காமமும் அநுக்ரஹமாகுமா? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அடுத்த ச்லோகத்தில் [ஐந்தாவது ச்லோகத்தில்] முதல் பாதியில், அம்பாளைப் பூஜை பண்ணித்தான் மஹாவிஷ்ணு திவ்ய மோஹனமான மோஹினி ஸ்வரூபம் பெற்றுப் பரமசிவனின் த்ருட மனஸையும் கலக்கித் தன்னிடம் ப்ரேமை கொள்ளும்படிப் பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது. அம்ருத மதன காலத்தில் பகவான் [விஷ்ணு] மோஹினி ரூபமெடுத்து அஸுரர்களை மயக்கி, அவர்களுக்கு அம்ருதம் போடாமலே தன்னுடைய ரூப லாவண்யத்திலும் பேச்சு ஸாமர்த்தியத்திலும் மயங்கியிருக்கும்படிப் பண்ணி தேவர்களுக்கு மட்டுமே போட்டார் என்ற கதை தெரிந்திருக்கலாம். அப்புறம் மோஹினியிடம் பரமேச்வரனே மோஹித்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்; அப்போது மோஹினிக்குப் பிறந்த குழந்தைதான் ஐயப்ப சாஸ்தா என்று ஒரு கதை சொல்வதுண்டு. அம்மா-அப்பா பேரை வைத்து அவரை ஹரி-ஹரபுத்ரன் என்றும் சொல்கிறது. ‘சிவபாதாதி கேசாந்த ஸ்தோத்ர’த்தில் ஆசார்யாள் பிள்ளையாரோடும் ஸுப்ரஹ்மண்யரோடும் சாஸ்தாவையும் மூன்றாவது சிவகுமாரராகச் சொல்லி ஸ்தோத்திரித்திருக்கிறார். ஆசார்யாள் அவதாரம் பண்ணின மலையாள தேசத்தில் தான் ஐயப்ப சாஸ்தாவுக்கு அதிக ப்ரக்யாதி இருந்து வந்திருக்கிறது.

ப்ரஹ்மத்திடம் ஜகத்வியாபார இச்சை தோன்றியதை ச்ருங்காரமாக வைத்தே ப்ரஹ்மத்தையும் ப்ரஹ்ம சக்தியையும் காமேச்வர-காமேச்வரி ஜோடியாகச் சொல்வது என்றேனல்லவா? மஹாவிஷ்ணு மோஹினியாகப் பரமேச்வரனை ச்ருங்காரத்தில் ஈடுபடுத்தியது அம்பாள் ஆராதனையின் பலன்தான் என்று இங்கே சொல்வதால் நம் ஸ்தோத்திரத்திற்குப் பாத்திரமான மூர்த்தி காமேச்வரியாகவே இருக்கலாம் என்ற ‘க்ளூ’ கிடைக்கிறது. வராபய ஹஸ்தங்கள் இல்லாத மூர்த்தி என்று மேல் ச்லோகத்தில் சொன்னது இதற்குப் பக்க பலம் கொடுக்கிறது.

ச்லோகத்தின் பின் பாதி நம் ஊஹம் ஸரிதான் என்று உறுதிப்படுத்துகிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறதென்றால், ”மன்மதனும் உன்னை நமஸ்கரித்து உன் அநுக்ரஹத்தை ஸம்பாதித்துத்தான் ரதியின் கண்கள் மொய்க்கும்படியான — அதாவது, அவள் கண்ணுக்கு மாத்திரம் தெரிகிற — ரூபத்தைப் பெற்று, ஜிதேந்திரியர்களான முனிவர்கள் உள்பட எல்லார் மனஸுக்குள்ளேயும் புகுந்து மோஹத்தை உண்டு பண்ணுகிறான்” என்று சொல்லியிருக்கிறது.

ஈச்வரன் பஸ்மம் பண்ணிய மன்மதனை மறுபடி உயிர்பித்து, பழையபடி பதவியில் அமர்த்தியது காமேச்வரியின் கார்யமேயாகையால் இது நம் ஊஹத்தை உறுதிப்படுத்தப் பெரிய பக்கபலமாகிறது.

