சிரவணமும் சுசுரூஷையும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

முதலில் ச்ரவணம். குரு செய்யும் மஹாவாக்யோபதேசத்தைக் கேட்டுக் கொள்வதையே அப்படி முக்யமாகச் சொல்வது. குரு அதோடுகூட உபதேசிக்கிற மற்ற ப்ரஹ்ம வித்யா சாஸ்திர ஸம்பிரதாய விஷயங்களையும், இப்படியிப்படி ஜீவ-பிரம்ம அபேதத்தைப் பற்றி அலசி த்யானம் செய்யவேண்டும் என்று அவர் வழி முறைகள் சொல்லித் தருவதையும், ஸொந்த அநுபவத்திலிருந்து அவர் கற்றுக் கொடுக்கக்கூடியவற்றையும் நன்றாகக் கேட்டுக் கொள்வதும் ச்ரவணந்தான்.

ச்ரவணம் என்றால் காதால் கேட்டுக் கொள்வதென்று மட்டும் அர்த்தமில்லை. அப்படியே ஹ்ருதயத்தினாலேயே க்ரஹணம் பண்ணி குரு வாக்யத்தைப் பிடித்துக் கொள்வதைத்தான் ‘ச்ரவணம்’ என்று உபசாரமாகச் சொல்வது. ‘சாப்பிடுவது’ என்னும்போது வாயால் செய்யும் கார்யமாகத்தான் போஜனத்தைச் சொல்கிறோம். ஆனால் அதன் லக்ஷ்யம், ப்ரயோஜனம் அது வயிற்றுக்குள்ளே போய் ஜெரித்து ரத்தமாவதுதானே? வாய் என்ற வெளி அவயவத்தால் பண்ணுவதைப் பேரிட்டுச் சொல்கிற மாதிரிதான் காது என்பதால் பண்ணும் ச்ரவணத்தைச் சொல்வதும், காதால் சாப்பிட்ட உபதேச அம்ருதம் புத்தியிலேயும் மனஸிலேயும் ஜீர்ணமாகி அப்புறம் ஹ்ருதயதிற்குள்ளே போய்விடுவதுதான் தாத்பர்யம். “என் செவியில் எல்லையில்லா ஆனந்தம் அளித்து” என்று விநாயகரகவ’லில் சொல்லியிருப்பது இப்படிச் செவி மூலமாகப் போய் முடிவில் ஹ்ருதயத்தில் ஆத்மானந்தம் உண்டாவதைத் தெரிவிக்கிறது.

ஸர்வ வியாபகமான ஆகாச தத்வம் சப்தம் என்பதற்கே உரியது. அதனால்தான் சப்தரூபமான உபதேசங்களைக் கேட்டுக் கொள்வதான ச்ரவணத்திற்கு முக்யத்வம். ஆகாசத்தில் ஈச்வரனின் ச்வாஸத்திலிருந்தே ஸூக்ஷ்ம சப்த வைப்ரேஷன்களாக வெளிப்பட்டவற்றை ரிஷிகள் அதீந்திரிய சக்தியால் கேட்டு, நம்முடைய காதுகளும் கேட்கும்படிப் பிடித்துக் கொடுத்திருக்கும் சப்தக் கோவைகளே நம்முடைய வேத மந்திரங்கள். அவர்கள் உள் காதால் கேட்டதை நாமும் காதால் – வெளிக் காதால் – தான் கேட்டுக் கொள்ள வேண்டுமேயன்றி, எழுதி வைத்துக் கண்ணால் படித்தல்ல என்றே விதி பண்ணி வைத்திருக்கிறது. ஏனென்றால் அப்போதுதான் ஹ்ருதயாகாசத்திற்குள்ளே பேச வேண்டிய உபதேச தாத்பர்யம் அகண்டாகாசம், பரமாத்ம ச்வாஸம், ச்வாஸிக்கும் பரமாத்மா என்பதாக அதன் மூலஸ்தானத்தையே தொட்டுக் கொண்டு, ‘ட்ரேஸ்’ பண்ணிக்கொண்டு போவதாக இருக்கும். அதனால்தான் ச்ரவணத்திற்கு முக்யத்வம்.

இன்னொன்று : புஸ்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும்போது, புஸ்தகம் ஜட வஸ்து. அது எழுத்தைத் தான் காட்டுமே தவிர, அதன் அர்த்தமான உயிரை ஊட்டாது. உபதேச தத்வத்தை அநுபவித்தறிந்தவனான ஆசாரியன் என்ற உயிருள்ள ஒரு மீடியத்தின் வழியாக அந்த எழுத்துக்கள் வரும்போதே உபதேசம் உயிரோடு உள்ளே போகும்.

இதெல்லாம் மட்டுமில்லாமல் குருமுக உபதேசம் என்கிறபோதுதான் ஒருவனுக்கு சிஷ்ய பாவம் ஏற்படுகிறது. அதன் விநயமும், நைச்சியமும் அஹங்கார நசிப்புக்கு ரொம்பவும் அவச்யமாகும். ‘கஷ்டமான ஞான யோக ஸாதனையாக்கும் நாம் பண்ணுகிறோம்’ என்பதாலேயே தலை தூக்கக் கூடிய தலைக் கனத்தை தலையிலே போட்டு அடக்குவதற்கு குரு என்று ஒரு அநுபவியைக் காட்டி அவருக்கு இவனை சுச்ரூஷை பண்ண வைப்பதே உபாயமாக இருக்கிறது.

