”ஸெளந்தர்ய லஹரி” என்று ஏன் பெயர்?
‘ஸெளந்தர்யம்’ என்றால் அழகு. ஸுந்தரமாக இருப்பது ஸெளந்தர்யம். ‘லஹரி’ என்றால் பிரவாஹம். ‘லஹரி’ என்றால் அலை, பெரிய அலை என்றும் சொல்வதுண்டு. அடுக்கடுக்காக அலை வீசிப் பொங்கி வரும் பிரவாஹம் என்பதுதான் இங்கே பொருத்தம். ஸெளந்தர்ய லஹரி என்றால் அழுகுப் பெருக்கு. அழகே ஒரு பிரவாஹமாக வெள்ளமடித்துக் கொண்டு வருகிறது என்று அர்த்தம்.
லோகத்திலிருக்கிற இத்தனை அழகுகளும் எங்கே பிறந்ததோ அந்தப் பரமாத்ம சக்தியை மாதா ரூபத்தில் தலையிலிருந்து கால்வரை அழகு ஸ்வரூபமாக, அங்க அங்கமாக வர்ணிக்கிற ஸ்துதியானதால் ‘ஸெளந்தர்ய லஹரி’ என்று பெயர்.
ஸாதாரணமாக நூறு செய்யுள் கொண்ட துதியானால் அதற்கு ‘சதகம்’ என்று பெயர் வைப்பார்கள். ‘மயூர சதகம்’ என்று ஸுர்யனைப் பற்றி இப்படியொன்று இருக்கிறது. மூக பஞ்சசதியில்கூட நூறு, நூறாக உள்ள ஐந்து பாகங்களுக்கும் சதகம், சதகம் என்றே பெயர் இருப்பதாகச் சொன்னேனல்லவா? ‘பஞ்ச சதகம்’ கொண்ட முழு நூலுக்குப் ‘பஞ்ச சதி’ என்று பெயர் இருக்கிறது. இப்படியே ‘த்வி (இரண்டு) சதம்’ ச்லோகமுள்ள துர்வாஸருடைய நூலுக்கு ‘த்விசதி’ என்று பெயர் சொன்னேன். தமிழிலும் ‘தொண்டை மண்டல சதகம்’, ‘குமரேச சதகம்’ என்றெல்லாம் உள்ளன.
ஆனால் ஆசார்யாள் நூறு, நூறு ச்லோகம் கொண்டதாக ஈச்வரனைக் குறித்து ஒன்றும் அம்பாளைக் குறித்து ஒன்றுமாக இரண்டு ஸ்தோத்ரங்கள் செய்துள்ள போதிலும் இதில் ஒன்றுக்கும் ‘சதகம்’ என்று பேர் வைக்கவில்லை. இரண்டுக்கும் இரண்டு ‘லஹரி’ப் பெயர்களையே வைத்திருக்கிறார். அவர்தான் வைத்தாரோ, மற்றவர்கள் வைத்தார்களோ, தானாக அமைந்ததோ, அவர் பண்ணின இரண்டு சதகங்களும் ‘லஹரி’, ‘லஹரி’ என்றே வழங்குகின்றன.
இவற்றில் ஈச்வரனைப் பற்றியது ”சிவாநந்த லஹரி”; அம்பாளைக் குறித்ததுதான் ”ஸெளந்தர்ய லஹரி”.
கரை புரண்ட வெள்ளமாக ஆசார்யாளிடமிருந்து இந்த இரண்டும் பக்தியநுபவத்தின் உச்சியிலிருந்து பெருகி வந்திருக்கின்றன. இவற்றை அவர் யோஜித்து யோஜித்துக் கவனம் பண்ணவில்லை. அப்படியே அநுபவ நிலையிலிருந்து, ஒரு ஊற்றிலிருந்து ஜலம் பொங்குகிற மாதிரி அலை அலையாகக் கொட்டியிருக்கிறார். அதனால் “லஹரி” என்பதுதான் பொருத்தம்.