காமாதி தோஷங்கள் போகத்தான் நாம் பக்தி பண்ண வேண்டும். அப்படியிருக்கும்போது பக்திக்கு லக்ஷ்யமான தெய்வமே ஞானமூர்த்தியான ஈச்வரன் காமத்தில் விழுவதற்கும், முனிவர்களும் அப்படி மோஹிப்பதற்கும் சக்தி கொடுத்ததாகச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணினால் …? ‘ஆசார்யாள் பேரில் சொல்கிற உசந்த ஸ்துதியாச்சே, [அதில்] குற்றம் கண்டுபிடிக்கலாமா?’ என்று தயக்கமாக இருந்தாலும் அப்படியும் கேள்வி கிளம்பத் தானே செய்கிறது? ப்ரபஞ்சத் தோற்றம் போனால்தான் ஞானம். ஆனால் இங்கேயோ ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி அம்பாளால்தான் என்று ஸ்தோத்ரம்! காமம் போனால் தான் ஞானம். இங்கேயோ காமனுக்கே ‘பவர்’ கொடுத்தவளாக்கும் என்று அம்பாளுக்கு ஸ்தோத்ரம்!’ இப்படி இருக்கலாமா? இப்படித்தான் என்றால் காமமே அநுக்ரஹமா?’ என்று உள்ளே கொஞ்சம் குடையத்தானே செய்கிறது?

இப்படிக் கேட்டால் – எதிரெதிர் சக்திகள் இருக்க வேண்டும். முட்டிக்கொண்டு, மோதிக்கொண்டு, மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும். அந்த எதிரியைப் போராடி ஜயிக்க வேண்டும். உள்ள சண்டையும் கெட்ட சக்திகளோடு போட்டே அப்புறம் ஜயக்கொடி நாட்ட வேண்டும். அதுதான் பெருமை. அதில்தான் ரஸம். எதிர்ப்பே இல்லை, அதுபாட்டுக்கு எல்லாம் ‘ஸ்மூத்’தாகப் போய்க் கொண்டிருப்பது என்றால் நல்ல ஸ்திதியில் இருக்கிற நல்லதுங்கூடத் தெரியாமல் ஒரே ‘போராக’த்தான் ஆகும்! நிழலருமை வெயில் இருந்தால்தான் தெரியும் என்கிறோமல்லவா?

எதிரெதிர் சக்திகளின் பரஸ்பரச் சிண்டுபிடியானது முடிவில் நல்லது ஜயிப்பதற்கே என்று காட்டத்தான் தன் பாட்டில் இருந்து கொண்டிருந்த ப்ரஹ்மத்திற்குள் ப்ரபஞ்சமும், காமாதிகளும் வந்தது. ப்ரஹ்மத்தின் காமத்தினால் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி ஏற்பட்டது. அப்புறம் ஜீவ ப்ரபஞ்சம் வளர்ந்து கொண்டே போவதற்காக ஒவ்வொரு ஜீவனுக்கும் காமம் என்று வைத்தது.

நல்லது கெட்டது என்று எதிரெதிர் சக்திகள் என்பதில் ஒரு பெரிய விசித்ரம் என்னவென்றால் நல்லதிலேயே கெட்ட அம்சமும் இருக்கும்; கெட்டதில் நல்ல அம்சமும் இருக்கும்! அதுகளை ஸூக்ஷ்மமாகப் புரிந்து கொண்டு போராடுவதில்தான் ப்ரபஞ்ச நாடக ரஸம் பூர்ணமாகிறது. காமம், க்ரோதம் தப்பு என்பது ‘ஜெனரலைஸ்ட் ஸ்டேட்மென்ட்’. உள்ளே புகுந்து பார்த்தால் அவற்றிலேயும் நல்லது உண்டு. நல்ல விஷயங்களில் காமம் வேண்டும்; கெட்ட விஷயங்களிடம் க்ரோதம் வேண்டும் – அப்போது அவை தப்பில்லை, அவச்யமானவையே என்றாகிவிடுகிறது. இதே மாதிரி இன்னொரு பக்கம், நல்லதாகத் தெரிகிறவற்றுக்குள்ளும் கெட்டது ஒளிந்து கொண்டிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலே இரண்டு உசந்ந்ந்த விஷயங்கள்: ஸ்வாமி கருணை பண்ணுவது என்று ஒன்று, ஆஸாமி அவரிடம் அப்படியே சரணாகதி பண்ணிவிடுவது என்று ஒன்று. இந்த இரண்டும் ஸ்ருஷ்டி இருந்தால்தான், அந்த ஸ்ருஷ்டியிலே கெட்டவைகளும் இருந்து அவற்றோடு போராட வேண்டியிருந்தால்தான் ஸாத்தியம். அவர் ஸைடில் அவர் பண்ணும் ‘ஹையஸ்ட்’ கருணைதான். நம் ஸைடில் நாம் பண்ணக்கூடிய ‘ஹையஸ்ட்’ சராணாகதிதான். [சிரித்து] நம்மால் ஒன்றும் பண்ணமுடியாதென்று கிடப்பது தான் நாம் பண்ணக்கூடிய சிகரமான கார்யம்! பண்ணிப் பார்த்தால் அந்த நிறைவே பதில் சொல்லும்.

