அன்னை வழிபாடு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஒளவை, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்‘ என்கிறாள். வேதமும் மாதா பிதாக்களை தெய்வமாக நினைக்கச் சொல்கிறது. இரண்டிலும் அப்பாவுக்கு முன்னாடி அம்மாவைத்தான் தெய்வமாகச் சொல்லியிருக்கிறது.

தாயாரைத் தெய்வமாக நினைப்பதையே திருப்பி வைத்து தெய்வத்தையே தாயாராக பாவிக்கும் போதுதான் அம்பாள் அம்பாள் என்று வழிபடுகிறோம். மற்ற எந்த ரூபத்தையும்விடப் பரமாத்மாவை இப்படித் தாயாராக நினைக்கிறபோதே ஜாஸ்தி ஆனந்தம் உண்டாகிறது. ஏன்? அம்மாவைவிட அன்பானவர்கள் இல்லை. அவளிடம் நமக்கு ஸ்வாதீனம் ஜாஸ்தி. கொஞ்சங்கூட பயப்பட வேண்டாம். வெட்கப்பட வேண்டாம். பயத்துக்கும் வெட்கத்துக்கும் காரணமாக இருப்பதெல்லாம் தன்னால் அவள் முன் அடிபட்டுப் போகிறது! எத்தனை பயம் வந்தாலும் குழந்தை ”அம்மா” என்று அவளைத்தான் கட்டிக் கொள்கிறது. வயஸு ஏறும்போது ஒருத்தருக்கு ஏற்படும் மனோவிகாரத்துக்கு வெட்கப்பட வேண்டியில்லாமல், அம்மாவின் முன்னால் தானாக அது நசித்துவிடுகிறது.

தாயன்பைப் போலக் கலப்படமில்லாத பூர்ண அன்பை எங்கேயும் காணமுடியாது. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலுங்கூட, தாயாராகப்பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூர்ண அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள். ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்கிறோம். ”துஷ்டப் பிள்ளை இருப்பதுண்டு; ஆனாஸ் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது1.” என்று ‘தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்ர’த்தில் சொல்லியிருக்கிறது. பிறக்கிற போதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில் அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பிறந்த பிற்பாடும் ஆஹாரம் தருவதிலிருந்து ஸகலத்துக்கும் அவள்தான் கதியாய் இருக்கிறாள். பால்யத்தில்தான் தாயார்-குழந்தையின் பரஸ்பர அன்பு ரொம்பவும் அதிகமாக இருப்பது. அவளையே முழுக்க நம்பியிருப்பது அப்போதுதான். காமாதி விகாரங்கள் தொடாத போதுதான் அம்மாவே கதியாயிருப்பது. ‘எல்லாம் அவள் செய்வாள்’ என்று திட உறுதியோடு கவலையில்லாமல் ஒப்புக்கொடுப்பது குழந்தைப் பிராயத்தில்தான்.

பரமாத்மாவை மாதாவாக பாவிப்பது அதனால் தான். நமக்கு எத்தனை வயஸாயிருந்தாலும் அங்கே குழந்தையாகிவிடுகிறோம். பூர்ண நம்பிக்கை, சரணாகதி என்று ஒட்டிக் கொண்டிருப்பது, மனோவிகாரமில்லாமலிருப்பது – இப்படிக் குழந்தைத் தன்மையிலுள்ள தெய்வத்தன்மையெல்லாம் நம்மிடம் வருவதற்காகத்தான் பரமாத்மாவை அம்பாளாக பாவிப்பது. பசியாக இருக்கட்டும், ஒரு வஸ்து வேண்டும் என்றிருக்கட்டும், வெளியே போக ஆசையாயிருக்கட்டும், நோவு நொடி ஏதாகட்டும் – எதுவானாலும் ”அம்மா, அம்மா” என்று அந்த ஒருத்தியையே குழந்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல நாம் பரமாத்மாவை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்ள அவரை ஜகன்மாதாவாகவும் நம்மைக் குழந்தைகளாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும். ”குழந்தையாகி விடவேண்டும்” என்று உபநிஷத்தும் உபதேசிக்கிறது2.