வெள்ளமான லஹரியாக இருப்பதால் நாமும் அதிலே மிதக்கிறோம். “சதகம்” என்று பேர் வைத்துவிட்டால் நூறாவது ச்லோகத்தோடு கரை கட்டியாச்சு என்று அர்த்தம். லஹரியிலேயோ நாம் கரையேறாமல் ஜலப் பெருக்கோடேயே இஷ்டப்பட்டவரை மிதந்துகொண்டு, நீத்திக் கொண்டு, படகு விட்டுக்கொண்டு போகலாம். அதாவது, ஆசார்யாள் முடித்திருக்கிற நூறாவது ச்லோகத்தோடு நாம் ‘டக்’கென்று நிறுத்திவிடாமல், அதுவரை பாராயணம் பண்ணியதில் நமக்கு உண்டான அநுபவத்தினால் இன்னம் மேலே மேலே அம்பாளுடைய அழகு வெள்ளத்தையும் ஈச்வரனுடைய லீலைப் பிரவாஹத்தையும் பாவித்து பாவித்துப் பார்த்துக் கொண்டே போகலாம். இப்படி, பக்த மனஸின் பாவனையை நூறு என்று ஒரு கோடு கட்டி நிறுத்தி விடாமல், ”இந்த ஸ்தோத்ர அநுபவத்திலே அவாளவாள் மனஸுக்குத் தோணுகிறபடி இன்னம் அந்த தெய்விக அப்பா அம்மாவைச் சுற்றிச் சுற்றி எப்படி நினைப்பை ப்ரவாஹமாக விடலாமோ அப்படிப் பண்ணிக் கொண்டு போங்கோ” என்று சொல்லாமல் சொல்வதாகவே ‘லஹரி’ என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்கலாம்.
ஆசார்யாள் எத்தனைக்கெத்தனை பெரியவரோ, மஹா சக்திமானோ அத்தனைக்கத்தனை அடக்கமானவர்; விநய ஸ்வரூபமானவர். அதனால், தனக்குப் பெரிய அநுபூதி நிலை வந்து அது இப்படிக் கவிதைப் பிரவாஹமாக, லஹரியாகப் பெருகிற்று என்று அவர் சொல்லிக் கொள்ளவில்லை.
ஆனாலும் இந்த இரண்டு ஸ்துதிகளின் தலைப்பான ”சிவாநந்த லஹரீ”, ”ஸெளந்தர்ய லஹரீ” என்ற பெயர்கள் அந்த ஸ்துதிகளிலேயே அவருடைய ஸாக்ஷாத் வாக்கில் வந்திருக்கிறது. இது ஒரு பெரிய சிறப்பு. வேறெந்த நூல் பெயரும் இப்படி நூலுக்குள்ளேயே வந்திருப்பதாகத் தெரியவில்லை. “பஜகோவிந்த ஸ்தோத்ரத்துக்கும் அதன் ஆரம்ப வார்த்தையை வைத்துத்தானே பெயர் இருக்கிறது?” என்று கேட்டால், வாஸ்தவத்தில் அந்த ஸ்தோத்ரத்திற்கு ‘பஜகோவிந்தம்’ என்று பெயரில்லை. ‘மோஹ முத்கரம்’ என்பதே அதன் டைட்டில். முத்கரம் என்றால் சம்மட்டி. மோஹத்தைப் பிளக்கும் சம்மட்டி மோஹ முத்கரம். ஆனால் அந்த ஸ்தோத்ரத்தை ஒரு பல்லவியும் அதற்கு அநேக சரணங்களும் சேர்ந்து அமைந்த ஒரு கீர்த்தனத்தைப் பாடுவது போல, ஒவ்வொரு ச்லோகத்தை முடித்தவுடனும் ”பஜகோவிந்தம், பஜகோவிந்தம், பஜகோவிந்தம் மூடமதே!” என்று திருப்புவது வழக்கமாயிருப்பதால் ‘பஜ கோவிந்த’ சப்தமே அதற்கு அடையாளமாகி அதையே ஸ்தோத்ரத் தலைப்பாக ஜனங்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு லஹரி ஸ்துதிகளில்தான் உள்ளே வரும் வார்த்தையே தலைப்பாயிருப்பது. ஆசார்யாள் வாக்கினால் உள்ள ச்லோகத்தில் வந்த ”சிவாநந்த லஹரி”, ”ஸெளந்தர்ய லஹரி” என்ற வார்த்தைகளேதான் அப்புறம் முழு ஸ்தோத்திரத்துக்கும் டைட்டில் ஆகியிருக்கிறது!
