அம்பிகையின் இருப்பிடம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஸுதாஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே

மணித்வீபே நீபோபவநவதி சிந்தமாணி-க்ருஹே |

சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க நிலயாம்

பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த லஹரீம் | |

[(ஸுதா ஸிந்தோ:) அம்ருதக் கடலின் (மத்யே) நடுவில் (ஸுர-விடபி-வாடீ-ப்ரிவ்ருதே) கல்பக விருக்ஷ வனத்தினால் சூழப்பட்ட (மணித்வீபே) ரத்தின மணியாலேயே ஆன தீவாகிய மணித்வீபத்தில் (நீப-உபவநவதி) கதம்ப விருக்ஷச்சோலையுடன் கூடியதாயுள்ள (சிந்தாமணி க்ருஹே) நினைத்ததை அளிக்கும் சிந்தாமணிகளையே இழைத்து ஆக்கிய மாளிகையான சிந்தாமணி க்ருஹத்தில் (சிவாகாரே மஞ்சே) சிவ வடிவமான மஞ்சத்தில் (பரமசிவ பர்யங்க நிலயாம்) பரமசிவனாகிய மெத்தையில் எழுந்தருளியுள்ள (சிதாநந்த லஹரீம்) ஞானானந்தப் பெருக்காகிய (த்வாம்) உன்னை (கதிசந) எவரோ சில (தந்யா:) பாக்கியசாலிகள் (பஜந்தி) வழிபடுகிறார்கள்.]

சிவனுக்குக் கைலாஸம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் மாதிரி லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு வாஸ ஸ்தானந்தான். இவளுக்கோ இரண்டு. அதில் ஒன்று பிரம்மாண்டம் என்கிறதற்குள்ளேயே எல்லா க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி மத்தியிலிருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது. அந்த மேருவிலேயே வேறே மூன்று சிகரங்களில் ப்ரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவை இருப்பதாகவும் அந்த மூன்றுக்கும் நடுநாயகமான பிரதான சிகரத்திலே அம்பாள் லோகம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறது. ”ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்தா” என்று ஸஹஸ்ர நாமத்தில் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. இது ஒன்று. இது தவிர இந்த ப்ரஹ்மாண்டத்திலேயே அடங்காமல் தனி லோகோமாக ஸ்ருஷ்டி பண்ணிக்கொண்டு அதற்குள்ளே ஒரு த்வீபத்திலும் (தீவிலும்) வஸிக்கிறாள். ”ஸுதா ஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ, காமதாயிநீ” என்று ஸஹஸ்ரநாமத்தில் இந்த அம்ருத ஸாகர இருப்பிடத்தைச் சொன்னவுடனேயேதான் காமாக்ஷி நாமத்தையும் சொல்லியிருக்கிறது. ஆசார்யாள் வர்ணிப்பதும் இந்த வாஸ ஸ்தானத்தைதான். இதுதான் அம்பாளே நிர்மாணித்துக் கொண்ட லோகம். மேரு மத்ய சிருங்கத்திலிருப்பது தேவத்தச்சனான விச்வகர்மா நிர்மாணித்தது — அம்பாள் கொடுத்த சக்தியால்தான்! தேவர்களுடைய சத்ருவான பண்டாஸுரனை வதம் பண்ணுவதற்காக அம்பாள் ஆவிர்பவித்தாள். உடனே, ”இவள்தான் நம் ராணி, ராஜராஜேச்வரி” என்று தேவர்கள் பட்டாபிஷேகம் பண்ணினார்கள். ராணிக்கு ராஜதானியாகவே விச்வகர்மா ஏகப்பட்ட கோட்டை கொத்தளங்களோடு தேவ லோகங்களெல்லாம் இருக்கும் மேரு பர்வத்தில் அம்பாளுக்கும் ஒரு ஸ்ரீபுரத்தை நிர்மாணித்துக் கொடுத்தான். ஆனால் ஆசார்யாள் வர்ணிப்பது அம்பாளே ஸ்ருஷ்டித்துக் கொண்ட அம்ருத ஸாகர ஸ்ரீபுரத்தைத்தான்.

