை. வெளிச்சம் உண்டாகித்தான் அதே ஸமயம் இருட்டுப் போகிறது!

இதில்தான் வேதாந்த மதத்தின் சிறப்பு இருக்கிறது. அது ஆத்ம ஜ்யோதிஸைக் கண்டுபிடித்துக் கொள்வதையே தான் மையமாக வைத்து நித்யாநித்ய வஸ்து விவேகத்திலிருந்து ஆரம்பித்து மேலே மேலே போகிறது. புத்தர் சொன்னமாதிரி துக்க நிவிருத்தி. பதஞ்சலி சொன்ன மாதிரி துக்கப்படுத்தும் சித்தத்தின் நிரோதம் என்று சொல்லாமல் ப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்கரிப்பதைத்தான் உபநிஷத் ரிஷிகள், ப்ரஹ்ம ஸுத்ரகாரர், ஆசார்யாள் எல்லாரும் சொல்லி வந்திருக்கிறார்கள். அவர்கள் ஸத்ய அன்வேஷணம் என்றே புறப்பட்டுப் போகச் சொன்னவர்கள். அதாவது, ‘எது உண்மையோ அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஸம்ஸாரம் நல்லதோ கெட்டதோ, துக்கமோ ஸந்தோஷமோ எப்படி வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஒரு ப்ரவாஹம் நிலை கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறதென்றால் இதற்கு ஆதாரமாக நிலையாயுள்ள ஏதோ ஒன்றின் மேலேதானே இது நடக்க வேண்டும்? ஜீவன் என்றிருக்கிற நம் விஷயத்திலும் அதுபோலவே, அழிந்துபோகிற நமக்கு உயிரை, அறிவை, சக்தியைக் கொடுக்கிற ஒரு அழியாத அடிப்படை இருக்கத்தானே வேண்டும்? அது என்ன என்று கண்டுபிடிக்கணும்’ என்று, ‘ஒரு மஹா ஸத்யத்தை நாம் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடிக்க முடியும்’ என்ற உத்ஸாஹத்துடன், நம்பிக்கையுடன் கம்பீரமாக, தீரமாக தேடிக்கொண்டு புறப்பட்டவர்கள், நம்முடைய மூல புருஷர்கள். ஸத்யத்திற்காகவே ஸத்யம் என்று புறப்பட்டவர்கள். ‘துக்கம் இருக்கே: த்ருஷ்ணை [வேட்கை] இருக்கே; இதுகள் கஷ்டப் படுத்துகிறதே!’ என்று அழுதுகொண்டு, அந்த அழுகையிலிருந்து விடுதலை காணவேண்டுமென்று, அந்த விடுபட்ட நிலை எப்படியானாலும் ஸரியென்று புறப்பட்டவர்களில்லை. சித்த விருத்திகள் போட்டுப் பிடுங்குகிறதே என்று நொந்து கொண்டு அதிலிருந்து விடுபட்டு, எப்படியாவது விடுபட்டு, அப்புறம் எங்கே போய்ச் சேர்ந்தாலும் பரவாயில்லை என்று புறப்பட்டவர்களில்லை. பொய்யான மாயை மறைத்துக் கொண்டிருக்கிற ஸத்யமான ஆத்ம ஜ்யோதிஸைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றே புறப்பட்டவர்கள்; மற்றவர்களையும் அப்படிப் புறப்படச் சொன்னவர்கள்…..

அழுது கொண்டு புறப்பட்டவர் என்று நான் சொன்னவரை – புத்தர்தான் அவர்; அவரை-ப் பற்றிக் கூட அந்த மதஸ்தர்கள் ஸ்தோத்ரிக்கும் போது, ‘போத’த்திற்காக, அதாவது பாஸிடிவான ஞானத்திற்காகத் தான் அவர் புறப்பட்டுப் போனது, அப்புறம் ‘போதி’ மரத்தின் கீழேயே ஞானம் பெற்றார், அதனாலேயே ‘புத்தர்’ என்று பெயர் பெற்றார் என்றுதான் சொல்கிறார்கள். அந்த மரத்திற்குக் கீழே உட்கார்வதற்கு முன்னால் அவரே சொன்ன வசனமாக அப்படி ஒரு ச்லோகம் சொல்லியிருக்கிறார்கள் – தீவிர முமுக்ஷுதைக்கு இதைவிட உதாரணமுண்டா என்று நாமும் கொண்டாடும்படியாக:

இஹாஸநே சுஷ்யது மே சரீரம்
த்வகஸ்தி மாம்ஸாநி லயம் ப்ரயாந்து |
அப்ராப்ய போதம் பஹூகல்ப துர்லபம்
நைவாஸநாத் காயமிதம் சலிஷ்யதி || 2

“இந்த ஆஸனத்திலேயே இந்த உடம்பு வற்றிச்சுக்காகப் போகட்டும். (‘சுஷ்கம்’என்பதிலிருந்து தான் ‘சுக்கு’ வந்தது. இஞ்சி வற்றி வற்றிச் சுஷ்கமாவதால் அப்படிப் பேர்.) தோலும், எலும்பும், மாம்ஸமும் நசித்தே போகட்டும். ‘போதம்’ பெறாமல் – எத்தனையோ கல்ப காலத்திற்கு அப்புறமே அதைப் பெற முடியுமென்றாலும் ஸரி, அப்படிப் பெறாமல் – இந்த இடத்தைவிட்டு இந்த உடம்பு நகராதாக்கும்!” என்று மஹா த்ருட ஸங்கல்பத்துடன் சொன்னாராம். அந்த விஷயம் எப்படியானாலும் நம்முடைய உபநிஷத் ரிஷிகள் தீரர்களாகப் பரம ஸத்யத்தைக் கண்டு கொள்ளவே ஸகலத்தையும் விட்டுப் புறப்பட்டவர்கள்.

