உத்தம துதிகள் மூன்று : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஜகன்மாதாவை லலிதாம்பிகை என்ற ரூபத்தில் அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்ரம் பாடி ஆராதித்திருக்கிறார்கள். துர்க்கை, காளி, அன்னபூர்ணேச்வரி, புவநேச்வரி, இன்னும் பல ரூபங்களும் அவளுக்கு உண்டு. லலிதாம்பாள் விஷயமாக மட்டுமே இப்போது சொல்கிறேன்.

ராஜராஜேச்வரி, காமாக்ஷி, காமேச்வரி, த்ரிபுரஸுந்தரி என்ற பெயர்களில் சொல்லப்படும் ஸ்ரீவித்யா தந்த்ர ப்ரதிபாத்யமான [ஸ்ரீவித்யை எனும் வழிபாட்டு நெறிமுறைப்படி ஆராதிக்கப்படும்] தேவதை இந்த லலிதாதான். லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி, லலிதா அஷ்டோத்தரம் என்றெல்லாம் அந்தப் பேரில்தான் ஸ்ரீவித்யையின் அதிதேவதைக்கு நாமாவளிகள் இருப்பதைப் பார்க்கிறோம்.

அவளைப் பற்றிய ஸ்தோத்ர நூல்களில் மூன்று மிகவும் ச்ரேஷ்டமானவை: துர்வாஸர் பண்ணிய ‘ஆர்யா த்விசதி’, மூகர் பண்ணிய ‘பஞ்ச சதி’, ஆசார்யாளுடைய ‘ஸெளந்தர்ய லஹரி’ என்ற மூன்று. கால க்ரமத்தில் வரிசைப்படுத்தினால் முதலில் துர்வாஸர் பண்ணியது, அப்புறம் ஆசார்யாள் பண்ணியது, கடைசியில் மூகருடையது. மூன்றுக்கும் நடுவாக, நடுநாயகம் என்று சொல்லும்படியாக ‘ஸெளந்தர்ய லஹரி’ இருக்கிறது.

அந்த மூன்று ஸ்தோத்ர கர்த்தாக்களும் [சிரித்து]’ நம்மவர்’கள்; நமக்கு ரொம்ப ஸொந்தமானவர்கள்! நம்முடைய பீட அதீச்வரியாக இருக்கப்பட்ட காமாக்ஷியிடம் மூன்று பேருக்கும் விசேஷ ஸம்பந்தமுண்டு. துர்வாஸர்தான் [காமாக்ஷி ஆலயமாகிய] காமகோஷ்டத்திற்கான பூஜா கல்பத்தைப் பண்ணிக் கொடுத்தவர். அந்தப் பிரகாரந்தான் இன்றைக்கும் அங்கே அம்பாளுக்குப் பூஜை நடக்கிறது. ஆசார்யாளுக்கு காமாக்ஷியிடம், அங்கேயுள்ள காமகோடி பீடத்திடம் உள்ள ஸம்பந்தம் எல்லாருக்கும் தெரிந்தது. மூகர் கவியானதே காமாக்ஷி அநுக்ரஹத்தில் தான்; அவர் ‘பஞ்சசதி’யில் ஸ்தோத்திரித்திருப்பதும் அவளைத்தான்.

மூன்றில் ‘ஆர்யா த்விசதி’ தான் மிகவும் புராதனமானது. த்வி-சதம் என்றால் இருநூறு. ‘ஆர்யா த்விசதி’யில் இருநூறு ச்லோகங்கள் இருப்பதால் அப்படிப் பெயர். ‘ஆர்யா’ என்ற அபூர்வமான சந்தஸில் (மீட்டரில்) அது பண்ணப்பட்டிருக்கிறது. அதோடு அது ஸ்தோத்ரிப்பதும் ‘ஆர்யா’ என்ற அம்பாள்.

இப்படிச் சொன்னால் அம்பாள் ஆர்யக் கடவுள், திராவிடக் கடவுளில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது! ஆர்யர் என்றால் உயர்வு பொருந்தியவர் என்று அர்த்தமேயொழிய, அப்படி ஒரு ரேஸுக்கும் பேரில்லை. வெள்ளைக்காரர்கள் பண்ணிய விபரீதந்தான் ‘ஆர்யன் ரேஸ்’ என்று ஆக்கியது. அம்பிகை உயர்ந்ததிலெல்லாம் உயர்ந்தவளாதலால் ஆர்யா. தமிழ்மொழி வழக்கில் ‘ஆர்யை’. பழந்தமிழில் அதை இன்னும் நன்றாகத் தமிழ் பாஷை விதிகளின்படி ரூபம் கொடுத்து ஐயை என்று சொல்லியிருக்கிறது. ஆர்யன்-ஐயன்; ஆர்யை-ஐயை.

