”உன்னுடன் சேர்ந்தில்லாவிட்டால் சிவன் அசையக் கூட முடியுமா?” என்று ஆசார்யாள் ஆரம்பிக்கும் போதே கேட்கிறதற்கு உள்ளர்த்தமாக, நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உபதேசமாக, பாடமாக, எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ”உன்னுடைய க்ருபை இல்லாவிட்டால் நாங்கள் அந்த அசையாத நிலையை அடையமுடியுமா?” என்று நம் சார்பில் அவர் கேட்பதாகத்தான் தோன்றுகிறது. அசையாததை அசைத்த மஹாசக்தி அவள் – பரப்ரஹ்மத்துக்குத் தான் இருப்பதாகத் தெரிந்த உணர்ச்சியான அசைவிலிருந்து அவள் லீலை ஆரம்பித்தது!
முதல் ச்லோகம் காட்டுகிறபடி, பரப்ரஹ்மம் தன்னைத் தானே அறிந்துகொள்ளும் சின்மயமான ஆதி சலனமே அம்பாளால்தான் நடக்கிறது. அப்புறம் சலனத்துக்கு மேல் சலனமாக ஒரேயடியாக நடந்துதான் நம்முடைய நித்ய சலன வாழ்க்கையில் வந்து முடிந்திருக்கிறது! பிரம்மத்திலிருந்து ஜீவ-ஜகத்துக்கள் வரையிலான இந்தச் சலனங்களை அவரோஹண க்ரமத்தில், அதாவது படிப்படியாகக் கீழ் நிலைகளுக்கு இறக்கி 36 தத்வம், 24 தத்வம் என்றெல்லாம் ஒவ்வொரு சாஸ்திரத்தில் ஒருவிதமாகச் சொல்லியிருக்கிறது. இந்த அவரோஹணத்தை Evolution என்கிறார்கள். டார்வின் சொன்னது இல்லை. அவன் மேலே மேலே உயர்ந்து பரிணாமம் பெறுவதைச் சொல்கிறான். இதுவோ உச்சாணியான பிரம்ம நிலையிலிருந்து தாழ்ந்து தாழ்ந்து நாமாயிருக்கும் ஸமாசாரம். பிரம்ம தத்வம் மேலே மேலே வெளிமுகமாகி அதிலிருந்து மற்ற தத்வங்கள் ‘இவால்வ்’ ஆவதால், அதாவது உண்டாவதாலேயே இதை ‘இவல்யூஷன்’ என்பது. இப்போது ஜீவ தத்வமான நாம் பிரம்ம தத்வமாகி அந்த நம் நிஜ நிலையை அடைவதே நமக்கு மோக்ஷம். இப்படி வெளிமுகப்பட்ட எல்லாமும் உள்முகப் படுவது ஆரோஹணம். ப்ரம்மத்திலிருந்து ஜீவன் – அவரோ ஹணம்; ஜீவனிலிருந்து பிரம்மம் – ஆரோஹணம். ஆரோஹணம் ஏறு வரிசை – ஸரிகமபதநி என்று ஏறுவது. அவரோஹணம் இறங்கு வரிசையில் ஸநிதபமகரி. மேல் ‘ஸ’வாயிருந்த ப்ரஹ்மம் இறங்கி இறங்கி ‘ரி’ ஆனது தான் ஜீவன். இவன் மோக்ஷமடைவதற்கு இந்த ‘ரி’ யிலிருந்து கமபதநி வழியாக ஏறி ‘ஸ’ ஆகணும். ஏறுவது, இறங்குவது என்பதை விட விரிவது, அடங்குவது என்பது இன்னும் ஸரியாகத் தோன்றுகிறது. ப்ரஹ்மம் வெளிமுகப்பட்டுப் பட்டு, அதாவது விரிந்து விரிந்து ஜீவ ஜகத்துக்களாவதை இவல்யூஷன் என்கிறார்கள். விரிந்து உண்டான ஜீவன் உள்முகப்பட்டுப் பட்டுக் குவிந்து பிரம்மமாக அடங்க வேண்டும். இதை ‘இன்வல்யூஷன்’ (Involution) என்று அழகாகச் சொல்கிறார்கள் – விரிந்தது சுருங்கிச் சுருங்கி involve ஆகிக் கொண்டேபோய் மூலதார மையத்திலேயே முடிந்துவிடுவது. இதற்கு நம் பிரயாஸை