அத்வைத சாஸ்திரத்திலும் சக்தி, லீலை முதலியன : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இங்கே ஒரு முக்யமான விஷயம் சொல்லாமல் விடப்படாது. அத்வைதத்தில் ஸ்ருஷ்டி ஸமாசாரம் முழுவதையும் மாயை என்று வைத்துவிட்டதால் சக்தி என்பதை அடியோடு சொல்லாமல் விட்டுவிட்டதாக நினைக்கப்படாது. ஞான வழியில் போகிறவனை சக்தி விஷயமாகத் திருப்பவேண்டாமென்பதால் அதைக் குறிப்பிட்டு இம்பார்டன்ஸ் கொடுத்துச் சொல்வதில்லையே தவிர, சக்தி என்ற ஒன்றையே அது பிரஸ்தாவிக்கக்கூட இல்லை என்று இல்லை. சாந்தோக்யத்தில் ஒரு இடத்தில் (III.14.3) பரமாத்மாவைச் சொல்கிறபோது ஸர்வ கர்மாவும், ஸர்வ காமமும், ஸர்வ கந்தமும், ஸர்வ ரஸமும் படைத்தது அது என்று இருக்கிறது. பரமாத்மா ஆசைப்பட்டதால் – ”அகாமயத” – அந்த ஆசையிலேயே ஏக வஸ்து அநேகமாயிற்று என்று [தைத்திரீய] உபநிஷத்தில் வருவதை முன்னேயே சொன்னேன். ”தன்னந்தனியாக இருப்பதில் ஸந்தோஷம் காணாமல் பரமாத்மா தனக்கு ஒரு கூட்டாளி வேணுமென்று ஆசைப்பட்டது; ஆசைப்பட்டு தானே பதி-பத்னி என்ற இரண்டு பேர்களாயிற்று” என்பதாகக் காமேச்வர-காமேச்வரி தத்வத்திற்கு ரொம்பக் கிட்டே ஒரு அபிப்ராயம் ப்ருஹதாரண்யகத்தில் (I.4.3) வருகிறது. அந்த இரண்டு பேரையும் தாய் தந்தையராகக் கொண்டுதான் ஸகல இனங்களும் ஸ்ருஷ்டியானது என்று மேற்கொண்டு அந்த உபநிஷத் சொல்கிறது.

உபநிஷத்துக்களில் இப்படிப் பரமாத்மா ஸர்வ சக்தியும் படைத்திருக்கிறது என்று சொல்லியிருப்பதை ப்ரஹ்ம ஸூத்ரமும் ”ஸர்வோபேதா ச தத்-தர்சநாத்” (II.1.30) என்று எடுத்துக் காட்டியிருக்கிறது.

இந்த மாதிரி இடங்களை நம் ஆசார்யாள் பாஷ்யத்தில் மழுப்பிக் கொண்டு போவதேயில்லை. தாம் மாயைக் கொள்கையைச் சொல்வதால் சக்தி ஸம்பந்தத்தைத் தொட்டும் தொடாமலும் அர்த்தம் பண்ணிவிட்டு மேலே ஓடுவதில்லை. மேலே சொன்ன ஸூத்ரத்தின் பாஷ்யத்தில் அவர் ஸ்பஷ்டமாகவே ‘ஸர்வ சக்தி யுக்தா பரா தேவதா’ என்று சொல்லியிருக்கிறார். மாயை என்பதை அவரே டிஃபைன் பண்ண முடியாத ‘அநிர்வசனீய’ வஸ்து என்று வைத்துவிட்டால், ‘சக்தி எங்கேயிருந்து வந்தது?’ என்கிற மாதிரி கேள்விகளுக்கு பயப்படவேண்டி இருக்கவில்லை. ”லோகத்தின் மற்ற வஸ்துக்களோடு ஒப்பிட்டு ‘அதெப்படி முடியும்?’ என்று ப்ரஹ்ம தத்வத்தின் விஷயத்தில் கேட்பதற்கில்லை; அதிகம்பீரமான, அதாவது ரொம்பவும் ஆழம் வாய்ந்த, ப்ரஹ்மத்தை ச்ருதி சொல்லியிருப்பதைக் கொண்டுதான் ஆழங்காண முடியுமே தவிர, தர்க்கத்தாலல்ல” என்று அவர் அடித்துச் சொல்லியிருக்கிறார். (பிரம்ம ஸூத்ர பாஷ்யம் II.1. 31.)

