சாக்த தத்வத்திற்கு ஸயன்ஸின் சான்று : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அசையாத சிவனும் அம்பாளால்தான் அசைந்து காரியத்தில் ஈடுபடுகிறார் என்று வருவதை ஸயன்ஸ்படி கொஞ்சம் விளக்கிப் பார்த்தால்: ‘மாட்டர்’ என்று பதார்த்தத்தைச் சொல்கிறார்கள். அதன் ஸ்வபாவம் ‘இனர்ஷியா’ என்கிறார்கள். அதாவது சலனமில்லாமல் போட்டது போட்டபடிக் கிடப்பதுதான் என்கிறார்கள். அதனால் ‘இனர்ட் மாட்டர்’ என்றே சேர்த்துச் சொல்வதாக இருக்கிறது. ஆனாலும் அப்படிப்பட்ட இனர்ட் மாட்டர் பல தினுஸில் சலனப்பட்டு, பல தினுஸில் ஒன்று சேர்ந்துதான் ப்ரபஞ்சம் உண்டாயிருக்கிறதென்று நன்றாகத் தெரிகிறது. அப்படியானால் ஏதோ ஒரு பவர், சக்திதானே சலனமில்லாத மாட்டரைச் சலிக்கும்படியாகப் பண்ணியிருப்பதாக ஆகிறது? அந்தச் சலனமில்லாத மாட்டரைத்தான் சிவன் என்றும் அதைச் சலிக்க வைக்கும் சக்தியைப் பாரசக்தி, அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறது.

நிச்சலனமான சிவனும், க்ரஹ நக்ஷத்ரங்களில் ஆரம்பித்து அணுவுக்குள் உள்ள பரமாணுவரை எல்லாம் ஸதா சலித்துக்கொண்டேயிருப்பதற்குக் காரணமான சக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அவர் ‘மாட்டர்’, அவள் ‘எனெர்ஜி’ என்று ஸயன்ஸ் அடிப்படையில் விளக்கிச் சொல்லலாம். இணைபிரியாத இரண்டு பேர் என்றாலும் அவர்கள் அடிப்படையில் இரண்டுகூட இல்லை, ஒன்றேதான் என்பதையும் அடாமிக் ஸயன்ஸில் ‘மாட்ட’ரே’ எனர்ஜி’யாவதாகச் சொல்லியிருப்பதைக் காட்டி உறுதிப்படுத்தலாம்.

ஆனால் ஒரு வித்யாஸம், பெரிய வித்யாஸம். என்னவென்றால், அங்கே ஒரு மாட்டரை எனர்ஜி ரூபமாக்கிய அப்புறம் மாட்டர் இல்லாமல் போய்விடும். இங்கேயோ சிவனும் சக்தியும் எப்போதுமே சாச்வத ஸத்யமாக இருக்கிறார்கள். சக்தியாக எனெர்ஜி வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் போதும் சிவ மாட்டர் அழியாமலே இருந்து கொண்டிருக்கிறது! ஏனென்றால் இங்கே ‘மாட்டர்’ என்பதே ஜடமாக இல்லாமல் உயிரான ‘ஸ்பிரிட்’டாக இருக்கிறது; அழியாத, அழிக்க முடியத ஆத்ம தத்வமாக இருக்கிறது; சைதன்ய பூர்ணமாக இருக்கிறது. ஜடத்திலேயே ஆரம்பித்து ஜடத்திலேயே முடிந்துவிடும் ஸயன்ஸ்படியான மாட்டருங்கூட இந்தச் சைதன்யத்திலிருந்து வந்ததுதான். இப்போது மெள்ள மெள்ள ஐன்ஸ்டீன், ஸர் ஆலிவர் லாட்ஜ், எடிங்டன் போன்ற பெரிய ஸயன்ஸ் மேதைகள் அந்த சைதன்ய ஆதாரத்தின் பக்கமாக ஸயன்ஸைத் திருப்பி விட்டிருக்கிறார்கள். ஆனாலும் அதை லாபரடரியில் எக்ஸ்பெரிமென்ட் பண்ணி நிரூபிக்கவோ, அநுபவிக்கவோ முடியாது. மதாநுஷ்டானத்தினால்தான் அதன் நிரூபணமும், ப்ரத்யக்ஷ அநுபவமும் கிடைக்கும்.

