நூற் சிறப்பு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

மூன்றாவதான ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ பிந்தியோ இவ்வளவு பூர்ணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதுமில்லை, தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை தரம் சொன்னாலும் கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக, தெவிட்டாத மாதூர்யமுள்ளதாக இருப்பது ‘ஸெளந்தர்ய லஹரி’. மூக பஞ்சசதியிலும் மாதுர்யம் இருக்கிறதென்றாலும், அதைவிட இதில் காம்பீர்யமும் சேர்ந்திருக்கிறது! மார்த்வத்துக்கு (மிருதுத்தன்மைக்கு) ‘பஞ்சசதி’, காம்பீர்யத்துக்கு ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றுகூடச் சொல்வதுண்டு. அதனால் இதிலே மார்த்தவம் குறைச்சல் என்று அர்த்தமில்லை. ஆனாலும் ரொம்பவும் எளிய பதப்பிரயோகம் என்று சொல்லமுடியாது.

ஆசார்யாளின் ஸ்தோத்ரங்களுக்குள் மிகவும் எளிமையானது ‘பஜ கோவிந்தம்’. இது அப்படியில்லை. கொஞ்சம் கஷ்டமான வார்த்தைகள் இருக்கத்தான் செய்யும். நுட்பமாக அநேக விஷயங்களை வர்ணிக்கும்போது precise-ஆக [அதை மட்டுமே குறிப்பாகச் சுட்டுவதாக] உள்ள வார்த்தையைப் போடவேண்டும் என்பதால் கஷ்டமான வார்த்தைகளையும் கொஞ்சம் போட்டிருக்கிறார். புரியாததால் கஷ்டம் என்றாலும், வாய்க்கு மதுரமாகத்தானிருக்கும். புரிந்தவிட்டபின் ‘இந்த வார்த்தையைத்தான் இங்கே போட முடியும்’ என்று கவிதை நயத்தைக் கொண்டாடுவோம். ஆத்மிகத்துக்கு அரிச்சுவடி போல தர்மங்களை, தத்வங்களை எளிதாகச் சொல்லிக் கொண்டு போகிறபோது வர்ணனை, உவமை மற்ற அலங்காரங்கள் அவ்வளவாக இல்லாமல் ‘பஜகோவிந்த’த்தை ஸிம்பிள் மீட்டரில், வார்த்தையில் பண்ணினார். இங்கே அம்பாளின் ரூப லாவண்யத்தைச் சொல்ல வந்தபோது, கவிதா ப்ரதிபையில் எப்படியெல்லாம் ஜோடனை செய்ய முடியுமோ அப்படிச் செய்யும்போது ‘ஸ்டைல்’மாறிற்று; மீட்டரும் மாறிற்று. வரிக்குப் பதினேழு எழுத்துக் கொண்ட நாலு வரி ச்லோகங்களான ‘சிகரிணி’ என்ற மீட்டரில் ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பண்ணியிருக்கிறார். அம்பாளின் அழகை வாயாரச் சொல்லிக்கொண்டு ஆனந்தப்படுவதற்கு ஏற்ற விதத்தில் ‘சிகரிணி’ சந்தஸை சிகரமாக்கிக் கையாண்டிருக்கிறார்.

நாற்பத்திரண்டாவது ச்லோகத்திலிருந்து ஆரம்பித்து நூறு முடியப் பண்ணியிருக்கிற ஸ்வரூப வர்ணனையில், அம்பாளே நம் நேரே தரிசனம் கொடுத்தால் எந்த மாதிரி ஆனந்தமாயிருக்குமோ அந்த மாதிரி ஆனந்தப்படும்படியாக வார்த்தைகளையும், வர்ணனைகளையும், ரஸபாவங்களையும் பொழிந்து அநுக்ரஹித்திருக்கிறார்.

ஒரு பெரிய சில்பி அர்ப்பண புத்தியோடு ஒரு தெய்வச் சில்பத்தைப் பண்ணுகிறபோது அதிலே எப்படி அந்த தெய்வமே வந்து குடிகொண்டு விடுகிறதோ, அப்படி உயர்ந்த நிலையில் அநுபவித்து அநுபவித்து, அந்த அநுபவமும் வாக்கும் அவளே கொடுத்தது என்ற அர்ப்பண புத்தியோடு ஆசார்யாள் இதைப் பண்ணியிருப்பதால் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரிக்கப்படுகிற அம்பாளின் ஸ்வரூபமாக இருக்கிறது.

கொண்டைமாலை கட்டும்போது பூ பூவாக ஸரம் கோத்து, அந்த ஸரங்களை ஒன்றோடொன்று முறுக்கிச் சேர்த்து ஜரிகை, ஜிகினா தைக்கிறதுபோல, அக்ஷரங்களைப் பதமாகத் தொடுத்து, பதங்களை வாக்கியமாகத் தொடுத்து ஒவ்வொரு ச்லோகத்தையும் பண்ணி, ச்லோகத்துக்கு ச்லோகம் ஸம்பந்தப்படுத்தி முழு ஸ்தோத்திரமாகப் பண்ணியுள்ள கலைஞராக, கவியாக ஆசார்யாள் இங்கே தர்சனம் தருகிறார். பூமாலை-பாமாலை என்று சொல்கிறோமல்லவா? பூ மாலை கண்ணுக்கு அழகான ரூபமாகத் தெரிகிறது என்றால், பாமாலை காதுக்கு அழகான சொல்லும் சந்தமுமான ரூபத்தில் இருக்கிறது. பூமாலைக்கு வாஸனை மாதிரிப் பாமாலைக்கு அதன் அர்த்தம். பூவிலிருந்து தேன் வருகிறதென்றால் பாவிலிருந்து கிடைக்கிற ரஸாநுபவம்தான் மனஸுக்குத் தேன். ஒரு பெரிய வித்யாஸம் – பூமாலை வாடிப் போவது; பாமாலை லோகமுள்ள அளவும் வாடாது!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is உத்தமத் துதிகள் மூன்று
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அருட்கவி: இரு பொருளில்!
Next