ஸ்தோத்திரத்தை நாம் அணுகவேண்டிய முறை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பல ஸித்தாந்த விஷயங்களை ஆசார்யாள் மனஸு திறந்து அது அது இயல்பாக வரும்போது கொட்டியிருப்பதை ‘கலந்தாங்கட்டியாகச் சொல்லியிருக்கிறாரே!’ என்று நாம் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாமும் அவர் மாதிரியே மனஸைத் திறந்து வைத்துக் கொண்டு, மனஸை அப்படியே ஸ்தோத்ரத்திற்குக் கொடுத்து, லஹரி அதன் போக்குப்படி அடித்துக் கொண்டு போகும்படியாக விட்டு, அடக்கத்தோடு அம்பாளையும் அவரையும் வேண்டிக் கொண்டு – ‘இந்த ஸ்தோத்ரத்தினால் நாம் நல்லபடிப் பயனடைய வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு – பாராயணம் பண்ணவேண்டும். பண்ணினால், ஸ்தோத்ர கர்த்தாவின் பாவத்திலேயே நாமும் லயித்து, ஒரேயடியாக லயிக்காவிட்டாலுங்கூட அந்த பாவத்தைப் புரிந்து கொண்டு, அதில் திவ்யமான ஸந்தோஷம் பெறமுடியும்.

வித்யாஸமான ஸித்தாந்தங்கள் வந்தபோதிலும் நாம் வித்யாஸமான மனப்பான்மை இல்லாமல் ஸ்தோத்திரத்தின் ப்ரயோஜனத்தை அடைய வேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று: சாஸ்த்ரத்தில் தத்வங்கள் தெய்வ ஸ்வரூபங்களாக இருப்பதில் allegory-யாக [உருவகமாக] சில வர்ணனைகளும் விஷயங்களும் சொல்வதைக் கன்னாபின்னா என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. அந்த ஸமாசாரங்கள் கன்னாபின்னா என்று இருப்பதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘அல்லிகரி’ என்பது அவ்வளவு ஸரியான வார்த்தை இல்லை. தத்வங்களை நாம் வேண்டுமென்றே கதாபாத்ரங்களாக நம்முடைய கல்பனையால் ரூபகப்படுத்துவதுதான் ‘அல்லிகரி’. சாஸ்திர-புராண விஷயங்கள் அப்படி யாரோ சாஸ்த்ரகாரரோ, பௌராணிகரோ தன்னுடைய கல்பனா சக்தியினால் இட்டுக் கட்டியதில்லை. பராசக்தியேதான் அந்தத் தத்வங்களை அந்த ரூபங்களாக அந்த மஹான்களுக்கு, மந்த்ர ஸித்தர்களுக்கு, ரிஷிகளுக்குக் காட்டியிருக்கிறாள். இந்த லோகம் நிஜம் என்றால், இதேபோல, அல்லது இதை விடவும், இதிலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய நிஜ ஸ்வரூபத்தில் கரைப்பதற்கு ஸஹாயம் பண்ணும் அந்தத் த்தவ ரூபங்களும் கதைகளும் ரொம்பவும் நிஜமானவை. இன்றைக்கும் யதோக்தமாக ஜப, த்யானாதிகள் பண்ணினால், பக்தியில் நம் ஹ்ருதயத்தை உருக்கிக் கரைத்தால், அந்த ரூபங்களை தர்சனம் பண்ண முடியும்; நாம் ஒருவரையருவர் பார்த்துக்கொள்கிற மாதிரிப் பார்க்கமுடியும். ஆனால் நாம் ஒருவரையருவர் பார்த்துக் கொள்வதில் ஏற்படும் உணர்ச்சிகள் ஒன்றுமே இல்லை என்னும்படியாக இப்படி திவ்ய ரூப தர்சனம் பெறும்போது ஹ்ருதயத்திலிருந்து ப்ரேமையும் ஆனந்தமும், பொங்கிக் கொண்டு வந்து நம்முடைய ஆதார வஸ்துவான நிஜ ஸ்வரூபாநுபவத்தின் நிறைவான சாந்தி ஸந்தோஷங்கள் வரை கொண்டு சேர்க்கும். ஆகையால் ‘அல்லிகரி’ என்பது ஸரியில்லை….