இந்த வார்த்தைகளை அவர் எந்த ஸந்தர்பத்தில் சொல்கிறார் என்று பார்க்கலாம். முதலில் ‘சிவாநந்த லஹரி’யைப் பார்க்கலாம். ‘ஸெளந்தர்ய லஹரி’ நூறு ச்லோகங்களில்கூட முதலாவது ”சிவ: சக்தயா யுக்தோ” என்று சிவன் பெயரில்தான் ஆரம்பிக்கிறது. உள்ளுக்குள்ளேயும், சிவ மஹிமைகளை ஸரஸ்வதி பாடிக் கேட்பதிலேயே அம்பாளுக்குப் பரம ஸந்தோஷம் என்று [66-வது ச்லோகத்தில்] வருகிறது. அதனால் ”சிவாநந்த லஹரி”யை முதலில் பார்ப்பதுதான் அம்பாளுக்கே ப்ரீதியாயிருக்கும்!
”சிவாநந்த லஹரீ” என்றால் ”சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்” என்று அர்த்தம். காம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.
அதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு ‘சிவம்’ என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே “சிவம்” ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் ”சிவாநந்த லஹரி”க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.
ஆசார்யாள் எந்த ஸந்தர்ப்பத்தில் [சிவாநந்தலஹரி என்னும்] இந்த சொற்றொடரைப் பிரயோகிக்கிறார் என்றால்: ஆரம்ப ச்லோகமாக, முதல் முதலில், பார்வதீ-பரமேச்வராள் சேர்ந்திருக்கிற திருக்கோலத்தைச் சொல்லி நமஸ்காரம் பண்ணுகிறார். அதுதான் ஸம்பிரதாயம். ஸாம்பமூர்த்தி, ஸாம்ப சிவன் என்பதாக அம்பாளோடு கூடினவனாகவே (ஸ+அம்ப=ஸாம்ப. ‘அம்பாளோடு சேர்ந்த’ என்று அர்த்தம். அப்படித்தான்) ஈச்வரனை எப்போதும் சொல்லியிருக்கிறது. அதனால் முதலில் சிவ-சக்தி ஜோடியாகச் சொன்னார். அடுத்த ச்லோகத்திலேயே ‘சிவாநந்த லஹரீ’என்ற பதத்தை ப்ரயோகித்திருக்கிறார். ”வஸந்தீமச்-சேதோ ஹ்ரத புவி சிவாநந்தலஹரீ” என்று இந்த இரண்டாம் ச்லோகம் முடிகிறது.
இதில் என்ன சொல்கிறார்? பரமேச்வர ஸம்பந்தமான பக்தியால் ஏற்படுகிற ஆனந்தப் பிரவாஹம் எந்த உற்பத்தி ஸ்தானத்திலிருந்து பொங்கி வந்து, தான் ஓடும் வழியிலே என்னென்ன செய்து, எந்த ஸங்கம ஸ்தானத்தில் முடிகிறது என்பதைச் சொல்கிறார். பரமேச்வரனுடைய லீலா சரிதங்களிலிருந்து இந்த ஆனந்தம் ஸரித்தாக – நதியாக – உற்பத்தியாகிறதாம். ஒரு ஆறு வருகிற வழியில் தூசி, கீசிகளை அடக்கிக்கொண்டு வருவதுபோல் இந்த சிவானந்த ஆறு பாபம் என்கிற தூசியை அடக்கிக் கொண்டு ஓடுகிறதாம். தூசியை அடக்குகிறதோடு, ஜனங்களுக்கெல்லாம் தாப நிவிருத்தியாக, ஜில்லென்று குடிக்கவும், குளிக்கவும், பயிர் பச்சைகளை வளர்க்கவும் ஆறுதானே உதவுகிறது? அதுமாதிரி இந்த [சிவானந்த] நதியும் பாவத்தைப் போக்குவதோடு தாபத்தை — தொண்டை, வயிறுடைய தாபத்தை அல்ல; ஸம்ஸார தாபத்தையே — போக்கிக்கொண்டு ஓடி வருகிறது. அப்புறம் கவடு கவடாக விட்டுக்கொண்டு, வெளி விஷயங்களை அறிகிற புத்தியின் அத்தனை வழிகளையும் ‘டெல்டா’வாகப் பண்ணிக்கொண்டு உள்ளே பிரவேசித்து, ”அப்படியே என் சித்தம் என்கிற மடுவில் வந்து ஸங்கமித்து விடுகிறது” என்கிறார்.