சுச்ரூஷை என்று சொன்னேன். ‘சிச்ரூஷை’ என்று தப்பாக சொல்கிறார்களே, அது! ‘ரூட்’ படி அர்த்தம் சொன்னால் ‘சுச்ரூஷா’ என்பதே ‘ச்ரவணம்’ ஸம்பந்தப்பட்டதுதான். ‘ச்ரூ’ என்ற தாதுவுக்கு ‘கேட்பது’ என்று அர்த்தம். அதை வைத்தே ச்ரவணம், சுச்ரூஷா என்ற இரண்டு வார்த்தையும் உண்டாயிருப்பது. சுச்ரூஷா என்பதற்கு நேர் அர்த்தம் ‘கேட்க விரும்புவது’ என்பதேயாகும்.

‘கேட்க விரும்புவது’ என்பதன் அர்த்தம் குரு ஸம்பந்தப்படும்போது, ‘கேட்டுக் கொண்டபடி நடக்க விரும்புவது’ என்று நீளுகிறது! வெறுமே கேட்டுக்கொண்டு[விட்டு] விடுவதில்லை. அது [கேட்டுக் கொள்ளும் விஷயம்] பிடிக்கவில்லை என்று தள்ளுவதோ, பிடித்திருந்தாலும் ‘பேஷ்’ சொல்லிவிட்டு அதோடு விடுவதாக இல்லை. ‘பிடிச்சிருக்கு, பிடிக்கலை’ என்பதற்கே இடமில்லாமல், என்ன கேட்டுக் கொள்கிறோமோ அதை அநுஷ்டித்தே காட்ட வேண்டும். ஆகையால், “கேட்டுக் கொள்ளப் போகும் விஷயம் என்னவானாலும் அதை நடத்தியே காட்ட விரும்புவது” என்பதாக ‘சுச்ரூஷை’க்கு அர்த்தம் ஒரே நீளமாக நீண்டு போகிறது!

“சொன்னதைக் கேளு!” என்கிறோம். “சொன்ன பேச்சைக் கேட்கிறது கிடையாது” என்று திட்டுகிறோம். இங்கேயெல்லாம் ‘கேட்கிறது’ என்றால் ‘கேட்டபடி நடப்பது’ என்றுதானே அர்த்தம்? அந்த மாதிரி, கேட்டபடி நடப்பதற்காகவே கேட்டுக்கொள்ள விரும்புவதுதான் சுச்ரூஷை.

சொன்ன பேச்சைக் ‘கேட்பதற்கு’ ரொம்பவும் பணிவுக் குணம் வேண்டும். பணிவுக் குணம் வந்துவிட்டால் யாரிடம் பணிகிறோமோ அவருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று தன்னியல்பாக ஆசை ஏற்பட்டுவிடும். அதாவது, பணிவு உண்டானால் பணிவிடை செய்ய வேண்டுமென்று தோன்றிவிடும். அந்தப் பணிவிடையே தான் உலக வழக்கில் சுச்ரூஷை என்றாகிவிட்டது!

“குரு கிட்டே போ! தடால்னு விழு! நன்னாக் கேட்டுக்கோ! தொண்டு பண்ணு! பண்ணி அவரிடமிருந்து ஞானோபதேசம் பெறு!” – “தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா” – என்று பகவான் சொல்லியிருக்கிறார்1. “தத் வித்தி” தான் ‘ஞானோபதேசம் பெறு”. “ப்ரணபாதம்” – தடாலென்று விழுவது2. ‘பாதம்’ – விழுவது; ‘நிபாதம்’ – நன்றாக விழுவது. ப்ர-நிபாதம் (ப்ரணிபாதம்) – ரொம்ப நன்றாக, ஒரே விழலாக, சரணாகதி என்று விழுவது. ‘பரிப்ரச்னேன’ – நன்றாகக் கேட்டுக் கொள்வது. விஷயத்தைத் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்து கொள்வது. அதுதான் சுச்ரூஷை. அதைச் சொன்னவுடனேயே ‘ஸேவயா’ என்கிறார்; ‘தொண்டு பண்ணு’ என்கிறார்………