இப்படி இரண்டு. ஸ்ருஷ்டி இல்லாவிட்டாலோ, ஸ்ருஷ்டி இருந்தும் ஜீவர்களைக் காமாதிகள் பிடுங்கி எடுத்து குஸ்திக்கு வராவிட்டாலோ கருணைகாட்ட அம்பாளுக்கு ஏது ஆப்பர்சூனிடி? ஒரு திண்டாட்டமுமில்லை என்று அவாளுவாளும் த்ருப்தர்களாக, ஸ்வஸ்தமாக இருந்துவிட்டால் கருணையை யார் ‘கேர்’ பண்ணப் போகிறார்கள்? எதிர் சக்திகளோடு போராட முடிகிற மட்டும் போராடி, அப்புறம் நம் சக்தியால் ஜயிக்க முடியாது என்று புரிந்து கொண்டு “நீதான்!” என்று கிடக்கும்போதுதான் சரணாகதி என்ற பேரின்பம் கிடைக்கும். அப்போதுதான் அவளும் ரக்ஷணைக்கு ஓடோடி வருவதில் கருணைக்கு முழு ஸ்கோப்பும் கிடைத்து அவளுக்கும் பேரின்பம் கிடைக்கும். அந்த ரக்ஷணை கார்யமாகிறபோது அந்த ஸைடின் கருணையும், இந்த ஸைடின் சரணாகதியும் ஸைட் எல்லாம் எடுப்பட்டுப் போய் ஒரே பேரின்ப ப்ரவாஹமாக ஸங்கமமாகி நிற்கும். ஜயக்கொடி பறக்கும். ஜீவன் ஜயித்தானா, அம்பாள் ஜயித்துக் கொடுத்தாளா என்ற ஆராய்ச்சிகளுக்கே இடமில்லாமல் அப்போது இவனே அவளாக இருப்பான்!

லக்ஷம், கோடிப் பேர் கெட்டதிலேயே போய், கெட்டுப் போய் வீணாகப் போனாலும் பரவாயில்லை. கோடியில் ஒருத்தர் புறப்பட்டு இப்படி ஜயசாலியாகி ஸ்ருஷ்டிக்கு அந்தண்டை போய்விட்டால் அதுவே போதும். ஒரு மரத்தில் உண்டாகிற அத்தனை கொட்டைகளும் மரமாக வேண்டும் என்று உண்டா? ஒரு மநுஷ்யனின் ஜீவ பிந்து அத்தனையும் பிரஜைகளாவதுண்டா? அப்படி, ஜீவ லோகத்தில் கோடியில் ஒருத்தர் பூர்ணத்வம் பெற்றாலும் போதும்தான். அதிலேயே ஸ்ருஷ்டியின் ‘பர்பஸ்’ பூர்த்தியானதாகத்தான் அம்பாள் நினைக்கிறாள்.

வீணாய்ப் போனவர்கள் எல்லாருங்கூட நிரந்தரமாக வீணானவர்களில்லை. Eternal damnation [மீட்சியற்ற நிரந்தர தண்டனை] நம்முடைய மத சாஸ்திரத்தில் இல்லை. மத்வாச்சாரியார்தான் அந்த மாதிரி அபிப்ராயத்தில் சொன்னவர். பயமுறுத்தியாவது நல்லதில் திருப்பவேண்டுமென்று சொன்னதாக வைத்துக்கொள்ளலாம். மஹா பாபிக்கும் உய்வு உண்டு என்பதுதான் பொதுக் கொள்கை. அப்படி யுக யுகாந்தரங்களுக்கு அப்புறமாவது அவள் அத்தனை வீணாகப் போன குழந்தைகளையும் ஸரிப்பண்ணி தன் மடியில் இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் விடமாட்டாள்.

