நந்திகேச்வரர் நாடகம் எதற்கு? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ஆனால் அம்பாள் ஏன் இதற்காக ஏதோ ஒரு பழைய ஸ்தோத்ரதைக் கொடுத்து, அதிலே ஒரு பாகத்தை இவர்பறிகொடுக்கப் பண்ணி, பறிபோனதை இவரே பாடி ஈடுகட்ட வேண்டும் என்று செய்யணும்?முழுசாக, புதுசாகவே இவரை ஒரு ஸ்தோத்ரம் பண்ணும்படி ஆஜ்ஞை பண்ணியிருக்கலாமே? முழுசாக, புதுசாகவே இவரை ஒரு ஸ்தோத்ரம் பண்ணும்படி ஆக்ஞை பண்ணியிருக்கலாமே? வேறே புஸ்தகத்தைக் கொடுத்து அதிலே ஒரு பாகம் மட்டும் லோகத்துக்குக் கிடைத்து இன்னொரு பாகம் கிடைக்காமல் பண்ணுவானேன்?’ என்றால் — அவளுடைய ஸங்கல்பம், லீலா விநோதம் நமக்குத் தெரியாது. இருந்தாலும் சில காரணம் தோன்றுகிறது.

அம்பாளை உபாஸிப்பதற்கு மந்த்ர யோகமும் இருக்கிறது, பக்தி மார்க்கத்தில் கவிதா லக்ஷணங்கள் பொருந்திய ஸ்தோத்ரமும் இருக்கிறது. மந்த்ர யோக உபாஸகர்கள் பக்தி ஸ்தோத்ரம் படிப்பவர்களைத் தங்களுக்கு மட்டமாக நினைக்கப்படாது-‘நம்ம மாதிரி ஒரு நியமமா, ஆசாரமா, தீவிர உபாஸனையா? ஒண்ணுமில்லாமல் ஸ்தோத்ரம் பாடிண்டு!’ என்று நினைக்கப்படாது. அதே மாதிரி ஸ்தோத்ர பாராயணம் பண்ணுகிறவர்களும் மந்த்ரோபாஸர்களைப் பற்றி, ‘நம்ம மாதிரி அன்போடு, ‘அம்மா’ என்று ஜகன்மாதாவைப் பார்க்கத் தெரியாமல் – காவ்ய ரஸனையோடு அவளுடைய ரூப ஸெளந்தர்யம், குண ஸெளந்தர்யம், லீலா ஸெளந்தர்யம் முதலியவைகளை அநுபவித்து ஸுகமான வழியிலேயே அவளிடம் லயித்திருப்பதற்குத் தெரியாமல் – இதென்ன வறட்டு வறட்டு என்று மந்த்ரமும் யந்த்ரமும்?’ என்று நினைக்கக்கூடாது. அவரவர் மனப்பான்மைக்கு ஏற்க அப்படி அப்படி மார்க்கங்கள். ஒருத்தருக்கே மந்த்ர-யந்த்ர உபாஸனையிலும் ஈடுபாடு, கவிதையாக ஸ்துதிப்பதிலும் ஈடுபாடு என்று இரண்டும் இருக்கலாம். ஆனதினாலே இரண்டு வழிக்காரர்களும் ஒன்று சேர்ந்து படிக்கும்படியாக ஒரே க்ரந்தம் இருந்தால் நல்லதென்று அம்பாள் நினைத்திருக்கலாம். ஆதி கைலாஸ ஸ்தோத்ரத்தில் முதல் நாற்பத்தோரு ச்லோகங்களை மந்த்ரோபாஸனை என்று தீக்ஷை எடுத்துக்கொள்ளாதவர்கள்கூட ஸ்தோத்ரமாகப் படித்தாலே ஓரளவுக்குப் பலன் பெறுவார்கள் என்பதாலும், மந்த்ர சாஸ்த்ரம், குண்டலீநீ யோகம், ஸ்ரீசக்ரம் என்றெல்லாம் புராதனமாக நம் தேசத்துக்கு என்று இருந்து வரும் ஆத்மிக குல தனத்தைப் பற்றிக் கொஞ்சம் அடிப்படை அறிவாவது பெறுவார்கள் என்பதாலும், அதோடு காவ்ய லக்ஷணங்கள் நிறைந்த ஒரு பக்தி ஸ்துதியையும் சேர்த்து ஒரே புஸ்தகமாக இருக்கப் பண்ணலாம் என்று நினைத்திருக்கலாம்.