சொல்லவந்தது என்னவென்றால், தத்வ ரூபங்களான தேவதாமூர்த்திகளைப் பற்றிய ஸமாசாரங்களில் சிலது லோகத்தில் மநுஷ்ய ஜீவர்களான நமக்கு எது வாழ்க்கை முறை என்றும், ஒழுங்கு என்றும், ஸரியானது, நல்லது, அழகு என்றும் வைத்திருக்கிறதோ அதற்கு மாறாகவும் இருக்கலாம். அப்படியிருப்பதால் அவை அஸலே ஸரியில்லை, ஒழுங்கில்லை என்று நினைத்துவிடக் கூடாது. தத்வார்த்தம் என்ன என்று பார்த்தால் அது ரொம்ப ஸரி, ரொம்பவும் ஒழுங்கானது என்று தெரிந்துவிடும்.

இதேபோலக் காவ்ய மரபுகளை மதித்துச் சில விஷயம் சொல்கிறபோதும் லோக வாழ்க்கைக்கான அளவு கோலால் அதை முழம் போட்டுப் பார்த்து ஸரியில்லை, ஒழுங்கு தப்பினது என்று தள்ளிவிடக்கூடாது. ‘யதார்த்தத்தை அப்படியே காட்டுவது லோகதர்மி; இது வெறும் கார்பன் காப்பிதான்; ரஸம் இல்லாதது. அதை நாடகத்தில் ரஸமாகக் காட்டுவதற்காக சில அம்சங்களை மெல்லிசு பண்ணி, சில அம்சங்களைப் புஷ்டி பண்ணிக் காட்ட வேண்டும். இப்படிக் காட்டுகிறதே நாட்ய தர்மி’ என்பார்கள். நாட்ய தர்மி என்று ஒரு மரபாக வந்திருப்பதை நாடகாசிரியர் ஒவ்வொருவரும் தன்னுடையே ஸொந்த மனோதர்மப்படி மெருகுபோட்டு நாடகங்கள் எழுதுவார்கள். நாடகத்துக்குச் சொன்னது கவிதைக்கும் தான்; சில்பம், சித்ரம் எல்லாவற்றுக்குமேதான். லோக வாழ்க்கையை ‘ஈயடிச்சான் காப்பி’யாக ‘இமிடேட்’ பண்ணாமல் ரஸம் கூடுதலாகத் தெரிவதற்கு அந்தக் கலை மரபுப்படி என்ன மாதிரி மாற்றியிருக்கிறதோ அதைக் கலைஞன் தன் மனோதர்மத்தில் இழைத்துக் கொடுக்க வேண்டும். இந்த மரபிலே நமக்குச் சிலது ரஸம் போதாதது, ரஸக் குறைவானது, மிகையானது என்றெல்லாங்கூடத் தோன்றலாம். ஆனாலும் ஒரு பெரிய கவி-பாரம்பர்யமோ, சில்பி-பாரம்பர்யமோ அந்த மரபுப்படி வழிவழியாகச் செய்து கொண்டுவரும்போது, புதுசாக வருகிற கீழ்க் கன்றுகளும் அதை அநுஸரித்துப்போவதுதான் மரியாதைப் பண்பு என்பதையும், அதுதான் மரபை ரக்ஷித்து நீடித்துக் கொடுக்க உதவும் என்பதையும் நாம் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஸெளந்தர்லஹரியை நாம் உரியபடி ரஸிப்பதில் இது இரண்டாவது விஷயம். முதல் விஷயம், பலவித ஸித்தாந்தக் கருத்துக்கள் அதில் வருவதை வித்யாஸமில்லாமல், ‘இந்த இடத்தில் ஸந்தர்பத்தில் இந்தக் கருத்து ஸரி. முன்னே பின்னே இதே ஸித்தாந்தம் வருகிறதா என்று பார்க்க வேண்டாம்’ என்ற எண்ணத்துடன் பார்த்து ஒவ்வொரு வித அபிப்ராயத்தையும் ஒப்புக்கொள்வது. இரண்டாவது விஷயம், தத்வ ரூபமாக – உருவகம், உருவக் கதை என்று இந்த நாளில் சொல்வது மாதிரி – சில ஸமாசாரங்கள் வரும்போதும், கவி மரபை அநுஸரித்துச் சில ஸமாசாரங்கள் வரும்போதும் நம்முடைய யதார்த்த லோகவாழ்க்கையின் ஒழுங்கு முறைகளை ‘ஸ்டான்டர்டா’க வைத்துக்கொண்டு அவற்றை அளந்து பார்த்து ஸரியாயில்லை, ரஸமாக இல்லை என்று தள்ளிவிடக்கூடாது.