‘ஐயனே என்று எந்த ரேஸிலும், எந்த ஜாதியிலும் உயர்ந்தவர்களாக இருப்பவர்களைக் கூப்பிடுவதுண்டு தானே? இருந்தாலும், பொதுவாக ப்ராம்மணர்கள் கல்வி கேள்விகளாலும், ஆசார ஸம்பத்தினாலும், குண சீலங்களாலும் மற்றவர்கள் உயர்வு தரும்படி இருந்ததால் – [சிரித்து] அந்த நாளில் இருந்ததால் – அவர்களைக் குறிப்பாக ஐயர் என்று சொல்வதாக ஆயிற்று. அப்போதுங்கூட அது ஜாதிப் பேர்தானே ஒழிய ரேஸ் பேரில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். ஒரே ரேஸில்தான் நாலு ஜாதிகளும்; ஸரியாகச் சொன்னால் நாலு வர்ணங்கள். நான்கு வர்ணங்களிலிருந்து உண்டானவையே நூற்றுக் கணக்கான ஜாதிகள். ஐயர், ஐயங்கார், மாத்வர் ஆகிய மூன்று வர்ணங்களும் ஒரே பிராம்மண வர்ணத்தில் உண்டானவை. நாட்டுக்கோட்டை செட்டியார், தேவாங்கச் செட்டியார், பேரிச் செட்டியார், ஆர்ய வைச்யர்கள் என்று அநேக ஜாதிகள் ஒரே வைச்ய வர்ணத்திலே இருக்கின்றன. கீதையிலும் தர்ம சாஸ்திரங்களிலும் ‘சாதுர்வர்ண்யம்’ என்ற நாலு வர்ண ஏற்பாட்டைச் சொல்லியிருக்கும் எந்த இடத்திலுமே அதில் முதல் வர்ணம், அல்லது முதலிரண்டு அல்லது முதல் மூன்று வர்ணங்கள் ஒரு ரேஸ் (அதாவது ஆர்யன் ரேஸ்) என்றும், நாலாவது வர்ணம் வேறே ரேஸ் (த்ராவிட ரேஸ்) என்று சொல்லியிருக்கவேயில்லை…

ஆர்யா என்று அம்பாளின் பேர். ஆர்யாம்பா என்றே ஆசார்யாளின் தாயாருக்குப் பேர். துர்வாஸர் பண்ணிய இருநூறு ச்லோக ஸ்தோத்ரம் ஆர்யா மீட்டரில் இருப்பதோடு ஆர்யா என்ற அம்பாளைக் குறித்ததாக இருப்பது. அதனால் இருபொருள்பட ‘ஆர்யா த்விசதி’ என்று அதற்குப் பெயரிருக்கிறது. அதற்கே இன்னொரு பேர் ‘லலிதா ஸ்தவ ரத்னம்’ என்பது. ஸ்தவம் என்றாலும் ஸ்துதிதான். லலிதாம்பாளைப் பற்றிய ஸ்துதிகளுக்குள் ரத்னம் போலிருப்பது ‘லலிதா ஸ்தவ ரத்னம்’.

பட்டாரிகா என்று அம்பிகையைச் சொல்வது வழக்கம். தமிழில் பட்டாரிகை என்று ஆகும். பட்டாரகர் என்றால் பூஜிக்கத் தக்கவர். அதற்குப் பெண்பால் பட்டாரிகா. பட்டாரர், பட்டாரி என்றே சொன்னாலும் போதும். பழைய காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பிடாரி கோவில்களுக்குச் செய்யப்பட்ட ‘என்டோமென்ட்’களை ‘பட்டாரிகா மான்யம்’ என்றே சாஸனங்களில் குறித்திருக்கிறது. இதிலிருந்து பட்டாரிதான் பிடாரி ஆகியிருக்கிறதென்று தெரிகிறது….