மேரு மத்தியானாலும் ஸரி, அம்ருத ஸாகரமானாலும் ஸரி அதில் அவளுடைய ஊருக்கு போய்விட்டால் அங்கே ஒன்றும் வித்யாஸமில்லை. வெளிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான பிராகாரங்கள், வனங்கள், தடாகங்கள், பரிவாரங்கள்தான். அந்த ராஜதானிக்கு [தலைநகரத்திற்கு] ஸ்ரீபுரம் அல்லது ஸ்ரீநகரம் என்றே இரண்டிலும் பெயர். அது இருபத்தைந்து கோட்டைகளும் பிராகாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பிலிருந்து ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு லோஹத்தால் ஒவ்வொரு கோட்டை. அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு கோட்டை. இப்படியே ஸூக்ஷ்மமாகப் போய் மனஸாலேயே ஆன கோட்டை, புத்தியாலேயே ஆன கோட்டை, அஹங்காரத்தாலான கோட்டை எல்லாங்கூட உண்டு. கடைசியில் ஸூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மனமத தேஜஸ் இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை. கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல வனங்கள், பல ஓடைகள். எல்லாம் தாண்டிப் போனால் இருபத்தைந்தாவது ஆவரணத்தில் — ஆவரணம் என்றாலும் ப்ராகாரம்தான் — மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த ஓடை வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கல்களையே வைத்துக் கட்டியதான அம்பாளின் அரண்மனை வரும். (துர்வாஸரின் ‘ஆர்யா த்விசதி’யிலும் ‘லலிதோபாக்யான’த்தின் பிற்பகுதியிலும் ஸ்ரீபுரத்தின் விரிவான வர்ணனை காணலாம்.)

அரண்மனையில் இருக்கிற ராணி, ராஜராஜேச்வரி என்பது ஒரு பக்கம். அப்படிப் பார்க்கிறபோது ஸதஸில் ஸிம்ஹாஸனம் போட்டுக்கொண்டு தர்பார் நடத்துவாள். முன்னேயே சொன்னாற்போல பஞ்ச ப்ரம்மங்களை நாலு காலாகவும் மேல் பலகையாகவும் கொண்ட ஸிம்ஹாஸனம். அதில் காமேச்வரன் மடியில் உட்கார்ந்து கொண்டு தர்பார் நடத்துவாள். ராணி என்ற அதிகார ஸ்தானத்தை முக்யமாக வைக்காமல் ப்ரஹ்ம தத்வத்தை லீலையில் திருப்பிய ச்ருங்காரமூர்த்தி என்று பார்க்கிறபோது பஹிரங்கமான ராஜ ஸதஸாக இல்லாமல் ஏகாந்தமான அந்தஃபுரத்தில் தர்சனம் தருவாள். அந்த தர்சனம் பெறுவதற்கு ரொம்பவும் உசந்த இந்திரிய நிக்ரஹம் பெற்றிருந்தால்தான் முடியும். தத்வார்த்தமான ச்ருங்காரத்தைப் புரிந்துகொண்டு தத்வத்துக்குள்ளே முழுகிப்போகிற பக்வமிருக்கிறவருக்கு மட்டுமே அப்படி தர்சனம் கிடைக்கும். ஸதஸில் ஸிம்ஹாஸனமாயிருந்த பஞ்ச ப்ரஹ்மாஸனம் இங்கே (அந்தஃபுரத்தில்) மஞ்சமாக இருக்கும். அதிலே காமேச்வரனோடு அம்பாள் இருப்பாள்.

மேரு மத்தியிலேயுள்ள ஸ்ரீபுரத்தில் தேவர்களுக்கெல்லாம் மேலே ராஜதர்பார் நடத்துகிற ராணியாகவும், அம்ருத ஸாகர மத்தியிலே உத்தமமான ஸாதகர்களுக்குக் காமேச்வர பதிவ்ரதையான தாயாகவும் இருப்பாள். தாயாரும் தகப்பனாரும் ஒன்றிப்போய், அதிலேயே குழந்தையும் ஒன்றாகப் போய்விடும் பரம ஸாயுஜ்யம் வரை எல்லாம் அநுக்ரஹிப்பாள்.

அப்படிப்பட்ட அம்பாளுடைய வாஸத்தைத்தான் அம்ருத ஸாகரத்திலிருந்து ஆரம்பித்துக் காமேச்வரனுடைய மடி வரையில் சுருக்கமாக இந்த [8-வது] ச்லோகத்தில் ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார்.

[ச்லோகத்தின் மூல வார்த்தைகள் ஒவ்வொரு சொற்றொடராக மனத்திற்குள் சொல்லிக் கொள்கிறார்களென்று தோன்றுகிறது. சொற்றொடர்களின் பொருளை மட்டும் வெளிப்பட மொழிகிறார்கள்.]