இந்த ‘அப்ரோச்’சோடு [அணுகுமுறையோடு] நாம் ‘ஸெளந்தர்ய லஹரி’ மாதிரியான சாஸ்திரமாகவும் கவிதையாகவும் சேர்ந்து இருக்கப்பட்ட ஸ்தோத்ரங்களைப் படித்துப் பாராயணம் செய்தால்தான் அவற்றிலிருந்து முழுப் பலனும் அடையமுடியும்.

இதெல்லாம் எதற்குச் சொல்கிறேனென்றால் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இப்படிப்பட்ட விஷயங்களும் கொஞ்சம் இருப்பதால் நாம் சுத்தமான மனஸோடு, அடக்கத்தோடு ‘அப்ரோச்’ பண்ணி, அப்படிப் பண்ணினாலே அடையக்கூடிய உத்தமமான பலனை அடைய வேண்டுமென்பதற்காகத்தான். ப்ரஹ்மத்தின் ஸ்தானத்திலுள்ள சிவன், அதனுடைய இச்சையின் ரூபமான காமேச்வரி ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து ஸ்ருஷ்டி உண்டாவதை தத்வ ரூபக ச்ருங்காரமாகவே ஸ்ரீவித்யா சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. இது மாதிரியான விஷயங்கள் நம் ஸ்தோத்திரத்திலும் இருக்கும். தத்வார்த்தத்தையே எடுத்துக்கொண்டு சுத்தமான மனஸோடுதான் இத்தனை காலமாக உபாஸகர்கள் அநுஷ்டானம் பண்ணி, அதனால் காமாதி தோஷங்களைப் போக்கிக்கொண்டு உசந்த அநுபவங்களை அடைந்திருக்கிறார்கள். மூகர் [‘பஞ்ச சதி’யில்] அடிக்கடி சொல்வார்: ”அம்மா! நீ காமனை பஸ்மம் செய்த சிவனிடமே காமத்தை உண்டு பண்ணினாய். அதே நீ காமாதி தோஷங்களுள்ள ஜீவர்களின் காமத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து விடுகிறாய்!” என்று.

இதற்கு ஒரு முக்ய காரணம், நம் ஜனங்களின் ‘அப்ரோச்’சும் நல்லபடி இருந்ததுதான். அப்படியிருந்துங் கூட உபாஸனை, ஸாதனை என்று தீவிரமாக இந்த விஷயங்களை அப்யாஸம் பண்ணுவது என்று வருகிற போது குரு-சிஷ்ய க்ரமத்தில் ரொம்பவும் யோக்யதை பார்த்துப் பக்வி [பக்குவம் பெற்றவர்]களுக்கு மாத்திரமே உபதேசம் செய்து வந்தார்கள். தப்பாக நினைக்க இடம் தருகிறவைகளையும் ஸரியாகவே எடுத்துக்கொள்ள முடிபவர்களுக்கு மாத்திரமே சொல்வது என்று குரு-சிஷ்ய க்ரமத்தில் ரஹஸ்யமாக ரக்ஷித்து வந்தார்கள்.

சாஸ்த்ரார்த்தமாகவும் ஸரி, காவ்ய ரீதியிலுங்கூட ஸரி, எல்லா விஷயங்களையும் விஸ்தாரம் பண்ணாமல், பொதுவாக இருக்கப்பட்ட ஜனங்களுக்குச் சிலதைத் தொட்டும் தொடாமலும் சொல்லிவிட்டு மேலே போய் விடுவார்கள்.