‘இரண்டும் சேர்ந்த ஒரே புஸ்தகமாக ஆசார்யாளே புதுசாக ஒன்று பண்ணும்படி ஆஜ்ஞாபித்திருக்கலாமே! அவருக்குத் தெரியாத மந்த்ர சாஸ்த்ரமா?’ என்றால் அதற்கும் பதில் இருக்கிறது!

கைலாஸ ஸ்தோத்ரத்தில் நாற்பத்தியோரு ச்லோகங்களுக்கு அப்புறம் என்ன இருந்ததோ? மந்த்ர சாஸ்திரத்திலேயே இன்னும் ஸூக்ஷ்மமாக, ரஹஸ்யமாக, நம்முடைய நரலோகத்துக்கு இல்லாததாகவும், திவ்ய லோகங்களுக்கே உரியதாகவும் அநேக விஷயங்கள் அவற்றில் இருந்திருக்கலாம். அதனால்தான் அதிலே நரலோகத்திற்கான பாகத்தோடு கவிதையாக இன்னொரு பாகம் சேர்க்கும்படி அம்பாள் நினைத்திருக்கலாம்.

இதற்கெல்லாம் மேலாக, இப்படிப் பண்ண வைத்தால்தானே, ‘ஜாயின்ட் ஆதர்’களாக ஒரே புஸ்தகத்தில் முன் பாகம் கைலாஸ சங்கரரும் பின் பாகம் காலடி சங்கரருமாக ஆக்கி, அவரும் இவரும் ஸமம், ஒன்றே என்று புரியவைக்க முடியும்?

தெய்வமே செய்த ஸ்துதி, தெய்வம் அவதாரமாகிச் செய்த ஸ்துதி என்ற இரண்டையும் ஒட்டிவைத்து ஏக ஸ்துதியாக்கி லோகத்துக்குக் காட்டவேண்டுமென்ற எண்ணத்திலேயே அம்பாள் இப்படி நந்திகேச்வரரைக் கொண்டு நாடகம் நடத்தியிருக்கலாம்.

இங்கே இன்னொரு கேள்வி வரலாம்: நந்திகேச்வரர் வழிப்பறி பண்ணும்படி வைப்பானேன்? அம்பாளே கைலாஸ ஸ்தோத்ரத்தில் நாற்பத்தொரு ச்லோகங்களை மட்டும் ஆசார்யாளிடம் எடுத்துக் கொடுத்து, “இது ஒரு சதகத்திலேயிருந்து எடுத்தது. இதற்கு மேலிருப்பது பூலோக வாஸிகளுக்கு வேண்டாமென்று கொடுக்கவில்லை. ஆனாலும் சதகத்திலிருந்து விண்டு கொடுத்ததால் நீ இன்னொரு ஐம்பத்தொன்பது ச்லோகம் பண்ணிச் சேர்த்து நூறாகவே பூலோகத்தில் பிரசாரம் பண்ணு” என்று சொல்லியிருக்கலாமல்லவா?

இப்படிக் கேட்டால், [அம்பாள் அப்படிச்] சொல்லியிருக்க முடியாது என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் – கைலாஸ ஸ்துதியைச் செய்த சங்கரனேதான் இந்த சங்கரர் என்றாலும் அவதார வேஷத்தில் இவர் விநய ஸ்வரூபமானவர். அதனால்தானே பார்வதி-பரமேச்வராளைத் தேடிக்கொண்டு கைலாஸம் போய் நமஸ்காரம் பண்ணியிருக்கிறார்? அப்படிப்பட்டவரிடம் அம்பாளே ஈச்வரன் பண்ணிய ஸ்தோத்ரத்திலிருந்து ஒரு பாகத்தை மட்டும் கொடுத்து, ‘பாக்கியை நீ பூர்த்தி பண்ணு’ என்று ஈச்வரனோடு அவருக்கு ஸாம்யம் [ஸமத்துவம்] காட்டிச் சொன்னால் அது அவதார வேஷத்தில் அவர் ‘ஐடிய’லாகக் காட்ட வேண்டிய விநய ஸம்பத்தை அவளே புரிந்து கொள்ளாத மாதிரியாகும். அதுவே, அவர் ஒரு பாகத்தை நஷ்டப்பட நேர்ந்து, அதற்காகக் கஷ்டப்படுகிற ஒரு ‘ஸிசுவேஷன்’ உண்டானால் அப்போது, ‘அதனால் பரவாயில்லை. நஷ்டமானதையும் நீயே பாடி ஈடு கட்டிவிடு’ என்று சொல்வது இயற்கையாக — ஈச்வர ஸாம்யம் என்ற எண்ணத்தைக் கொடுக்காமல், அந்த ‘ஸிசுவேஷ’னில் இயற்கையாகச் செய்யவேண்டியபடி — செய்ததாகிவிடும் என்பதால்தான் நந்திகேச்வரரை வைத்து நாடகம் பண்ணியது.

