“ஆனந்த லஹரி” என்ற தலைப்பு : அத்வைதமும் சாக்தமும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ஸெளந்தர்ய லஹரி’யின் பின் பாகம் அம்பாளுடைய அழகைச் சொல்கிறது. முன் பாகம் முக்யமாக அவளுடைய சக்தியைச் சொல்கிறது. பின் பாகம்தான் அஸல் ‘ஸெளந்தர்ய லஹரி’; முன்பாகம் ‘ஆனந்த லஹரி’.

சக்தி மஹிமையை ‘ஓஹோ!’ என்று போற்றியே முதல் ச்லோகம் ஆரம்பிக்கிறது. பின்னே ‘சக்தி லஹரி’ என்று தலைப்புப் போடாமல் ‘ஆனந்த லஹரி’ என்பானேன்?

இந்த ஆனந்தம் ‘சித்’ என்ற அறிவிலிருந்து உண்டாகிறது. அந்த சித்-அறிவு என்னவென்றால் ப்ரஹ்மம் தன்னைத் தானே தெரிந்து கொள்வதான அறிவுதான். ஞானம் என்றால் அதுதான் ஞானம். ஸரி, தன்னைத் தானே தெரிந்து கொள்வது என்றாலென்ன? தன்னுடைய உள்நிலையான, ஆடாத அசையாத சாந்தத் தன்மையைத் தெரிந்து கொள்வதுதான் என்று அத்வைத சாஸ்திரம் முடித்துவிடும். ஆனால் சாக்த சாஸ்திரங்களில் – குறிப்பாக ஸ்ரீவித்யையில் – என்ன சொல்லியிருக்கிறதென்றால், இங்கேயும் அந்த ஆடாத, அசையாத சாந்தத் தன்மையைச் சொல்லியிருக்கிறது; கார்யமில்லாத குணங்களில்லாத அந்த நிர்குண தத்வத்தைச் சொல்லியிருக்கிறது. அதோடுகூட, ‘இத்தனாம் பெரிய கார்ய லோகத்துக்கும் அந்த ப்ரஹ்மமேதானே அடிப்படையாயிருக்கிறது? இதிலே உள்ள குணங்களெல்லாவற்றுக்கும் அதுதானே ஆதாரமாயிருக்கிறது? ‘என்ற விஷயத்தையும் [சாக்தம்] கவனிக்கிறது. கார்யலோகத்திற்கு ஆதாரமாக இருந்து நிர்வாஹம் பண்ணுவதென்பது ஒரு மஹா பெரிய சக்தியைக் கொண்டு தானே நடக்கக்கூடும்? சாந்த ப்ரஹ்மத்துக்கே இப்படிப்பட்ட மஹாசக்தி இருக்கிறது என்பதை சாக்தம் வலியுறுத்தி ஸித்தாந்தம் பண்ணியிருக்கிறது.

அந்த ரீதியில் – ‘ஸெளந்தர்ய லஹரி’யை சாக்த ஸ்தோத்ரமாகவே ஆசார்யாள் அநுக்ரஹித்திருப்பதால் அந்த ஸித்தாந்த ரீதியில் – பார்க்கும்போது ப்ரஹ்மத்தின் சித்தான தன்னைத்தானே அநுபவித்தறியும் ஞானமென்பது அதன் உள் நிலையாயிருக்கும் அத்வைதமான சாந்தத்தின் அறிவாக இருப்பது மாத்திரமில்லை. அதோடுகூட த்வைதமான ப்ரபஞ்சம் வெளிப்படும்படியான ஆதாரமாயிருப்பதில் தான் எப்பேர்ப்பட்ட சக்தி மயமாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் அறிவாகவும் இருக்கிறது. ப்ரஹ்மத்தின் ஞானாநுபவத்தில் இப்படி சக்தி மயமாக இருக்கிற ‘ஆஸ்பெக்டு’க்கே சாக்தம் முக்யத்வம் தருகிறது. சக்தியை வைத்தே ஏற்பட்ட மதம் வேறே எப்படி இருக்கும்? அந்த சக்தியை சித் ஸ்வரூபமாக அது சொல்கிறது.

ஒருத்தருக்கே இரண்டு அறிவு இருக்க முடியாதாதலால் ப்ரஹ்மத்தின் உள் சாந்த அறிவும் அவள்தான் என்று சாக்தம் சொல்கிறது. ப்ரஹ்மம் ஸத்-சித் ஆனந்தமாயிருக்கிறதென்பதில் ஸத் என்கிற ஆதாரமான நித்ய தத்வமே சிவன், அதன் அறிவான சித்தே அம்பாள் என்கிறது. அறிவில்லாமல் ஒரு ஸத் இருப்பதென்பதோ, ஸத்யமான ஆதாரமில்லாமல் ஒரு சித் இருப்பதென்பதோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம்; இல்லையா? அதனால் ஸத்-சித் என்ற சிவ-சக்தி எப்போதும் சேர்ந்திருப்பவர்கள்; ஒருத்தரில்லாமல் மற்றவர் கிடையாது.

