ஆசார்யாள் என்று நாம் பூஜிக்கிற ஆதிசங்கர பகவத் பாதர்கள் ஸாக்ஷாத் பரமேச்வரனின் அவதாரம். தன்னுடைய சித்சக்தி [ஞான சக்தி] யை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு ஒரு கார்யமும் இல்லாமல் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்த தக்ஷிணாமூர்த்திதான் அப்படி அவதாரம் பண்ணினார். எத்தனைக்கெத்தனை மௌனமாக இருந்தாரோ அத்தனைக்கத்தனை பாஷ்யம், ஸ்தோத்ரம், வாதம் என்று பேசித் தீர்த்தார்; எழுதித் தீர்த்தார். எத்தனைக்கெத்தனை காரியமே இல்லாமலிருந்தாரோ அத்தனைக்கத்தனை காரியம் பண்ணினார். இடத்தை விட்டு நகராமல் ஆலவிருக்ஷத்தடியில் உட்காரந்திருந்தவர் மூன்று தரம் காலால் நடந்தே ஆஸேது ஹிமாசலம் [ராமேச்வரத்திலிருந்து இமயமலை வரை] ஸஞ்சாரம் பண்ணினார்.
கார்யமில்லாத ப்ரம்மம்தான் சிவன்; காரியம் பண்ணுகிற ப்ரம்மம் சக்தி. சித்சக்தி விலாஸத்தால்தான் காரியப் பிரபஞ்சம் நடக்கிறது. ஆசார்யாள் இத்தனை காரியம் பண்ணினார் என்றால், தக்ஷிணாமூர்த்தியாக இருந்தபோது உள்ளே அடக்கிக் கொண்டிருந்த சித்சக்தியான அம்பாள் இப்போது வெளியிலே ஆவிர்பவித்து விட்டாள் என்றே அர்த்தம். ஆகையால் ஆசார்யாளை ஈச்வரன், அம்பாள் இரண்டு பேரும் சேர்ந்த அவதாரம் என்று சொல்ல வேண்டும். மாதா, பிதா, குரு என்கிறோம். ஜகன்மாதாவும் ஜகத்பிதாவுமே சேர்ந்து இப்படி ஜகத்குருவாக வந்தார்கள்!
கார்யம் பண்ணாத தக்ஷிணாமூர்த்திக்குள் கார்யசக்தியான அம்பாள் இருந்த மாதிரியே, ஆசார்யாள் ஓயாமல் ஒழியாமல் எத்தனையோ கார்யம் பண்ணிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஒரு கார்யமும் பண்ணாத ப்ரசாந்த நிலையில்தான் இருந்து கொண்டிருந்தார். “கார்யமில்லாமல் தான் தானாக இருப்பதுதான் ப்ரம்மம்; அதுவேதான் ஜீவனுடைய ஆத்மாவின் ஸத்யமான நிலையும்” என்ற அத்வைத வேதாந்தத்தை அசைக்கமுடியாத ஸித்தாந்தமாக நிலைநாட்டிய அவர், தாமும் அப்படிப்பட்ட ப்ரஹ்மாநுபவத்திலேயே உள்ளூர இருந்தார்.
அப்படி பிரம்மமாக இருந்துகொண்டே, வெளியிலே மநுஷ்யாவதாரம் எடுத்ததால் மநுஷ்ய ரீதியிலே அநேக காரியங்களைச் செய்தார். ட்ராமாவில் எந்த வேஷத்தை எடுத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்தபடிதான் ஆட வேண்டும்; ஸொந்த ரூபத்தைக் காட்டக்கூடாது. லக்ஷாதிபதியான நடிகனானாலும் குசேலர் வேஷம் போட்டால் கிழிசல் வேஷ்டிதான் கட்டிக் கொள்ள வேண்டும்! ஆனாலும் அவன் எத்தனை உருக்கமாகக் குசேலர் வேஷம் போட்டாலும் அவனுக்கு வாஸ்தவத்தில் தான் தரித்திரன் இல்லை என்பது தெரியும். இப்படித்தான் இந்த ப்ரபஞ்ச நாடகத்தில் அவதார புருஷர்கள் ‘ஆக்ட்’ பண்ணுவார்கள். தங்களுடைய யதார்த்த ஸ்வரூபத்தை உள்ளுக்குள்ளே கொஞ்சங்கூட மறக்காமலே, வெளிப்பார்வைக்கு மறந்த மாதிரி மனுஷ்ய ரீதியில் ஆக்ட் பண்ணுவார்கள். ‘மாயா மாநுஷ’, ‘லீலா மாநுஷ’, ‘கபட நாடக வேஷ’ என்றெல்லாம் இதை வைத்துத்தான் கிருஷ்ண பரமாத்மா போன்றவர்களைச் சொல்கிறோம். ராமர் மஹாவிஷ்ணுவின் அவதாரமானாலும், ஸீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போன போது ஸாமான்ய மநுஷ்யர் மாதிரி துக்கப்பட்டார். லங்கையில் யுத்தபூமியில் லக்ஷ்மணர் மூர்ச்சையானபோது ஒரேடியாக அழ ஆரம்பித்து விட்டார்.