ஒரு ராஜா இருக்கிறான். அவனுக்கு ஒரு புத்ரன் இருக்கிறான். எல்லா விதத்திலும் அவன் பிதாவுக்கு ஸமதையாக இருக்கிறான். இது எல்லோருக்கும் தெரிகிறது. இருந்தாலும் அவன் தர்மப்படி பிதாவுக்கு அடங்கியே இருக்கிறான். இதுவும் ஸரிதான் என்றே உலகம் எடுத்துக் கொள்கிறது. இப்படியிருக்கும்போது ராணி, தன் பிள்ளை ராஜாவுக்கு ஸமதையாயிருக்கிறானென்பதால் அவனிடம், “நீ பாதி ராஜ்யத்தை ஆளு” என்று சொன்னால் எவ்வளவு அயுக்தமாயிருக்கும்? அதுவே சத்ரு ராஜா எவனோ வந்து படையெடுத்து இந்த ராஜ்யத்தில் பாதியைப் பிடித்து விட்டால் அப்போது அவள் பிள்ளையிடம், “நீ போய் அதை மீட்டு அப்புறம் நீயே அங்கே காவல் பண்ணிக் கொண்டிரு” என்றால் அது யுக்தமாகத்தானே தோன்றுகிறது?

ஒரு விஷயத்தைப் போட்டு உடைக்காமல் வ்யங்க்யமாக [மறைமுகமாக]ப் புரியவைப்பதிலேயே ரஸமிருக்கிறது. ஆசார்யாள் ஈச்வராவதாரம் என்பதை இரண்டுபேரும் பங்கு கொள்வதாக ஒரே ஸ்துதி ஏற்படச் செய்தபோது அம்பாள் இப்படி வியங்கியமாகவே நடத்திக் காட்டியிருக்கிறாள். நாரதர் கலகம் மாதிரி நந்திகேச்வரரின் முன்கோபம் எல்லாருக்கும் தெரிந்தததுதான். முடிவிலே இரண்டும் நல்லதற்காகத்தான் இருக்கும். அதனால் நந்திகேச்வரரைப் பாத்திரமாக்கி, வழிப்பறி பண்ணவைத்து, ஒரு ஸந்நியாஸிக்கு சத்ருவிடங்கூடக் கோபம் வரப்படாது, எதிர்க்கிறவனைக்கூட அவன் எதிர்த்துச் சண்டை போடக் கூடாது என்ற தர்மத்தை அப்போது ஆசார்யாள் அநுஸரித்துக் காட்டும்படியாக வைத்து, அப்புறம் அவரே ஸ்தோத்ரத்தை பூர்த்தி பண்ணும்படியாக ஆஜ்ஞாபித்தாள்.

இதனால் லோகத்திலுள்ள இலக்கிய ஸ்ருஷ்டிகளிலேயே ஒரு அதிசயமாக ஒரே ஸ்தோத்ரத்தில், “இது மாதிரி ஒரு ஸ்தோத்ர ரூபத்திலே சாஸ்த்ர ஸுக்ஷ்மங்களை எங்கேயுமே பார்க்க முடியாது” என்று சொல்லும்படியான பூர்வ பாகமும், “இதுமாதிரிக் கவிதா கல்பனையுள்ள ஸ்தோத்திரம் எங்கேயுமே பார்க்க முடியாது” என்று சொல்லும்படியான உத்தர பாகமும் கொண்டதாக ‘ஸெளந்தர்ய லஹரி’ நமக்குக் கிடைத்திருக்கிறது. சாஸ்த்ரத்திற்கு சாஸ்த்ரம், ஸ்தோத்ரத்திற்கு ஸ்தோத்ரம், கவிதைக்குக் கவிதை என்று மூன்றும் சேர்ந்ததாகக் கிடைத்திருக்கிறது.

கிட்டதட்ட இப்படி மூன்றும் சேர்ந்ததாக இன்னொன்றைச் சொல்ல முடியுமானால் அது லலிதா ஸஹஸ்ரநாமம்தான்.