[ஸத்-சித்-ஆனந்தத்தில்] ஆனந்தம் என்பது என்ன? ‘ஆனந்த லஹரி’ என்று பேரென்றால் அந்த ஆனந்தமென்ன என்பதுதானே நம் கேள்வி? ப்ரஹ்மம் தான் சித் பூர்ணமாக இருப்பதை அறிந்து அநுபவிப்பதில் பெறுகிற பெரிய நிறைவுதான் ஆனந்தம். அத்வைதப்படி, ப்ரஹ்மம் தன்னுடைய நிர்குணமான சாந்த நிலையின் ஞானநுபவத்தில் பெறுகிற நிறைவுதான் இப்படிப்பட்ட ஆனந்தம். ஸ்ரீவித்யையும் இதை ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் சித் விஷயமாகச் சொன்னாற்போலேயே இங்கேயும் சக்தி விலாஸத்திற்கு முக்யம் கொடுத்து, அதையும் சேர்த்துச் சொல்கிறது. என்ன சொல்கிறதென்றால், ப்ரஹ்மத்தின் அறிவாக இருக்கப்பட்ட சித் தன் சக்தியை வெளிப்படுத்தி த்வைதப் பிரபஞ்ச லீலை செய்வதிலும் நிறைவைப் பெறுகிறது; அதனால் சிதானந்தம் என்பது சக்தி விலாஸ ஆனந்தமுந்தான் என்கிறது.

ஆனாலும் ஒன்று கவனத்துக்கு வருகிறது. சிவானந்தம், சாந்தானந்தம் என்பது போல சக்த்யானந்தம் [சக்தியானந்தம்] என்று வழக்கில்லை. சிவ சப்தமும் சாந்தமான ஸத்வஸ்துவைக் குறிப்பதனால் சிவானந்தம் என்பதும் சாந்த அநுபவ ஆனந்தந்தான். ப்ரஹ்மானந்தம் என்கிற போதும் சாந்தமான ஆனந்தத்தைத்தான் நினைக்கிறோம். ஆத்மானந்தம் என்னும்போதும் இப்படியே சக்தி, குணம், கார்யம் ஆகியவற்றை ஸம்பந்தப்படுத்தாமல் சாந்தமாக, நிர்குணமாக, நிஷ்க்ரியமாக இருக்கும் அநுபவமாகவே நினைக்கிறோம். ஏனப்படி என்றால் – ஒரு சக்தி இருக்கிறதென்றால் அது இருப்பது எப்படித் தெரியும்? அதைக் காட்டி [வெளிப்படுத்தி]க் கார்யம் பண்ணினால்தான் தெரியும். சும்மாயிருந்தால் எப்படி சக்தி தெரியும்? சக்தியின் அநுபவம் தெரியும்? சக்தியிருப்பதை அநுபவித்தறிய முடியும்? ஜீவாத்மாக்களான நம்மைப் பொறுத்தமட்டில், இப்படிக் கார்யத்திலே போனோமானால் நம் உள்நிலையான சாந்தத்தைத் தெரிந்து கொள்ளவே முடிவதில்லை. கார்யத்தில் போகும்போது நமக்கு சாந்தி கலைந்து விடுகிறது. வெளியிழுப்புக்களிலேயே இழுபட்டுக் கொண்டு ஸதாவும் சஞ்சலப்படும்படி ஆகிறது. ‘இது ஓயாதா? கார்யமில்லாமல் அமைதியாக ஆகமாட்டோமா?’ என்று இருக்கிறது. ஆசார்யாள் அத்வைத ஸித்தாந்தம் பண்ணிய போது அதனால்தான் கார்யப் பிரபஞ்சத்தை ஒரு மாயமான கானல் நீராகப் பார்த்து, அடியோடு ஒதுக்கிவிட்டு, சாந்தமான ஆத்மாவிலேயே நிலைத்து நிற்கும்படிச் சொன்னார். அப்போதுதான் ஜீவன் ப்ரஹ்மமாகவே இருப்பதும். அத்வைதம் சொல்லும் கார்யமில்லாத சாந்த ப்ரஹ்மமாகத்தான் ஜீவன் இருக்க முடியுமே தவிர ஸகல கார்யத்திற்கும் மூலமான ஸர்வசக்தியாக இருக்க முடியாது என்பது வெளிப்படை. இப்படிச் சாந்தத்திலே ஜீவனும் ப்ரஹ்மமும் அபேதாமாக ஐக்யமாகிற மோக்ஷத்தை ஸ்ரீவித்யாதி [ஸ்ரீவித்யை முதலான] சாக்த தந்த்ரங்களில் சிலவும் சொல்கின்றன. ஜீவாத்மாவுக்கு இப்பேர்ப்பட்ட மோக்ஷத்தைப் பராசக்தியே அநுக்ரஹிப்பதாகவும் அவை சொல்கின்றன. இவ்வாறு ஜீவாத்மாவுக்கு முடிந்த முடிவான பூர்ணானந்தம் சக்தியில் இல்லாமல், சாந்தத்திலேயே இருப்பதால்தான் சிவானந்த-சாந்தானந்தங்களே சொல்லப்படுகின்றன; சக்த்யானந்தம் என்று ஒன்றைச் சொல்வதில்லை.