அம்பாள் பட்டாரிகா. அதனால் ஒரு தனி அர்த்தத்தில் அவளுடைய தலை சிறந்த மூன்று உபாஸகர்களுக்கு ‘பட்டாரகர்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறது. யார் யாரென்றால் ஒன்று ஸாக்ஷாத் ஈச்வரனே. அவரைப் ‘பரமசிவ பட்டாரகர்’ என்று சொல்லியிருக்கிறது. இன்னொருவர் மஹாகவி காளிதாஸர். உஜ்ஜயினி மஹாகாளியின் அநுக்ரஹத்தாலேயே வாக் ஸித்தி, கவிதா சக்தி பெற்றவர். அம்பாள் ஸ்தோத்ரம் என்று எடுத்தவுடன் எல்லாரும் படிக்கும் ‘ச்யாமளா தண்டக’மும் ‘நவரத்ன மாலா’1வும் பண்ணியவர். அவரை ‘ச்ருங்கார பட்டாரகர்’ என்று சொல்லியிருக்கிறது. ஒரு பட்டாரகர் தெய்வமாக இருக்கப்பட்டவர். இன்னொரு பட்டாரகர் மநுஷ்யர்களில் கவியாக இருந்தவர்… கனம், லகு என்று இரண்டு. கனமாயில்லாமல் லேசாக இருப்பது லகு. தெய்வம் கனம்; மநுஷ்யன் லகு. லகு பட்டாரகர் என்ற ஒருத்தர் ‘பஞ்ச ஸ்தவி’ என்று அம்பாள் பேரில் செய்துள்ள ஐந்து ஸ்தோத்ரங்கள் இருக்கின்றன. காளிதாஸரான மநுஷ்ய பட்டாரகருக்கே லகு பட்டாரகர் என்றும் பெயராக இருக்கலாம் என்று ஒரு அபிப்ராயமுண்டு. தெய்வம், மநுஷ்யர் இரண்டோடும் சேர்க்காமல் ரிஷி என்ற வர்க்கத்தைத் தனியாகச் சொல்வது வழக்கம். தேவரிஷிகள் என்ற நாரதர் போன்றவர்கள் தேவ ஜாதியில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். மநுஷ்ய ஜாதியில் பிறந்து பூலோகத்திலேயே அநேகம் ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். பிறந்தது எந்த ஜாதியிலானாலும் எவரொருவர் ஆகாசத்தில் அநாதியாக ஸூக்ஷ்ம ரூபத்தில் பரவியிருக்கும் மந்த்ரங்களை நாம் கேட்கக்கூடிய சப்த ரூபத்தில் பிடித்துக் கொடுக்கிறாரோ அவர் ரிஷி என்ற தனி ஜாதியாகிவிடுகிறார். தர்ப்பணம் முதலான வைதிக கார்யங்களில் தேவர்களுக்குச் செய்வது, ரிஷிகளுக்குச் செய்வது, மநுஷ்யர்களான பித்ருகளுக்குச் செய்வது என்று இப்படி மூன்று வர்க்கமாகவே சொல்லியிருக்கிறது. மூன்று பட்டாரகர்களில் ஈச்வரன் தேவர், காளிதாஸர் மநுஷ்யர் என்பதால் மற்றவர் ரிஷியாயிருந்தால்தானே பொருத்தமாயிருக்கும்? அப்படிப்பட்ட மூன்றாவது பட்டாரகர் யாரென்றால் ரிஷி வர்க்கத்தைச் சேர்ந்த துர்வாஸர்தான். ரிஷிகளுக்குள் அம்பிகையின் ப்ரஸாதத்தைப் பரிபூர்ணமாக அடைந்தவர் அவர். அவருடைய கோபம் ப்ரஸித்தமானதல்லவா? அதனால் அவரை ‘க்ரோத பட்டாரகர்’ என்றே சொல்வது. பரமசிவ பட்டாரகர், ச்ருங்கார பட்டாரகர், க்ரோத பட்டாரகர் என்றிப்படி மூன்று பேர்.

க்ரோத பட்டாரகரான துர்வாஸர்தான் முதன் முதலில் அம்பாளை ஸ்துதித்த பூலோகவாஸி. அவர் ‘த்விசதி’ பாடினதோடு ‘சக்தி மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்றும் அம்பாள் மஹிமை பற்றி ஒரு உத்தமமான ஸ்துதி செய்திருக்கிறார். இவற்றுக்கு அப்புறந்தான் மற்றக் கவிகளின் வாக்குகள் உண்டாயின. அவர் வாக்கிலேயே அம்பிகை ஆவிர்பவித்திருப்பது ‘த்விசதி’யை அநுபவித்துப் படிப்பவர்களுக்குத் தெரியும்.