அவசியம் வேண்டுந்தான் என்றாலும் அது மட்டும் போதாது. அப்பேர்ப்பட்ட பிரம்ம வஸ்து இந்த நாமாக இவால்வ் ஆயிற்றென்றால் அது நாமாகப் பண்ணிக் கொள்ளாமல், அவள் லீலா நிமித்தமாகப் பண்ணி ஏற்பட்டதுதானே? அப்படியிருக்கும்போது நாமே பிரயாஸைப்பட்டு மாத்திரம் எப்படி பிரம்மமாக இன்வால்வ் ஆக முடியும்? ஜீவர்களை வைத்து நாடகம் – லீலை – செய்வதில் அவள் நமக்கும் பிரயாஸை பண்ணுவதாகப் பார்ட் கொடுத்திருப்பது வாஸ்வந்தானென்றாலும் நாமாகவே [பிரம்மமாக ஆகிற] முக்தியை ஸாதித்துக் கொண்டுவிட முடியாது. அவள் அநுக்ரஹத்தினால்தான் அதை ஸம்பாதித்துக் கொள்ள முடியும். எந்த சக்தி வெளியிலே பிடித்துத் தள்ளிற்றோ அதுவேதான் மறுபடி உள்ளுக்குள்ளே இழுத்துக் கொண்டும் ஆக வேண்டும். ஸ்விட்ச் வேலை பண்ணித்தான் ஃபான் சுற்ற ஆரம்பிக்கிறதென்றால், அப்புறம் அந்த ஃபான் தானாகவே நிற்க முடியுமா? வேறு யாராவது பிடித்துத்தான் அதை நிறுத்தி வைக்க முடியுமா? அந்த ஸ்விட்சே வேலை பண்ணித்தானே அதை நிறுத்தவும் வேண்டும்?
சிவனின் இவல்யூஷனுக்கு அம்பாள்தான் காரணம் என்று ஆசார்யாள் ஆரம்பித்திருப்பதிலேயே அதற்கு மறு பக்கமாக – ஒரு காசு இருந்தால் அதற்கு இரண்டு பக்கம் இருக்கிற மாதிரி, மறுபக்கமாக – ஜீவன் சிவனாக இன்வல்யூஷன் பெறவும் அவள்தான் காரணம்; அதற்காக அவள் கிருபையையே நாம் வேண்டி வேண்டிப் பெற வேண்டும் என்று நம் எல்லோருக்கும் அவர் உபதேசிப்பதாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் நாம் பிரயாஸைப்படுவதற்கும் இடம் கொடுத்திருக்கிறாள் என்றேன். என்ன பிரயாஸை, எப்படிப் படுவது என்றால் கர்மம், பக்தி, ஞானம், யோகம் என்றெல்லாம் உள்ள பலவித பிரயாஸைகள்தான். அவற்றிலே ரொம்பவும் ஸெளக்யமாக இருக்கப்பட்ட பக்தி பாராயண வழியைத் தான் ஸெளந்தர்யலஹரியில் காட்டிக் கொடுக்கிறார்.
எட்டாத தத்வத்தை நம் மனஸுக்கு எட்டும்படியான ஒரு ரொம்பவும் அன்பான ரூபத்தில் பாவித்தாலே போதும், அந்தத் தத்வம் நாம் எட்டிப் பிடிக்கும்படி இறங்கி வந்து விடும். அப்படி பாவிக்கிறதுதான் பக்தி. அந்த பக்தி ரஸத்தை ப்ரேமையின் பலவிதமான மாதுர்யங்களில் ஒன்றான வாத்ஸல்ய ரஸமாக்கிக் காவிய ரஸத்தில் கலந்து ஆசார்யாள் இந்த ஸ்தோத்ரத்தைக் கொடுத்திருக்கிறார். வாத்ஸல்யப் பிரேமை பொழிகிறவள் மாதா என்றால், அப்போது பிதாவும் இருக்கவேண்டுமே என்பதால் ”சிவ சக்த்யா” என்று எடுத்த எடுப்பிலே அப்பா-அம்மா ஜோடியை தர்சனம் பண்ணுவித்திருக்கிறார். அப்படிப் பண்ணும்போதே அப்பாவுக்கும் சக்தி தருபவளாக அம்மாவே இருக்கிறாளென்று அவளுடைய உத்கர்ஷத்தையும் காட்டியிருக்கிறார்.