ஸெளந்தர்ய லஹரியில் ஒரு விஷயம் என்னவென்றால், சாஸ்த்ரமாக இருக்கப்பட்ட பூர்வ பாகத்திலும் பக்தி உணர்ச்சிக்குப் பிராதான்யம் கொடுத்து ஸ்தோத்ரமாக இருக்கும் ச்லோகங்கள் இருக்கின்றன; காவ்ய ரஸப் பிராதான்யமுள்ளதான ச்லோகங்களும் இருக்கின்றன. பக்தியின் உச்சியில் சரணாகதி பண்ணி ஸகலமும் அவள் செயல் என்று ஆத்மார்ப்பணம் பண்ணிவிட்டுக் கிடப்பதைச் சொல்லும் ‘ஜபோ ஜல்ப:‘ ச்லோகம், ‘பவாநி’ என்ற வார்த்தையை வைத்தே த்வைதத்தில் தாஸ்யமாயும் அத்வைதத்தில் ஸாயுஜ்ய நிலையிலும் இருப்பதை சிலேடை பண்ணும் ச்லோகம்1, இன்னும் இப்படிச் சிலது சாஸ்த்ர விஷயங்களைச் சொல்லும் அந்த பாகத்தில்தான் வருகின்றன. ஆனால் பக்திக் கவிதையாகவே இருக்கும் உத்தர பாகத்திலோ சாக்த சாஸ்த்ர நுணுக்கம் எதுவுமே இல்லை. தேடித் தேடிப் பார்த்தால், ‘கதாஸ்தே மஞ்சத்வம்‘ என்ற ச்லோகத்தில் அம்பாள் காமேச்வரியாகக் காமேச்வரனுடன் பஞ்ச ப்ரஹ்மாஸனத்தில் வீற்றிருக்கிறாள் என்று சொல்லியிருப்பதைப்போல ஒன்று இரண்டு அகப்படலாம். மூன்று அவஸ்தைகளுக்கு மேலே துரீயம் என்ற வேதாந்தக் கருத்து ஒரு இடத்தில் வருகிறது2. மற்றபடி அது ஒரே ‘பொயட்ரி’தான், ‘டிவோஷனல் பொயட்ரி’ தான் என்று சொல்லும்படியாக இருக்கிறது. ‘ஸெளந்தர்ய’த்தை வைத்தே டைட்டில் இருப்பதும் சாஸ்த்ரத்தைவிடக் காவ்யத்திற்குத்தான் இந்த ஸ்தோத்ரத்தில் முக்யத்வம் என்று காட்டுகிறது. பாஷ்யம் எழுதியவர்களில் சில பேர் பின் பாக ச்லோகங்களும் சாஸ்த்ர ஸூக்ஷ்மங்களைச் சொல்வதாக வியாக்யானம் பண்ணியிருந்தாலும் எனக்கென்னவோ இதை பக்திக் கவிதை என்றே வைத்துக் கொள்வதுதான் ச்லாக்யமென்று தோன்றுகிறது. இன்னும் என் மனஸை விட்டுச் சொன்னால் — அப்படி எனக்குத் தோன்றலாமோ கூடாதோ? ஆனாலும் தோன்றிவிட்டதால் [அதை] மனஸை விட்டுச் சொன்னால் — ‘கைலாஸ ஸ்தோத்ரத்திலே அத்தனை ஏடுகளையுமே நந்திகேச்வரர் பறித்துக்கொண்டு, நூறு ச்லோகமுமே அம்பாளின் ஸ்வரூப வர்ணனையாக ஆசார்யாள் பண்ணியிருக்கக்கூடாதா? சாஸ்த்ரம் என்றேதான் தனியாக மந்த்ர, யந்த்ரங்களைச் சொல்ல இருக்கே! அப்புறம் அதை ஸ்தோத்ரத்தில் கொண்டு வருவானேன்?’ என்றுகூடத் தோன்றுகிறது அந்த அளவுக்குக் கவிதா லக்ஷணங்களால் ஜனங்களின் மனஸை ஆகர்ஷித்து பக்தியில் ஈடுபடுத்துவதாகப் பின் பாகத்தில் ஆசார்யாளின் வாக்கு உயர்ந்து நிற்கிறது.

ஆக பக்திக் கவிதையாகவே உயர்வு கொள்வது இந்த ஸ்தோத்ரம். அதனால்தான் ஸர்வஜ்ஞனான பரமேச்வரன் ஒரு அம்பாள் உபாஸகன் மாதிரி இருந்துகொண்டு ஒரிஜினல் கைலாஸ ஸ்தோத்ரத்தைப் பண்ணும்போதே, அது நரலோகத்துக்குப் போகும்போது அதன் பின் பாகத்தை தன்னுடைய அவதாரமான ஆசார்யாள் கவிதா ரஸம் தளும்பும்படியாகப் பூர்த்தி பண்ணப் போகிறார் என்பதையும் தெரிந்துகொண்டு, அதற்கேற்கத் தானும் அதே பாவங்களில், ரஸங்களில், நடையில் சில ச்லோகங்களை முன் பாகத்திலும் பண்ணிவைத்து விட்டானென்று தோன்றுகிறது! முழு ஸ்தோத்ரத்திலும் ஒரே ‘கம்போஸ’ரின் முத்ரை, ‘ஸ்டைல்’ தெரியும்படியாக!