ஒன்றிலிருந்து ஒன்றாக விஷயம் சுவடு விட்டுக்கொண்டு போவதில் இங்கே ஒன்று தெரிகிறது. இந்த இடத்தில் கீதா ச்லோகங்கள் அமைந்துள்ள விதம் கர்மாவை எல்லாம் விட்டு ஸந்நியாஸியான பிற்பாடே குருவிடம் போய் ஞான யோகத்தில் உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று காட்டுவதாகவே இருக்கிறது. “கர்ம யோகத்தில் வெளி த்ரவ்யங்களை வைத்துக்கொண்டு செய்கிற யஜ்ஞத்தைவிட ஞானயோகமாகிற உள் யஜ்ஞந்தான் ச்ரேஷ்டமானது. எல்லாக் கர்மமும் ஞானத்தில்தான் பூர்த்தியாகிறது” என்று முந்தின ச்லோகத்தில் ஸ்வாமி சொல்கிறார். சொல்லிவிட்டு உடனேயே “ஸத்ய தத்வத்தை ப்ரத்யக்ஷத்தில் கண்ட – அதாவது அநுபவித்த – ஞானிகள் உனக்கு ஞானோபதேசம் செய்வார்கள். அவர்களிடம் போய் தடாலென்று விழுந்து, கேட்டுக் கேட்டு, தொண்டு பண்ணித் தெரிந்து கொள்” என்கிறார். இது வருகிற அத்யாயம் ஞான கர்ம ஸந்நியாஸ யோகம். இதையெல்லாம் பொருத்திப் பார்க்கும்போது கர்மாவை விட்டு, ஒரு ஞானியிடம் போய் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ப்ரஹ்ம வித்யா உபதேசம் பெறுகிறதைத்தான் சொல்லியிருக்கிறாரென்று தெளிவாக புரிகிறது……..

காதால் கேட்டுக் கொள்வதைக் கீழ்ப்படிதலுடன் நடத்திக் காட்டுவதற்காகவே ச்ரவணம் செய்வதான சுச்ரூஷை, இதன் இணைபிரியாத அங்கமாக உண்டாகும். பணிவு, அதிலிருந்து உண்டாகும் பணிவிடைப் பணி என்று முறையாகத் தொடர்ந்து போகிறது! காதால் கேட்கும் சுச்ரூஷை எதில் கொண்டு விடுகிறதோ அந்தப் பணிவிடைக்கும் சுச்ரூஷை என்று பெயர் வந்துவிட்டது. கால க்ரமத்தில் பஹு பேருக்கு சுச்ரூஷை என்றாலே பணிவிடைதான் என்று அர்த்தமாகி, அதற்கு முதல் அர்த்தம் ‘கேட்டுக் கொள்வது’ என்பதே தெரியாமலாகி விட்டது.

மெய்வருத்தி ஒரு சிஷ்யன் செய்கிற எந்தப் பணிவிடை ரூபமான சுச்ரூஷையையும்விட, தாம் கொடுக்கிற உபதேசத்தை அவன் அதற்கான கௌரவம் கொடுத்துப் பணிவுடன், அந்தரங்க சுத்தத்துடன், அந்தப்படியே பண்ணணும் என்ற தீர்மானத்துடன் கேட்டுக் கொள்வதான சுச்ரூஷையைத்தான் குரு பெரிதாக நினைத்துப் ப்ரீதியடைவார். அவர் கொடுக்கிற ஆத்மதனத்தை இவன் உரியபடி ப்ரயோஜனப்படுத்திக்கொண்டு உயர்வு காண்பதைவிட அவருடைய ஸுக ஸெளகர்யங்களுக்காக இவன் செய்கிற எந்தத்தொண்டையும் பெரிசாக நினைக்கமாட்டார். அவரைப் பொறுத்தமட்டில் இவன் காதால் முறைப்படி கேட்டுக் கொள்கிற சுச்ரூஷையேதான் அவருக்காக இவன் செய்யக்கூடிய மிகப் பெரிய கைங்கர்ய சுச்ரூஷையுமாகும். தமக்கு அவனால் பணிவிடை நடக்கணும் என்பதைவிடத் தம்மைக் கருவியாக வைத்து வரும் உபதேசத்தால் அவன் உயரணும் என்பதையே அவர் விஷயமாக நினைப்பாராகையால் ச்ரவண சுச்ரூஷையையே பெரிதாகக் கருதுவார். சிஷ்யனைப் பொறுத்த மட்டிலோ அவனுக்கு இரண்டு தினுஸு சுச்ரூஷையும் ஸம ப்ராதான்யம் [ஒரே போன்ற முக்யத்வம்] வாய்ந்தவையாயிருக்கணும் – உபதேசத்தையும் ஹ்ருதயபூர்வமாகக் கேட்டுக்கொண்டு கார்யத்தில் நடத்தணும்; உபதேசிக்கிற வரையும் ஈச்வரனே என்று புரிந்து கொண்டு அவரிடம் சரணாகதி பண்ணி, முடிந்த எல்லாப் பணிவிடையும் செய்ய வேண்டும்.

உபதேசிக்கப்பட்ட மந்த்ரம் பண்ணுவது பாதி என்றால் உபதேசிக்கிறவரின் அருள் பாதி பண்ணிவிடும்!

புஸ்தகத்திலிருந்து கற்றுக் கொண்டால் அப்போது இதற்கெல்லாம் இடம் ஏது?



1
கீதை IV. 34


2
தண்டகாரமாக நமஸ்கரிப்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is வேதக் கட்டளையாகவே சிரவணம் முதலியன
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அநுபூதி பெற்ற குரு கிடைப்பாரா ?
Next