ராஜா யுத்தத்திற்குப் போனானாம். ஒரு ஸாதாரண ப்ரஜையை ஏதோ முக்ய கார்யமாக அங்கே தன் ‘காம்ப்’பில் வந்து பார்க்கச் சொன்னானாம். “தண்டு இறங்கின இடத்திலே தங்களைப் பார்க்க யாரையும் விடமாட்டாளே! முத்ரை மோதிரம் மாதிரி ஏதாவது தரணும்” என்று அந்த ஆள் கேட்டானாம். ராஜாவும் கொடுத்தானாம். பார்த்தால் அது சத்ரு ராஜாவின் முத்ரை மோதிரமாக இருந்ததாம்! அந்த ஆளுக்கு ஒன்றும் புரியவில்லையாம். ராஜாவே சிரித்துவிட்டுப் புரிய வைத்தானாம். “அந்தக் கார்யம், இந்தக் கார்யம் என்று ஏகப்பட்ட பேர் என் ஸொந்த முத்ரை வாங்கிக் கொண்டிருக்கா. அதனாலே அந்த க்யூவே பெரிசாப் போயிடும்! அதிலே நின்னு நீ என்னைப் பிடிக்கிறதுக்குள்ளே அவஸரக் காரியம் ஆறியே போய்விடும்! அதனால்தான் சத்ரு பக்ஷத்து மோதிரம் கொடுத்தேன். இப்படி சிலது அவாளோட சாரர்கள் [ஒற்றர்கள்] கிட்டேயிருந்து பறிமுதல் பண்ணி வெச்சிருக்கோம். அதுலே ஒண்ணு கொடுத்தேன். இதை நீ ஒளிச்சு வெச்சுண்டு என் பாடி-கார்டுகள் கண்ணில் படறமாதிரிப் பதுங்கிண்டு வரதா பாவனை பண்ணினாலே போறும். ‘டக்’னு பிடிச்சு, பரிசோதனை பண்ணி சத்ரு மோதிரத்தைப் பார்த்து, எல்லாருக்கும் முன்னாடி உன்னை எனக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்திடுவா!” என்றானாம்.

அப்படித்தான் அம்பாள் காமம், க்ரோதம் முதலான எதிர்த்தரப்பாகத் தோன்றுகிற முத்ரை மோதிரங்களைக் கொடுத்தே நம்மை அவளிடம் வரும்படிப் பண்ணிக் கொள்கிறாள்! உனக்கு என்ன வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா குந்தியைக் கேட்டாராம். “கஷ்டந்தான் வேண்டும். அதைக் கொடு. அப்போதுதான் உன்னை நினைப்பேன்!” என்று அவள் பதில் சொன்னாளாம். கஷ்டம் எப்படி வரும்? காம க்ரோதாதிகளால்தான். அவற்றின் பிடுங்கல் இருந்தால்தான் அவனை நினைத்து ப்ரார்த்திப்போம். இப்படிப் பார்த்துக் கொண்டு போனால் ஸ்ருஷ்டி, காமாதிகள் எல்லாமே அநுக்ரஹந்தான் என்று புரியும்.

பிற்பாடு ஒரு ஜீவனுக்குக் காருண்யத்தைக் காட்ட ஆப்பர்சூனிடியாகவே காமத்தைக் கொடுப்பது என்பது அந்த ஒரு ஜீவனோடு முடிந்துபோகிற விஷயமில்லை. அவனுடைய காமத்தினால் உண்டாகப் போகிற ஜீவர்களுக்கும் அவளுடைய காருண்யம் பாயவே இந்த ஏற்பாடு. அவர்களுக்கு இவனால் ஜன்மா ஏற்படுவதே அந்தக் காருண்யத்தால்தான். இப்படிச் சொல்லும்போது, பொதுவாக நினைப்பதற்கு ஆப்போஸிட்டாகவே இதுவரை சொன்ன சில ஸமாசாரங்களோடு இன்னொன்று சேர்கிறது! “பிறவி வேண்டேன்!” என்று பெரியவர்கள் அலறிக்கொண்டு பாடி வைத்திருக்க1 ஒருத்தனின் காமத்தால் பல ஜீவர்கள் பிறப்பதே அவர்களுக்கு அநுக்ரஹம் என்றால் எப்படி?