ஆறு என்றால் ஒரு இடத்தில் ஸங்கமிக்கத்தானே வேண்டும்? அநேகமாக நதிகள் ஸமுத்ரத்திலேதானே கலக்கும் என்றாலும், சிலது [சில ஆறுகள்] ஏதாவது ஒரு ஏரியில் போய்ச் சேர்ந்து விடுவதும் உண்டு. புழலேரியில் கூட இப்படிச் சிற்றாறுகளும் கால்வாய்களும் விழுந்து முடிகின்றன. ஒரு நதி ஸமுத்ரத்திலே விழுந்துவிட்ட பின் அது பாசனத்துக்கோ, குடிப்பதற்கோ பிரயோஜனமில்லை. ஆனால் ஏரியில் முடிந்தாலோ எப்போதும் லோகத்துக்குப் பயனாகிறது. ஆசார்யாளுக்குக் கிடைத்த சிவானந்த வெள்ளம் ச்லோக ரூபமாக என்றென்றும் லோகத்துக்குப் பிரயோஜனமாகிறதோ, இல்லையோ? இதை இப்படி அப்பட்டமாகச் சொன்னால் அஹம்பாவமாயிருக்கும் என்பதால் வியங்கியமாகச் சொல்கிற மாதிரி, ”என் சித்தமென்ற ஏரியில் வந்து சிவானந்த லஹரி தேங்கிவிட்டது” என்கிறார். ”மத்-சேதோ-ஹ்ரத” என்றால் ”என் சித்தமென்ற ஏரி” என்று அர்த்தம். சிவ சரித்திரத்தால் உண்டான நதியான லீலானந்தம் பக்தரின் சித்தத்தில் ஸங்கமித்துக் தேங்கி சாந்தமான ஆத்மானந்தமாகிறது.
”ஸெளந்தர்ய லஹரீ” என்ற phrase-ஐ [சொற்றொடரை] அம்பாளுடைய கேசாதி பாத வர்ணனையில் மூன்றாவது ச்லோகத்தில், அதாவது முதலிலிருந்து நாற்பத்து நாலாவது ச்லோகத்தில் ப்ரயோகித்திருக்கிறார். நாற்பத்து மூன்று முக்கோணம் கொண்டது ஸ்ரீசக்ரம் என்று பொதுவாகச் சொன்னாலும், அதன் நடுப்புள்ளியான பிந்துவும் கோணம் என்ற அபிப்ராயத்தில் மொத்தம் நாற்பத்துநாலு கோணம் என்று குறிப்பிடுவதும் உண்டு. ‘ஸெளந்தர்ய லஹரி’யிலேயே ”சதுச்-சத்வாரிம்சத் வஸுதள கலாச்ர” என்பதாக 44 கோணமாகத்தான் [பதினோராவது ச்லோகத்தில்] சொல்லியிருக்கிறது. ஸ்ரீசக்ரம் என்பது அம்பாளின் வாஸ ஸ்தானம் மட்டுமில்லை; அவளுடைய ஸ்வரூபமே. யந்திர ஸ்வரூபம். இந்த யந்த்ர-மந்த்ர-தந்த்ர ஸமாசாரங்களை 41-ம் ச்லோகத்தோடு முடித்துவிட்டு, எல்லாரும் கஷ்டமில்லாமல் ரஸித்து அநுபவிப்பதற்காக ஆசார்யாள் தேவியின் ரூப வர்ணனத்தைப் பண்ணினாலும், சாஸ்திரத்தில் தமக்குள்ள பற்றுதலையும் பக்தியையும் சொல்லாமல் சொல்கிறமாதிரி அவளுடைய யந்திர ரூபத்தைக் குறிக்கிற 44 என்ற எண்ணுடைய ச்லோகத்திலேயே அவயவ ரூப ஸெளந்தர்ய வெள்ளத்தைக் குறிப்பிட்டு ”ஸெளந்தர்ய லஹரீ” என்கிறார் போலத் தோன்றுகிறது.
