அம்பிகையின் வடிவேயான துதி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அவளுடைய குணம் வேறே, ரூபம் வேறே இல்லை. இந்த ஸ்தோத்ரமும் அவளுக்கு வேறே இல்லை. அவளுடைய அனந்த கல்யாண குணங்கள் கேசாதி பாதமாக அவயவங்களில் ஒரு ரூபம் எடுத்துக் கொண்டது போலவே, அந்த அவயவ வர்ணனையைக் கேசாதி பாதம் பண்ணியுள்ள இந்த ஸ்தோத்ரமாகவும் வாக்கு ரூபம் – சொல்லுருவம் – எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு ஸ்தோத்ரத்தை முடிக்கும்போது ‘இதைப் பாராயணம் செய்தால் இன்ன பலன் கிடைக்கும்’ என்று சொல்வது வழக்கம். அதற்கு ‘பலச்ருதி’ என்று பெயர். ‘ஸெளந்தர்ய லஹரி’ கடைசி ச்லோகமோ, வாங்மயீயாக – சொற் பிரபஞ்சம் முழுதுமாக – உள்ள அம்பாளிடமிருந்தே ஏதோ ஸ்வல்ப வாக்குகளை எடுத்து அவளுக்கே ஸ்தோத்ரம் என்று பண்ணிய அசட்டு ஸாஹஸம்தான் இந்த ஸ்தோத்ரம் என்று ஜகதாசார்யாள் ஒரே அடக்கமாகச் சொல்லி ஸமர்ப்பணம் பண்ணுவதாக இருக்கிறது. அதற்கு முந்தின ச்லோகந்தான் (ச்லோகம் 99) பலச்ருதி மாதிரியிருக்கிறது. பலச்ருதி “மாதிரி” என்று ஏன் சொல்கிறேனென்றால் ‘இதைப் பாராயணம் பண்ணுவதால் இன்ன பலன்கள்’ என்று அதில் சொல்லியிருக்கவில்லை. பொதுப்படையாக, ‘உன்னை உபாஸிப்பவன் இன்ன பலன்கள் அடைகிறான்’ என்றே சொல்லியிருக்கிறது. அவை என்ன என்று அப்புறம் அந்த ச்லோகத்திற்கு வருகிறபோது பார்த்துக்கொள்ளலாம்! இங்கே சொல்ல வந்தது, ஆசார்யாள் ”இந்த ஸ்தோத்ர பாராயண பலன்” என்று போடவேண்டிய இடத்தில் ”அம்பாளை உபாஸிப்பதன் பலன்” என்று போட்டிருப்பதைத்தான். ஏன் அப்படிப் போட்டார்? இரண்டு காரணம் சொல்லலாம். ஆசார்யாளுக்கு அஹம்பாவ லேசமும் இல்லாததால் தாம் பண்ணிய ஸ்தோத்ரத்திற்கு அந்தப் பலன்களைத் தருகிற சக்தி இருப்பதாகச் சொல்லிக் கொள்ள எண்ணமில்லை என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், இந்த ஸ்தோத்ரமே அம்பாளுடைய ஸ்வரூபந்தான், அவளுடைய சொல் வடிவந்தான்; ஆனபடியால் இதைப் பாராயணம் பண்ணுவதே அவளை உபாஸிப்பதுதான் – என்பதே. ஸ்தோத்ரமே ஸ்தோத்ரிக்கப்படும் தேவி ஸ்வரூபமாயிருக்கும்போது அதன் பாராயண பலனே தேவி உபாஸனையின் பலனைத் தரத்தானே செய்யும்? இதைத் தான் அந்த ச்லோகத்தில் குறிப்பால் உணர்த்தியிருப்பதாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

ஸாக்ஷாத் பராசக்தியின் ரூபஸெளந்தர்யமே நம்முடைய பகவத்பாதாளின் வாக்[கு] ஸெளந்தர்யமாக அவதாரம் பண்ணியிருப்பதுதான் ”ஸெளந்தர்ய லஹரி.”

‘தேவாம்ருதத்தில் ஊறப்போட்ட ரஸாளு’ என்று நடுவிலே சொன்னேனே, அது இதைத்தான். அநுக்ரஹ ரஸம் நிறைந்த அழகு ரூப மாம்பழம் அம்பாள். அவளே அதைப் பாட ஆசார்யாளுக்குக் கொடுத்த வாக்கு தேவாம்ருதம். ஆசார்யாளின் கவிதா வாக்கான தேவாம்ருதத்தில் ரஸாளுவான அம்பாளின் அழகு – கனி போல [சிரித்து] கனிந்த அழகு – ஊறி வருகிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அம்பள்:அழகு - அன்புகளின் முழுமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ''ஆனந்த லஹரி''என்ற தலைப்பு:அத்வைதமும் சாக்தமும்
Next