அடிநிலை, நடுநிலை முமுக்ஷு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஒரே தீவிரமாக மோக்ஷத்திற்கு இச்சிப்பதுதான் முமுக்ஷுத்வம் என்று சொன்னேன். (‘மோக்ஷத்திற்கு’ என்று பொது அபிப்ராயப்படி சொன்னாலும் , ‘ஸாக்ஷாத்காரத்திற்கு’ என்றே அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். பொது அபிப்ராயப்படியும், ஆசார்யாளும் அதையே பின்பற்றிச் சொல்கிறபடியும், ‘மோக்ஷம்’ என்றே சொல்லிக் கொண்டு போகிறேன்.) மோக்ஷத்தில் தீவிரமான தாபம் தான் முமுக்ஷுதை. ஆனாலும் கருணை மனஸ் கொண்ட ஆசார்யாள் அத்தனை தீவிரமாகத் தவிக்காதவர்களையுங்கூட மந்த, மத்யம தசை முமுக்ஷுகளாக அங்கீகரித்து அடுத்த ச்லோகத்தில் அவர்களையும் உத்ஸாஹப்படுத்தும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.

கீழ் மட்டத்திலிருப்பது மந்த தசை, நடுத்தரமாக இருப்பது மத்யம தசை. உச்ச மட்டத்திலிருப்பது உத்தம தசை. உச்ச மட்டத்திலிருப்பது உத்தம தசை. உபாஸனைகளில், ஸாதனைகளில் ஆளைப் பொறுத்து மந்தாதிகாரி, மத்யமாதிகாரி, உத்தமாதிகாரி என்று மூன்று சொல்வது வழக்கம்.

அத்வைத ஸாதனையில் ஒரளவு உசந்த கட்டத்திற்குப் போன நிலையில்தான் முமுக்ஷுதை ஆழமாக ஏற்படும். அதாவது உத்தமாதிகாரிதான் மற்ற எல்லாவற்றிலும் ஆசையைத் தள்ளி மோக்ஷமே குறி என்று இருப்பான். ஆனாலுங்கூட, கருணையினால் ஆசார்யாள் இதிலேயும் மத்ய-மத்யம அதிகாரிகளுக்கு இடம் கொடுத்துச் சொல்லியிருக்கிறார். அடிநிலையில் இருக்கிறவனுங்கூட மோக்ஷத்தில் ஒரு இச்சை வைத்துத்தானே ஸாதனை என்று ஆரம்பித்திருக்கிறான்? அவனுக்கும் மந்த தசையில் முமுக்ஷுதை இருப்பதாக ஆசார்யாள் அருளோடு, அநுதாபத்தோடு நினைத்திருக்கிறார். அப்புறம் கொஞ்சம் ஸாதனை பண்ணிக் கொஞ்சம் பக்குவமடைந்தபின் அவன் ஆரம்பத்திலிருந்ததைவிட, இந்த வாழ்க்கை ஒரு மாயம்தான் என்று புரிந்து கொண்டு இன்னும் கொஞ்சம் நன்றாகவே மோக்ஷத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பான். இது மத்யம தசை. ஆனால் இப்போதும் ஸ்டெடியாக அதிலேயே சித்தம் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டுதானிருக்கும். ஆரம்பத்தில் ரொம்பவும் க்ஷணிகமாக [க்ஷண காலத்ததாக] இருந்த முமுக்ஷுதை இப்போது கொஞ்சம் நின்று நிலைத்ததாக இருக்குமென்றாலும், இதுவும் வேர் பிடித்து ஊன்றி நிற்காமல் மாயை பிடித்துக் கொள்ளத்தான் செய்யும். அதனாலே அலுத்து சலித்து அந்த மத்யம தசை முமுக்ஷு, “நமக்காவது, மஹா பெரிய மோக்ஷ ப்ராப்தி கிடைப்பதாவது?” என்று நம்பிக்கை இழந்துவிடுவதுகூட உண்டு. இவன் ஸமாசாரமே இப்படியென்றால் மந்த தசையிலிருப்பவனைப் பற்றி கேட்கவே வேண்டாம்! இவர்களையும் உத்ஸாஹப்படுத்தி ஸாதனை வழியை விடாமல் விடாமுயற்சி பண்ண வைப்பதற்காக ஆசார்யாள் கருணையோடு சொல்கிறார்:

மந்த-மத்யம – ரூபாபி வைராக்யேண சமாதிநா|
ப்ரஸாதேன குரோ: ஸேயம் ப்ரவ்ருத்தா ஸுயதே பலம் ||

“அப்பா? அழாதே! குரு ப்ரஸாதம் இருந்தால் எதுவும் நடக்கும். ஆனால் நீயும் அதற்குப் பாத்ரனாகும்படி முடிந்த மட்டும் வைராக்யத்தை அப்யாஸம் பண்ணு. சமாதி ஷட்கத்தை அப்யாஸம் பண்ணு. அப்படிப் பண்ணினால் உன் முமுக்ஷுதை மந்தமாகவோ, மத்யமமாகவோ இருந்தால்கூட குருவின் அநுக்ரஹத்தில் அது நன்றாக விருத்தியாகிப் பலன் தந்துவிடும்” என்று சொல்கிறார்.

மந்தம், மத்யமம், உத்தமம் என்று மூன்று இருப்பதில் உத்தமம் என்பதை ‘ப்ரவ்ருத்தம்’- நன்றாக விருத்தியானது – என்று சொல்லியிருக்கிறார். தன்னால் முடியவில்லையே என்று அழாமல், முடிந்தமட்டும் முயற்சி பண்ணினால் குரு அநுக்ரஹமும் சேர்ந்து மந்த மத்யமங்கள்கூட ப்ரவ்ருத்தமாகி விடும் என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முமுக்ஷ§ : ஆசார்யாள் தரும் லக்ஷணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  குருப் ப்ரஸாதம்
Next