புண்டரீகம் : நாமம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘புண்டரீகம் போடுவது’ என்று ஒரு வார்த்தை சொன்னேன். சொன்ன ஸந்தர்ப்பத்தை வைத்து, அது கோஷ்டியாகப் பல பேர் நாம கோஷம் போடுவது என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.

பகவன் நாமத்தை கோஷ்டியாக கோஷம் போடுவதைப் புண்டரீகம் போடுவது என்று ஏன் சொல்லணுமென்றால் இரண்டு காரணம் தோன்றுகிறது. நான் guess பண்ணிச் சொல்கிறதுதான்.

கூட்டங் கூட்டமாக பக்தர்கள் நாம பஜனை பண்ணிக் கொண்டு கோஷம் போடுவது எங்கே ரொம்பவும் ஜாஸ்தி என்றால் பண்டரீபுரத்தில்தான். ஒரே ”ஜெய், ஜெய் விட்டல்!” மயம்தான்! ஒவ்வொரு நாமாவளியையும் முடித்தவுடன் ”ஜெய் புண்டரீக வரத! ஹரி விட்டேல!” என்றே அத்தனை கூட்டமும் உரக்க, உணர்ச்சியோடு கோஷம் போடும். தஞ்சாவூரில் மஹாராஷ்டிரர்களின் ஆட்சி ஏற்பட்ட பின் அவர்களுடைய ஹரிகதை, லாவணி, [சிரித்து] ரஸவாங்கி, டாங்கர் பச்சடி எல்லாம் இங்கேயும் பரவியபோது பஜனை ஸம்ப்ரதாயங்களிலும் இந்த ‘இன்ஃப்ளுயென்ஸ்’ ஏற்பட்டது. கோஷ்டி நாமோச்சரணத்தில் ”ஜெய் புண்டரீக வரத” புதுசாகச் சேர்ந்தது. புதுசாகச் சேர்ந்ததாலேயே ஜனங்கள் மனஸில் முக்யமாக நின்றது. அதனால் எந்த ஸ்வாமியைப் பற்றின நாம கோஷமாகத்தான் இருக்கட்டும் – ”நம: பார்வதீ பதயே !ஹரஹர மஹாதேவா!”வாகத்தானிருக்கட்டும். ”கோபிகா ஜீவன ஸ்மரணம்! கோவிந்தா, கோவிந்தா!”வாகத்தானிருக்கட்டும் – எதுவானாலும் புண்டரீகம் போடுவது என்றே பேர் வந்துவிட்டது. சைனாவிலே பஹு காலமாக டீ குடிக்கிற வழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் ரொம்ப நாள் பிற்பட்டு, வெள்ளைக்காரர்கள் ஆசியாவில் வியாபாரம், ஆட்சியைப் பிடிப்பது என்று புறப்பட்ட அப்புறமே, டீ ஐரோப்பாவுக்குப் போயிற்று. புதுசாக அவர்களுடைய ஆஹார தினுஸுகளில் சேர்ந்ததாலேயே அது ரொம்பவும் முக்யமாகி விட்டது. சிற்றுண்டி விருந்துக்கே ‘டீ பார்ட்டி’ என்று பெயர் வந்துவிட்டது. டீயே ‘ஸெர்வ்’ பண்ணாத பார்ட்டிகூட டீ பார்ட்டி தான்! அது மாதிரி முழுக்க சிவ பஜனையே பண்ணி ”நம:பார்வதீ பதயே! ஹரஹர மஹாதேவா!” போடுவதுகூட ‘புண்டரீகம் போடுவது’ என்று பேர் பெற்றுவிட்டது!

இன்னொரு காரணம் என்ன தோன்றுகின்றதென்றால், – புண்டரீகம் என்றால் தாமரைப் பூ. ஸகல ஜகத்துக்கும் ஹ்ருதய கமலமாக உள்ள சிதம்பரத்திற்குப் ‘புண்டரீகபுரம்’ என்று ஒரு பேர். சாஸ்த்ரங்களில் ”ஹ்ருத் புண்டரீகம்” என்றே சொல்லியிருக்கிறது. தாமரைக் கண்ணனான பகவானைப் புண்டரீகாக்ஷன் என்கிறோம்.

”அதெல்லாம் இருக்கட்டும்; நாமத்தை ஸங்கமாக கோஷம் போடுவதைப் புண்டரீகம் என்பானேன்?”

