ஸாதாரண மநுஷ்யக் கவிகளுக்கும் மஹான்கள் கவிகளாக இருப்பதற்கும் வித்யாஸம் உண்டு. ஆசார்யாள், ஞானஸம்பந்தர், நம்மாழ்வார், ஸதாசிவ ப்ரம்மேந்திராள் மாதிரியானவர்களிடம் கவிதையோடு அருளும் சேர்ந்திருக்கிறது. ஒரு கவிக்கு ஈச்வரன் தூண்டிவிட்ட இன்ஸ்பிரேஷனில் கவிதை பிறந்தால் அதை ‘அருட்கவி’ என்று சொல்கிறோம். இந்த இடத்தில், ‘கவிதையைக் கவி தன்னுடைய புத்தி, கல்பனா சக்தி, அநுபவம் ஆகியதுகளைக் கொண்டு பண்ணவில்லை; அவனுக்கு ஈச்வரன் பண்ணிய அருளால் தன்னுடைய ஸொந்த புத்தி, யுக்தி, அநுபவங்களுக்கும் அதீதமாகக் கவிதை பண்ணி விட்டான்’ என்று அர்த்தம். மஹான்களுடைய கவிதை இன்னொரு அர்த்தத்தில் — இன்னொரு அர்த்தத்திலும் என்று சொல்லணும் — அருட்கவியாக இருக்கிறது. எப்படியென்றால் அந்தக் கவிதையே அதைப் படிக்கிறவர்களுக்குக் கவிதா ரஸத்தைக் கொடுப்பதோடு அருளையும் வழங்கி அநுக்ரஹம் பண்ணுகிறது! பொதுவாக ‘அருட்கவி’ என்பது கவிக்கு அருட்சக்தி கிடைத்துப் பாடினதைக் காட்டுகிறதென்றால், மஹான்களுடைய அருட்கவிகளோ படிக்கிற பேருக்கு அருட்சக்தியை ஊட்டுவதாக இருக்கிறது!
இவற்றைச் செய்த பெரியவர்கள் அநுபவ ஆனந்த நிலையில் தங்களை மறந்து பாடினதால் இவை ஈசன் அருளில் ‘inspired’ ஆகப் பாடிய அருட்கவிதான். “என(து) உரை தன(து) உரையாக” என்றே ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் சொல்கிறார்1. ஆசார்யாளும் “ஸெளந்தர்ய லஹரி”யை முடிக்கும்போது “த்வதீயாபி: வாக்பி: தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்” — “அம்மா, உன்னுடையதேயான வாக்குகளால் ஆன இந்த உன் ஸ்தோத்ரம்” என்கிறார். இவ்விதத்தில் அருட்கவியாக இருப்பதோடு இவற்றை செய்த மஹான்களே அநுக்ரஹமயமான அருளாளர்களாக இருப்பதால் இந்த ஸ்தோத்திரங்கள் ‘அருளால் பிறந்த கவி’யாக மட்டுமில்லாமல் நமக்கு ‘அருளைச் செய்கிற கவி’யாகவும் இருக்கின்றன.
இந்த அருளாளர்கள் கவிதை பண்ணவேண்டுமென்பதே இல்லை. அருளையே நேராக வழங்கத் தெரிந்த பிறகு, அருளைத் தர வழியாக இருக்கிற கவிதையைப் பண்ணவேண்டுமென்பதில்லையல்லவா? ஆனாலும் ஏன் கவிதை எழுதினார்களென்றால், அவர்களை நேரில் தரிசனம் செய்கிறவர்களுக்குத்தானே நான் சொன்ன அந்த அருள் கிட்டும்? சரீரம் போனாலும் அவர்கள் எப்போதும் ஸூக்ஷ்மமாக அநுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், நம் மாதிரி ஜனங்களால் அதை கிரஹிக்க முடியவில்லையே! பரமாத்மாவைகூட நாம் ஒரு ரூபத்தில் தானே பாவிக்க முடிகிறது?