ஸயன்ஸுக்கும் மதத்துக்கும் மாறுபாடுகள் இருந்தாலும் ஒப்புவமை காட்டும்படியும் அநேகம் இருக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தியரியிலிருந்து நடந்துள்ள அணு ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மத சாஸ்த்ரங்கள் — குறிப்பாக அத்வைத வேதாந்தமும் சாக்த நூல்களும் — சொல்வதற்குக் கிட்டக் கிட்ட வந்து கொண்டிருக்கின்றன.

லோகத்தில் ‘டைம்’, ‘ஸ்பேஸ்’ என்பவை உள்பட எதுவுமே தன்னுடைய ஆதாரத்திலேயே ஸத்யமாக இருப்பதல்ல, ‘ரிலேடிவா’க இன்னொன்றைச் சார்ந்தே எல்லாமும் ஒரு ஓட்டத்தில் ஓடுகிறபோது அந்த ஓட்டத்தின் தொடர்ச்சியாலேயே அது அதுவும் ஸத்யம் மாதிரி நடைமுறைக்கு இருக்கிறது என்பதுதான் நான் புரிந்து கொண்ட மட்டும் ‘ரிலேடிவிடி தியரி’. ப்ரஹ்மம் தான் ஒன்றேயான ஆதார ஸத்யம்; அதைச் சார்ந்திருப்பதாலேயே ஸத்யம் மாதிரித் தோற்றமளிக்கும்படியாக மாயை கல்பித்துக் காட்டுகிறதுதான் இந்த லோகம் பூராவும் என்று அத்வைதம் சொல்கிறது. அந்த மாயையாகவே அம்பாளை சாக்த சாஸ்த்ரங்களும் குறிப்பிடுவதாகச் சொன்னேன். மாயா தத்வந்தான் ‘ரிலேடிவிடி’ என்று கொள்வதற்கு நிறைய இடமிருக்கிறதல்லவா? இந்த ரிலேடிவுக்கு ஆதாரமான ‘அப்ஸொல்யூட்’ என்னவென்று ஸயன்ஸ் கண்டுபிடிக்கவில்லை. மத நூல்களும் தத்வ சாஸ்திரங்களும் அதைத்தான் ப்ரஹ்மம், சிவன் என்கின்றன. (மதம் ‘ரிலிஜன்’, தத்வ சாஸ்திரம் ‘ஃபிலாஸஃபி’ என்று ஒரு பாகுபாடு சொல்லப்பட்டாலும் நம்முடைய மதத்தில் இந்த இரண்டும் பிரிக்க முடியாமல் [சிரித்து] சிவ-சக்திகள் மாதிரி ஒன்று சேர்ந்துதான் இருக்கின்றன.) புஸ்தகத்தில் சொன்னது மட்டுமில்லை; அந்த அப்ஸொல்யூட்டை மஹான்கள் ஆத்ம ஸ்வரூபமாக அநுபவித்தும் இருக்கிறார்கள். அதுதான் உயிருக்கெல்லாம் உயிராக இருக்கும் ஒரே உண்மையான உயிர்.

அதை ஸயன்ஸ் இதுவரை சொல்லவில்லை. இனிமேலும் ஸயன்டிஸ்ட்கள் எல்லாரும் ‘தியரி’யில் அதை ஒப்புக்கொள்ளும் நாள் வந்தாலும், ‘அதன் proof எங்கள் ஸாமர்த்தியத்துக்குள் வராத ஸமாசாரம். அதைத் தெரிந்து கொள்ள ஆத்ம சாஸ்திரத்திற்குப் போங்கள்’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். பராசக்தியின் ‘ரிலேடி’வான சலன நாடகத்தில் சிலவற்றைத்தான் விதிகளைக் காட்டி ஸயன்ஸ் விளக்குமேயழிய, லோகத்தின் அத்தனை சலனத்தையும் சேர்த்து ஒரேயடியாகச் சஞ்சலிக்கிற இந்த ஜீவ மனஸைச் சலிக்காமல் சமனப்படுத்தி ஜீவன் நிஜமான தன்னை தெரிந்துகொண்டு ‘அப்ஸொல்யூட்’டாக ஆவதற்கு வழி சொல்ல அதனால் ஆகாது. அது ஸயன்ஸின் லக்ஷ்யமுமில்லை. மத சாஸ்திரங்களே அந்த வழியைச் சொல்லும். அவை சொன்னாலும், அவை சொல்கிற வழியில் நாம் போனாலும், கடைசியில் ‘ goal ‘-ஆக இருக்கிற இடத்தைத் திறந்து விடுவது அம்பாள்தான். ‘அப்ஸொல்யூட்’டிலிருந்து பிரித்து விளையாட்டுப் பண்ணினவளைத் தவிர வேறே யார் மறுபடி அதோடேயே சேர்த்து வைக்க முடியும்?