இங்கே ‘அன்டர்லைன்’ பண்ணிச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் இத்தனை காலமாக நம் ஜனங்களின் ‘பேஸிக் அப்ரோச்’சும் [அடிப்படையான அணுகுமுறையும்] ரொம்ப நல்லபடியாகவே இருந்து வந்திருக்கிறது. ‘நாம் ஒரு ஸ்தோத்ரம் பாராயணம் பண்ணுகிறோமா? அல்லது புராணம் கேட்கிறோமா? அல்லது ஒரு கோவிலுக்குப் போகிறோமா? இதுகளை எதற்குப் பண்ணுகிறோமென்றால் நாம் சுத்தி ஆவதற்காகத் தான்; நம்முடைய காமாதி தோஷங்களைப் போக்கிக் கொண்டு பக்தியை வளர்த்துக்கொண்டு ஈச்வராநுக்ரஹத்தைப் பெறுவதற்காகத்தான்’ என்று அவர்கள் தீர்மானமாக வைத்துக்கொண்டிருந்தார்கள் ஆகையினால், அவர்களுடைய ஸ்திதியில் அந்த லக்ஷ்யத்திற்கு வேறேயாகத் தோன்றும்படி ஒரு ஸ்தோத்திரத்தில் வர்ணனை வந்தாலோ, அல்லது புராணத்திலே கதை வந்தாலோ, அல்லது ஆலயத்திலே சில்பங்கள் இருந்தாலோகூட அவற்றில் ரொம்ப கவனத்தை விடாமல், ‘எதற்காகவோ பெரியவர்கள் இதற்கெல்லாமும் இடம் கொடுத்திருக்கிறார்கள். நம்மை இதுகள் distract பண்ண [திசை திருப்ப] வேண்டாம். நம் லக்ஷ்யம் சுத்தியாவது, பக்தி பண்ணுவது, அநுக்ரஹத்துக்குப் பாத்திரமாவது’ என்று இவற்றிலேயே குறியாக இருந்து, மற்றவற்றை லேசாக எடுத்துக்கொண்டு, அல்லது தள்ளிவிட்டு, தங்களுக்கு எது ஆத்மாபிவிருத்திக்கு ஸஹயாமாகத் தெரிந்ததோ அதிலேயே கவனம் செலுத்தினார்கள். ஸமய ஸம்பந்தமான விஷயங்களில் ஒரு விநயம், எடுத்ததற்கெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டும் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டும் போகாத எளிமை இருந்ததால், தங்களுக்கு ஸரியாக வராத விஷயங்களைக் கூட அஸலே ஸரியில்லை என்றே வைக்காமல், அதே ஸமயத்தில் அவை ஸரியில்லாமலில்லை என்பதால் அவற்றைத் தாங்களும் deep -ஆக எடுத்துக் கொள்ளலாமென்றும் நினைக்காமல், தங்களுடைய வ்யவஸ்தையை அறிந்து நல்ல கட்டுப்பாட்டோடு ‘அப்ரோச்’ பண்ணி வந்தார்கள். வர்ணனைகள் அவர்களுந்தான் படித்தார்கள்; சில்பங்கள் அவர்களுந்தான் பார்த்தாகள். ஆனாலும் தங்கள் பரிசுத்திக்கு ஆனதை மட்டுமே குறிப்பாக எடுத்துக் கொண்டு, மற்றவற்றை மேம்போக்காகப் பார்த்துவிட்டு மேலே போனார்கள். தெய்வங்கள் காம க்ரோத வசப்பட்ட மாதிரி வருவதெல்லாங்கூட நம் நிலையில் பண்ணியதில்லை என்ற உறுதியான தீர்மானம் அவர்களுக்கு இருந்ததால், அதற்கு என்ன தத்வார்த்தம், இல்லாவிட்டால், காவ்ய ரீதியில் அதற்கு என்ன ‘வால்யூ’ என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்காமலே நல்லபடியாக எடுத்துக் கொண்டு தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போனார்கள். வழிவழியாக இத்தனை ஆயிரம் வருஷங்களாகப் புராண ச்ரவணம், ஸ்தோத்ர பாராயணம், தேவாரம்-திவ்யப் பிரபந்தம் ஓதுவது, ஆலய தர்சனம் பண்ணுவது என்று நம்முடைய ஜனங்கள் பின்பற்றி வந்திருப்பதில் கிஞ்சித் [சிறிதளவு] கூட விகாரமான மனோபாவங்களுக்கோ, விகல்பான கல்பனைகளுக்கோ இடமே கொடுக்காமல்தான் இருந்து வந்திருக்கிறார்கள். தத்வார்த்தம் தெரிந்த உபாஸகர்களும், கலையறிவு பெற்ற ரஸிகர்களும் deep-ஆகப் பார்த்துப் புரிந்துகொண்ட விஷயங்களையும், அப்படி deep-ஆகப் பார்ப்பது தங்கள் வேலையில்லை என்று மற்றவர்கள் புரிந்து கொண்டு ‘லைட்’டாக எடுத்துக்கொண்டு தங்கள் லக்ஷ்யத்தைப் பார்த்துக்கொண்டு போனதால் இத்தனாயிரம் காலமாக எல்லாம் நல்லபடி இருந்து வந்தது.