‘பிறவி வேண்டேன்’ ஸரிதான். ஆனாலும் மூட்டை மூட்டையாய் கர்மா பாக்கி இருக்கிறவர்கள் அப்படிச் சொல்லி விட்டால் தப்பித்துக் கொண்டுவிட முடியுமா? பாக்கியைத் தீர்த்துக் கொள்வதற்கும் பிறவிகள் எடுத்து நல்லபடி வாழ்ந்துகொண்டு போனால்தானே முடியும்? லோகத்தில் காமமில்லை என்றால், கர்மா பாக்கியோடு செத்துப்போனவர்கள் மறுபடி பிறப்பது எப்படி? வாய்க்கிற பிறவியில் அவர்கள் பழசை [பழைய கர்மாவை]க் கழுவிக் கொள்ளாமல் அழுக்கு மேலும் தடிப்பேற விட்டால் அது அவர்களுடைய குற்றந்தான். பிறவியைப் போக்கிக் கொள்ள ஆப்பர்சூனிடியாகவே பிறவி என்று புரிந்து கொண்டு, அதற்கானதைச் செய்வதுதான் முறை.

ஜீவர்கள் பிறவியிலிருந்து தப்பிப்பதற்கான பிரயாஸைகளைச் செய்வதற்குத் வாய்ப்புத் தரவேண்டும் என்ற கருணையுள்ளத்தால்தான் அம்பாள் லோகத்தில் காமத்தை வைத்து, அதற்கு அதிகாரியாக மன்மதனை அப்பாயின்ட் செய்தது. தர்ம-அர்த்த-காமம் என்று புருஷார்த்தங்களிலேயே ஒன்றாக அதை வைத்து மத்யம வயஸில் க்ருஹஸ்தாச்ரமத்தில் சாஸ்ரோக்தமான வியவஸ்தைகளோடு அதையும் அநுபவிக்கலாம் என்று வைத்திருக்கிறாள். வியவஸ்திகமாக [வரையறை ஒழுங்கோடு] அப்படிப் பண்ணிக்கொண்டு போனால் அப்புறம் அதுவே விடுகிற காலத்தில் ஜாடாவாக விட்டுப்போய், சுத்தி ஏற்பட்டு ஸந்நியாஸத்திற்கு ஏற்றிவிடும்.

ஸ்ருஷ்டியிலே எதை எடுத்தாலும் விதிவிலக்கு இருப்பதற்கேற்க பால்யத்திலிருந்து கடைசிவரை சுத்த ப்ரஹ்மசர்யம், ஸந்நியாஸம் என்றிருக்கும்படியாகவும் கொஞ்சம் பேரை, ரொம்பக் கொஞ்சம் பேரை, படைத்திருக்கிறாள்.

“இந்த ஸமாதானங்களெல்லாம் ஸரி. ஆனால் ஞான மூர்த்தியாக இருக்கப்பட்ட ஈச்வரனைக் காமத்தினால் கலக்கிக் களங்ப்படுத்துவானேன்? ஜிதேந்த்ரியர்களான முனிவர்களை அப்படிப் பண்ணுவானேன்? இப்படிப் பண்ணுவதற்காக அவளைப் புகழ்வானேன்?”

அவர்கள் அப்படி ஆனது அதோடு முடிந்துவிடவில்லை. அப்புறம் அவர்கள் மறுபடி பரிசுத்த மூர்த்திகளாகவும் ஆகத்தான் ஆனார்கள். ஒரு ஸமயத்தில் அப்படி அவர்கள் ஆனார்களென்றால் அதுவும் பெரிய லோக கல்யாணம் ஏற்படவேதான் நடந்தது. இப்படி ஹரிஹரபுத்ரனாக ஒருத்தன் பிறந்தால்தான் தன்னைக் கொல்ல முடியுமென்று ஒரு அஸுரன் வரம் வாங்கிக் கொண்டிருப்பான். விச்வாமித்ரர் மேனகையிடம் மோஹித்திருக்காவிட்டால் சகுந்தலையும், சாகுந்தலமும் கிடைத்திருக்குமா? வ்யாஸர் க்ருதாசியிடம் வசீகரமானதால்தான் ப்ரஹ்மசர்யத்தில் ஒப்பில்லாத சுகாசார்யாளின் உத்பவம் ஏற்பட்டது.