ஒரு மையப் புள்ளியைச் சுற்றி அடுக்கடுக்காக நாற்பத்து மூன்று கோணங்கள் கூம்பாக — cone shapeல் — எழும்பி அமைந்த ஸ்ரீசக்ரம் என்ற யந்த்ரத்தில், ‘ஆவரண’ங்கள் என்னும் சுற்றுக்களில் (மூல ஸ்தானத்தைச் சுற்றி பஞ்ச ப்ராகாரம், ஸப்த ப்ராகாரம் என்றெல்லாம் இருப்பதுபோல ஸ்ரீசக்ரத்தில் உள்ள சுற்றுகளில்) அநேக தேவதைகள் சூழ்ந்திருக்க, அதன் உச்சியாக உள்ள மையப் புள்ளியான பிந்து ஸ்தானத்தில் காமேச்வரனுடைய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கிற காமேச்வரியான ராஜராஜேச்வரியை அந்த எல்லா முக்கோணங்களையும், ஆவரண தேவதைகளையும் விவரமாகச் சொல்லி துர்வாஸர் ஸ்தோத்திரித்திருக்கிறார். இந்த உத்கிருஷ்டமான கிரந்தத்தைப் பாராயணம் பண்ணினால் நல்ல அநுக்ரஹம் உண்டாகும்; குறிப்பாக நல்ல வாக்கு, கவித்வ சக்தி உண்டாகும்.

அம்பிகை பண்ணுகிற பெரிய அநுக்ரஹம் அவளை வர்ணித்து வர்ணித்து துதிக்கிற ஆனந்தத்தைத் தரும் உயர்ந்த வாக்கு விசேஷம்தான். இந்த வாக்குதானே ஒரு பக்தர் பெற்ற அநுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் அதைப் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்கிறது? அதுதான் வாங் சக்தி அருள்வதன் விசேஷம்.

ஒரு ஊமைக்கு இப்படிப்பட்ட அபார வாக்குச் சக்தியை அவள் அநுக்ரஹம் பண்ணினாள். காஞ்சீபுரத்தில் காமாக்ஷி கோயிலில் இருந்த அவருக்கு [இயற்]பெயர் என்னவென்றே தெரியவில்லை. ‘மூகர்’ என்று சொல்கிறோம். ‘மூகர்’ என்றால் ஊமை என்று அர்த்தம். அந்த ஊமைக்கு அம்பாளின் அநுக்ரஹம் கிடைத்ததுதான் தாமதம், த்வி-சதி இல்லை, பஞ்ச-சதியாகவே ஐநூறு ச்லோகங்களை வர்ஷித்துவிட்டார்! துர்வாஸர் பண்ணினது ‘ஆர்யா த்விசதி’ என்றால், மூகர் பண்ணின ‘பஞ்ச-சதி’யில் முதலாவதாக ‘ஆர்யா சதகம்’ என்ற நூறு ச்லோகங்கள் இருக்கின்றன. இதுவும், ஆர்யா வ்ருத்தத்தில் [மீட்டரில்] தான் அமைந்தது. அடுத்து அவளுடைய திருவடிகளின் அழகை மட்டுமே நூறு ச்லோகங்களில் சொல்கிற ‘பாதார விந்த சதகம்’, மூன்றாவதாக அவளுடைய பலவித மஹிமைகளைத் துதிக்கும் ‘ஸ்துதி சதகம்’, அதற்கப்புறம் அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் ‘கடாக்ஷ சதகம்’ என்று நூறு ச்லோகங்கள், கடைசியில் அவளுடைய மந்தஹாஸத்தைப் பற்றியே ‘மந்தஸ்மித சதகம்’ என்று நூறு — இப்படிப் ‘பஞ்ச சதி’யை மூகர் பண்ணியிருக்கிறார்.

‘ஆர்யா த்விசதி’யும் ‘மூக பஞ்சசதி’யும் ஒரு நல்ல சைத்ரிகன் அம்பிகையின் ஸ்வரூபத்தை எழுதிகாட்டுகிற மாதிரி அவளை மனகண்ணுக்கு முன் தோன்றும்படிச் செய்கின்றன. கண்ணுக்கும் மனஸுக்கும் எட்டாதவளைக் கிட்டத்தில் காட்டிக் கொடுக்கின்றன.


1ஓங்கார பஞ்சர சுகீம்’ எனத் தொடங்குவது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is நந்திகேச்வர நாடகம் எதற்கு?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  நூற்சிறப்பு
Next