ஒரு டாக்டர் நோயாளியின் அவயவங்களையெல்லாம் பரிசோதனை பண்ணுகிறார். அப்போது அவர் பார்க்கிற கண்ணே வேறே. அவருடைய ‘பர்பஸு’ம் உசந்தது. அதனால் அவர் அப்படிப் பண்ணுவது தப்பில்லை. ‘லாபரடரி’யில் அவர் மலப் பரிசோதனை கூடப் பண்ணுகிறார். சுத்தமாக, வெள்ளை வெளேரென்று ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஹைஜீன் விதிகள் எல்லாம் ‘ஃபாலோ’பண்ணும் அவர் கண்ட காலராக்காரன் ‘ஸமாசார’த்தைக்கூட ‘டெஸ்ட்’ பண்ணுகிறார். ‘தொத்து வியாதி நோயாளி கிட்டேயே போகப் படாது!’ என்று நம்மையெல்லாம் தடுக்கிறவர். அவரே அந்த வியாதிக் கிருமிகளை ‘மைக்ராஸ்கோப்’பில் பார்த்து ரிப்போர்ட் எழுதுகிறார். அவர் பண்ணுவதையெல்லாம் நாமும் பண்ணுவோமே என்கலாமா? அல்லது அவர் அப்படிப் பண்ணப்படாது என்றோ, இந்த மாதிரி அஸிங்கமெல்லாம் வைத்ய சாஸ்திரத்திலேயே இருக்கக்கூடாது என்றோ சொல்லலாமா?

இந்த நல்லறிவு அநாதி காலமாக நம் ஜனங்களுக்கு மத ஸம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்ததால் எல்லாம் நல்லபடி இருந்தது. நன்றாக வரப்பு கட்டிய நிலம் மாதிரி, பாகுபாட்டு வரம்புகளுடன் கூடியிருந்ததால் நம் தேசம் லோகோத்தர கீர்த்தியுடன் விளங்கி வந்தது.