இப்படியாக ஸத்யத்தைக் கண்டுபிடிப்பதையே லக்ஷ்யமாக வைத்து ஸாதனை பண்ணிக்கொண்டு போகிறவருக்கு அந்த ஸத்ய ஜ்யோதிஸின் தரிசனம்தான் விஷயமாகத் தெரியும். அதிலிருந்தே மாயை இருட்டு போயிற்று என்று அவர்கள் அநுமானம் பண்ணிக் கொள்ளும்படியாக இருக்கும். தங்கள் அநுபவத்தை ஞானிகள் சொல்லும்போது எப்படி விவரித்திருக்கிறார்களென்று பார்த்தால், அதே குறியாக ஆத்ம விசாரம் பண்ணிக் கொண்டே போனதாகவும் டகாலென்று [சடேரென்று] ஆத்மா ப்ரகாசித்து விட்டது என்றுந்தான் சொல்லியிருப்பார்கள். மாயா பந்தம் என்று ஏதோ ஒன்று போனதாகத் தங்களுக்குத் தெரிந்து அப்புறம் ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டானதாகச் சொல்லியிருக்கவே மாட்டார்கள். ஏனென்றால், கௌட பாதாசார்யாள் [மாண்டூக்யோபநிஷத் காரிகையில்] சொல்லியிருப்பது மோல் மாயை என்றோ, மாயா பந்தம் என்றோ, பந்தமோசனம் என்றோ தெரியும்படியாக வாஸ்தவத்தில் அந்த விஷயங்கள் எதுவுமே கிடையாது. அந்த ‘ஹை ஃபிலாஸஃபி’ இப்போது உங்களுக்கு வேண்டாம். அதெப்படியானாலும் ஸரியான அத்வைத ஸாதகனுடைய ஒரே லக்ஷ்யம் ஆத்ம ஸாக்ஷாத்காரந்தான். அதற்காகவே அவன் ஸாதனாந்தத்தில் மஹாவாக்யங்களை ஸதாவும் த்யானம் பண்ணிக் கொண்டேயிருந்து அப்படியே அந்த வாக்யங்கள் சொல்லும் ஜீவ-ப்ரஹ்ம அபேத ஸ்திதியை ப்ரத்யக்ஷத்தில் அநுபவித்து விடுகிறான். அப்படி அநுபவம் ஏற்பட்டதாலேயே பந்தம் போயிற்று என்று தெரிந்து கொள்ளும் படியாக ஆகிறது. அதனால் இதற்கப்புறம் அது [ஸாக்ஷாத்காரத்திற்கு அப்புறம் பந்தமோக்ஷம்] என்கிற மாதிரி ஆசார்யாள் போட்டிருக்கிறார். “ஸ்வஸ்வரூப அவபோதேன மோக்தும்” என்று! அவ்வளவுதான்!

‘அவபோதம்’ என்றால் விழிப்பு என்றேன். தூக்கம் என்பது தானாக எங்கேயோ ஓடிப்போய்விட்டு அப்புறமா விழிப்பு உண்டாகிறது? டக்கென்று விழிப்பு உண்டாகிறது? டக்கென்று விழித்துக் கொண்டு விடுகிறோம். அதனாலேயே தூக்கம் போய்விட்டது என்று தெரிந்து கொள்கிறோம். அப்படித்தான் இதுவும்.

இன்னொன்றுகூடச் சொல்லலாம். ‘ஸ்வஸ்வரூப அவபோதாய‘, அதாவது ஆத்ம ஞான விழிப்புக்காகத்தான், முமுக்ஷுவாக இருக்கிற நிலையில் ஒருவன் பந்த மோக்ஷத்தை இச்சிக்கிறான். அந்த நிலைக்கு மேலே போய் ஸித்தியே பெறுகிறபோதோ “ஸ்வஸ்வரூப அவபோதேன” – தான் பெற்ற ஞான விழிப்பினாலேயே பந்த மோக்ஷம் ஏற்பட்டு விட்டது என்று தெரிந்து கொள்கிறான்.


1 ச்லோ 27 (அ) 28

2 புத்த சரித்திரமான ‘லலித விஸ்தர’த்தில் காணும் ச்லோகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முடிவான நிலையை விடுதலை என்று மட்டும் சொல்வதேன் ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அடிநிலை, நடுநிலை,முமுக்ஷ§
Next