ஸயன்ஸின் எல்லைக்கு அந்தண்டை இருக்கும் விஷயத்தில் ஸயன்ஸை நாம் இழுத்துக் குறை சொல்வது தப்பு. அதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் தங்களுக்கு ஒரு எல்லை கட்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அதீதமான விஷயங்களைச் சொல்லும் சாஸ்திரங்களைப் பொய் என்று அவர்கள் நினைப்பது தப்பு. இரண்டும் காம்ப்ளிமென்டரியாக ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பிக் கொண்டு போகமுடியும் என்ற எண்ணம் இரண்டு தரப்புக்கும் இருக்க வேண்டும். ஸயன்ஸ் கண்டுபிடிப்புகளையே சாஸ்த்ர தத்வார்த்தங்கள் எப்படி வேறே பாஷையில் சொல்லியிருக்கின்றன என்று பார்த்தால் எத்தனையோ ருசியான விஷயங்கள் அகப்படும்.

த்ருஷ்டாந்தமாக: ஒரு அணுவுக்குள்ளே பாஸிடிவ் எலெக்ட்ரிஸிடி சார்ஜாகியுள்ள மத்ய ந்யூக்ளியஸான ப்ரோடானை சிவன் என்றும், அதைச் சுற்றிவரும் நெகடிவ் சார்ஜுள்ள எலெக்ட்ரானை அம்பாள் என்றும் வைத்துக் காட்டலாம்.

‘ஸ்டில் ஸென்டர்’ என்பதாக எதற்கும் மத்யமாக ஒரு சாந்த ஸ்தானமிருக்கிறது. சலனமில்லாவிட்டாலும் அது சக்தியற்ற சூன்யமில்லை என்பதை கவனிக்க வேண்டும். நல்ல கனத்தை ஸம எடைக் கட்டும் ‘ஈக்விலிப்ரியம்’ இப்படிப்பட்ட சாந்த ஸ்தானந்தான்; ஒரு பதார்த்தத்தின் கனம் குவிந்து ஒருமுகப்படும் ‘ஸென்டர் அஃப் க்ராவிடி’ சாந்த ஸ்தானந்தான். பயங்கரமான புயலில்கூட ‘ஸ்டார்ம் ஸென்டர்’ என்று இருக்கிறது. மத்யமான ஒரு சாந்த ஸ்தானத்திலிருந்து சக்தி பரவியே, வெளிப்பட்டே, வெடித்தே பதார்த்தங்கள் அமைகின்றன, கார்யங்கள் சக்திகரமாக நடக்கின்றன. அந்த சாந்தத்தைத்தான் சிவன் என்றும், அதை மையமாகக் கொண்டு சுழன்று வெளிப்படுகிற சக்தியை அம்பாள் என்றும் சொல்வது.

ஒன்றுக்குள் மையமாயிருக்கும் பாஸிடிவ், அதைச் சுற்றி நெகடிவ் என்பதை ஸ்வாமி-அம்பாள் என்று பார்க்கும்போது இரண்டு பேரும் ஸமம், இணைந்து செயல் புரிகிறவர்கள் என்று அபிப்ராயம் கொடுக்காததால் இன்னொரு விதமாகச் சொல்லியிருக்கிறது. அதாவது ஒன்று மத்தியிலிருப்பது, மற்றது சுற்றியிருப்பது என்பதற்குப் பதில் இரண்டும் பேர் பாதி, பேர் பாதி என்று சொல்லியிருக்கிறது. அதுதான் அர்த்தநாரீச்வர ஸ்வரூபம் — வலது பக்கம் பாஸிடிவ் ஸ்வாமி, இடது பக்கம் நெகடிவ் அம்பாள். இப்படிச் சொல்வதிலும் புஷ்டியான காரணம் தெரிகிறது. என்னவென்றால், இடது பக்கம்தானே ஹ்ருதயம் இருக்கிறது? தேஹம் பூராவுக்குமே அதுதான் சக்தி தருகிறது. அது ஸரியாக வேலை செய்யாவிட்டால் வலது பக்கமும் ஒன்றும் பண்ண முடியாது – ”ந கலு குசல ஸ்பந்திதுமபி” தான்!