ஆசார்யாளையும் ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளையும் நேரில் தரிசனம் பண்ணினவர்கள் தரிசன மாத்திரத்திலேயே அருள் பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த தர்சனம் சாச்வதமாக இல்லையே! ஆசார்யாள் தர்சனம் லோகத்துக்கு முப்பத்திரண்டு வருஷங்கள்தான் கிடைத்தது. ஸம்பந்தர் தர்சனமோ அதிலேயும் பாதிதான். தங்களுடைய சரீரம் விழுந்த அப்புறம் வரப்போகிற ஜனங்களையும் விட்டுவிடக் கூடாது என்ற கருணையால்தான் அவர்களைப் போன்ற மஹான்கள் தங்களுடைய அருளையெல்லாம் திரட்டி, அடக்கி, அடைத்து வாக்காக்கி, ஸ்தோத்திரங்களும் கீர்த்தனங்களும் பாடி வைத்திருக்கிறார்கள். அவை பின்னால் வருகிற எத்தனையோ தலைமுறைகளுக்கும் சாச்வதமாக அநுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கின்றன; அதாவது ஈச்வராநுக்ரஹத்தை அந்த மஹான்களுடைய அநுக்ரஹத்தின் மூலம் பெற்றுத் தருகின்றன.
ஸெளந்தர்ய லஹரி வழியாக ஆசார்யாளின் அருள் லஹரியைப் பெறுகிறோம். இப்படிச் சொல்லும்போது இன்னொன்றும் அர்த்தமாகிறது: ஆசார்யாள் அருள் மூர்த்தி. ‘கருணாலயம்’ என்றபடி2 அருளே உருவான மூர்த்தி. அதனால் அவருடைய அருளைப் பெறுவது என்பது அவருடைய மூர்த்தியையே தர்சனம் பண்ணுவதுமாகி விடுகிறது! ஆனபடியால் இந்த ஸ்துதிவழியாக அவர் அம்பாளை நமக்கு தர்சனம் பண்ணி வைப்பது மாத்திரமில்லை; தாமும் தர்சனம் தந்துவிடுகிறார் என்றாகிறது! கடைசியில் அவள் யார், அவர் யார்? ஒன்றுதான்! ஆக, பாஞ்ச பௌதிகமான சரீரத்தில் ஆசார்யாள் என்று இருந்தவரின் தர்சனம் லோகத்துக்கு முப்பத்திரண்டு வருஷந்தான் கிடைத்ததென்றாலும், அநுக்ரஹ ரூபத்தை சாப்த (ஒலி) ரூபமாக்கி அவர் எடுத்துக்கொண்டுள்ள ஸெளந்தர்ய லஹரி என்ற சரீரத்தில் அவர் தர்சனம் உலகம் உள்ளளவும் அழியாதபடிக் கிடைப்பதாக ஆகியிருக்கிறது!…..
அருளைத் தருகிற அருட் கவிதை பற்றி இன்னம் கொஞ்சம் சொல்லணும். பக்தியோடுகூட எந்த ஸ்தோத்ரத்தைச் சொன்னாலும், ஏன், உளறிக் கொட்டினாலுங்கூட பகவானுடைய அருள் கிடைத்துவிடும். ஆனால் அப்படிப்பட்ட பக்தி உண்டாவதுதான் கஷ்டமாயிருக்கிறது! இந்த இடத்தில்தான் அநுக்ரஹ சக்தியுள்ள அருட் கவிதைகள் நமக்கு ரொம்பவும் ஸஹாயம் செய்கின்றன. என்னவென்றால், அந்தக் கவிதைகளே அவற்றைப் படிக்கிற பேருக்கு பக்தி பாவத்தையும் ஊட்டிவிடுகின்றன! அப்பர் தேவராமென்றால், அவர் உருகி உருகிச் சொல்லியிருக்கிற வார்த்தைகளை நாம் சொல்கிறபோதே அவை நம்மையும் உருக்கி பக்தி ரஸத்தை ஊட்டிவிடுகின்றன. ‘ஸெளந்தர்ய லஹரி’யில் உருக்கம் ஜாஸ்தி என்று சொல்ல முடியாது. அது காவ்ய ரஸங்களாலேயே நம் சித்தத்தை ஆகர்ஷித்து அம்பாளிடம் ஈடுபடுத்தி பக்தி ரஸத்தை ஊட்டிவிடுகிறது.