ஆனால் சாக்தத்தில் ‘சிதானந்தம்’ என்கிறபோது அது முக்யமாக சக்த்யானந்தந்தான்.

சின்மயமாக, பேரறிவாக ப்ரஹ்மம் இருப்பதன் ஆனந்தமே சிதானந்தம். அதேதான் ஞானானந்தம் என்பதும். சாக்தத்தில் இந்தச் சிதானந்தத்தைச் சொல்லும் போது அந்த சாஸ்த்ரப்படி அம்பாளே சித் ஸ்வரூபிணியானதால் அவள் தன்னுடைய சக்தி விலாஸத்தால் த்வைதப் பிரபஞ்ச லீலை செய்வதில் அடையும் நிறைந்த ஸந்தோஷமும் விசேஷமாகக் குறிக்கப்படுகிறது.

சக்தி ஸம்பந்தத்தை வெளியிட்டுச் சொல்லாமல் ‘ஏன், எப்படி?’ என்று சொல்லத் தெரியாத ஒரு மாயையாலேயே த்வைதப் பிரபஞ்சம் ஏற்படுகிறது என்று சொல்கிற அத்வைத சாஸ்த்ரத்தில் சிதானந்தமும் சாந்தானந்தமே தான். சாக்தத்திலேயோ அம்பாள் தன்னுடைய லீலானந்தத்திற்காகவே பிரபஞ்ச வியாபாரம் பண்ணுகிறாள் என்று சொல்லி, உள்ளும் வெளியும் ஸகலமுமான அவள் சாந்தமான கார்யமில்லாத உள் ஞானம், சக்திமயமான கார்யமயமான வெளிஞானம் இரண்டிலும் ஆனந்திக்கிற சிதனந்த ரூபிணியாயிருக்கிறாளென்று சொல்லியிருக்கிறது.

அத்வைதப்படி பரப்ரஹம தத்வத்துக்கு வெளி ஞானம் வராது, வரமுடியாது, வரக்கூடாது. அதை த்வைதத்தோடு1 ஸம்பந்தப்படுத்தினாலே இழுக்கு, அபசாரம்! சாக்த்தத்தில் அப்படியில்லை. லீலானந்த ரஸாஸ்வாதத்துக்காக [சுவையைப் பருகுவதற்காக] அசையாத அந்தர்முக [உள்முக] ப்ரஹ்மம் அசைந்து கொடுத்து பஹிர்முகமாவதும் [வெளிமுகப்படுவதும்] சக்தி மஹிமையாகவே அதில் போற்றி ஸ்தோத்ரிக்கப்படும். நம்முடைய ஸ்தோத்ரத்தின் முதல் ச்லோகமே இந்த விஷயத்தைத்தான் ‘ஓஹோ’ என்று போற்றிப் புகழ்கிறது.

ஜீவாத்மா தன்னுடைய தனி சக்தி கார்ய ரூபத்திலேயே தெரிவதால், சாந்தத்தை குலைக்கும் அதிலே சாந்தம் கண்டு நிறைவடைவதற்கில்லைதான் என்றாலும் அம்பாளுடைய சக்தி விலாஸத்தை அவனும் ரஸித்து ஆனந்தப்படுவதற்கு வழியாக சாக்த மதம் இருக்கிறது. அத்வைதத்தில், நமக்குப் புரிபட முடியாத மாயை என்று தள்ளிய த்வைதப் பிரபஞ்சத்தையே சாக்தமானது அம்பாள் பண்ணும் ‘லீலை’ என்று ரஸிக்கும் படியாகச் சொல்கிறது. ஆகையால், ‘ஜீவன் ஸர்வ சக்தியாக அத்வைத ஐக்கியம் பெற முடியாது; அவன் சாந்த ப்ரஹ்மத்தில்தான் ஐக்கியம் பெறமுடியும்’ என்றாலும், அவனுங்கூட அவளுடைய சிதானந்தமான சக்தி விலாஸ ஆனந்தத்தை அவள் கூடவே தானும் பங்கு போட்டுக் கொண்டு அநுபவிக்க முடியும் என்று சாக்தம் காட்டுகிறது.

