தேவிபரமான புண்ணிய இலக்கியம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இதனாலெல்லாம்தான் வேதகாலத்திலிருந்து ஸ்திரி ரூபத்தில் மாதாவாகப் பரமாத்மாவை உபாஸித்து வந்திருக்கிறார்கள். ஸ்ரீஸூக்தம், துர்கா ஸூக்தம், உஷஸைப் பற்றினது, அதிதியைப் பற்றினது, ராத்ரி ஸூக்தம், தேவி ஸூக்தம் முதலான வேத மந்திரங்கள் இப்படிப்பட்டவை தான். 108 உபநிஷத்துக்களில் அம்பாள் பரமாகவே மூன்று இருக்கின்றன*1. மஹாபாரதத்தில் அர்ஜுனன் துர்கா தேவியை ஸ்தோத்திரித்திருக்கிறான். பாகவதத்தில் கோப ஸ்திரீகளும், பிற்பாடு ருக்மிணியும் நல்ல பதி கிடைக்க வேண்டுமென்று அம்பாளைத்தான் பூஜிக்கிறார்கள். ஹயக்ரீவர், அகஸ்த்யர், துர்வாஸர் முதலான மஹா பெரிய ரிஷிகள் அவளை ஸ்தோத்திரித்திருக்கிறார்கள். காளிதாஸாதி கவிகளும் தேவிபரமாக நிறைய ஸ்துதிகளைச் செய்திருக்கிறார்கள்.

தேவார திருவாசகத் திருமுறைகளிலும், திவ்யப் பிரபந்தங்களிலும் சிவனையும் விஷ்ணுவையும் போற்றுகிற போதெல்லாம் அம்பாளையும் லக்ஷ்மியையும் சேர்த்துச் சேர்த்தேதான் சொல்லியிருக்கிறது. அருணகிரிநாதரும் ‘திருப்புகழ்’, ‘திருவகுப்பு’களில் பல இடங்களில் அம்பாள் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். ஐந்திணைகள் என்கிற பாகுபாட்டில் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் பாலைக்குக் ‘கொற்றவை’ என்ற அம்பாளையே அதிதேவதையாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். சமண காவியமான சிலப்பதிகாரத்தில்கூடக் கொற்றவை என்ற துர்கையின் துதியாக ஒன்று நீள நெடுக, அழகாக, மனஸை அப்படியே கவ்வுகிற மாதிரி வருகிறது. தமிழ்நாட்டுக் கோவில்களில் அம்மன் சந்நிதி, சுக்ரவார ஸேவை என்பவை தனி விஷேசம் பெற்றிருக்கின்றன. திருமூலர் திருமந்திரத்தில் சக்தி மஹிமைகள் நிறையச் சொல்லப்பட்டிருக்கின்றன. தாயுமானவர் பர்வதவர்த்தனி மீது[ம் அகிலாண்டேச்வரி, பிருஹந்நாயகி மீதும்] பாடியிருக்கிறார். ராமலிங்க ஸ்வாமிகள் திருவொற்றியூர் திருபுரஸுந்தரி மீது பாடியிருக்கிறார். குமரகுருபரர் மீனாக்ஷியை ஸ்துதித்திருக்கிறார். இப்போது ‘அபிராமி அந்தாதி’ பிரஸித்திமடைந்திருக்கிறது. பாரதியும் ‘சக்தி சக்தி’ என்றே நிறையப் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் அதிகம் வழிபாட்டிலில்லாத வாராஹி மேல்கூட பிராசீனமாகத் தமிழில் ஒரு துதியிருப்பதாகத் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்படி நம் மனஸுக்கு ரொம்பவும் பிரியமாக ஒட்டிப் போன தாயைப் பற்றி, அவள் அநுக்ரஹத்தாலேயே, அவளுடைய அம்சமேயான ஆசார்யாள் பண்ணினது என்பதுதான் ‘ஸெளந்தர்ய லஹரி’யின் ஏற்றத்துக்கு முக்யமான காரணம். நாமரூபமற்ற தத்வத்தைச் சொல்லும் அத்வைதத்தின் மஹா ஆசார்யரான அவர் இப்படி அம்பாளைப் பாடினதே அதற்குப் பெரிய பெருமையைத் தந்திருக்கிறது.


*1பஹ்வ்ருசோபநிஷத், த்ரிபுரோபநிஷத், பாவனோபநிஷத்

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அன்னை வழிபாடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பெயர் வந்த காரணம்: இரு ''லஹரி''களுக்குமே
Next