நாமம் என்று இப்போது ஒரு வார்த்தை வந்தது. பெயர் என்பதைத்தான் இங்கே நாமம் என்றது. வைஷ்ணவர்களில் நெற்றியில் இட்டுக் கொள்வற்கு – அவர்களில் சிஷ்டாசாரமுள்ளவர்கள் ‘த்வாதச நாமம்’ என்று உடம்பில் பன்னிரண்டு இடங்களில் போட்டுக் கொள்வதற்கும் – நாமம் என்று பேர் சொல்கிறோம். ஏன் அப்படி அதற்கும் நாமம் என்று பேர் வந்ததென்றால் பகவானுடைய கேசவாதி த்வாதச நாமங்களைச்1 சொல்லிக் கொண்டுதான் அப்படி உடம்பில் த்வாதச அடையாளங்கள் போட்டுக் கொள்வார்கள். பகவந் நாமத்தை மந்த்ரமாகச் சொல்லிக் கொண்டு போட்டுக் கொள்வதால் அதற்கே நாமம் என்று பேர் வந்துவிட்டது – ‘ஸாவரின்’ என்னும் ராஜாவின் முத்திரை காசுக்கே ஸாவரின் பேர் வந்தது போல!

ஆதியிலே நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஒரு தாமரைப் பூ, அல்லது இதழ் மாதிரி டிஸைனாகவே இருந்தது. நெற்றியில் இட்டுக் கொள்வதைத் திலகம் என்கிறோமல்லவா? திலகம் என்றால் திலம்தான், அதாவது எள்ளு. ‘ஷேப்’பில் எள்ளும் தாமரை இதழும் ஒரே மாதிரி தானே இருக்கின்றன?

இது அலங்காரம், அதாவது அழகுபடுத்திக் கொள்கிற அடையாளம். சாஸ்திரோக்தமாக சரீரத்தைப் பரிசுத்தி பண்ணிக் கொள்வதற்காக நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் போது முப்பட்டையாக விபூதி தாரணம் பண்ணினார்கள். அழகுக்கு, அலங்காரத்துக்கு நல்ல ஸுகந்தமான சந்தனத்தைத் தாமரை வடிவத்தில் நெற்றிக்கு இட்டுக் கொண்டார்கள். சாஸ்த்ரீயமான சின்னம் விபூதி தாரணம். எதிலும் காலம் போகப் போகப் பல பிரிவுகள் ஏற்படும் போது ஒவ்வொரு பிரிவையும் வைத்து வித்யாஸமான அடையாளங்கள் ஏற்படுவது வழக்கம். அப்படி சாஸ்த்ரோக்கமான விபூதி தாரணத்திலும் ஆயிற்று. ஸ்மார்த்த ஸம்ப்ரதாயஸ்தர்களிலேயே ஒரு பிரிவினர் விபூதி தாரணத்தை விட்டுவிட்டு கோபி சந்தனம் என்று ஒரு தினுஸான களிமண் வகையைக் குழைத்து இட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். பட்டையாக இல்லை; தாமரையை ஞாபகப்படுத்துகிற ஷேப்பில்தான். ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள் என்று பிரிவு ஏற்பட்டதில் வைஷ்ணவர்களும் விபூதிப் பட்டையை விட்டுவிட்டு திருமண் என்னும் ஒருவிதமான மண்கட்டியால் நாமம் போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இதிலேயும் ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்தால் தாமரை ‘ஷேப்’ அடிப்படையாயிருப்பது தெரியும். அதைப் பெருமாளின் திருவடிச் சின்னம் என்கிறார்கள். திருவடியையும் தாமரை என்றுதானே சொல்வது?