ஆனால் ப்ரின்டிங் ப்ரெஸ் வந்து, யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும், எத்தனை காப்பி வேண்டுமானாலும் புஸ்தகம் போடலாம் என்று ஆனவிட்டு நிலைமை துக்கப்படும்படியாக மாறியிருக்கிறது. ரஹஸ்ய சாஸ்திரங்களைக்கூடப் புஸ்தகம் போட்டுப் பக்குவம் பார்க்காமல் ஸர்வ ஜன விநியோகமாகச் செய்வதால் தாறுமாறாக அர்த்தம் பண்ணிக்கொள்வது பரவிவருகிறது. பொதுவாகவே ஜனங்களின் வியவஸ்தை, கட்டுப்பாடு, விநயம் என்பதெல்லாம் அடிப்பட்டுக் கொண்டு வருவதாலும், தாங்கள் ஸ்வதந்திரப் பிரஜைகளானதால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அபிப்ராயமிருப்பதாலும் தலைக்குத் தலை தோன்றினபடியெல்லாம் அர்த்தம் பண்ணுவது என்ற பெயரில் அனர்த்தம் விளைவிப்பதாக இருக்கிறது. புஸ்தகம் போடுகிறவர்களிலும் பல பேர் அந்த சாஸ்திரத்தை அப்யாஸம் பண்ணி அநுபவம் கண்டவரில்லை; இது ஒரு தொழில், ‘கிதாப்’ கிடைக்கிறது என்பதற்காகவே போடுகிறார்கள். வாங்கிப் படிப்பவர்களிலும் ரொம்பப் பேர் அநுஷ்டானம் பண்ணும் உத்தேசத்துடன் படிக்கிறதில்லை. ஒரு பொழுதுபோக்காகவோ, ‘என்ன இருக்கு?’ என்று பார்க்கும் ‘க்யூரியாஸிடி’யிலோ இல்லாவிட்டால் ஆராய்ச்சி பண்ணி ‘தீசிஸ்’, ‘கீஸிஸ்’ எழுதி, அல்லது தாங்களும் புஸ்தகம் போட்டுக் ‘கிதாப்’ வாங்குவதற்காகவோ படிக்கிறார்கள். எந்தவிதமான பக்தி ஸ்திதி அடைந்து, எப்படிப்பட்ட பாவத்தோடு ஒரு சாஸ்திரத்தைக் கற்பிக்கவேண்டுமோ, கற்க வேண்டுமோ அவை இல்லாமலே எழுதுகிறவர் எழுதி படிக்கிறவரும் படித்தால் அதன் மூலம் ஆத்மார்த்தமான பலன எப்படி ஏற்படும்? எழுதுகிறதும், படிக்கிறதும் மட்டுந்தானென்றில்லை. உபதேசம் கொடுப்பது, வாங்கிக் கொள்கிறது என்பதிலுங்கூட நியமம் தப்பியே நிறைய நடக்கிறது.

இன்றைக்கு நடக்கும் இரண்டு பெரிய கோளாறுகள்: ஒன்று பரம்பரையாக உபாஸனைகள் செய்துவந்தவர்களும், அதற்கு அதிகாரிகளாக [தகுதி பெற்றவர்களாக] இருப்பவர்களும் அது வேண்டாம் என்று ஒரே ஸெளகிகமாகப் போயிருப்பது. இன்னொன்று, தங்கள் தகுதியையும் பார்க்காமல், சாஸ்திர நியமங்களையும் அநுஸரிக்காமல் இஷ்டப்பட்டவர் யார் வேண்டுமானாலும் எந்த உபாஸனையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுவது. செய்யவேண்டியவன் செய்யாமலிருப்பது, செய்யக் கூடாதவன் செய்வது — இந்த இரண்டில் எது பெரிய கோளாறு என்று சொல்லத் தெரியவில்லை.

சொல்ல வந்தது, தற்போதைய நடைமுறையில், தங்களுடைய சித்த விகாரத்தால் தோன்றுகிறபடியெல்லாம் தத்வ ரூபகங்களைத் தப்பர்த்தம் பண்ணிப் புஸ்தகங்கள் போடுவதாகவும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், பிரஸங்கங்கள் என்று பிரசாரம் செய்வதாகவும் நிறைய நடந்து வருகிறது. இதனால் ஒன்று, மதாபிமானமுள்ளவர்களென்று தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களிலேயே பல பேர் காபாலிகம், கெட்டுப்போன வாமாசாரம் ஆகியவை மாத்திரமில்லாமல் சிஷ்டர்கள் [ஆசார சீலர்கள்] என்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உபாஸனைகளிலேயும் தப்பாகப் பல அம்சம் இருப்பதாகவும் அவற்றைக் கழித்துக் காட்டினால்தான் நம்முடைய மதம் சுத்தமாகும் என்றும் நினைக்கிறார்கள். அல்லது – இப்படி நினைப்பதே தேவலை என்னும்படியாக – ‘அசிங்கம், ஆபாஸம், க்ரூரம் என்று பூச்சி பிடிக்காமல் சாஸ்த்ரங்களிலேயே ‘நேச்ச’ரை மதித்து அநேகம் சொல்லியிருக்கிறது. ஆகையினால் நாமும் கூச்ச நாச்சமில்லாமல் ‘ரியலிஸம்’ என்று என்ன வேண்டுமானாலும் கதை-கட்டுரை எழுதலாம், படம் போடலாம், படம் பிடிக்கலாம்’ என்று நினைக்கிறார்கள். இன்னொன்று என்னவென்றால் மதாபிமானமில்லாதவர்கள் சாஸ்திர, புராணங்களில் மலை மலையாக இருக்கும் நல்லது எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, இப்படிப்பட்ட விஷயங்களையே தேடி எடுத்து பூதக் கண்ணாடியில் காட்டி, ”மதமே குப்பை” என்ற நாஸ்திகப் பிரசாரம் பண்ணுகிறார்கள்.