அருட் கவியில் இன்னொரு தினுசு… இங்கே கவி என்பதைக் கவிதை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். ஸம்ஸ்கிருதத்தில் கவி என்றால் கவிதை பண்ணும் ஆஸாமியைத்தான் குறிக்கும்; அவன் பண்ணுவது காவ்யம், அல்லது கவிதை. தமிழில், பண்ணுகிற ஆஸாமி, பண்ணப்படும் செய்யுள் இரண்டையும் கவி என்று சொல்கிறோம் – பண்ணுகிறவனே இப்படி வாக்ரூபம் எடுத்துக்கொண்டு விட்டான் என்கிற மாதிரி!… அருட் கவியில் ஒரு தினுஸைப் பற்றிச் சொல்ல வந்தேன். அதாவது, நமக்குப் போதிய பக்தி இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கேள்வியில்லை. அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நம் பக்தியை வைத்து அந்தக் கவிதை நமக்கு அநுக்ரஹ பலன் தருவது, அல்லது நமக்கு பக்தியையும் அதுவே உண்டாக்கி அருள் தருவது என்றெல்லாம் இல்லாமல், தன்னுடைய சப்த விசேஷத்தாலேயே, சொல்கிறவருக்கு அருளைப் பெற்றுத் தந்துவிடுவதாக ஒரு தினுசு உண்டு. நம்முடைய பக்தியைப் பொறுத்ததாக இல்லாமல் அந்தக் கவிதைகளின் சப்தங்களுக்கே திவ்ய சக்தி இருக்கும். நமக்கு விசேஷமாக பக்தி இருக்கவேண்டும் என்றில்லை; அந்தக் கவிதைக்கும் அர்த்த பாவம், உருக்கம், காவ்ய ரஸம் விசேஷமாக இருக்கணுமென்றில்லை. ஆனாலுங்கூட அந்த வார்த்தைகளின் ஒலிக்கே உள்ள சிறப்பால் அருளைக் கட்டிப்பிடித்துக் கொண்டுவந்து கொடுத்துவிடமுடியும். மந்த்ர சக்தி என்பது அதுதான்! மந்த்ரமயமான இப்படிப்பட்ட வாக்குகளை நாம் உணர்ச்சியே இல்லாமல், அர்த்தமே தெரியாமல் சொன்னாலும், திருப்பித் திருப்பிச் சொல்லி ‘ஜபம்’ என்று பண்ணி விட்டோமானால் அதன் சப்தங்களே அவற்றிலுள்ள திவ்ய சக்தியால் பலவித அநுக்ரஹங்களைப் பண்ணிவிடும். அநேக மஹான்களுடைய அநேக ஸ்துதிகளில் அர்த்த பாவம், காவ்ய ரஸம், மனஸின் உருக்கம் முதலானவற்றோடு கூடவே இப்படிப்பட்ட மந்த்ர சப்த விசேஷமும் சேர்ந்திருக்கிறது. சில ஸமயங்களில் அவர்களுடைய ஸ்துதிகளில் அர்த்த விசேஷத்தால் உத்தமமானது வேறே, சப்த விசேஷத்தால் அருளைத் தந்து மந்த்ர மயமாயிருப்பது வேறே என்று இருப்பதையும் பார்க்கிறோம்.