இதில் ஒரு ஸ்வாரஸ்யம் என்னவென்றால், இடது பக்கமுள்ள ஹ்ருதயந்தான் தேஹம் பூராவுக்கும் சக்தி கொடுக்கிறது என்றாலும், ஒரு தேஹத்தில் இடது பக்கத்தை விடவும் வலது பக்கம்தான் ஜாஸ்தி பலத்தோடு, ‘பவ’ரோடு கார்யத்துக்கு உதவுவதாக இருக்கிறது. வாகாக வேலை செய்ய வலது பக்கம்தான் உகந்ததாக இருக்கிறது. வலது கையால் செய்ய முடிகிற மாதிரி இடதால் முடியாது. நொண்டி ‘ப்ளே’யில் கூட வலது காலைத்தான் பலத்துக்காக ஊன்றிக் கொள்வது! நடராஜாவே ‘இடதுகால் உதவாமல்‘ வலது காலை மட்டுமே ஊன்றிக் கொண்டிருப்பதாகப் பாடி வைத்திருக்கிறார்கள்1!

இதிலேயே அம்பாள்தான் சக்தி தருபவள் என்பதைத் தெரிவிப்பதாகவும் ஒரு அம்சமிருக்கிறது. சரீரத்தின் வலது-இடது பக்க வியாபாரங்களை எது எது நடத்தி கன்ட்ரோல் செய்கிறது என்று பார்த்தோமானால், வலது பக்க வியாபாரத்தை மூளையின் இடது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும், இடது பக்க வியாபாரத்தை மூளையின் வலது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும் தெரிகிறது. அதாவது ஜாஸ்தி சக்திகரமாகக் கார்யம் பண்ணும் நம்முடைய சரீரத்தின் சிவ ஸைடுக்கு அப்படி சக்தி கொடுத்து கன்ட்ரோல் பண்ணுவது மூளையின் சக்தி ஸைடே என்றாகிறது!

இதில்தான் அம்பாளுடைய பாதிவ்ரத்ய [கற்பு நெறி] அழகு இருக்கிறது. அவள்தான் பதிக்கும் சக்தியாயிருக்கிறாளென்றாலும், தன்னைவிடவும் அவரையே சக்தராகக் காட்டுகிறாள். அவருடைய ப்ரளய தாண்டவமென்றால் அகிலாண்டங்களெல்லாம் கிடுகிடுகிடுவென்று நடுங்கிப் பொடித்துப் போகும்படி அப்படி ஒரு சக்தி! ப்ரளய தாண்டவந்தான் என்றில்லை. ஆனந்தத் தாண்டவம் செய்வதையே ‘அஷ்ட திசையும் கிடுகிடென்று‘ என்று கோபாலக்ருஷ்ண பாரதி பாடியிருக்கிறார்!2 அவரே நேரே செய்ய வேண்டுமென்றில்லை — அவருடைய ஜடையை பூமியிலடித்து ஒரு வீரபத்ரர் புறபட்டால் போதும், புறப்பட்ட ஆஸாமி காட்டும் சக்தியைப் பார்த்தே, இன்றைக்கும் புராணத்தில் கேட்டே, நடுங்கும்படி இருக்கிறது! ஒரு அறை விட்டாரானால் ஸூர்யனின் பல்லெல்லாம் உதிர்ந்து போகிறது! பரமேச்வரன் ஒரு சிரிப்புச் சிரித்தாலே எத்தனையோ ‘ஹிரோஷிமா பாமு’க்கு மேலே சக்தி வெளிப்பட்டு த்ரிபுரங்கள் பஸ்மமாகின்றன! பதிக்கு அப்பேர்ப்பட்ட சக்தியை அம்பிகை தருகிறாள்!