இத்தனை விபரீதங்களுக்கும் காரணம் எல்லா விஷயங்களையும் தரம் பார்க்காமல் ‘டெமாக்ரடைஸ்’ செய்திருக்கும் காலப்போக்குதான். இதை எப்படி ஸரிப் பண்ணுவது, நான் சொல்வதால் ஸரி ஆகிவிடுமா, ‘சங்கராச்சாரி vested interest-ல் [ஒரு வகுப்பாரின் சுயநலத்தின் மீது] கூப்பாடு போடுகிறார்’ என்ற அபிப்ராயத்துக்கு இடம் கொடுப்பது தவிரப் பலன் இருக்குமா என்று தோன்றாமலில்லை. ஆனாலும் ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து விட்டு, இந்த மாதிரி சாஸ்திர ரஹஸ்யங்களும் அடங்கியுள்ள ஒரு புஸ்தகத்தைப் ‘பாபுலரைஸ்’ பண்ணுவதில் கவனிக்கவேண்டிய ‘ப்ரிகாஷன்’களை (முன்னெச்சரிக்கைகளை)ச் சொல்லாமலிருந்தால் — மனஸில் தோன்றியுங்கூடச் சொல்லாமலிருந்தால் — அபசாரம் என்பதாலேயே சொன்னேன்.

ரஹஸ்ய விஷயங்களும் அடங்கிய ‘ஸெளந்தர்ய லஹரி’ மாதிரியான ஸ்தோத்ரங்களை ஸ்ரீவித்யோபாஸகர்கள் மாத்திரந்தான் என்றில்லாமல், எல்லோருமே ஒரு பக்தி ஸ்துதி என்ற அளவில் எடுத்துக்கொண்டு, ‘இதன் வழியாகக் கொஞ்ச நாழி அம்பாளிடம் மனஸை வைப்போம்’ என்று பாராயணம் பண்ணுவதில் தப்பில்லை; தாராளமாகப் பண்ணலாம். அவர்களையும் உத்தேசித்துத்தான் சாஸ்திரத்தை ஸ்தோத்திரமாக்கியிருப்பதே. நமக்கு என்ன சாஸ்திரங்கள் இருக்கின்றன என்று எல்லாருக்கும் தெரிவிக்கவே இப்படிப்பட்ட சாஸ்திர கர்பமான ஸ்தோத்திரங்கள் இருப்பது. ஆனால் என்ன சாஸ்திரம் இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரிந்தால் போதும்; சாஸ்திரத்தில் என்ன இருக்கிறது என்ற ரஹஸ்யங்கள், அதிலே deep-ஆகப் போய் அநுஷ்டானம் பண்ண நினைக்காத எல்லாருக்கும் தெரிய வேண்டியதில்லை. இப்படிப்பட்ட ச்லோகங்களும், அர்த்தம் தெரியாவிட்டாலும் அவற்றுடைய சப்தங்களில் இருக்கப்பட்ட மந்த்ர சக்தியாலேயே ஸகல ஜனங்களுக்கும் நல்லது பண்ணும். பொதுவாக மனஸில் ஒரு பக்தி பாவத்தோடு பாராயணம் பண்ணும்போது எந்த ஒரு ஸ்தோத்ரமும் நல்லது பண்ணத் தான் செய்யும். ஸ்தோத்ரம் என்பது வெறும் சப்தங்களும் வார்த்தைகளும் மட்டுமில்லை. ‘எல்லாரும் இதனாலே ப்ரயோஜனம் அடையவேண்டும்’ என்ற உத்தம எண்ணத்தாலேயே அதைச் செய்து கொடுத்திருக்கும் ஸ்தோத்ர கர்த்தாவின் உயிரும் அதில் இருக்கிறது. அதனால் அதைப் படிக்கிறவர்களுக்கு உயிருள்ள அந்த ஸ்தோத்ரம் நல்லது பண்ணவே செய்யும். அதோடு ஸ்தோத்ர லக்ஷ்யமான தேவதை நல்லது பண்ணுவதும் இருக்கவே இருக்கிறது. அதுதான் ‘அல்டிமேட்’டாகப் பலனைத் தருவது. பலனைத் தந்தருளும்படி அந்த தேவதையிடம் ஸ்தோத்திரத்திலுள்ள அதன் கர்த்தாவின் உயிரும் நம் சார்பில் சிபாரிசு பண்ணும்; தேவதை அருள் பண்ணுவதற்கு அதுவும் தூண்டிவிடும். இப்படிப் பாராயண பலன் கிடைத்துக் கொண்டு போகும்போது அதன் விளைவாகப் பாராயணம் பண்ணுகிறவருக்கு, ‘இந்த சாஸ்த்ரத்தை முறையாகத் தெரிந்துகொண்டு, குரு முகமாக உபதேசம் வாங்கிக் கொண்டு அநுஷ்டானம் செய்யவேண்டும்’ என்றும் தோன்றும். அப்போது — அப்போதுதான் — அதன் ரஹஸ்யார்த்தமுள்ள ச்லோகங்களுக்கும் குருமுகமாக அர்த்தம் தெரிந்து கொள்ளலாம்.

