ஹரனாகிய ருத்ரனை அம்பாள் நன்றாகவே ஸம்ஹார கார்யத்தில் ஏவியிருக்கிறாள். ப்ரஹ்ம ஸ்வரூபமான சிவனை அசைத்து மட்டும் இருக்கிறாள். அசைவு – ‘ஸ்பந்தனம்’ என்பது. ச்லோகத்தில் ‘ஸ்பந்திதும்’-‘அசைவதற்கு’ என்று வருகிறது. ஒரு எண்ணமும் இல்லாமல் பரம சாந்தமாக அலையெழாத தடாகம் மாதிரி இருந்த பரப்ரஹ்ம சிவனில் ஏற்பட்ட முதல் அலை, முதல் அசைவு தான் பஹிர்முகமாகிற இச்சை, காமம், ஆசை. முதல் அசைவு ஆசை. வெறுமனே போட்டது போட்டபடி இருந்த சிவனுக்குள்ளே ஆசைப்படுவது என்ற ஒரு அசைவு உண்டாயிற்றென்றால், ஆசைப்படுவது என்ற ஒரு கார்யம் நிஷ்க்ரியமான சிவ தத்வத்தில் உண்டாயிற்றென்றால், இதைச் செய்விக்கவும் ஒரு சக்தி தொழில்பட்டுத்தானே இருக்க வேண்டும்? ஞான மயமாய், உயிர் மயமாய் எப்போதுமே ப்ரஹ்மத்துக்குள் இருக்கும் சித்சக்தியானவள் இச்சாசக்தி, க்ரியாசக்தி என்ற இரண்டாகவும் ஆனாளென்பது மட்டுமில்லை. இச்சையை ப்ரஹ்மத்துக்குள்ளே எழுப்புவது என்பதையே ஒரு க்ரியையாக [செயலாக] அவள் பண்ணியிருக்கிறாள்!
இன்னும் அடிமட்டத்திற்குப் போனால், ஒருத்தனுக்கு ஒரு இச்சை உண்டாகிறதென்றால் அவன் முதலில் தான் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நல்ல தூக்கத்திலே நாம் இருப்பது நமக்கே தெரியவில்லை. அப்போது ஏதாவது இச்சை எழும்புகிறதா? மூர்ச்சை போட்டுக் கிடக்கிறோம், அல்லது டாக்டர் மயக்கம் கொடுத்திருக்கிறார். அந்த ஸமயத்தில் நமக்கு ஆசை உண்டாவதுண்டா? ஆனபடியால் ப்ரஹ்மத்துக்கு இச்சை உண்டாயிற்று என்றால் அதற்கும் முன்னாடி அது ‘தான் இருக்கிறோம்’ என்று தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தன்னில் தன்னாக இருந்துகொண்டு மட்டுமிருந்த ப்ரம்மம். ‘ப்ரம்மமென்று நாம் ஒரு வஸ்து இருக்கிறோம்’ என்ற ‘நான்’-அறிவைப் பெறுவதும் ஒரு கார்யந்தானே? சாந்த நாடகத்திலே ஆசை அலையும் எழுகிறதற்கு முந்தி ஏற்பட்ட அசைவு அதுதானே? அந்தக் கார்யம் மட்டும் சக்தி தூண்டாமல் எப்படி நடந்திருக்க முடியும்? சிவனுக்கு ‘நாம் ஒருத்தன் இருக்கிறோம்’ என்று தெரியப் பண்ணியதே சக்திதான் என்றாகிறது! அவனுக்கு அப்படி உண்டான ‘நான்’-அறிவை, ‘நான்’ அநுபவத்தைப் ‘பராஹந்தா’ என்பார்கள். நாமெல்லாரும் ‘நான்’, ‘நான்’ என்று நினைப்பதை அஹந்தை என்கிறோமல்லவா? இதுதான் ‘அஹந்தா’. ஆத்மாவுக்கு வேறேயான பொய்யான சரீர – அந்தஃகரணாதிகளைத் தப்பாக நம்முடைய வாஸ்தவ ஸ்வரூபமான ‘நான்’ என்று நினைப்பது அஹந்தா. இப்படியில்லாமல் அத்தனை சிற்றுயிர்களுக்கும் மூலமாக இருக்கிற