ஆசார்யாளைப்போல் அத்வைத அநுபூதி பெற்றவர்களும் இந்த மாதிரி நிலையில்தான் லோக கார்யங்கள் பண்ணியதும், பக்தி பண்ணியதும். ஆனாலும் ஒரு ஜீவனை சாந்த லக்ஷ்யத்திலேயே ஒரே குறியாகப் போகப் பண்ண வேண்டும் என்பதே அத்வைத சாஸ்திரங்களைப் பண்ணியவர்களின் லக்ஷ்யமாதலால் இந்த அம்சத்தை அவர்கள் விஸ்தாரம் செய்வதில்லை. அப்படிப் போக முடியாதவர்களுக்காக ஏற்பட்ட சாக்தம் முதலிய பக்தி ஸம்பிரதாயங்களில்தான் நன்றாக உடைத்து பகவத் லீலாநுபவ ஆனந்தத்தைச் சொல்வது. சில இடங்களில் இதுவே அத்வைதானந்தத்துக்கும் மேலே என்றுகூடச் சொல்லியிருக்கும்.

சக்தியிலிருந்தே லீலை உண்டாவது. லீலை செய்வதிலேயே ஆனந்தம், பேரானந்தம். அதனால்தான் அம்பாளுடைய சக்தியைச் சொல்ல வந்த பாகத்துக்கே ‘ஆனந்த லஹரி’ என்று பேர் இருப்பது.

சக்தியையும் சித்தையும் ‘ஜடென்டிக’லாகச் சொல்லியிருக்கிறது என்றேனல்லவா? அதற்கேற்க ‘ஆனந்த லஹரி’ ச்லோகம் ஒன்றில் [ச்லோ. 8]’ சிதானந்த லஹரி’ என்றே வருகிறது – ”பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்தலஹரீம்” என்று. ”ரொம்பவும் பாக்யசாலிகளாக இருக்கப்பட்ட சிலரே உன்னை சிதாநந்த ப்ரவாஹமாகத் தெரிந்து கொண்டு உபாஸிக்கிறார்கள்” என்று அர்த்தம்.

ஸெளந்தர்ய லஹரி – அழகு ப்ரவாஹம் – அம்பாளை ப்ரத்யக்ஷதர்சனம் பண்ணுகிறவர்களுக்குத் தான் தெரியுமென்றில்லாமல் ஆசார்யாளுடைய வர்ணனையைக் கொண்டே எல்லோரும் மனக்கண்ணால் பார்த்துத் தெரிந்துகொண்டு அநுபவிக்கும்படிக் கிடைக்கிறது. ஆனால் அவளுடைய சக்தி லஹரியான சிதானந்த லஹரியோ “கதிசந தந்யா:” என்று சொன்னபடி அபூர்வமான சில பாக்யசாலிகளுக்கே அநுபவத்தில் கிடைக்கிறது.

சித்-ஆனந்தம் என்கிற பெரிய தத்வம் நமக்குத் தெரியாமல், புரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். அவளுடைய ஸெளந்தர்யமே நமக்கு ஆனந்தம் தரத்தானே செய்கிறது? அந்த ஸெளந்தர்ய ஸ்வரூப தரிசனமே பேரானந்தமான மோக்ஷபர்யந்தம் எல்லாம் தரக்கூடியதுதானே? அதனால் நம்மாலும் அறியக்கூடிய அதிலேயே த்ருப்தி, ஸந்துஷ்டி பெறுவோம்.

அத்வைதம், ஸ்ரீவித்யா சாஸ்த்ரம் இரண்டுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமை பற்றிச் சொல்ல நிறைய உண்டு.