பரமாத்மாவை ஜகஜ்ஜனனியாக பாவிப்பது என்றால், இது இல்லாத ஒன்றை நாமே கல்பித்துக்கொண்டு ஸந்தோஷப்படுவது என்று அர்த்தமில்லை. வாஸ்தவத்திலேயே ஸகல குணங்களுக்கும் ஆச்ரயமாக இருக்கப்பட்ட பரமாத்மாவிடம் பூர்ணமான மாத்ருத்வமும் இருக்கத்தான் செய்கிறது. இத்தனை அம்மாக்களுக்கும் அந்த அம்மாக்களுடைய வாத்ஸல்யத்துக்கும் தியாகத்துக்கும் அந்தப் பரமாத்மாதானே மூலம்? அதனால், நாம் பாவிக்காவிட்டாலும், யதார்த்தத்திலேயே பரமாத்மா மாத்ரு தத்வம் நிரம்பியவர்தான். ‘தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!‘ என்று மாணிக்கவாசகர் சொல்வது3 இதைத்தான். ‘அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே‘ என்றும் சொல்கிறார்4. அப்பர் ஸ்வாமிகளும் ‘அப்பன் நீ, அம்மை நீ‘ என்கிறார்5. பரமாத்மாவின் மாத்ரு பாவத்தை அநுபவித்துத் தான் இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

நம் சரீரத்தின் அம்மா எத்தனை அன்பாயிருந்தாலும், அவளுடையதோ, நம்முடையதோ யாருடைய சரீரம் முதலில் போனாலும் அதோடு அந்த ஸம்பந்தம் போய் விடுகிறது! வெவ்வேறு ஜன்மாவில் வெவ்வேறு அம்மா வருகிறாள். இத்தனை அம்மாக்களுக்கும் உள்ள அன்பின் மூலமான பரமாத்மா மட்டும் எப்போதும் சாச்வதமாகத் தொடர்ந்து வருகிறார். இதனால்தான் ”தொடர்ந்து வரும் தாயானை6 என்கிறார்கள். அழிந்து போகிற உடம்புக்கு மட்டும் அம்மாவாக இல்லாமல் அழியாத உயிருக்கு அம்மாவாக இருந்து, இஹத்திலும் பரத்திலும் ரக்ஷிக்கிற பரம கருணை கொண்ட தாய் பரமாத்மாவே! ஒரு ஐந்து பேர், பத்துப் பேருக்குக் கொஞ்ச காலம் மட்டும் தாயாராக இல்லாமல், புழு பூச்சியிலிருந்து யானை, சிங்கம் வரை, மநுஷ்யர்களிலிருந்து தேவர்கள் வரை இத்தனை ஜீவராசிகளுக்கும் எத்தனை காலத்துக்கும் அம்மாவாக இருப்பது பரமாத்மாவே. ஒவ்வொன்றுக்கும் வேண்டிய ஆஹாராதிகளை, போக்ய வஸ்துக்களை லோகத்தில் பண்ணி வைப்பது அந்தப் பெரிய அம்மாதான். குழந்தைக்காகத் தாயாரிடம் பால் உண்டாகிறது; வயிற்றிலிருக்கும்போதே தொப்புள் கொடி வழியாக அவளிடமிருந்து அதற்கு ஆஹாரம் போகிறது என்றால், இந்த ஏற்பாட்டை ஒவ்வொரு தாயாரும் தானாகவா செய்து கொண்டாள்? மஹாமாதாவாக ஒரு பராசக்தி இருந்து கொண்டுதான் இப்படியெல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

பரமாத்மா நம்முடைய உடலை மட்டுமின்றி உயிரையும் வளர்க்கிற அம்மா. அறிவை வளர்த்து ஆத்மாநுபவத்தைத் தருகிற அம்மா. வயிற்றுக்குப் பால் தருகிற மாதிரி ஞானப்பால் கொடுத்து, அம்மா பிள்ளை என்ற பேதமில்லாமல் ஒன்றாகச் செய்துகொள்கிற அம்மா.

ஆனதால் நம் மனஸுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமில்லாமல், இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபடவேண்டும் என்கிற நியாயத்தையொட்டி வாஸ்தவமாகவே எந்தெந்த ஜன்மத்துக்கும், ஜன்மாவே நீங்குவதற்கும், துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வணங்கத்தான் வேண்டும்.

எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. அப்படி ஸாக்ஷாத் பரப்பிரம்மமே தாயாகி, அம்பிகையாக இருந்து கொண்டு நமக்கு அநுக்ரஹம் செய்யவேண்டும் என்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வந்து அருள்புரிகிறது.