பேருயிர், பரம் பொருள் என்கிறோமே அது தன்னை ‘நான்’ என்று தெரிந்து கொள்வது ‘பர அஹந்தா’ – ‘பராஹந்தா’. பராசக்தியைப் பரமசிவனான பரப்ரஹ்மத்தின் ‘பராஹந்தா ஸ்வரூபிணி’ என்றே சொல்வதுண்டு. அம்பாளைப் பரமேச்வரனுடைய ‘ஆஹோபுருஷிகா’ என்று ஸெளந்தர்ய லஹரியில் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறது. (ஏழாவது ச்லோக முடிவில்.) ‘நான்’ என்று மார்தட்டிக் கொண்டு தற்பெருமைப் படுவதுதான் பொதுவாக ‘ஆஹோபுருஷிகா’ என்பதற்கு அர்த்தம். கிஞ்சித்-சக்தர்களான [அற்ப சக்தர்களான] நாம் ‘நான்’ என்று தற்பெருமைப்படுவது தப்பு. ஆனால் ஸர்வ சக்தியும் வாய்ந்த ‘நானை’ப் பற்றிப் பரமசிவன் எவ்வளவு தற்பெருமைப்படவும் ந்யாயமிருக்கத்தானே செய்கிறது? அதோடு ரொம்பவும் விசித்ரமாக, சிவன் ‘நான்’ என்று பெருமைப்படுவதே இன்னொருத்தராக, அதாவது சக்தியாக இருக்கிறது! ‘நான்’ என்பது சிவனுக்கு தெரிகிறது என்றால் அது சக்தி விலாஸந்தான் என்று பார்த்தோமல்லவா? அதனால் ‘நான்’ என்று அவர் ஒன்றைப் பற்றி பெருமைப்படுவதும் சக்தி ப்ரபாவத்தில் பெருமைப்படுவதாகவே ஆகும்.
‘நான் யார் என்பதே தெரியாமல் தானாக இருந்த நமக்கு நான்-அறிவாக இருக்கும் ஸர்வ சக்தியாயிருக்கிறாளே!’ என்று அம்பாளைப் பற்றி ஈச்வரன் [சிவன்] பெருமைப்படுவதே அவருடைய ஆஹோபுருஷிகாவாக இருக்கிறது! ‘ஸெளந்தர்யலஹரி’ பாஷ்யகாரர்களில் பல பேர் இங்கே ஆஹோபுருஷிகா என்பது பரப்ரஹ்மமான சிவனின் பராஹந்தா ஸ்வரூபமாக அம்பாளைச் சொல்வதே என்று எழுதியிருக்கிறார்கள்.
கேவல [கலப்பற்ற] ஞான ஸ்வரூபமாயிருந்த சிவன் தன்னை ஞான ஸ்வரூபமாகத் தெரிந்துகொண்டதுதான் அசையாத பிரம்மத்தின் முதல் அசைவு. வெளிக் கார்யத்தில் அசைவது இல்லை; கையை, காலை அசைத்துக் கார்யம் எதுவும் இதில் இல்லை. ஆனால் எண்ணமேயில்லாத ஞான பூர்ணத்தில் ‘நான்’ என்ற எண்ணம் ஏற்பட்ட அசைவு.
சிவனை வெளியிலேயிருந்து அம்பாள் அசைக்கவில்லை. அவனுக்குள்ளேயே அந்த ‘நான்’ என்கிற எண்ணமாக அசைத்தாள்.
உள்ளுக்குள்ளேயிருந்து குமறிக்கொண்டு ஒரு வஸ்து தானே ‘வைப்ரேட்’ ஆகிற அசைவுதான் இங்கே சொல்லும் ‘ஸ்பந்தம்’. ஆசார்யாள் ரொம்பவும் precise-ஆகத்தான் அந்த வார்த்தையைப் போட்டிருக்கிறார். ஸ்பந்தம் வெளியிலிருந்து அசைப்பதில்லை. அது உள்ளுக்குள்ளேயே அதிர்வது, குமறுவது, பொருமுவது. நமக்குள்ளேயே நாடி துடிக்கவில்லையா? அப்படிப்பட்ட pulsation-தான் ஸ்பந்தம். பிறத்தியாரால் இல்லாமல் தனக்காகவே, தனக்குள்ளேயே ஏற்படுகிற அசைவு ஸ்பந்தம்; தானே வைப்ரேட் ஆவது.