ஒற்றுமை என்றால் ஒன்றுமைதான். ஒன்றாகப் போய் விடுவதுதான்! அப்படி ஸாதனாந்தத்தில் [ஸாதனை முடிவில்] ஜீவன் பிரஹ்மமாகவே ஒன்றி ஒற்றுமை அடைகிறான் என்று அத்வைதமாகவே முடிப்பதில் பிரஹ்ம வித்யா என்ற அத்வைத சாஸ்திரம், ஸ்ரீவித்யா என்ற சாக்த சாஸ்திரம் இரண்டும் ஒற்றுமையாயிருக்கின்றன! முடிவான நிலை பற்றி ஒற்றுமையாகச் சொன்னாலும் ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டும் கொஞ்சம் வேற்றுமையாக அபிப்ராயப்படுகின்றன. ஒன்று – ப்ரஹ்மவித்யை – ‘விவர்த்த வாதம்’ என்பதாகவும்; மற்றது – அதுதான் ஸ்ரீவித்யை – ‘ஆபாஸ வாதம்’ என்பதாகவும் சொல்கின்றன. ‘விவர்த்தம்’ என்றால் போலித் தோற்றம். கயிறு பாம்பு போலத் தோன்றுவது போலித் தோற்றம். கயிறுதான் நிஜம். பாம்பு பொய். கயிறு, பாம்பு என்று இரண்டு வேறு வேறாகவே இல்லை. அந்த நிஜமேதான் இந்தப் பொய்யாகத் தெரிகிறது. அப்படி நிஜ ப்ரஹ்மமே தான் பொய்யான ஜீவ ஜகத்தாகத் தெரிகிறது – என்பது அத்வைதக் கொள்கை. ‘ஆபாஸம்’ என்றால் ப்ரதிபிம்பப் பிரகாசம். ஸுர்யன் ஜலத்திற்குள் ப்ரதிபிம்பமாக ப்ரகாசிப்பது ஆபாஸம். இப்படித்தான் அகண்டமான சித்சக்தியே ஒரு கட்டுப்பாட்டுக்குள் ப்ரதிபிம்பித்து ஜீவ-ஜகத்துக்களாக ஆகிறது என்பது சாக்தக் கொள்கை. மூல ஸுர்யன் இல்லாமல் ப்ரதிபிம்பம் இல்லவேயில்லை. அதுவேதான் இப்படித் தெரிவது. அதாவது உள்ளூர அத்வைதந்தான். ஆனால் வெளியிலே ஸூர்யன் வேறே, ப்ரதிபிம்பம் வேறே என்று இரண்டு இருக்கத்தானே செய்கின்றன? அநேக அளவுக்கு ப்ரதிபிம்பத்திற்கும் ஒரு ஸத்யத்வம் இருக்கத்தானே செய்கிறது? இதே மாதிரி ஜீவ-ஜகத்துக்களுக்கும் ஒரு ஸத்யத்வம் உண்டு என்று சாக்தம் சொல்கிறது. அத்வைதம் மாதிரி அவை ‘மித்யை’ [பொய்] என்று சொல்லவில்லை.

எப்படி எதற்காக மாயைத் தோற்றம் ஏற்பட்டது என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்வைத சாஸ்திரம் அடித்துத் தள்ளுவதால் மித்யை என்று ஒதுக்கச் சொல்கிறது. சித்சக்தியே லீலா நிமித்தம் பலவாகப் பிரதிபிம்பித்து ஆட்டம் போடுகிறாள் என்று சொல்லும் சாக்த சாஸ்திரம், ஜீவ-ஜகத்தை வைத்துக்கொண்டே – நம்முடைய இந்த்ரியங்கள், ஜகத் தருகிற வெளி ஸாமான்கள் முதலியவற்றை உபகரணங்களாக உபயோகப்படுத்திக் கொண்டே – இவற்றை விட ரொம்ப நிஜமான, நிரந்தர நிஜமான ப்ரஹ்மத்தில் ஐக்யம் அடையவேண்டுமென்கிறது.

அந்த ஐக்யமான முடிவு ஸ்தானம்தான் நமக்கு வேண்டியது. நாம் ஸாதனை என்று எதுவும் செய்யக் கூடியதும் அதற்காகத்தான். ஆரம்ப ஸ்தானம் – ‘நாம் எப்படி தனி ஜீவன் என்று உண்டானோம்? ஜகத் எப்படி உண்டாச்சு?’ என்பது – பற்றி நாம் ஒன்றும் பண்ணிக் கொள்வதற்கில்லை! அது விவர்த்தமாயிருப்பதாலும் நமக்கு லாபமில்லை; ஆபாஸமாயிருப்பதால் நஷ்டமுமில்லை! அதனால் அங்கே இந்த இரண்டு சாஸ்திரங்களும் மாறுபட்டுப் பேசுவதற்கு ‘இம்பார்டன்ஸ்’ தர வேண்டாம். நடக்க வேண்டியதை, நடக்கப் பண்ணி முடிவாக அடைய வேண்டிய நிலையைப் பற்றி இரண்டும் ஒன்றாகவே சொல்வதால் அதையே எடுத்துக் கொள்வோம். மித்யை என்று எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் போகக்கூடிய தீரர்கள் அப்படிப் போகட்டும். நாமோ குழந்தைகள்! சொப்பே நிஜம் என்று விளையாடுகிற குழந்தைகளாக அம்மாவுடன் விளையாடுவோம்! அவளே தர வேண்டியதுகளை அந்தந்த ஸமயத்தில் தந்து அப்புறம் அவளும் நாமும் ஒன்றாகிவிடும் அநுக்ரஹத்தைப் பண்ணுவாள்.