அரூபத்துக்கு ஏன் ரூபம் வேண்டுமென்றால், ரூபமுள்ள நாம் அனைவரும் அந்த மூலத்திலிருந்தே பிறந்து, அது நமக்குத் தாயாராகவும் நாம் அதற்குக் குழந்தைகளாகவும் இருப்பதால்தான். நமக்கும் ரூபமில்லை, நாமும் ஆத்மாதான் என்கிறது இருக்கட்டும் – இப்போது நமக்குத் தெரியாத கதை அது! இத்தனை ரூபங்கள் – பசு, பக்ஷி, மிருகம் என்று நானா விதம், ஒவ்வொரு ஜாதியும் ஒரே மாதிரி – இருந்து கொண்டிருப்பதால் இவற்றுக்கெல்லாம் ஒரு மூலம் உண்டு என்று மட்டும் இப்போதும் புத்திக்குத் தெரிகிறது. மூலம் – தாயார்; மூலத்திலிருந்து வந்த எல்லாம் குழந்தைகள்.

குழந்தை என்றால் அதற்கு அம்மாவைப் பார்த்தாக வேண்டும். அவள் பக்ஷணத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளேயிருந்தால் போதாது! குழந்தை பக்ஷணத்தைத் தொடாது. அவளே கண்ணுக்கு முன்னால் வந்து ஊட்டினால்தான் தின்னும். பக்ஷணமே வேண்டாம்; அவள் கண்ணுக்கு முன்னால் இருந்துவிட்டால் போதும்! உள்ளேயிருந்து, ”கண்ணே ராஜா!” என்று அவள் குரல் கொடுத்தால்கூடப் போதாது. அவளைப் பார்த்தேயாக வேண்டும்! அவள் தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும்! அவள் முகத்தைப் பார்த்தால்தான் அது ‘களுக்’ ‘களுக்’ என்று சிரிக்கும். நாமும் குழந்தைகள்தானே, பராசக்திக்கு? அதனால் அரூபமாக, தத்வமாக ஒரு பராசக்திதான் நம்மை ரக்ஷிக்கிறது என்று தெரிந்தால் போதமாட்டேன் என்கிறது; ரூபமாக, பிரேமையாக ரக்ஷிக்கிறாள் என்று பார்க்கும் படியாக அது வந்தால்தான் மனஸ் நிறைகிறது.

பரமாத்மாவைப் பரம கருணாமூர்த்தியாகப் பார்க்க வேண்டுமானால் அதற்கு அம்பாள் ரூபத்தைவிட வேறில்லை. குழந்தைக்குத் தாய், கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதாரவிந்தத்தில் நிறைந்த அன்பு இருந்துவிட்டால் வாழ்க்கையே நிறைந்து பரிபூர்ண ஆனந்தம் உண்டாகிவிடும். அம்மாவாக உபாஸிக்க ஆரம்பித்தால் இப்படிப்பட்ட நிறைந்த அன்பு வெள்ளம் இயல்பாக நம்மிடமிருந்து பெருக ஆரம்பித்து விடும்.

அம்பாளுடைய தியானம் இடைவிடாத தாரையாக நம்மிடமிருந்து பெருக ஆரம்பித்துவிட்டால் அதுவே ஸகல தாப சமனமான, ஸமஸ்த பாப நிவாரணமான புண்ய தீர்த்தமாகும். அன்புக்கெல்லாம் ஊற்றாக இருக்கிறது அதுதான்.

‘ஸஹோதர ஸஹோதரிகளே!’ என்று இப்போது நாம் வாய் வார்த்தையில் மட்டும் பிரஸிங்கிப்பதும், எழுதுவதும் நிஜ அநுபவமாவது, இத்தனை பேருக்கும் நிஜமாக ஒரே அம்மாவாக – ‘நமஸ்தே ஜகத் ஏக மாத:‘ என்று காளிதாஸன் [‘சியாமளா தண்டக’]த்தில் சொன்னதுபோல ஒரே அம்மாவாகப் – பரமாத்மா இருப்பதை உணரும் போதுதான். எல்லா ஜீவ ஜந்துக்களையும் நம் உடன் பிறப்புக்களாகத் தழுவுகிற அன்பானது இத்தனைக்கும் பொதுவாக இருக்கும் மாதாவை உணரும்போதுதான் ஸித்தியாகும்.


1 “குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி”

2ப்ருஹதாரண்யகம் III. 5.1.

3 ‘சிவ புராணம்’, வரி 61.

4 ‘பிடித்த பத்து’, 3.

5 ‘தனித் திருத்தாண்டக’த் தொடக்கம்.

6“தொடர்ந்து நின்றன் தாயானை” (அப்பர் ஸ்வாமிகள், திருவாலவாய் திருத்தாண்டகம். 8)

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is இத் துதியின் பாஷ்யங்கள் முதலியன
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  தேவிபரமான புண்ணிய இலக்கியம்
Next