ஸ்தோத்திர மூர்த்தியைக் குறிப்பாலுணர்த்தல் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆனால் இந்த ஹஸ்த ஸமாசாரமே அம்பாள் தவிர மற்ற ஸ்வாமிகளுக்கானதுதான் என்று ஆசார்யாள் இந்த ச்லோகத்தில் சொல்கிறார். “நீ இப்படி வராபய முத்ரைகளை ஹஸ்தத்தால் காட்டுவதேயில்லை: த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா”.

லலிதா த்ரிபுரஸுந்தரியாக அம்பாள் இருக்கும் ரூபத்தை மனஸில் நினைத்துக்கொண்டே அவர் இப்படிச் சொல்வது. அவள்தானே இந்த ஸ்தோத்ரத்திற்கு விஷயமானவள்?

சிவன் அசைவதும் அவளாலேதான் என்றதால் எல்லா ஸ்வாமிகளுக்கும் இருக்கிற எல்லா சக்தியும் அவளிடமிருந்து வந்ததுதான் என்றாகிறது. அப்படியிருக்கும்போது அவர்களெல்லாம் வராபயம் கொடுக்கிறார்களென்றால் அவர்களுக்கு அந்த சக்தி வந்திருப்பதும் அவளிடமிருந்துதான். அப்போது அவள்தான் உச்சமான வராபய தாயகியாயிருக்க வேண்டும் என்றுதானே ஆகிறது? மற்ற ஸ்வாமிகள் கையால் செய்யும் அந்தக் கார்யத்தை அவள் அலக்ஷ்யமாக, லேசாகக் காலாலேயே பண்ணி விடுகிறாள். ஹஸ்த முத்ரை காட்டிக்கொண்டு பண்ணவில்லை. ஆனால் இந்த அம்பாளே புவநேச்வரியாக இருக்கும்போது அவளுக்கு வராபய ஹஸ்தங்கள் உண்டு. த்ரிபுரஸுந்தரியேகூட குழந்தையம்பாளாக பாலா என்று தனக்குத் தானே புத்ரியாக ஆனபோது அவளுக்கு வர ஹஸ்தம், அபய ஹஸ்தம் உண்டு.

த்வத்-அந்ய: பாணிப்யாம் அபய வரதோ தைவதகண:” உனக்கு அந்நியமான மற்ற தைவதகணங்கள் [தெய்வக் கூட்டம்] வராபய ஹஸ்தங்களோடு இருக்கின்றன’ என்று ஆசார்யாள் சொல்லும்போது பாக்கி எல்லா ஸ்வாமிகளுக்குமே அந்த இரண்டு ஹஸ்தங்கள் உண்டு என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது. மற்ற ஸ்வாமிகளிலும் அந்த இரண்டு ஹஸ்தமில்லாமல் எத்தனையோ இருக்கின்றன. எந்த முக்கு முகனை திரும்பினாலும் நாம் பார்க்கிற விக்நேச்வர மூர்த்திக்கு வராபயம் இருக்கிறதா? இல்லை. நடராஜாவுக்கு? அபயம் இருக்கிறதே தவிர வரம் இல்லை. பெரும்பாலான ஆலயங்களில் நாம் பார்க்கும் விஷ்ணு துர்க்கைக்கும் அபயந்தான் இருக்கிறது. மீனாக்ஷிக்கு இரண்டும் இல்லை. மஹாவிஷ்ணுவைப் பார்த்தாலும் சங்க சக்ர கதா பத்மங்களோடு இருக்கிறாரே தவிர வரம், அபயம் இரண்டும் இல்லை. வரதராஜா என்றே பெயர் வைத்துக்கொண்டு காஞ்சீபுரத்தில் இருக்கிறவருக்கு அபயஹஸ்தந்தான் இருக்கிறது; வரஹஸ்தமில்லை! அந்தக் கையால் கதையைப் பிடித்துக் கொண்டிருப்பார். மஹாலக்ஷ்மிதான் எங்கே பார்த்தாலும் வராபய ஹஸ்தையாக இருக்கிறாள். ஸரஸ்வதிக்கு இரண்டுமே இல்லை. ஸாதாரணமாக துர்கை — ஸுப்ரஹ்மண்ய மூர்த்தங்களில் சிலதுகூட– வலது பக்கம் அபய ஹஸ்தமும், அதற்கு நேரான இடது ஹஸ்தம் தொடையில் ‘ஊரு ஹஸ்தம்’ என்றும் இருக்கின்றனவென்றால் வேங்கடரமண ஸ்வாமியோ வலது ஹஸ்தத்தில் வரமுத்ரையும் அதற்கு நேர் இடது ஹஸ்தம் ஊருவிலுமாக இருக்கிறார்.