இன்னொரு விஷயமும் சொல்லணும். பின் பாகம் பக்திக் கவிதை என்றே நான் சொன்னாலும் அந்த ச்லோகங்களுக்கும் மந்த்ர சக்தி உண்டு. ‘ஸெளந்தர்ய லஹரி’ நூறு ஸ்லோகங்களில் ஒவ்வொன்றையுமே மந்த்ரமாக ஜபித்தால் ஒவ்வொரு விதமான பலன் உண்டு; பின் பாகத்தில் அழகு வர்ணனையாகவே வருகிற ச்லோகங்களையுந்தான்! ஆசார்யாள் வாக்கானதால் அவருக்குள்ளே புகுந்து அம்பாளே கொண்டுவந்த வாக்கானதால், அதுவே சாஸ்த்ர விஷயம், பீஜாக்ஷரம் என்று இல்லாவிட்டாலுங்கூட மந்த்ரமாக இருக்கிறது. மைடாஸ் தொட்டதெல்லாம் தங்கம் என்கிறாற்போல ஆசார்யாள் வாக்குப் பட்டதெல்லாம் மந்த்ரந்தான். நம்மகத்துக் கிணற்று ஜலம் என்றால் அதை மந்திரித்துத்தான் புண்ய தீர்த்தமாக்க வேண்டும். கங்கா ஜலமோ ஸ்வயமாகவே புண்ய தீர்த்தமாயிருக்கிறதல்லவா? விச்வநாதருக்கு அபிஷேகமாகிற போது மட்டுமில்லாமல், நமக்கு ஸ்நானம் பண்ணுவிக்கும் போதும், வயல் வரப்புக்குப் பாயும்போதும், ‘போனவர்’களைக் கழுவிக் குளிப்பாட்டுகிறபோதுங்கூட அது புண்ய தீர்த்தமாகத்தானே இருக்கிறது? அப்படி, ஆசார்யாள் எடுத்துக்கொண்ட ‘ஸப்ஜெக்ட் மாட்டர்’ மந்த்ர விஷயமாகத் தெரியாமல், அழகு வர்ணனையாக, கவிதையாக இருக்கிற போதுங்கூட அவருடைய வாக்கு மந்த்ர சக்தி பொருந்தியதாக இருக்கிறது. அவருடைய வாக்கில் வந்த ஸகலமுமே அப்படியென்றாலும் அதில் விசேஷமாக ‘ஸெளந்தர்ய லஹரி’யும் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்கமும்’ இப்படி இருக்கின்றன.

முழுக்க மந்த்ர சாஸ்த்ரமாகவே இருந்த ஒரு ஆதி ஸ்தோத்ரத்தில் ‘மிஸ்’ஸான பாகத்தை அவர் மறுபடி ஸரிப் பண்ணி ஸெளந்தர்ய லஹரியை ஆக்கினாரென்பதால் அந்த ஸ்லோகங்களுக்கு இப்படி மந்த்ர வீர்யம் விசேஷமாக இருக்கிறது. அவருக்கே ரோகம் வந்துபோது, ‘ரோகிகள் எல்லாரும் ஸ்தோத்ர பாராயணம் செய்து நிவிருத்தி பெறுவதற்கு நாம் உபகாரம் பண்ணவே நமக்கு இந்தக் கஷ்டம் ஸம்பவித்திருக்கிறது’ என்று நினைத்து, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் மேலே புஜங்க ஸ்தோத்ரம் பாடினார். அதனாலேயே அது ரோக நிவ்ருத்திக்கு மந்த்ரமாக இருக்கிறது. ரோக நிவ்ருத்தி மாத்திரமல்லாமல் இன்னம் அநேக விதப் பலன்களையும் தரவல்லதாக ஸெளந்தர்ய லஹரி இருக்கிறது.


1 இவற்றின் விளக்கம் உரிய இடத்தில் விரியும்.
2 ச்லோ 97.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is கவிதை பிறந்த கதை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உத்தமத் துதிகள் மூன்று
Next