ஸ்ருஷ்டி மூலமே வைப்ரேஷன்தான். பரப்ரஹ்ம வைப்ரேஷன் சப்த ரூபமான வேத மந்த்ரங்களாகி, அதிலிருந்துதான் ஸ்தூல வஸ்துக்கள் அத்தனையும் உண்டானது. நவீன கால ஸயன்யஸ் இந்த அபிப்ராயத்திற்கு ரொம்பவும் ஆதரவாக வந்துவிட்டது 1. ஏதோ ஒரு ஸென்ட்ரல் ந்யூக்ளியஸ் [மையக் கரு] படாரென்று வெடித்து ஸ்ருஷ்டி ஏற்பட்ட தென்றால்2, அப்போது அது உள்ளே குமறித்தான் அந்த வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏகமான ஆதார வஸ்து தானே உள்ளுக்குள் வைப்ரேட் ஆவதே ஸ்பந்தனம்.
ஆனாலும் சிவ-சக்தி என்று த்வைதம் மாதிரி வைத்து சாக்த ஸ்தோத்ரமாகப் பண்ணிக்கொண்டு போகிற இங்கே ‘தானே’ என்று சொல்லலாமா? சிவனை அம்பாள்தான் அசைவித்ததாகச் சொல்லணும். அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லும்போதே த்வைதம் மாதிரி இருப்பதற்குள் உள்ள அத்வைதம் தெரியத்தான், தனக்குள்ளேயே ஏற்படும் சலனத்திற்கான ‘ஸ்பந்தம்’ என்ற வார்த்தையைப் பொறுக்கியெடுத்துப் போட்டிருக்கிறார்!
சாக்தப்படியுங்கூட அவனை விட்டு அவளை வேறே என்று தனியாகப் பிரித்து வெளிவஸ்துவாகவே வைக்க முடியவில்லையே! சிவமும் சக்தியும் தீபமும் அதன் ப்ரகாசமும் போல, புஷ்பமும் அதன் ஸுகந்தமும் போல, தேனும் அதன் மாதுர்யமும் போல, பாலும் அதன் வெளுப்பும் போல, சொல்லும் அதன் பொருளும் போல ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாதபடி அல்லவா சேர்ந்திருக்கிறவர்கள்? அதனால் அவனுடைய அசைவுக்காக அவளுக்குத் தனி க்ரெடிட் கொடுத்தாலுங்கூட அவளையே அவனிடமிருந்து தனியாகப் பிரித்துவிட முடியாது. சிவ சக்திகளுடைய இந்த அன்யோன்ய உறவு நம் ஹ்ருதயத்தின் அடியில் எந்நாளும் இருக்க வேண்டும். [மீண்டும்] சிவன், சக்தி என்பவர்களுடைய அன்யோன்ய உறவு நம் ஹ்ருதயத்தின் அடிவாரத்தில் எந்நாளும் இருக்க வேண்டும். தத்வத்தைக் கவிதையாக்கிச் சொல்லும்போது காவ்ய ருசிக்காகவும், பக்தர்கள் தெய்வத்தோடு உறவு கொண்டாடும் ஸ்வாதீனத்தில் ஏற்றி யிறக்கிப் பரிஹாஸாதிகள் பண்ணுவதில் ஒரு ஆனந்தம் கிடைப்பதாலும், ஒரு தெய்வத்தை ஸ்துதிக்கும்போது அதற்கே ஸர்வோத்கர்ஷம் [எல்லாவற்றுக்கும் மேலான நிலை] சொன்னால்தான் அதனிடமே மனஸ் ஆழப் புதைகிறது என்பதாலும், ‘சிவனைவிட அம்பாள் உசத்தி’, அல்லது ‘அம்பாளைவிட சிவன் உசத்தி’ என்று சொன்னாலும், அவர்கள் பிரிக்கவே முடியாமல் ஒன்றாக இருக்கிறவர்கள் என்ற எண்ணத்தை நம் ஹ்ருதயத்தின் அடி மூலையில் ஊறப் போட வேண்டும். அந்த உயர்ந்த எண்ணத்தில்தான் ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’ ஆரம்பிக்கும்போதே, சக்திதான் சிவனை அசைத்தாள் என்று அவளுக்கு உத்கர்ஷம் சொன்னாலுங்கூட அசைப்பதற்கு ‘சலனம்’ முதலான பல பழக்கமான வார்த்தைகள் உள்ள போதிலும், ‘அதெல்லாம் அவனுக்கு வெளியில், வேறாக, இருந்து அவள் அசைத்தாள் என்று அர்த்தம் கொடுத்துவிடுமே! அது கூடாது. அவனுக்கு உள்ளேயே உள்ளவள் அவள் என்று இந்த ஆரம்பத்திலேயே காட்டிவிட வேண்டும்’ என்றுதான் உள்ளசைவைக் குறிப்பிடும் ஸ்பந்தம் என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார்.