லலிதா த்ரபுரஸுந்தரிக்கு வராபயம் கிடையாது. அதற்குப் பதில் இக்ஷுதநுஸும் [கரும்பு வில்லும்] புஷ்ப பாணமும் இருக்கும். ஆனாலும் பின் ச்லோகமொன்றில்1 ஆசார்யாள் இந்த அம்பாளின் ஒரு கை மட்டுமில்லாமல் நாலுமே அபய ப்ரதமானது என்ற அபிப்ராயத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆதியில் ப்ரம்மாவுக்கும் பரமசிவன் மாதிரி ஐந்து சிரஸ் இருந்தது. அப்புறம் அவர் ஒரு பிசகு பண்ணிவிட்டதால் சிவன் அவருடைய சிரஸுகளில் ஒன்றைக் கிள்ளிப் போட்டுவிட்டார். பாக்கி நான்கு சிரஸுகளுக்கு ஆபத்து வராமல் ஒரே காலத்தில் ஒவ்வொரு சிரஸுக்கு அம்பாளின் ஒவ்வொரு ஹஸ்தம் அபயம் தரும் என்ற நம்பிக்கையோடு ப்ரம்மா அம்பாளுடைய சதுர் புஜங்களை ஸ்தோத்ரம் பண்ணுகிறாரென்று அங்கே [ஆசார்யாள்] சொல்லியிருக்கிறார். பதிக்கு மாறாகத் தான் பண்ணும் போது, அதைக் காலாலேயும் பண்ணினால் அபசாரமாகிவிடுமென்று அப்போது மட்டும் கையால் அபய தானம் செய்வாள் போலிருக்கிறது!……

ஆகக்கூடி, அம்பாளுக்கே த்ரிபுஸுந்தரியைத் தவிர மற்ற ரூபங்களில் சிலதில் அபய வரத ஹஸ்தமும் உண்டு; அம்பாளைத் தவிர மற்ற ஸ்வாமிகளில் பல பேருக்கு அந்த இரண்டு ஹஸ்தங்கள் இல்லாமலும் இருக்கிறது. இருந்தாலும் கவிக்கு இருக்கிற ஸ்வாதந்திரியத்தால், எடுத்துக் கொண்ட விஷயத்திற்குத் தனி மஹிமை காட்ட வேண்டும் என்ற அபிப்ராயத்தில், ”உன்னைத் தவிர மற்ற தைவத கணங்கள் வராபய முத்ரை காட்டுகிறார்கள்; நீதான் ஒருபோதும் அப்படிப் காட்டிப் பிரகடனம் பண்ணாதவள்” என்று கொஞ்சம் exaggeration-ஆகவே [மிகையாகவே] சொல்லியிருக்கிறார்.

முத்ரை காட்டுவதை ‘அபிநயம்’ என்று சொல்லியிருக்கிறார்: ‘வராபீத்-யபிநயா‘. நாட்ய சாஸ்திரத்தில் அபிநயங்களைச் சொல்லும்போது மந்திர சாஸ்திரத்தில் வரும் முத்ரைகளையேதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளேயிருக்கும் பாவத்தை வெளியிலே முகக் குறிப்பாலோ, கையை காலை ஆட்டியோ தெரிவிப்பது ‘அபிநயம்’. அதில் கையால், முக்யமாகக் கை விரல்களால், பிடிக்கிற அபிநயம் ‘முத்ரை’.

முன்னாடி வந்துள்ள மூன்று ச்லோகங்களில் அம்பாளுடைய அநேக ரூப பேதங்களில் இந்த ஸ்தோத்ரம் யாரைக் குறித்தது என்று வெளிப்படச் சொல்லவில்லை. டைட்டிலைப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி ‘ஸெளந்தர்ய லஹரி’, ‘ஆனந்த லஹரி’ என்றே இருக்கிறது. இங்கே [நான்காவது ச்லோகத்தில்] தான் கொஞ்சம் clue கொடுக்கிற மாதிரி வராபயம் இல்லாத மூர்த்தி என்ற அளவுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் என்ன இல்லை என்று சொல்லியிருக்கிறாரே தவிர என்ன இருக்கிறதென்று – அவளுக்கு எத்தனை ஹஸ்தங்கள்? அவற்றில் என்னென்ன இருக்கிறது? என்று – சொல்லவில்லை. அதனால் பல தினுஸாக ஊஹம் பண்ண இடம் கொடுக்கிறது. அடுத்த இரண்டு ச்லோகங்களிலும் ரஹஸ்யத்தை உடைத்து விடாமல், ஆனாலும் மேலே மேலே ‘க்ளூ’ கொடுக்கிறார். அதற்கும் அப்புறந்தான் [ஏழாவது ச்லோகத்தில்] இன்ன மூர்த்தி என்று த்யான ச்லோகம் மாதிரி லக்ஷணங்களை மடமடவென்று வர்ணித்து ஸ்ரீ வித்யா தந்த்ரத்திற்கு அதிதேவதையாயிருக்கப்பட்ட லலிதாம்பிகை — த்ரிபுர ஸுந்தரி — தான் ஸ்தோத்ர தேவதை என்று ஸ்வச்சமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்போதுங்கூட அந்தப் பேரைச் சொல்லவில்லை. ஸ்தோத்ரம் பூராவிலுமே ஒரு இடத்திலேயும் சொல்லவில்லை. எடுத்த எடுப்பிலேயே முழுக்க உடைத்துச் சொல்லாமல் படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே போய்க் கொஞ்சங் கொஞ்சமாகத் திறந்து காட்டி அப்புறம் அப்படியே அவிழ்த்துக் கொட்டிவிடும் கவி ‘டெக்னிக்’கை ஆசார்யாள் அழகாகப் பின்பற்றியிருக்கிறார்.


1 ச்லோ 70

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is கையால் கொடுக்காத வர, அபயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸ்தோத்திர மூர்த்தியைக் குறிப்பாலுணர்த்தல்
Next