அத்வைத-சாக்த சாஸ்த்ரங்களின் ஒற்றுமை வேற்றுமைகளில் ‘பேஸிக்’காக ஏதோ கொஞ்சம் சொன்னேன். இவ்வளவு போதும்2. ரொம்ப அதிகம் போனால் ஒரே அறிவாராய்ச்சி, எட்டாத தத்வங்களைப் பற்றிய ‘ஹைபொதெடிகல்’ [அறுதியிட்டு முடிவு செய்யாத] அபிப்ராயங்களையே முடிந்த முடிவு மாதிரி பிடித்துக் கொண்டு குஸ்தி பிடிக்கிறது என்றுதான் போகிறது. இப்போது நமக்கு விஷயம் அழகு ரூபமான தாயாராக இருக்கப்பட்ட அம்பாளிடம் அன்போடு மனஸைப் பதிப்பது. அதற்காகத்தான் ‘ஸெளந்தர்ய லஹரி’யை எடுத்துக் கொண்டது. அதில் தவிர்க்க முடியாமல்தான் தத்வார்த்தங்கள் சொல்ல நேர்வது.

சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது – அத்வைதத்தில் ‘ப்ரஹ்மம்’ என்பதாகச் சொல்லப்படும் கார்யமில்லாத ஆதார தத்வத்தின் இடத்தில் ‘சிவம்’ என்பதை சாக்தம் சொல்கிறது. கார்யமில்லாவிட்டாலும் சின்மயமாக [சித்-மயமாக], அதாவது ஞானமயமாக இருப்பது ப்ரஹ்மம் என்பது அத்வைத வேதாந்தம். சாக்த ஸித்தாந்தத்தில் இந்த சித்தின் இடத்தில் சக்தியைச் சொல்லியிருக்கிறது. அவள் ஞானமயம் மட்டுமில்லை, சக்தி மயமுமானவள் என்று அழுத்திச் சொல்லி, அதனால்தான் அவளுக்கே சக்தி என்று பேர் கொடுத்திருக்கிறது. அத்வைத ப்ரஹ்மம் சாந்தமாக அப்படியே தன்னில் தானே அடங்கியிருக்கிறது. சாக்தத்திலோ சாந்த சிவனுக்கு உள்ளே உள்ள சக்தியை, power-ஐ, energy -ஐச் சொல்லி, அறிவோடுகூட ஆற்றலாகவும் இருக்கப்பட்ட அவளது விலாஸம் த்வைத லீலைகளாக வெளிப்படுவதைச் சொல்லியிருக்கிறது. அத்வைதத்தில், அதன் பெயரே காட்டுகிறபடி, ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம்; அதற்கு இன்னொன்றாக – த்வைதமாக – தெரிகிற எதுவும் மாயையால் ஏற்பட்ட பொய்த் தோற்றம் தான்; அந்த மாயையோடு ப்ரஹ்மத்திற்கு ஸம்பந்தம் கிடையாது; அது என்ன, எப்படி உண்டாச்சு என்பதெல்லாம் விளக்கமுடியாத புதிர். ‘நமக்கு இந்த ஆராய்ச்சி வேண்டியதுமில்லை’ என்கிறது. நமக்கு வேண்டியது மாயை அழிந்துபோய், இருக்கிற ஒரே ஸத்யத்தின் ஸாக்ஷாத்காரத்தை [பிரத்தியக்ஷஅநுபவத்தை]ப் பெறவேண்டியதுதான்’ என்று சொல்லி அதற்காக ஞான மார்க்கத்தை வகுத்துக் கொடுக்கிறது. சாக்தத்தில் சக்தி ஸஹிதமான சிவத்தின் இச்சையின் மீதே, லீலானந்த நிமித்தமாக த்வைதம் உண்டாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இதிலேயும் மாயா சக்தி ஒரு அம்சமாக வருகிறது. அந்த விஸ்தாரங்கள் இப்போது வேண்டாம்3.

