மாமாத்திரர், அமாத்தியர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பரஞ்ஜோதி ப்ராம்மண ஜாதியிலேயே வைதிகத்தை விட்டுவிட்டு லௌகிகப் பிரவிருத்திகளில் (தொழில்களில்) போனதால் தனியாகப் பிரிக்கப்பட்ட ‘மஹாமாத்ரர்’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாமாத்திரர்’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. ‘மாமாத்திரர்’ மாதிரியே ‘அமாத்தியர்’ என்று ஒரு ஜாதி. ஸம்ஸ்க்ருதத்தில் ‘அமாத்யன்’ என்றால் மந்திரி. ‘அமாத்யன்’ தான் தமிழில் ‘அமைச்சன்’ ஆயிற்று. ‘மைதுனன்’ என்பது ‘மச்சான்’ ஆன மாதிரி. இப்போது மந்திரி என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தை கூடாது என்று, ‘அமைச்சர்’ தமிழ் வார்த்தை என்று நினைத்து அப்படிப் போட்டுக் கொள்கிறார்கள்! மாணிக்க வாசக ஸ்வாமிகள் அமாத்ய ப்ராமணர். பாண்டிய ராஜாவுக்கு அமாத்யராக (மந்திரியாக) இருந்து ‘தென்னவன் பிரமராயன்’ என்று பட்டம் வாங்கியவர். பிராம்மணர் என்பதால் ‘பிரம’. ராஜாவின் பிரதம அதிகாரி என்பதால் ‘ராயன்’, சோழ ராஜாக்களும் பிராமண மந்திரிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிரமராயப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வைதிக தொழிலை விட்டுவிட்டு ராஜாங்கத்தில் ‘ஸிவில் அட்மினிஸ்ட்ரேஷன்’ செய்யும் ‘எக்ஸிக்யூடிவ் ஸைடு’க்குப் போன பிராமணர்களை அமாத்தியர் என்று பிர்த்து வைத்தது. பிராமணர்களிலேயே இன்னும் ஒரு படி தள்ளி மிலிடரி ஸர்வீஸுக்குப் போனவர்களை மாமாத்திரர் என்று பிரிவினை பண்ணிற்று. அந்த ஜாதிக்காரர்கள் வைத்தியத் தொழிலிலும் நிறையப் போயிருக்கிறார்கள். ஸேனையில் சேர்ந்து உயிரை எடுப்பது, வைத்தியராக உயிரைக் கொடுப்பது ஆகிய இரண்டு பணிகளும் விநோதமாக அந்த ஜாதியாருக்கு இருக்கிறது. அந்த ஜாதிதான் பரஞ்ஜோதி. அவரை இப்போது வேளாள ஜாதிக்காரராக ஆக்கிப் பிரசாரம் நடக்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பரஞ்ஜோதி (சிறுத்தொண்டர்) ; வாதாபி கணபதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  தவறான தனித்தமிழ் நாகரிகப் பிரிவினை
Next