பரஞ்ஜோதி (சிறுத்தொண்டர்); வாதாபி கணபதி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

மேற்கு டெக்கானின் சளுக்கிய ஸாம்ராஜ்ய ராஜதானியாயிருந்த வாதாபிதான் இல்வல – வாதாபிகள் இருந்த ஊர். அங்கேயும் ஒரு கணபதி இருந்தார், விக்ரஹ ரூபத்தில். வாதாபியிலிருந்ததால் அவரும் ஒரு வாதாபி கணபதி. அந்த ஊரை நரஸிம்ஹ வர்மா ஜயித்து, ஜய சாஸனம் நாட்டிய போது கமான்டர் – இன் – சீஃபாகப் போனவர் பரஞ்ஜோதி என்கிறவர்.

‘கலிங்கத்துப்பரணி’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது குலோத்துங்க சோழன் கலிங்க தேசத்தை ஜயித்ததைச் சொல்லும் நூல். குலோத்துங்கன் ஜயித்ததாகச் சொன்னாலும் வாஸ்தவத்தில் வெற்றிக்குக் காரண புருஷனாக இருந்தது அவனுடைய ஸேநாதிபதியாக இருந்த கருணாகரத் தொண்டைமான்தான். அந்த மாதிரி நரஸிம்ஹ வர்மாவின் வாதாபி வெற்றிக்கு அவனுடைய ஸேநாதிபதியான பரஞ்ஜோதியும் காரணமாயிருந்தார்.

அவர் கணபதீச்சரம் என்ற சிவாலயமுள்ள திருச்செங்காட்டங்குடியைச் சேர்ந்தவர். அதனால் பிறவியிலிருந்தே பிள்ளையாரிடம் அவருக்கு ஒரு பிடிமானம் இருந்திருக்க வேணும். இதுவும் ஒரு ஈச்வர லீலை — அவரே ஜயசாலியாக வாதாபியை ஜயித்து அங்கேயுள்ள பொன், மணி, யானை, குதிரை எல்லாவற்றையும் கவர்ந்துக்கொண்டு ஊர்வலம் வருகிறபோது அங்கே வாதாபி கணபதியைப் பார்த்தார். பார்த்தவுடன் பக்தி பொங்கிக்கொண்டு வந்தது. அந்த மூர்த்தத்தைத் தமக்கென்று எடுத்துக்கொண்டு விட்டார்.

அசோகருக்கு நடந்த மாதிரி, சித்தே முன்னே [சற்று முன்] சொன்னபடி சளுக்கிய விக்ரமாதித்தனுக்கு நடந்த மாதிரி, பரஞ்ஜோதி வாழ்க்கையிலேயும் இதைத் தொடர்ந்தாற்போல் அவர் பல்லவ ராஜ்யத்திற்குத் திரும்பிய பிறகு ஒரு பெரிய மாறுதல் நடந்துவிட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஆனைமுகரும் அகத்தியரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  மாமாத்திரர், அமாத்தியர்
Next