‘சக்தி என்ற பெயரே பெண் தெய்வத்துடையதாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது பெண்களை ‘அபலா’, ‘மெல்லியல்’ என்று சொல்லி ஆண்கள் அடக்கி வைப்பது அக்ரமம்’ என்கிறவர்கள் இதைக் கவனிக்க வேண்டும். சக்தி என்று பெண்பால் பேர் கொடுத்த அதே சாஸ்திரங்கள் தான் பராசக்தி பரமேச்வரனுக்கு அதிக சக்தி தந்து, அவர் அடக்கி வைத்து இவள் அடங்கினாள் என்றில்லாமல், தானே அடங்கியிருந்து அப்படியிருப்பதுதான் பெண்களுக்கு அழகு என்று காட்டுவதையும் சொல்கின்றன. சிதம்பரத்தில் பார்த்தால் தெரியும். முன்னேயே சொன்னாற்போல் பஞ்ச க்ருத்யம் அம்பாளுக்கானதுதான். அதையே அங்கே அவள் நடராஜாவுக்குக் கொடுத்துவிட்டு, தான் பரம சாந்தையாக இருக்கிற இடம் தெரியாமல் இருப்பாள்.

ஒரே சரீரத்தில் வலதில் பதி, இடதில் தான் என்று இருக்கும்போது வலதுக்கே அதிக சக்தி தருகிறாள் என்றேன். வலது பக்கத்தை தக்ஷிண பாகம் என்றும், இடது பாகத்தை வாம பாகம் என்றும் சொல்வது. ‘தக்ஷிணம்’ என்றால் திறமையோடு கூடியது. பொருத்தமாக வலது பக்கத்திற்குப் அப்படிப் பெயர் இருக்கிறது. ‘வாமம்’ என்றால் அழகாக இருப்பது. அழகியாக, ஸுந்தரியாக அம்பாள் இருப்பதே அவளுக்கு ஸாரபூதம் என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’ பண்ணியிருப்பதற்கேற்க அழகுப் பிரதானமான வாம பாகம் அவளுடையதாக இருக்கிறது. சக்தி என்றே இருப்பவள் சக்தியைப் பதிக்கு அதிகம் தந்துவிட்டு, தான் முக்யமாக ஸுந்தரமாக நிற்கிறாள்.

அவர் அசையாதவர், இவள்தான் அசைக்கிறவள் என்பதற்கு ஓரளவு மாறாக இது [தக்ஷிணம், வாமம் என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைகள்] இருக்கிறதென்றால், தமிழிலும் இங்கிலீஷிலும் அடியோடு மாறாக இருக்கிறது. வலம்-இடம் என்பதில் ‘வலம்’ என்றாலே ‘பலம்’ தான்! ‘இடம்’ என்பதோ இருப்பாக இருக்கிற ஸ்தானம், ஸ்டேஷன். ‘ஸ்டேஷனரி’ என்றாலே அசையாமல் இருப்பது என்று தான் அர்த்தம்! இங்கிலீஷில் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. ‘லெஃபட்’ என்பது ‘பாரலைஸ்’ ஆகி ஒன்றுமே ஒன்றுமே செயலில்லாமலிருப்பது என்ற அர்த்தமுள்ள வேர்ச் சொல்லிலிருந்து வந்தது என்றும், அது ‘வீக்னெஸ்’ஸைக் குறிப்பது என்றும் சொல்கிறார்கள். ‘ரைட்’ என்பது ‘ஸ்ட்ரெய்ட்’ ஸம்பந்தப்பட்டது என்றும் நேராக, செங்குத்தாக இருப்பது என்று அர்த்தம் என்றும் சொல்கிறார்கள். ‘ரைட் ஆங்கிள்’ என்கிறபோது இந்த அர்த்தம் தெரிகிறது. அதில் கீழ்க்கோட்டுக்கு 90 டிகிரியில் ஒரு செங்குத்து கோடு நிற்கிறது. ஒருத்தனுக்கு பலம், சக்தி இருந்தால்தானே நேராக ஜோராக நிற்க முடியும்? சக்தி போதாவிட்டால் சுருண்டு படுத்து விடுகிறோம். பலம் குறைந்தபோது முதுகு கூனிப் போகிறது. நேராக நிற்பது பலசாலிகளின் அடையாளம். தேஹ சக்தி, மனோ சக்தி இரண்டையும் இணைத்து அபிவிருத்தி செய்வதற்காக முறைப்படி யோகாஸனம் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் நேராக நிமிர்ந்து நிற்கத்தான் கற்றுக் கொடுப்பார்கள். அதற்கு உத்தானாஸனம் என்று பெயர். ஆகையால் ‘ரைட்’ என்றால் சக்தி, ‘லெஃப்ட்’ என்றால் செயலில்லாமல் கிடப்பது என்பதாக அம்பாள்-ஸ்வாமி தத்வங்களுக்கு நேரெதிராக இருக்கிறது! அம்பாள் தன் சக்தியையெல்லாம் பதிக்குக் கொடுத்துவிட்டு, தனக்கென்று செயலில்லாமல் அவனிடம் சரணாகதி பண்ணிவிட்ட மஹா பதிவ்ரதையாக இருப்பதைச் சொல்கிற மாதிரி!