அவதாரங்கள் ஏன் இப்படிப் பண்ண வேண்டுமென்றால், அவர்கள் அவதரித்ததே ஜனங்களுக்கு வழி காட்டத்தான். ஜனங்கள் தங்களுடைய மநுஷ்ய சக்தியை வைத்துக் கொண்டே, ஸ்வபாவத்தை ஒட்டிப் போயே, ‘நேச்ச’ரை ‘வயலன்டா’க [பலாத்காரமாக] எதிர்க்காமல், படிப்படியாக உயர்த்திக் கொண்டு போயே முடிவிலே பூர்ணநிலை அடைய வேண்டும். இதிலே அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகத்தான் – ப்ரக்ருதி [இயற்கை] வேகங்களில் மாட்டிக் கொண்டு திண்டாடுகிற தாங்களும் அபிவிருத்தி அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் அவர்களுக்கு ஊட்டுவதற்காகத்தான் – அவதாரங்களும் மநுஷ்யர் மாதிரி நடக்கிறது; நடிக்கிறது.
இந்த மாதிரி ஆசார்யாளும் மநுஷ்யவேஷம் போட்டார். லோகமெல்லாம் அடிபட்டுப் போய் மனஸும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, இரண்டாவதாக இன்னொன்று இல்லாத அத்வைத ப்ரம்மமாகி நிறைந்து விடுகிற ஞான நிலையை உபதேசம் பண்ணத்தான் அவர் அவதாரம் பண்ணினார். அப்படியிருக்கும்போதே, மநுஷ்ய ஸ்வபாவத்துக்கு அநுகூலமாக லோகத்தையும் நிஜம் மாதிரி, மனஸையும் நிஜம் மாதிரி ஒப்புக்கொண்டே, இதெல்லாம் அடிபட்டுப் போகிற நிலைக்குப் படிப்படியாகக் கொண்டுபோகிற தினுஸிலேயே அவர் வழி போட்டுக் கொடுத்திருக்கிறார்.
ஸகலத்தையும் நடத்துகிற சக்தி ஒன்று இருக்கிறது. ப்ரஹ்மத்தைத் தவிர வேறே எதுவும் இல்லை என்பதால், அதற்குள்ளேயேதான் இந்த கார்ய மஹாசக்தியும் இருக்கிறது என்று ஆகிறது. ஆகையால் நிர்குணமான ப்ரம்மத்தை உபாஸிக்க முடியாதவர்கள் அதன் சக்தியிடம் மனஸை பக்தியில் திருப்பிவிட்டால் அப்புறம் அதன் காரியமில்லாத ஸ்வ-ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானத்தைப் பெற முடிகிறது. லோக வ்யாபாரங்களைச் செய்கிற கார்ய ப்ரம்மமே இந்த ஞானத்தையும் அநுக்ரஹித்து விடுகிறது என்பதால் நம் ஆசார்யாள் பக்தி மார்க்கத்தைத் தம்முடைய ஞான மார்க்கத்துக்குப் பூர்வாங்கமாக வைத்து, போஷித்து, விருத்தி பண்ணினார். இதற்காகத்தான் ஷண்மத ஸ்தாபனம் என்று தேவதா ஆராதனா மார்க்கங்களை ஸ்தாபிதம் பண்ணினார். அநேக பக்தி க்ரந்தங்களைப் பண்ணினார். இந்த தேசத்தில் ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாமல் க்ஷேத்ராடனமும் தீர்த்தாடனமும் பண்ணி அங்கங்கே யந்த்ரங்களை ஸ்தாபித்தார்; ஆலய பூஜாக்ரமங்களை ஏற்படுத்திக் கொடுத்தார்.