அநுபூதி பெற்ற குரு கிடைப்பாரா? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

குருவை அநுபவியாகத்தான் சாஸ்திரங்கள் காட்டுகின்றன: ‘ப்ரம்ம நிஷ்டம்’ என்று உபநிஷத்தில்; ‘தத்வ தர்சின:’ என்று கீதையில். அப்படிப்பட்டவர், நிஜமாகவே ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவர், இந்த நாளில் கிடைப்பாரா என்று யோஜனை பண்ண வேண்டாம். நிஜமான முமுக்ஷுதாவோடு தவியாகத் தவித்தால் ஈச்வரன் நிச்சயம் அப்படி ஒருவரைக் காட்டிக் கொடுக்காமல் விடமாட்டான். ஸதாகால ப்ரஹ்ம நிஷ்டரோ இல்லையோ, இருக்கிறதற்குள் ச்ரேஷ்டரான ஒருவரைக் காட்டி அவருக்குள்ளே இவனுக்கு மஹாவாக்யம் தருகிற ஸமயத்தில் ஸாக்ஷாத் அந்த ஈச்வரனே ஆவிர்பாவம் ஆகி உபதேசம் பண்ணிவிடுவான். அப்படித்தான், அப்படித்தான்1; அதிலே ஸந்தேஹமே வேண்டாம். இந்த நாளிலும் அநுபவியான குரு கிடைப்பாரா என்று இவன் ஏங்கிக் கொண்டிருக்கிற மாதிரியே, இந்த நாளிலும் நிஜமான முமுக்ஷு கிடைப்பானா என்று ஸ்வாமியும் ஏங்கிக் கொண்டுதான் இருப்பாராதலால் அப்படிப்பட்டவனை விட்டுவிட மாட்டார். வெளியிலே ஸ்தூல ரூபத்திலே ஒரு மநுஷ குருவுக்குள்ளேதான் என்றில்லாமல் இவனுடைய அந்தராத்மாவிலேயே அவர் ஸூக்ஷ்ம குருவாக ஆவிர்பவித்தும் அநுக்ரஹிப்பதுண்டுதான். ஆனால் அதை நான் சொல்லப்போனால், இந்த அடங்காப் ….. [சட்டென்று வார்த்தையை மாற்றி] அடக்கம் போதாத ஸ்வதந்திர யுகத்தில், ‘குரு என்றே ஒரு ஆள் வேண்டாம். ஈச்வரன் தானே நேராக அப்படி நமக்குள்ளேயே அநுக்ரஹம் பண்ணி விடுவான். சங்கரசார்யாரே சொல்லிவிட்டார்’ என்று ஆரம்பித்துவிடக்கூடும்! வெளி குரு இல்லாமல் உள் குருவாக அவனே வருவதென்பது அபூர்வத்திலும் அபூர்வம். ரொம்பவும் அபூர்வமான உசந்த முமுக்ஷுக்களுக்கே அப்படி வருவது. அல்லது ரொம்பவும் அபூர்வமான பூர்வ ஸம்ஸ்காரம் இருக்கிறவனுக்கு அவன் முமுக்ஷுவாக இல்லாமல் ஸாமான்ய நிலையிலிருந்தால்கூட ஈச்வரனே இழுத்துப் பிடித்துத் தடுத்தாட்கொள்வதுமுண்டு. அதை ஜெனரல் ரூலாக்குவது அடியோடு பிசகு.



1
பரம ஸத்தியமான ஒன்றை உள்ளபடி உணர்ந்துரைக்கும் மகிழ்ச்சியுடனும் அழுத்தத்துடனும் பிரமாண மொழியாகக் கூறுகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சிரவணமும் சிசுருஷையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஒரே குறியில் ஈடுபாடு
Next