ப்ரஹ்மமேதான் மாயையால் ஜீவனாகத் தோன்றுவது; ஞான மார்க்கத்தைப் பின்பற்றி மாயையைப் போக்கிக் கொண்டால் ஜீவனே ப்ரஹ்மமாவிடுவான் என்று அத்வைத சாஸ்திரம் சொல்கிறது. அடிப்படையில் ஜீவனும் சிவனும் ஒன்று, முடிவான மோக்ஷத்திலும் ஒன்றாகி விடுகிறார்கள் என்று சாக்தத்தில், குறிப்பாக ஸ்ரீவித்யா தந்த்ரத்தில் நன்றாகவே ஒப்புக் கொண்டிருக்கிறது. த்வைதம், விசிஷ்டாத்வைதம், ஸித்தாந்த சைவம் [சைவ ஸித்தாந்தம்], ஸ்ரீகண்ட சைவம் [சிவாத்வைதம்], காஷ்மீர சைவம் என்று உள்ள மத ஸம்பிரதாயங்கள் நான் சொன்ன ஆர்டரில் அத்வைதத்திற்கு அடியோடு வித்யாஸமாக ஆரம்பித்து, கொஞ்சங் கொஞ்சமாக அதற்குக் கிட்டப் போய், காஷ்மீர சைவம், ரொம்பவே கிட்ட வந்துவிடுகிறது. அதைவிடவும் அத்வைதமாகவே ஜீவ-ப்ரஹ்ம ஐக்யத்தை ஸ்ரீவித்யையில் தான் சொல்லியிருக்கிறது. த்வைத ஸ்ருஷ்டி பற்றித்தான் இரண்டுக்கும் வித்யாஸம். மோக்ஷத்தைப் பற்றி வித்யாஸமில்லை. அத்வைதத்தில் த்வைதமென்பது வெறும் மாயா கல்பிதந்தான் என்று ஒரே அடியாக அதை அடித்துத் தள்ளச் சொல்லியிருக்கிறது. ஸ்ரீவித்யை முதலான சாக்த தர்சனங்களில் அதை ப்ரஹ்ம சக்தியான பராசக்தியினால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறது. ”இத்தனை த்வைதங்களும் அந்த ஒரே பராசக்தி உள்ளே புகுந்து கொண்டு பண்ணும் விளையாட்டுதான். இதை அப்படியே, விளையாட்டாகவே பார்த்துப் பழகு. நன்றாகப் பழகின அப்புறம், – நீ மட்டும் என்ன? அதே சக்தியினால், அதிலிருந்தே, அதைக் கொண்டே உண்டானவன்தானே? இது தெரியாமல் அவளேதானே ஒரு மாயா சக்தியால் உன்னை வேறேயாக நினைக்கச் செய்திருக்கிறாள்? இந்த மாயா பந்ததத்தையும் அவளைப் பிரார்த்தித்து, இந்த ஸ்ரீவித்யா சாஸ்திரப்படி ஸாதனைகள் பண்ணிப் போக்கிக் கொண்டுவிடு; மாயையைக் கடந்து ஆதார சக்தியிலேயே ஒன்றுபட்டு, அப்படியே அந்த ஆதார சக்தியிலேயே ஒன்றுபட்டு, அப்படியே அந்த ஆதார சக்தியும் ஒன்றுபட்டிருக்கிற ஆதாரமான சாந்தத்தில் அத்வைதமாக ஐக்யமாய்விடு” என்று சொல்லி முடித்திருக்கிறது.

அத்வைதத்திற்கும் சாக்தத்திற்கும் – குறிப்பாக அதைச் சேர்ந்த ஸ்ரீவித்யா தந்த்ரத்திற்கும் – இப்படி நெருக்கம் இருப்பதால் நம்முடைய ஆசார்யாள் ஞானமாக அத்வைத வழியில் போக முடியாதவர்கள் லீலை என்று த்வைத ஸ்ருஷ்டியை வைத்திருப்பதிலிருந்து ஆரம்பித்து ஸ்ரீவித்யையை அநுஸரித்து, அப்யஸித்துக்கொண்டு போயே அத்வைதமான முடிவு நிலையில் சேரட்டும் என்று நினைத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதனால்தான் அவர் சிவன், விஷ்ணு ஆகியவர்கள் பேரிலும் ஸ்தோத்ரங்கள் பண்ணியுள்ள போதிலும் அவற்றில் சிவாகமங்கள், வைஷ்ணவ தந்த்ரங்கள் ஆகியவற்றின் கோட்பாடுகள் எதுவுமே இல்லை; பொதுப்படையான பக்தி உணர்ச்சியுடனும் காவ்ய த்ருஷ்டியுடனும் ஸ்தோத்திரிப்பதாகவே அவை இருக்கின்றன. தேடிப் பார்த்தால் அப்படியும் ஒன்றிரண்டு [சைவ, வைஷ்ணவ சாஸ்திர விஷயங்கள்] அகப்படலாம். அவ்வளவுதான். ஆனால் ‘ஸெளந்தர்ய லஹரி’யிலோ பெரிதாக ஒரு பாகம் – அதிலும் ஆரம்ப பாகம் – சாக்த சாஸ்த்ரமாகவே இருக்கிறது. அது ஆசார்யாள் பண்ணவில்லை என்று வைத்துக் கொண்டாலுங்கூட, அதோடு ஆசார்யாள் பண்ணிய பாகத்தைச் சேர்த்து, இரண்டும் சேர்ந்து ஒரே நூலாக இருப்பதாலேயே, ”அத்வைதம்; இல்லாவிட்டால், அடுத்தபடி ஸ்ரீவித்யை” என்றுதானே ஆகிறது? ஆசார்யாள் பண்ணியதாக உள்ள தேவீ ஸ்தோத்ரங்களில் இன்னும் சிலதிலும் ஸ்ரீவித்யா தந்த்ர ஸமாசாரங்கள் நன்றாகச் சொல்லியிருக்கிறது.