அதனால் பொதுப் பிரஸங்கங்களில் ரஹஸ்யார்த்தங்கள் வரும் ச்லோகங்களை விஸ்தாரம் பண்ணுவது உசிதமில்லை.

ரஹஸ்யம் என்பது தத்வ ரூபகம் மட்டுமில்லை. ஒரு முக்யமான விஷயத்தை இதுவரை விட்டுவிட்டேன். தத்வ ரூபகத்தை மட்டுமே ரஹஸ்யமென்று சொல்லி வந்திருக்கிறேன். இன்னொன்றும் உண்டு — மந்த்ர சாஸ்திர விஷயம் என்பது. தத்வ ரூபகங்களைப் பக்குவம் போதாதவர்கள் மனோ விகாரத்தால் அஸங்கியமாக அர்த்தம் பண்ணிக் கொள்வார்களென்பதால் அவற்றை ரஹஸ்யமாக ரக்ஷிக்கவேண்டும் என்றது. இன்னொன்று, ‘அஸங்கியம்’ என்ற அம்சமில்லாதது. ஆனால் ‘வீர்யம்’ என்ற அம்சம் நிரம்பியிருப்பது. அதனால் அதை ரஹஸ்யமாக வைத்து, உரியவர்களுக்கே கொடுக்கவேண்டும். ரிவால்வர் எல்லாரும் வைத்துக்கொள்ளக்கூடாது; அதற்கான லைஸென்ஸ் வாங்கினவர்கள்தான் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டமிருக்கிறதல்லவா? அப்படி! அது என்னவென்றால் — மந்த்ரம். மந்த்ரம், அதன் அக்ஷரம் ஆகியவற்றைப் பற்றிய விஷயங்கள் ரஹஸ்யமாகவே ரக்ஷிக்கப்படவேண்டிவை. அஸங்கியமாகத் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடிய தத்வ ரூபங்கள் ஸெளந்தர்ய லஹரியில் ரொம்பக் குறைச்சல்; மந்த்ர, யந்த்ர விஷயங்கள் கொஞ்சம் ஜாஸ்தி. அதனால் இதை நான் முன்னேயே சொல்லியிருக்கவேண்டும். இப்போதாவது நினைவு வந்தது ஸந்தோஷம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அத்வைத சாஸ்திரத்திலும் சக்தி, லீலை முதலியன
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  குண்டலிநீ யோகம்:அதி ஜாக்கிரதை தேவை
Next