பக்தி-கவிதைச் சிகரம் “ஸெளந்தர்ய லஹரி” : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இப்படி பக்தி மார்க்கத்திலே அவர் அநேகம் பண்ணியதற்கெல்லாம் சிகரமாக இருப்பதுதான் ‘ஸெளந்தர்ய லஹரி’. ஆசார்யாளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கெல்லாம் அவரைப் பற்றி வேறென்ன தெரிந்திருக்குமோ தெரிந்திருக்காதோ – அவர் ப்ரஹ்ம ஸுத்ர பாஷ்யம் என்று தம்முடைய ஸித்தாந்தமான அத்வைதத்தை முடிந்த முடிவாக ஸமர்த்தனம் பண்ண [நிலைநாட்ட] எழுதியிருக்கிறாரென்பது கூடத் தெரிந்திருக்குமோ தெரிந்திருக்காதோ – அவர் பெயரைச் சொன்னாலே ‘ஸெளந்தர்ய லஹரி’ பண்ணினவர் என்று தெரிந்திருக்கும். ஆசார்யாள் என்றாலே பொது ஜனங்களுக்கு நினைவு வருவது ‘பஜ கோவிந்த’மும் ‘ஸெளந்தர்ய லஹரி’யுந்தான்.

அவருடைய பக்திப் பணிக்கு மட்டுமில்லாமல் கவி என்கிற முறையில் அவருக்கு உள்ள ப்ரதிபா சக்தியை [மேதையை]க் காட்டும் சிகரமான ஸ்ருஷ்டியும் ‘ஸெளந்தர்ய லஹரி’தான்.

அதை அவர் அமைத்திருக்கும் மீட்டருக்குப் பேரும் ‘சிகரிணி’ என்றே பொருத்தமாக இருக்கிறது! வரிக்குப் பதினேழு அக்ஷரமுள்ள மீட்டர்களில் அது ஒன்று. காளிதாஸர் நிரம்பக் காவ்ய ரஸத்தோடு எழுதியிருக்கும் ‘மேக ஸந்தேச’மும் பதினேழு அக்ஷர மீட்டர்களில் இன்னொன்றுதான். அதற்கு மந்தாக்ராந்தா என்று பேர். அதிலே பதினேழு அக்ஷரங்கள் 4-6-7 என்று மூன்றாகப் பிரியும். ‘சிகரிணி’ வ்ருத்தத்தில் அதே பதினேழு 6-11 என்று பிரியும்.

ஸங்கீத வித்வான்களும், நாட்ய சாஸ்திரக்காரர்களும் சொல்வார்கள்: இரட்டைப் படையாக ஆதிதாளம் மாதிரி இருப்பதைவிட மிச்ரம் என்று இரட்டைப் படையோடு ஒற்றைப் படையும் சேர்ந்தால்தான் அதிலே மிடுக்கு வேண்டிய ஸமயத்தில் மிடுக்கும் ஜாஸ்தி, விச்ராந்தி வேண்டிய இடத்தில் விச்ராந்தியும் ஜாஸ்தி என்று. அதே மாதிரி கவிதையிலும் வார்த்தைகள் பிரிகிறபோது இரட்டைப் படையோடு ஒற்றைப் படையும் சேர்ந்தால் அழகு ஜாஸ்தியாகிறது.

காவ்ய ரூபம், காவ்ய ரஸம் இரண்டுக்கும் ‘ஸெளந்தர்ய லஹரி’யைச் சிறப்பித்துச் சொன்னாலும் அதன் முக்யமான சிறப்பு பக்தி ஸ்தோத்ரம் என்கிற முறையில்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அவதார புருஷர் ஆசார்யாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஞானியும் பக்தியும்
Next