காஷ்மீர சைவம் என்று அவ்வப்போது சொன்னேனே, அதிலே இந்த ‘ஸ்பந்தம்’ என்ற வார்த்தை, internal vibration [உள்ளதிர்வு] என்கிற கருத்து ஆகிய இரண்டும் ரொம்பவும் முக்யம். அந்த ஸித்தாந்தம் காஷ்மீரில் தோன்றி ப்ராபல்யமடைந்ததால் காஷ்மீர சைவம் என்று அதற்குப் பேர் சொன்னாலும் அந்த ஸித்தாந்த ப்ரவர்த்தகர்கள் அதற்கு அப்படிப் பேர் கொடுக்கவில்லை. அவர்கள் வேறே சில பேர்தான் கொடுத்திருக்கிறார்கள். ‘த்ரிக சைவம்’ என்பது ஒரு பேர். பசு-பதி-பாசம் என்ற மூன்று தத்வங்களைச் சொல்வதால் அப்படிப் பேர். ‘ப்ரத்யபிஜ்ஞா சாஸ்த்ரம்’ என்று இன்னொரு பேர். முடிவில் சிவ தத்வத்தையே ஜீவனின் ஆத்ம ஸ்வரூபம் என்று தெரிந்து கொள்வதால் ‘ப்ரத்யபிஜ்ஞா’ என்ற பேர். ‘ப்ரத்யபிஜ்ஞா’ என்றால் ‘இன்னது என்று ஸத்யமாகப் புரிந்து கொள்வது’ அந்த தர்சனத்திற்கு [சாஸ்திரத்திற்கு] இன்னொரு பேர் என்னவெறால் ‘ஸ்பந்த சாஸ்த்ரம்’ என்பதேயாகும்! சிவமும் சக்தியும் ஒன்று சேர்ந்த பரப்ரஹ்மத்தின் ஆபாஸமாக (‘ஆபாஸம்’ என்றால் அசிங்கம் என்று அர்த்தமில்லை. அந்த வார்த்தைக்கு அப்படி அர்த்தமே கிடையாது. ஆபாஸம் என்றால் பிரதிபலிக்கின்ற, பிரதி பிம்பமாக்கப்பட்ட ஒளி என்றே அர்த்தம். ‘பாஸ்’ என்றால் ப்ரகாசிப்பது, ஸுர்யனை ‘பாஸ்கரன்’ என்கிறோம். ப்ரகாசித்தின் ப்ரதிபலிப்புதான் ஆபாஸம். அப்படி ப்ரம்மத்தின் ஆபாஸமாகவே) நானா தினுஸான இத்தனை த்வைத ப்ரபஞ்சமும் தோன்றியிருப்பாக அந்த சாஸ்திரம் சொல்லும். அப்படிச் சொன்னதால் ப்ரகாசமான மூல வஸ்துவுக்கு வேறாக, அதற்கு வெளியிலே ப்ரதிபிம்ப ஒளி இருப்பதாகத்தானே எண்ணம் உண்டாகும்? இப்படி ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்துக்கு வெளியில் இருக்கிறது என்றால் அது ஸரியில்லை. ப்ரஹ்மம் வெறும் சிவ ஸ்வரூபமென்றால் அதற்கு ப்ரபஞ்ச ஸம்பந்தமேயில்லை. அதனால் ப்ரபஞ்சம் அதற்கு வெளியிலிருப்பதாகச் சொல்லலாம். ஆனால் அந்தக் கேவல சிவம் ஆபாஸிக்கவும் பண்ணாதே! காஷ்மீர சைவத்தின்படி ப்ரஹ்மம் சிவமாக மட்டுமில்லாமல் சிவ-சக்தி ஸ்வரூபமாயிருப்பதில் சக்தியால்தான் ஆபாஸம் உண்டாவது. ஆனால் அப்போதுங்கூட ‘லைட்’டுக்கு வெளியில் ‘ரிஃப்ளெக்ஷ்ன்’ என்ற மாதிரி அவளுக்கு வெளியில் ப்ரபஞ்சம் இல்லை. ஏனென்றால் அவளுக்கு வெளியில் எதுவும் இருக்க முடியாது. எதற்குமே சக்தியாக அதன் உள்ளே இருந்து கொண்டும், அதை வெளியிலேயும் தாங்கிக் கொண்டும், அத்தனையையும் சேர்த்துக் கவ்விக் கொண்டும் அவள் இருக்கிறாள் – சக்தி தத்வம் இருக்கிறது. ‘சிவ-சக்தி