ஆசார்யாளின் ஸ்துதிகளில் அர்த்த விசேஷத்தில் குறைந்ததாக எதுவுமே கிடையாது. அத்தனையுமே ரத்னச் சுரங்கம்! ஸாதா மணி, இமிடேஷன் கல்லு எதுவுமே கிடையாது! அப்படியிருப்பதோடுகூட, ‘பொன் மலர் நாற்றமுடைத்து’ என்று, ப்ரதி ச்லோகத்துக்கும் சப்த விசேஷத்தாலேயே மந்த்ர சக்தியும் இருப்பதாக இரண்டு ஸ்தோத்ரங்களைப் பெரியவர்கள் எடுத்திருக்கிறார்கள். முன்னேயே சொன்னேன்: ஒன்று, ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்’; இன்னொன்று ‘ஸெளந்தர்ய லஹரி’தான். மந்திர சாஸ்த்ரமாகவே உள்ள முதல் 41 ச்லோகத்துக்கு மாத்திரமில்லாமல் நூறு ச்லோகத்துக்குமே மந்த்ர சக்தி இருக்கிறது! பின் பாதியான அம்பாளுடைய ஸ்வரூப வர்ணனை ச்லோகங்களுங்கூட ஒலிச் சிறப்பாலேயே திவ்ய சக்தியை க்ரஹித்துக் தரக்கூடிய மந்த்ர மஹிமையும் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த ஸ்லோகங்களிலும் ஒவ்வொன்றையும் ஜபம் பண்ணினால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். அப்படிப் பண்ணி எத்தனையோ பேர் எத்தனையோ பரம்பரையாகப் பலன் பெற்றும் வந்திருக்கிறார்கள். குருமுகமாக, அந்தரங்கமாகத் தெரிந்து கொண்டு அநுஷ்டானம் பண்ண வேண்டிய விஷயம்.
பக்தி ஸ்துதி, கவிதை என்கிற ரீதியில் யாரும் படித்துப் பயன் பெறலாம். ஆனால் அதையே மந்த்ர சாஸ்த்ரம் என்று வைத்துக்கொண்டு பயன் பெறவேண்டும் என்கிறபோது ஆசார்ய முகமாக அதற்கான நியமங்களோடுதான் அநுஷ்டிக்க வேண்டும்.
நாம் அம்பாளிடம் நீங்காத நிஜ பக்தி வேண்டும் என்ற ஒரு பலனை உத்தேசித்துப் பாராயணம் செய்தாலே போதும்! பாக்கி பலனெல்லாம் அதற்குள்ளே வந்துவிடும். அவளே தருவாள். அப்படி வராவிட்டாலும், அவள் தராவிட்டாலும் கவலைப்படத் தோன்றாது. பக்தி நிஜமாக ஏற்பட்டுவிட்டால் வேறெந்தப் பலனையும் எதிர்பார்க்கத் தோன்றாது…
சிவன், விஷ்ணு, அம்பாள் முதலான எல்லா தெய்வங்களையும் பற்றி நம்முடைய ஆசார்யாள் பண்ணியிருக்கும் எல்லா ஸ்துதிகளுமே நான் சொன்ன இரண்டு அர்த்தத்திலும் அருட்கவிகளாகும். அம்பாள் பரமாக ‘ஸெளந்தர்ய லஹரி’யின் முதல் பாகமான ‘ஆனந்த லஹரி’ தவிர, இன்னொரு ‘ஆனந்த லஹரி’யும் முழு ஸ்தோத்ரமாகப் பண்ணியிருக்கிறார். இன்னம் ‘தேவீ புஜங்கம்’, ‘த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்ரம்’, ‘[த்ரிபுரஸுந்தரி] சதுஷ்ஷஷ்ட்யுபசார பூஜா ஸ்தோத்ரம்’, ‘[த்ரிபுரஸுந்தரி] வேத பாத ஸ்தவம்’ முதலான பெரிய ஸ்தோத்ரங்களும், ‘அன்னபூர்ணாஷ்டகம்’, ‘அம்பாஷ்டகம்’, ‘பவாநி புஜங்கம்’ முதலான சின்ன ஸ்தோத்ரங்களும் அம்பாள் மேல் செய்திருக்கிறார். மதுரை மீனாக்ஷி, ச்ருங்கேரி சாரதாம்பா, ஸ்ரீசைலம் ப்ரமராம்பா முதலான க்ஷேத்ர மூர்த்திகள் மேலும் ஸ்தோத்ரம் பண்ணியிருக்கிறார். ஆசார்யாளுடைய ‘சிவாபராத க்ஷமாபன ஸ்தோத்ரம்’ மாதிரியே நம்முடைய அபராதங்களை அம்பாளிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பதாகக் ‘காளி ஸ்துதி’ என்று ஒன்று – ‘காள்யபராத பஞ்ஜன ஸ்தோத்ரம்’ என்றும் அதற்குப் பேர் சொல்கிறார்கள்; அப்படியொரு ஸ்தோத்ரம் – சாக்தத்துக்குப் பேர் போன பெங்காலில் ஆசார்யாள் பண்ணியதாக விஷயஜ்ஞர்களும் சொல்லிப் பாராயணம் பண்ணுகிறார்கள்.