பராசக்தியின் ஸஹாயமில்லாவிட்டால் யாரானாலும் தடுக்கிவிழ வேண்டியதுதான் என்பதையும் இந்த விருத்தாந்தங்கள் நமக்கு ஞாபகப்படுத்தி, ‘நாமாக ஸாதித்துவிடலாம்’ என்று மிதப்பாக நினைக்காமல் அவள் அருள் துணையை எப்போதும் நாடி அடங்கியிருக்கும்படியாகவும் செய்கின்றன.

இன்னொரு விஷயம் என்னவென்றால், யாரொருவர் ஒன்றை ஆக்குவதற்குச் சக்தியும் அதிகாரமும் பெற்றிருக்கிறாரோ அவரேதான் அதை அழிப்பதற்கும் சக்தி, அதிகாரம் பெற்றவராவார் என்பது. லிஜிஸ்லேஷன் செய்ய [சட்டம் போட] ராஜாங்கத்திற்குத்தான் சக்தி உண்டு என்றால் அதை ரிஸைன்ட் பண்ணவும் [ரத்து செய்யவும்] அதற்குத் தான் அதிகாரமுண்டு. ராஜாங்கச் சட்டத்தை நாம் மாற்ற முடியுமா? ஸ்ருஷ்டியையும், காமத்தையும் உண்டாக்கும் அதிகாரமும் சக்தியும் அம்பாளுக்கு உரியவை என்றால் ஸ்ருஷ்டியிலிருந்து மோசனம் கொடுக்கவும் அவளால்தான் ஆகும்; காமத்திலிருந்து கைதூக்கி வெளியேற்றிவிடவும் அவளால்தான் ஆகும். காமனை அதிகாரியாக வைத்து அவள் முனிவர்களையும் மோஹிக்கப் பண்ணுகிறாள் என்னும்போதே அதற்கு மறுபக்கமாக, — ஒரு காசு இருந்தால் அதில் நமக்குத் தெரிகிற பக்கமாக ‘ஆப்வெர்ஸ்’ என்று ஒன்று இருக்கிறதோடு தெரியாததாக ‘ரிவர்ஸ்’ என்று இன்னொரு பக்கம் இருக்கிற மாதிரி, முனிவர்களையும் அவள் மன்மத அதிகாரியைக் கொண்டு மயக்கப் பண்ணுகிறாள் என்கிற ஆப்வெர்ஸுக்கு ரிவர்ஸாக — அதே மன்மதனிடம், “இவர்களிடம் உன் கைவரிசையைக் காட்டாமல் ஓடிப்போ” என்று அவள் சில ஜீவர்களை உத்தேசித்துச் சொன்னால் அவன் அவர்களைக் களங்கப்படுத்தாமல் ஓடவேண்டியதுதான் என்றும் ஏற்படுகிறது. நமக்குத்தான் அவன் அதிகாரியேயொழிய அவளுக்கு ஸர்வென்ட்தான். நாம் காம ஜயம் பண்ணவேண்டுமானால் நாமாக ஸாதித்துக்கொள்ள முடியாது. அவள் அவனுக்கு உத்தரவு போட்டுத்தான் அது நடக்க வேண்டும். அவனை ஏவுகிற அவளேதான் அவனைத் தடுக்கவும் அதிகாரம் உடையவள். அவனை ஏவுவதை மட்டுமே ச்லோகத்தில் சொல்லியிருந்தாலும் அதன் ரிவர்ஸையும் நாம் புரிந்து கொண்டு அவளே காம நாசம் அருள்கிறவள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


1 தொண்டரடிப்பொடியாழ்வாரின் ‘திருமாலை’, 3.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸ்தோத்திர மூர்த்தியைக் குறிப்பாலுணர்த்தல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  காமனை வெற்றி வீரனாக்கிய காடக்ஷசக்தி
Next