என்ற ஏகத்திற்கு உள்ளேயேதான் ஏகம் அநேகமாகிற உள் குமறலில், அதாவது ஸ்பந்தத்தில் இத்தனை த்வைத ப்ரபஞ்சமும் உள்ளடங்கியிருக்கிறது. வெளிப்படுவது என்பது இல்லை. கண்ணாடிக்குள்ளே ஒரு தீபத்தின் ப்ரதிபிம்பம் தெரிகிறது போல – கண்ணாடி இல்லா விட்டால் அந்த ப்ரதிபிம்பமே இல்லைதானே? அப்படி’ என்று அந்த சாஸ்திரம் சொல்கிறது. ‘ஸ்பந்தம்’ என்ற வார்த்தை ப்ரம்மத்துக்கு வெளியிலே, அதாவது அதற்கு வேறாக, ப்ரபஞ்சமில்லை என்று காட்டுவது மட்டுமில்லை. ப்ரம்மமாகிய சிவ தத்துவத்துக்கு வெளியிலே, வேறாக சக்தி இருந்து அந்தத் தத்வத்திலிருந்து ப்ரபஞ்சத் தோற்றத்தை உண்டுபண்ணவில்லை; அந்த சக்தியும் சிவ தத்வத்தோடேயே அபின்னமாக [பிரிவற] இருப்பதுதான் என்றும் காட்டுகிறது. ஸ்பந்தம் என்பது self movement-ஐ, ஸ்வயமாகவே அசைந்து கொடுப்பதைக் குறிப்பது. வெளித்தூண்டுதலால் அசைவதில்லை.
சைவ தர்சனங்களுக்குள் நம்முடைய ஆசார்யாளின் அத்வைதத்துக்கு ரொம்ப நெருக்கமாக வருவது ஸ்பந்த சாஸ்த்ரம் என்று பேர் பெற்ற இந்த காஷ்மீர சைவம்தான். முடிவாக அத்வைத மோக்ஷத்தையே அதுவும் சொல்கிறது. ஆனாலும் ஆசார்யாள் ஜகத்தை மாயா ஸ்ருஷ்டியான மித்யை (பொய்) என்று சொன்னது போலச் சொல்லாமல் ஸத்யமான ப்ரஹ்மத்தின் ப்ரதிபலிப்பானதால் இதுவும் ஸத்யம்தான் என்று சொல்லும். ஜகத்துத் தோற்றத்தை உண்டாக்கும் மாயை, ஜகத்தை நிர்வாஹம் செய்யும் ஈச்வரன் என்று ஆசார்யாள் சொன்ன இரண்டு தத்வங்களையும் இன்னம் அநேக அம்சங்கள் சேர்த்து ‘சக்தி’ என்று அந்த தர்சனத்தில் சொல்லி, சிவ-சக்தியையே ப்ரஹ்ம ஸ்தானத்தில் வைத்திருக்கிறது. அதில் 36 தத்வம் என்று சொல்லிக் கொண்டு போகும்போது முதல் தத்வம் சிவன். இரண்டாம் தத்வம் சக்தி என்றே சொன்னாலுங் கூட, அப்படிச் சொன்னவுடனேயே, ‘சிவ தத்வத்திலேயும் சித்சக்தி உள்கலந்து இருக்கத்தான் செய்கிறது. ‘ஸத்’தான [ஆதார ஸத்யமான] சிவ தத்வம் எப்போதும் சித்சக்தியும் கூடி ஸத்-சித்தாக இருப்பதுதான். ஆனால் ஸத்-சித்-ஆனந்தம் என்பதில் ஆனந்தம் என்பது ப்ரபஞ்ச நாடகமாக சக்தி விலாஸம் வெளிப்படும்போதுதான் பரிமளிக்கத் தெரிவதாலேயே, முதலில் ஸத்-சித்தாக சிவ தத்வம், அடுத்து ஆனந்த சக்தியாக சக்தி தத்வம் என்று வைத்திருப்பது’ என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது.
1 ‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் பகுதியில், ‘வேதம்’ என்ற பேருரையில் ‘ஒலியும் படைப்பும்’ என்ற பிரிவு பார்க்க.
2 Big Bang theory-ஐக் குறிப்பிடுகிறார்கள்.