இந்த மடத்திலேயே – ஆசார்யாளுடைய மடங்கள் எல்லாவற்றிலுமேதான் – அம்பாளுக்கும் ஈச்வரனுக்கும் பூஜை பண்ணும்போது ஈச்வரனுக்கு சைவ தந்த்ரமாக இல்லாமல் வைதிகமாகவே பூஜை நடக்கிறது; அம்பாளுக்கும் வைதிக பூஜைதான் என்றாலும் ஸ்ரீவித்யா தந்த்ரத்தை நிறைய அநுஸரித்தே எங்கள் பத்ததி இருக்கிறது.

[சிரித்து] அத்வைதத்தையும் த்வைதத்தையுமே அத்வைதமாகச் சேர்த்து வைப்பதாக ஸ்ரீவித்யை இருக்கிறது! இரண்டாவது தெரியாமல் சாந்தமாக இருக்கிற அத்வைத சிவனையும், த்வைத ப்ரபஞ்ச காரணியான சக்தியையும் பிரிவறச் சேர்ந்தவர்களாக அது சொல்கிறது. “லலிதாம்பா” என்று ஸஹஸ்ரநாமத்தை முடிப்பதற்கு முந்தைய நாமா “சிவ-சக்தி ஐக்ய-ரூபிணி” என்பதுதான்.

இங்கே ‘ஸெளந்தர்ய லஹரி’யில் [அதன் முதற்பாகமான ‘ஆனந்த லஹரி’யில்] ஆரம்ப ச்லோகத்தின் ஆரம்ப வார்த்தையே ”சிவ: சக்த்யா யுக்த:” என்பதுதான்! ஸ்தோத்ரத்தின் ஆரம்ப வார்த்தை, யாரோ எடுத்துக் கொடுத்த மாதிரி, டக்கென்று வந்தவிட்டது. அதனால் பீடிகை போட்டதை இதோடு நிறுத்திக்கொண்டு ச்லோகம், ச்லோகமாக அர்த்தம் சொல்ல ஆரம்பிக்கிறேன்4.


1வெளியில், அதாவது தனக்குப் புறம்பாக, ஒன்று இருப்பதுதான் த்வைதம்.

2இங்கு இவ்விதம் கூறினாலும் அசல தத்வம் சலிப்பது, ஐந்தொழில்கள் போன்ற விஷயங்கள் நமது ஸ்தோத்திரத்தில் வருவதால் அவற்றைத் தத்வ சாஸ்திரங்களின் அடிப்படையில் ஸ்ரீசரணர்கள் விளக்கவே செய்திருப்பதைப் பின்னால் காண்போம்.

3‘இப்போது’ வேண்டாம் என்றது ‘பிற்பாடு’ ஓரளவு விளக்கப்படுகிறது.

4இத்தொகுப்பில் ஸ்ரீசரணர்கள் ‘சௌந்தர்ய லஹரி’யின் எல்லா ச்லோகங்களுக்கும் அர்த்தம் கூறவில்லை. மந்த்ர-யோக நுட்பமுள்ள ச்லோகங்களையும், சில வித வர்ணனைகள் உள்ள ச்லோகங்களையும் நீக்கி ஏனையவற்றுக்கே இங்கு விளக்கம் காண்கிறோம். 1, 2, 3, 4, 6, 7, 8, 12, 15, 16, 17, 20, 22, 23, 24, 27, 28, 29, 34, 35, 41, 42, 43, 44, 46, 47, 48, 49, 50, 51, 56, (முற்பாதி), 57, 63, 65, 66, 69, 75, 84, 95, 97, 99, 100 ஆகிய நாற்பத்திரண்டு ச்லோகங்களை வெகுவாக விரித்தும்; 5, 9, 10, 11, 14, 18, 21, 25, 26, 30, 31, 36, 37, 38, 39, 40, 45, 53, 54, 55, 60, 61, 62, 64, 70, 71, 73, 82, 87, 88, 89, 90, 91, 92, 94, 96, 98 ஆகிய முப்பத்தேழு ச்லோகங்களின் கருத்தை ஓரளவு விரித்தும்; 13, 33, 52, 58, 59, 67, 74, 83, 86, 93 ஆகிய பத்து ச்லோகங்களை லேசாகத் தொட்டும்; 19, 32, 68, 72, 76, 77, 78, 79, 80, 81, 85 ஆகிய பதினொன்று ச்லோகங்களை அடியோடு தொடாமலும் ஸ்ரீசரணர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இங்கு விரிவது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அம்பிகையின் வடிவேயான துதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சிவ எனத் தொடங்கும் சக்தித் துதி
Next