லெஃபட், ரைட்டின் ரூட் மீனிங் இப்படியிருந்தாலும் பாலிடிக்ஸில் பார்த்தால் லெஃப்டிஸ்ட் — இடது சாரி — கட்சிகள்தான் ஒரே புரட்சி பண்ணிக் கொண்டிருப்பதாகவும், ரைட்டிஸ்ட் — வலதுசாரி — கட்சிகள், ‘இருக்கிற படி இருக்கட்டும்’ என்று கன்ஸர்வேடிவாக சாந்த வழியில் போவதாகவும் இருக்கிறது! இங்கே வலப் பக்கம் சிவ சாந்தம், இடப் பக்கம் சக்தியின் கார்யத் துடிப்பு என்பது பொருத்தமாக இருக்கிறது!

தத்வார்த்தம், கவி மரபு, ஸயன்ஸ் ஆகியவற்றோடு பாலிடிக்ஸையும் கொண்டு வந்துவிட்டேன்! மனஸில் விஷயங்களை ஆழமாகப் பதிப்பதற்கு இப்படிப் பல விதத்திலும் அர்த்த பலம் கொடுத்தால்தான் முடிகிறது!

வலது-இடது விஷயமாக இன்னொரு ஸமாசாரம். பிம்பத்தில் வலதாக இருப்பது ப்ரதி பிம்பத்தில் இடதாகி விடுகிறது; அதே மாதிரி இதில் இடது அதில் வலதாகி விடுகிறது. நிர்குண ப்ரஹ்மம் சைதன்யம் என்ற அத்வைதமான த்தவம் மாயைக் கண்ணாடியில் பிரதிபிம்பிக்கும்போது த்வைத லோகத்தை நிர்வாஹம் செய்யும் ஸகுண ப்ரம்மமாகிறது என்று அத்வைத சாஸ்திரங்களில் ஒரு கொள்கை உண்டு. அதாவது சிவனேதான் மாயைக் கண்ணாடியில் தெரியும்போது அம்பாளாகிறார்! அந்த மாயை என்ன என்று கேட்டால் அத்வைதத்திலே, ‘என்ன என்று கேட்காதே! ஏனென்றால் அது என்னவென்று சொல்லவே முடியாது. அதுதான் மாயம் பண்ணுவதாச்சே! நாம் அதை என்னவென்று புரிந்து கொள்ள விடுமா?’ என்று முடித்து விடுவார்கள். சாக்தத்தில், ‘அந்த மாயையும் அம்பாள்தான், அம்பாளுடைய ஒரு அம்சம்தான்’ என்று சொல்லியிருக்கிறது. முன்னேயே சொன்னேன்; சாக்தத்தில், சிவனை ஜீவனாக வெளிப்படுத்துகிற கட்டத்தில்தான் மாயை வருகிறது என்று சொன்னேன். ஜீவனுக்குத் தான் சிவனே என்பது தெரியாமல் மயக்கி வைத்திருப்பதுதான் மாயை. இருக்கிற சாச்வத வஸ்துவான சிவனை ஜீவனுக்குத் தெரியாதபடியும், இல்லாமல் அழிந்து போகிற வஸ்துக்களே இருப்பதாகத் ஜீவனுக்குத் தெரியும்படியும் செய்வதுதான் மாயாசக்தியின் வேலை. இங்கே பிம்பம்-பிரதிபிம்பம் என்பது மறுபடி பாஸிடிவ்-நெகடிவில் கொண்டு விடுகிறது. ஆனால் முந்தி சொன்னது எலெக்ட்ரிஸிடியின் பாஸிடிவ்-நெகடிவ். இப்போது சொல்லப்போவது ஃபோட்டோக்ரஃபியின் பாஸிடிவ்-நெகடிவ். ஃபோடோவின் பாஸிடிவில் வெளிச்சம் வெளிச்சமாகவும், இருட்டு இருட்டாகவும் உள்ளபடி இருக்கும். நெகடிவில் வெளிச்சம் இருட்டாகவும், இருட்டு வெளிச்சமாகவும் இருக்கும். அதுதான் இருப்பது இல்லாததாகவும், இல்லாதது இருப்பதாகவும் தெரிகிற அஞ்ஞானம்; மாயையின் கார்யம்! இப்போது நாம் இந்த அஞ்ஞானப் புதைச் சேற்றுக் குழியில்தான் அழுந்திக் கிடப்பதால் இதற்கும் அம்பாள்தானே காரணமென்பதால் அவளை முக்யமாக மாயை, மாயை என்றே சொல்கிறோம்.