”சிவ ஸம்பந்தமான இன்பப் பிரவாஹம்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிற ”சிவாநந்த லஹரீ” என்ற பெயரைத் தாம் எழுதிய ஒரு சதகத்தில் சொன்னார். ‘சிவ’ என்ற பேரை அங்கே வெளிப்படச் சொல்லியிருக்கிறது. ஆனால் இந்த சதகத்திலோ ‘அம்பாள் ஸம்பந்தமான’, ‘அம்பாளுடைய’ என்றெல்லாம் அடைமொழி போடாமல், வெறுமே ‘அழகுப் பிரவாஹம்’ என்ற அர்த்தத்தைத் தருவதான ‘ஸெளந்தர்ய லஹரீ’ என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார். ‘அம்பாஷ்டகம்’, ‘அம்பா பஞ்சரத்னம்’, ‘தேவீ புஜங்கம்’, ‘தேவீ சதுஷ்ஷஷ்டி உபசார பூஜா ஸ்தோத்ரம்’ என்று தம்முடைய மற்ற ஸ்தோத்ரங்களுக்கு டைட்டில் கொடுத்தது போல இங்கே ‘அம்பா ஸெளந்தர்ய லஹரீ’ என்றோ ‘தேவீ ஸெளந்தர்ய லஹரீ’ என்றோ கொடுக்கவில்லை.
ஏன் என்றால் ‘ஸெளந்தர்யம்’ என்றாலே அம்பாள் தானே? பானகம் என்று சொன்னால் போதாதா? வெல்லப் பானகம் என்று சொல்ல வேண்டுமா? இத்தனை தித்திக்கிற பானகம் வெல்லம் போட்டதுதான் என்று தானே தெரிந்து கொள்கிறார்கள்!
எலுமிச்சம்பழம், ஆரஞ்ஜு, ஆப்பிள் என்று எதையாவது பிழிந்தால் லைம் ஜூஸ், ஆரஞ்ஜ் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் என்று அடைமொழி கொடுத்துச் சொல்லணும். அதற்கெல்லாமும் வெல்லம், அல்லது அதன் இன்னொரு ரூபமான சர்க்கரை சேர்த்துத்தானாகணும். இப்படி மற்ற தேவதைகளின் ஸெளந்தர்யத்தைச் சொல்ல வேண்டுமானால் அவர்களைப் பெயர் குறிப்பிடவேண்டியிருக்கும். அப்போதுங்கூட அந்த ஸெளந்தர்யத்துக்கு மூலச் சரக்காயிருப்பது அழகு மூலமான அம்பாள்தான்.
சாதம் என்று சொன்னால் போதாதா? அரிசி சாதம் என்று சொல்ல வேண்டுமா என்ன? கோதுமை சாதம், எள்ளு சாதம், தேங்காய் சாதம் என்றால்தான் அடைமொழி போட்டுச் சொல்லவேண்டும். லோகத்திலிருக்கிற அழகுகளையெல்லாம் எது அழகாகப் பண்ணுகிறதோ, இத்தனை அழகுகளுக்கும் மூலமும் முடிவும் எதுவோ அதுவேயான அம்பாளுடைய ஸெளந்தர்யந்தான் அஸல் ஸெளந்தர்யம். அதனால் ‘அம்பாளுடைய’ ஸெளந்தர்யமென்று அடைமொழி சேர்த்துச் சொல்ல வேண்டியதில்லை.