‘சிவன் அசையக்கூட முடிவது உன்னுடைய ஸங்க மஹிமையால்தான்; அப்படிப்பட்ட உன்னை ஹரன் ஆராதிக்கிறான்’ என்று சிவன், ஹரன் என்பதாக இரண்டு பேர் சொல்லி, ஒருத்தன் அசைந்து கொடுப்பது, மற்றவன் நமஸ்காரம் பண்ணுவது என்று இரண்டு கார்யங்களை ஆசார்யாள் [ஸெளந்தர்ய லஹரி முதல் ச்லோகத்தில்] சொல்லியிருக்கிறார். அந்தப் ‘பல்லவி’யை எடுத்துக் கொண்டுதான் இவ்வளவு நிரவல், ஸ்வரம் போட்டேன்.
‘ஏன் இரண்டு பேர் – சிவன், ஹரன் என்று? கார்யத்திலும் ஏன் வித்யாஸம் – அசைவது, நமஸ்காரம் பண்ணுவது என்று?’ என்பதைச் சொல்ல ஆரம்பித்தேன்.
அசைவதாக மாத்திரம் சொன்ன சிவன்தான் சாக்த-சைவ சாஸ்த்ரங்களில் முதல் தத்வமாக ப்ரஹ்மம், பரம்பொருள் என்றெல்லாம் சொல்லப்படும் ஸ்தானத்திலுள்ள சிவன்; நம்முடைய காமேச்வரியின் பதியான காமேச்வரன். பஞ்ச ப்ரஹ்மங்களுக்கும் மேலே இருப்பவன். அவன் அவளுக்குப் பதியானதால் அவளை ஆராதிப்பதாக, நமஸ்காரம் பண்ணுவதாகச் சொல்லவில்லை. அந்த ஸ்தான விசேஷம் மட்டும் காரணமில்லை. தன்னைத் தெரிந்து கொள்வது, அப்புறம் தன்னை பஹிர்முகமாக்கிக் கொள்ள ஆசைப்படுவது என்பது தவிர வேறே எந்தக் கார்யத்திலும் அவன் பிரவேசிக்க முடியாதவன்! சித் சக்தியாக அவனுக்குள்ளே எப்பவும் உள்ள அம்பாள் இச்சா சக்தியில் அவனை ஈடுபடுத்தியதோடு நிறுத்திக் கொண்டு விட்டாள். க்ரியா சக்தியும் கொடுத்து அவனைக் கார்யத்தில் ஈடுபடுத்தவில்லை. அதற்கு [க்ரியா சக்தி பெற்றுக் கார்யங்கள் செய்வதற்கு] பஞ்ச க்ருத்ய மூர்த்திகளை அவள் உண்டாக்கினாள். ஆகையால் எந்த வெளிக் கார்யமும் தெரியாத, முடியாத, இல்லாத சிவன் ஆராதனை செய்வது, நமஸ்காரம் செய்வது என்பதற்கெல்லாம் இடமேயில்லை. அலையெழாத சாந்த ஸமுத்ரமாயிருந்தவனிடத்தில் இச்சை என்ற ஒரு அலை மட்டும் எழுந்ததோடு ஸரி. தகடு மாதிரி அசையாத ஸமுத்ரத்தில் அந்த அலை ஏற்பட்டபோது அசைவு ஏற்பட்டு விடுகிறது! ஒரு சக்தி, driving force, இருந்தாலொழிய எப்படி எந்த ஒரு அசைவும் ஏற்பட முடியும்? ஆகையால் இப்போது அவன் சக்தி ஸஹிதனாகி விட்டானென்று அர்த்தம் … இப்போது [சிரித்து] சைவன் அசைவன்! சிவ ஸம்பந்மானதற்கு ‘சைவ’ என்று பேர் தெரியுமோல்லியோ? அஸல் சைவன் அசையமாட்டான். சக்தி ஸஹிதமான சைவன்தான் அசைவான். சைவன் அசைவன்!
‘ஹரன்’ என்பது பஞ்ச க்ருத்ய மூர்த்திகளில் ஸம்ஹரணம் பண்ணும் ருத்ரன். [பஞ்சக்ருத்யங்களில் முறையே பாலனமும் ஸ்ருஷ்டியும் செய்பவர்களான] ஹரி, விரிஞ்சன் என்ற விஷ்ணு, ப்ரம்மாக்களின் பேர்களுக்கு நடுவில் ஹரன் என்ற பேரை ”ஹரி-ஹர-விரிஞ்சாதிபி:” என்று போட்டு இதை ஆசார்யாள் ஸ்பஷ்டமாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்.
ஸித்தாந்த சைவத்தில் [சைவ ஸித்தாந்தத்தில்] முழு முதலான சிவனுக்கே ஹர நாமமும் கொடுத்திருக்கிறது. ”சிவன், அரன்” என்று இரண்டையும் ஸமமாகச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது. அது மாத்திரமில்லாமல் தொன்று தொட்டு இந்தத் தேசம் பூராவும் சிவனுக்குப் புண்டரீகம் போடுவதாக பலர் சேர்ந்து கோஷம் போடும் நாமமாக ”ஹரஹர மஹாதேவா” என்ற சப்தமே இருந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ”அரோஹரா” என்கிறோம்…..