இன்னொன்றும் தோன்றுகிறது. அம்பாளைச் சொன்னால் நம்முடைய மதஸ்தர்களுக்கு மட்டும்தான், அதிலும் அம்பாள் பக்தர்களுக்கு மட்டுந்தான் ‘நம்முடைய மதப் புஸ்தகம்’ என்று அதில் ஒரு இன்டரெஸ்ட் உண்டாகும். பிற மதஸ்தர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் அதில் ஈடுபாடு உண்டாகாது. ஆனால் வெறுமே அழகு என்றால் – அழகு வெள்ளம், ஸெளந்தர்ய லஹரி என்று டைட்டில் போட்டால் – அதிலே தேவாந்தர [பிற தெய்வ] பக்தர்கள், மதாந்தரஸ்தர்கள், நாஸ்திகர்கள் உள்பட ஸமஸ்த ஜனங்களுக்கும் ஒரு கவர்ச்சி ஏற்படும். அழகு என்பது லோக ஜனங்கள் அத்தனை பேரையும் கவர்வது. காஷ்மீரில் இயற்கைக் காட்சி அழகாயிருக்கிறதென்று அமெரிக்காக்காரர்களும் இங்கிலீஷ்காரர்களும் வருகிறார்கள். ஸ்விட்ஜர்லான்டின் அழகைப் பார்ப்பதற்கு நம் தேசத்து ப்ரபுக்கள் போகிறார்கள். இயற்கைதானென்று இல்லை. மநுஷ்யன் பண்ணின அழகான சிலை, சிற்பங்களைப் பார்க்க லோகத்து ஜனங்களெல்லாம் வித்தியாஸமில்லாமல் சேருகிறார்கள். ஆக அன்பு, த்யாகம் முதலான உசந்த உள் பண்புகளைவிடக்கூட வெளியிலே தெரிவதான அழகுதான் ஸர்வ ஜன வசீகரணமுள்ளதாக இருக்கிறது! எதிரெதிராகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களும் அழகினால் ஒரே மாதிரி கவரப்பட்டுவிடுகிறார்கள்.
‘ஜாதி, மதம், மதப்பிரிவு, ஆஸ்திகம், நாஸ்திகம் என்ற பேதம் எதுவும் பாதிக்காமல் எல்லோருக்கும் ஆகர்ஷணமுள்ளதாகவுள்ள அழகின் பேரில் புஸ்தகத்துக்கு டைட்டில் போடுவோம். அப்போது எல்லாரும் அதைப் படிக்க ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த அப்புறம், பரம ஸெளந்தர்யமான ஒரு ஸ்த்ரீ ரூபத்தை நல்ல கவிதா த்ருஷ்டியோடு புஸ்தகத்தில் வர்ணிதிருப்பதால் அதில் யாரானாலும் ஈடுபட்டுவிடுவார்கள்*1. சர்க்கரை பூசிய மாத்திரை மாதிரி உள்ளே ஆத்மாபிவிருத்திக்கான மருந்தை வைத்து வெளியில் ஸெளந்தர்ய வர்ணனையாகப் புஸ்தகத்தைப் பண்ணினால் அழகுக்காகவே படிக்க வந்தவர்களும் தங்களையறியாமல் அம்பாள் பக்தியில் ஈடுபட்டுவிடுவார்கள். அம்பாள் பெயரைச் சொன்னால் வராதவர்களுங்கூட அழகு என்பதற்காக வந்து தத்-த்வாராவே [அதன் வழியாகவே] அந்த அம்பாளிடம் ஈடுபட்டுவிடுவாகள்! ‘கவிதை’ என்று ரஸித்துப் படிக்க வந்தவர்களும் ‘ஸ்தோத்ரம்’ என்று பக்தியுடன் பாராயணம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்! அம்பாள் பக்தர்கள் என்றே உள்ள சின்ன ஸர்க்கிளுக்காக மட்டுமில்லாமல் ஸகல ஜனங்களையும் அவளிடம் இழுக்க வேண்டுமானால் அதற்கு முதலில் அவள் பெயரை ஒளித்து அழகுப் பெயரை மட்டும் காட்டுவதே நல்ல வழி என்றே ஆசார்யாள் இப்படித் தலைப்புப் போட்டாரோ என்னவோ?…..
ஸெளந்தர்யம் என்றாலே அம்பாள் ஸம்பந்தமானது தான். எப்படியென்றால், ஸுந்தரி என்றால் அது அவள்தான். த்ரிபுரஸுந்தரி – இன்னமும் நீட்டி – மஹாத்ரிபுரஸுந்தரி – என்றெல்லாம் அவளுக்கு மஹிமை பரிமளிக்கத் தெரியணுமென்று பேர் சொன்னாலும் மூலமாக நிற்கிற பேர் வெறும் ஸுந்தரிதான். பரமசிவன், ஸதாசிவன், ஸாம்பசிவன் என்றெல்லாம் சொன்னாலும் மூலப் பேர் வெறும் சிவன்தான் என்கிற மாதிரி! ‘ஸுந்தரி’யைக் குறித்தது ‘ஸெளந்தர்யம்’. அம்பாளின் அநேக ரூப பேதங்களில் இந்த ஸுந்தரியாகிய மஹாத்ரிபுரஸுந்தரியைக் குறித்ததுதான் ‘ஸெளந்தர்ய லஹரி’ – ஸ்ரீ வித்யா மந்த்ர-தந்த்ரம், ஸ்ரீயந்த்ரம் [ஸ்ரீசக்ரம்] ஆகியவற்றின் அதிதேவதை அந்த ஸுந்தரியாகிய த்ரிபுரஸுந்தரி தான்.
பார்வதி, துர்க்கை, காளி, பாலை, புவநேச்வரி என்று அம்பாளுக்குப் பல ரூப பேதங்கள் உள்ளன அல்லவா? சிலது ஸெளம்யாக, சிலது உக்ரமாக, சிலது இரண்டுங் கலந்து? இப்படி ‘தச மஹா வித்யா’ என்று பத்து பேரைச் சொல்கிறது. அதில் ராஜராஜேச்வரியான மஹா த்ரிபுர ஸுந்தரிக்கு உரிய ஸ்ரீவித்யா சாஸ்திரத்தை ‘ஸுந்தரீ வித்யா’ என்றே சொல்லியிருக்கிறது. அம்பாளுடைய அத்தனை மூர்த்திகளிலும் பரம ஸெளம்ய மூர்த்தியாக, உச்சியான அழகு படைத்தவள் அவள்தான். அதனால்தான் ஸுந்தரி என்று பேர்.
பரமஹம்ஸா [ஸ்ரீ ராமகிருஷ்ணர்] கூட, ‘நான் எத்தனையோ தேவதா ரூபங்களை தர்சித்திருக்கிறேன். ஆனாலும் த்ரிபுரஸுந்தரி மாதிரி ஒரு அழகு ரூபம் எங்கேயும் பார்த்ததில்லை’ என்று சொன்னதாக அவரைப் பற்றிய புஸ்தகங்களில் இருக்கிறது.
*142-ம் சுலோகத்தில் தொடங்கும் அம்பிகையின் உருவ வர்ணனையான பிற்பகுதியையே இவ்விடத்தில் ஸ்ரீசரணர்கள் ‘சௌந்தர்ய லஹரி’ என்பதாகக் குறிப்பிட்டுப் பேசியிருப்பதாகத் தெரிகிறது.