ப்ரஹ்மமாகவே இருக்கிற ஸமாதி நிலையாயில்லாமல், ப்ரஹ்மத்தைப் பற்றி பேசுகிற, நினைக்கிற நிலையில் தான் ஸ்ருஷ்டி விஷயமே வருகிறது. சுத்த ஞானமாக இருக்கும் போது நிர்குண ப்ரஹ்மமாக இருப்பதே இவ்வாறு ஸ்ருஷ்டி என்ற அவித்யா [மாயா] கல்பித விஷயத்தோடு ஸம்பந்தப்படுத்தப் பெறும்போது ‘ஸர்வசக்தி யோகம்’ பெறுகிறது என்று இங்கே ஆசார்யாள் சொல்கிறார்.

”சிவ: சக்த்யா யுக்த:” என்பதேதான் ‘ப்ரஹ்மம் ஸர்வ சக்தி யோகம் பெறுகிறது’ என்பதும்!

லீலையாக ஸ்ருஷ்டியைச் சொல்வதும், ப்ரஹ்ம ஸூத்ரத்தில் இதையடுத்தே சொல்லப்பட்டிருக்கிறது: ”லோகவத்து லீலா கைவல்யம்” என்று அங்கே பாஷ்யத்தை முடிக்கும்போது ஆசார்யாள், ”ஸ்ருஷ்டி விஷயத்தை ச்ருதி சொல்வது நிர்குணமான பரம ஸத்ய தத்வத்தைச் சேர்ந்ததில்லை; இது அவித்யா கல்பிதமான நாம-ரூபமான த்வைதப் பார்வையில் பார்க்கிற வியவஹார ஸத்யம்தான்” என்று அத்வைதமாகவே கொண்டு போனாலும், வியவஹாரம் என்று ஒப்புக்கொள்கிற நிலையில் ஸ்ருஷ்டியைச் செய்யும் ஈச்வரனின் லீலையை ரொம்பவும் ரஸித்து, சிலாகித்தே எழுத்யிருக்கிறார். ”ஜகத் ரசனை [பிரபஞ்ச நிர்மாணம்] நமக்கு வேண்டுமானால் மஹா பெரிய சாதிப்பாகத் தோன்றுகிறதே தவிர ஈச்வரனுக்கு வெறும் விளையாட்டு மாத்ரந்தான் – அவனுக்கு அபரிமித சக்தி இருக்கிறபடியாலே!” என்று சொல்லியிருக்கிறார்.

‘ஸ்பந்தம்’ என்ற உள்-வைப்ரேஷனாலேயே அத்விதீய ப்ரஹ்மம் த்வைத ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியை உண்டாக்குகிறது என்பதற்கும் உபநிஷத்தின் ஆதாரம் இருக்கிறது. ”இந்த ஜகத் பூராவும் ப்ராணன் என்ற ஒரு உயிர்ச் சக்தியிலேயே உண்டாகி அசைகிறது” என்று கடோபநிஷத்தில் வருகிறது. (VI. 2.) ‘அசைகிறது ‘என்பதற்கு ‘ஏஜதி’ என்று அங்கே போட்டிருக்கிறது. ‘ஏஜனம்’ என்பதற்குக் கம்பனம் என்று அர்த்தமென்று பாஷா சாஸ்திரம் சொல்கிறது. ‘கம்பனம்’ என்றால் அசைவது. அசைவதிலும், வெளியேயிருந்து பிடித்து உலுக்கி அசையாமல் தானே அசைவது, ‘வைப்ரேட்’ ஆவது என்று ஓரளவு அர்த்தம் கொடுப்பது. இதை ‘கம்பனாத்’ என்று ப்ரஹ்ம ஸூத்ரம் சொல்கிறது. (I.3.39) இதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது, ‘இப்படி வைப்ரேட் செய்விக்கிற ப்ராணன் என்பது மூச்சுக் காற்றான வெறும் வாயு இல்லை; அது ஸாக்ஷாத் ப்ரஹ்மமேதான்’ என்று நிர்தாரணம் பண்ணியிருக்கிறார்1.

இந்த மாதிரி இன்னும் அநேகம், தேடிப் பார்த்தால் கிடைக்கும் – வியவஹார ஸத்யம் என்பதாக மாயா ஸ்ருஷ்டியை அத்வைதமும் ஒரு நிலையில் ஒப்புக்கொண்டு பேசும்பொழுது சாக்த சாஸ்திர அபிப்ராயங்களுக்கு ரொம்பவும் ஆதரவாகவே சொல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு.


1இப்பகுதியில் ஆசார்யாள் காஷ்மீர சைவ மதத்தின் இரு பெயர்களான ‘ஸ்பந்தம்’, ‘ப்ரத்யபிக்ஞை’ என்ற இரு வார்த்தைகளையும் அம்மதத்தின் தொடர்பு காட்டாமலே உபயோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is மாயா உபகரணங்களாலேயே ஞான நிலை அடைய
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸ்தோத்திரத்தை நாம் அணுகவேண்டிய முறை
Next