பல தேவதைகளின் மேல் நூற்றுக்கணக்கில் ஆசார்யாள் ஸ்தோத்ரங்கள் பண்ணியிருந்தாலும், அதற்கெல்லாம் ‘டாப்’பாக ஸெளந்தர்ய லஹரியைத்தான் லோகம் கொண்டாடி வந்திருக்கிறது. ஆசார்யாளின் அஷ்டோத்ரத்திலேயே “ஸெளந்தர்ய லஹரீ முக்ய பஹு ஸ்தோத்ர விதாயகாய நம:” [ஸெளந்தர்ய லஹரியை முக்யமாகக் கொண்ட அநேகத் துதிகளை அளித்தவருக்கு நமஸ்காரம்] என்று இதைத்தான் அவருடைய முக்யமான துதி நூலாகச் சொல்லியிருக்கிறது. மற்ற எந்த ஸ்தோத்ரம் பற்றியும் அதில் ரெஃபரன்ஸ் இல்லை. முன்னேயே இருந்த மூல நூல்களுக்கு விளக்கவுரையாக அவர் எழுதிய பாஷ்ய க்ரந்தங்களில் ப்ரஹ்ம ஸுத்ர பாஷ்யமும், வேதாந்தத்தில் அவரே ஒரிஜினலாகச் செய்த ‘ப்ரகரண க்ரந்தங்கள்’ என்பதில் ‘விவேக சூடாமணி’யும் சூடாமணியாக இருக்கிற மாதிரி அவர் செய்த பக்தி ஸ்துதிகளில் மிக உயர்ந்த இடம் ‘ஸெளந்தர்ய லஹரி’க்கே இருக்கிறது.
அவரவர் அநுபவம், பக்குவம், படிப்பு, பண்பு, வாழ்க்கை நிலை ஆகியவற்றைப் பொறுத்து ‘ஸெளந்தர்ய லஹரி’ மாதிரியான உசந்த நூல்களுக்கு ஏராளமான உள்ளர்த்தங்கள் தோன்றும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ தோன்றியிருக்கிறது; இனிமேலும் தோன்றும். இதோடு முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாமல் புதுப்புது shadeகள் [சாயைகள்] தோன்றிக் கொண்டேயிருக்கும் – தோண்டத் தோண்ட ஊற்று ஜலம் வந்து கொண்டேயிருக்கிற மாதிரி! இப்போது நான் எனக்குத் தோன்றுகிற அர்த்தத்தைச் சொல்வதால் இதோடு முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னம் ஆழ ஆழத் தோண்டிக் கொண்டே, முழுகிக்கொண்டே போகிறவர்களுக்கு இன்னம் என்னென்ன ரத்தினங்கள், முத்துக்கள் கிடைக்குமோ? அம்பாள் கிருபையில் உங்களில் யாராவது, ஒருத்தரோ, பல பேரோ அப்படிக் கொண்டுவந்து கொடுத்தால் அதுவே எனக்குப் பெரிய ரத்னாபிஷேகம், முக்தாபிஷேகம்.
1‘மலையினார் பருப்பதம்’ எனத் தொடங்கும் பதிகத்தில்.
2“ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் ||”