ஆனால் ஒன்றை மறக்கப்படாது, மறக்கவேபடாது. அதனால்தான் ஏற்கெனவே சொன்னாலும் மறுபடி சொல்கிறேன். இல்லாததை இருப்பதாகத் காட்டி மாயம் பண்ணும் அம்பாள் ஒருநாள் பரம கருணையோடு அதை இல்லாததாகவே பண்ணி, இருக்கிற ஒன்றிலேயே நம்மை ஒன்றாகச் சேர்க்கவும் செயவாள். அவளே கதி என்று அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு — மானஸிகமாகத்தான், விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு — விமோசனம் வேண்டினால் நிச்சயம் அப்படி அநுக்ரஹிப்பாள்.

இப்படிச் சொல்லிக்கொண்டு போகிறபோது பாஸிடிவ், நெகடிவ் விஷயமாக இன்னொரு பாயின்ட் அகப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளுக்கே என்ன அர்த்தம்? ‘பாஸிடிவ்’ என்றால் இருப்பது; ‘யெஸ்’ என்பது. ‘நெகடிவ்’ என்றால் இல்லாதது; ‘நோ’ என்பது. சக்தி லீலை எத்தனை நன்றாயிருந்தாலும் சாச்வத ஸத்யமாக இருப்பது இல்லை. அதனால் அவளையே நெகடிவ் என்று சொல்ல ந்யாயமுண்டு. சிவ சாந்தந்தான் சாச்வத ஸத்யமாக என்றும் இருப்பது. ஆகையினால் பாஸிடிவ். ஆனால் இப்படி நெகடிவ்களுக்கெல்லாம் ஆதாரபூதமாக இருக்கப்பட்டவளே நம்மை அந்தப் பாஸிடிவில் ஐக்யப்படுத்துபவளாகவும் இருக்கிறாள்…..

எல்லாருக்கும் ஏற்காததாக இருக்கும் ஸமாசாரங்களிலும் ஸயன்ஸ், தத்வார்த்தம், கவி மரபு முதலியவற்றைக் காட்டி ஏற்கும்படியாகப் பண்ணக்கூடியவற்றை அப்படி விளக்கலாம். ஆனாலும் பொது ஸபையில் சொல்வதற்கேயில்லை என்கிற மந்த்ர, தந்த்ர, யந்த்ர விஷயங்களையும், சில கவிதா வர்ணனைகளையும் அடியோடு தொடாமல் விட்டுவிட வேண்டும். உசந்த நிலைகளில் நம்மைச் சேர்ப்பதற்கென்றே ஏற்பட்ட ஸ்தோத்ரத்துக்கு அர்த்தம் சொல்லப் போய், கேட்பவர்களுக்கு ப்ரயோஜனமில்லாத விஷயங்களையோ, அவர்களுக்கு விபரீத பலன் உண்டாக்குகிற விஷயங்களையோ, அவர்கள் மனஸில் விகல்பம் தோன்றும்படியான விஷயங்களையோ சொல்வது பெரிய குற்றம்; அம்பாளுக்கும் ஆசார்யாளுக்கும் பண்ணும் அபசாரம்.


1 பாபவிநாச முதலியாரின் ‘நடமாடித் திரிந்த’ எனும் பாடல்.

2 ‘நடனமாடினார்’ எனும் பாடல்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பொதுச்சபையில் விளக்கும் முறை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  முதல் ச்லோகத்தின் பாடம்
Next