தாமரைக்குப் புண்டரீகம் என்று பேர் சொன்னேன், புண்டரீகம் என்பதைப் புண்ட்ரம் என்றும் சொல்வதுண்டு. சில பிரிவினர்கள் பட்டை விபூதியை அடியோடு விட்டு விட்டு, அலங்காரமாக மட்டுமில்லமால் சாஸ்த்ரோக்தமான தங்கள் ஸம்ப்ரதாயச் சின்னமாகவே தாமரை ஷேப்பில் கோபியும் திருமண்ணும் இட்டுக்கொள்ள ஆரம்பித்த பிறகு, பட்டை விபூதி இட்டுக்கொள்வது உள்பட நெற்றிச் சின்னங்கள் எல்லாவற்றுக்குமே ஜெனரலாக ‘புண்ட்ரம்’ என்று பேர் உண்டாய்விட்டது! தாமரை ‘ஷேப்’ ஜாடைக்குக்கூட இல்லாவிட்டாலும் முப்பட்டை விபூதிக்கு த்ரிபுண்ட்ரம் என்றும், அப்படி நெற்றியில் குறுக்கு வாட்டாக இல்லாமல் நெடுக்கு வாட்டத்தில் கோபியும் திருமண்ணும் போட்டுக் கொள்வதற்கு ஊர்த்வ புண்ட்ரம் என்று பேர்கள் ஏற்பட்டன. புதுசாக ஒரு இயக்கம் ஆரம்பித்தால் அது ரொம்ப ‘ஆக்டி’வாக இருந்து எல்லார் கவனத்தையும் இழுக்கத்தானே செய்கிறது? அப்படி, தனி ஸம்ப்ரதாயமாகக் கொஞ்சம் பெரிய அளவிலேயே வைஷ்ணவர்கள் என்று ஏற்பட்டு ஆக்டிவாக அதைப் பரப்பியபோது அவர்களுடைய தனிப்பட்ட ஆசரணைகள் லோகத்தின் கவனத்துக்கு நிறையவே வந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர்கள் போட்டுக் கொண்ட புண்ட்ர தாரணம் எல்லாவிதமான நெற்றிச் சின்னத்துக்கும் பொதுப் பேராயிருக்கலாம்.

இப்போது வேடிக்கையாகே ஸர்க்கிள் தலைகீழாக ஒரு சுற்றுச் சுற்றியிருக்கலாம். என்னவென்றால்: பகவந் நாமத்துடன் போட்டுக்கொண்ட நெற்றி அடையாளமும் நாமம் என்று பெற்றதா? அதே நெற்றி நாமத்துக்குப் புண்ட்ரம், புண்டரீகம் என்று இன்னொரு பேர் இருந்ததா? அதாவது நாமம் = புண்ட்ரம்தானே? இதிலே நெற்றி நாமம், பகவந் நாமம் என்ற வித்யாஸங்கள் எடுபட்டுபோய் புண்ட்ரம் = பகவந் நாமம் என்று ஆகியிருக்கலாம்! கூட்டங்கூட்டமாக வைஷ்ணவர்கள் ”கோவிந்தா!” போட்டுக்கொண்டு மத ப்ரசாரம் பண்ணியபோது அப்படி பகவந் நாம கோஷம் போடுவதைப் புண்ட்ரம் போடுவது, புண்டரீகம் போடுவது என்றே சொல்கிற வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். அப்புறம் பரமசிவன் உள்பட எந்த ஸ்வாமியானாலும் ஸஹஜமாகப் பலபேர் அந்த ஸ்வாமி பேரை கோஷிப்பதற்கு புண்டரீகம் போடுவது என்று பெயர் வைத்திருக்கலாம்…….

”ஹரஹர மஹாதேவ” என்று புண்டரீகம் போடுகிறோம் என்று சொன்னேன். சிவ நாமாவுக்கு ஸமானமான பெருமை பெற்றதாக, ஹர நாமாவும் இருப்பதால்தான் ”அரன் நாமமே சூழ்க!” என்று ”வாழ்க அந்தணர்” பதிகத்தில் ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இந்த ஸெளந்தர்யலஹரி ஆரம்ப ச்லோகத்தில் ஆசார்யாள் ஹரன் ஸம்ஹரணத் தொழில் மட்டுமே செய்யும் ருத்ரன் என்றுதான் வைத்திருக்கிறார். தனக்குத் தொழிலைக் கொடுத்து, தொழில் பண்ணச் சக்தியையும் கொடுத்த அம்பாளை அந்த ஹரனும் ப்ரஹ்ம விஷ்ணுக்களுடன் நமஸ்காரம் பண்ணுகிறான், ஆராதிக்கிறான் என்று சொல்கிறார்: அதஸ்-த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி.


1 ‘கேசவ’ முதலான பன்னிரண்டு நாமங்கள் : கேசவ, மாதவ, நாராயண, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is 'சிவ'னும் 'ஹர'னும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சிவத்தின் ஸ்பந்தனம் (அசைவு)
Next