அம்ருத ஸாகர மத்தியில் —

தேவலோக வ்ருக்ஷங்கள் என்று ஐந்து — மந்தாரம், பாரிஜாதம், ஸந்தானம், கல்பகம், ஹரிசந்தனம் என்று. அப்படிப்பட்ட மரங்கள் அடர்ந்த அரண்யத்தினால் சூழப்பட்ட —

சூழப்பட்டதாக உள்ள மணித்வீபம் என்ற தீவிலே – நிலம் முழுக்க மண்ணாகவோ கல்லாகவோ இல்லாமல் ரத்ன மயமாகவே இருப்பதால் அப்படிப்பேர் – அந்தத் தீவிலே —

நீபம் என்ற மரங்களைக் கொண்ட உபவனத்திலே – கதம்பம் என்பதைத்தான் நீபம் என்றும் சொல்வது, பூலோகத்திலே அம்பாளுக்கு ப்ரிய வாஸமான மதுரையும் கதம்பவனமாக இருந்ததுதான். தமிழில் கடம்பம், கடப்பம் என்பது. முருகனுக்கும் அது ரொம்ப ப்ரீதி. கடம்பன் என்றே தமிழ் நூல்களில் அவருக்குப் பெயர் சொல்லியிருக்கிறது: மணித்வீபத்தில் கதம்ப வ்ருக்ஷங்களாலேயே ஆன உபவனம் இருக்கிறது. ”கதம்ப வந வாஸிநீம்”, ”கதம்ப வந சாரீணீம்”, [”கதம்ப வந சாலயா”, ”கதம்ப வந மத்யகாம்”] என்றெல்லாமே அடிக்கு அடி ஆரம்பித்து ஆசார்யாள் அஷ்டகம் பாடியிருக்கிறார்; (த்ரிபுரஸுந்தர்யஷ்டகம்) ; குழந்தைகளுக்குக்கூடச் சொல்லிக் கொடுத்து அவை ஆசையாகக் கற்றுக் கொண்டு சொல்லும்….. கதம்ப வனத்தில் ஆனந்தமாக அம்பாள் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டிருப்பாள். மதுரையில் கதம்ப வனம், மணித்வீபத்தில் உபவனம். உபவனம் என்றால் சிறிய வனம். ப்ளான் பண்ணி மனிதர்கள் வைத்த பார்க். முதலில் தீவு ஓரத்தில் கல்பகாதி திவ்ய விருக்ஷங்கள் காடாகவே இருக்கின்றன. அப்புறம் ராஜதானிக்குக் கிட்டே கதம்பம் உபவனமாயிருக்கிறது……..

எங்கே பார்த்தாலும் டவுன், டவுன்ஷிப் என்று கட்ட ஆரம்பித்து மரத்தையெல்லாம் வெட்டினோம். அப்புறம் மரமில்லாவிட்டால் லோக வாழ்க்கைக்கே அநேக தினுஸில் ஹானி வந்து விடுகிறதென்று புரிந்துகொண்டு இப்போது வன மஹோத்ஸவம் கொண்டாடுகிறோம்! அந்த உத்ஸவமும் பேப்பரில்தான் ஜாஸ்தி நடப்பதாகத் தெரிகிறது! ஆதி காலத்தில் இத்தனை டவுன்கள் இல்லாத போதே எந்த ஊராயிருந்தாலும் எல்லையில் உபவனம் இருக்கும். கோட்டையோடு கூடிய ராஜதானி என்றால் நிச்சயமாக இருக்கும். ‘நேச்சர் அப்ஸெட்’ ஆகாமல் அது காப்பாற்றியதோடு சத்ரு ஸைன்யத்திடமிருந்தும் ஊரைக் காப்பாற்றிக் கொடுத்தது…….

நீப உபவனம் சூழ்ந்த சிந்தாமணி க்ருஹத்திலே — உத்யான வனத்திற்குள் அம்பாளுடைய அரண்மனை. சிந்தாணிமணிகளாலேயே நிர்மாணம் பண்ணி ஜ்வலிக்கிற அரண்மனை. நம்முடைய எண்ணங்களையெல்லாமே மணியாக்கி — மணி மணியான சிந்தனைகளாகப் அவளைப் பற்றியே நினைத்து அந்த மணிகளாலேயே — ஆலயம் கட்டினால் அதுவும் சிந்தமாணி க்ருஹந்தான். அதற்குள், அதாதவது நம் சிந்தைக்குள், அவளே வந்து குடிகொண்டு விடுவாள். அப்படிப் பண்ணுவதற்கு வழியாகத்தான் வெளியிலே அவளுக்கு வாஸஸ்தானம் சொல்லி அதை த்யானிப்பது. முடிவில் அவள் நமக்குள்ளேயே வரவேண்டும். அபிராமி பட்டர் அப்படித்தான், ”உன் கோவில் அங்கே இருக்கா, இங்கே இருக்கா?” என்று பல தினுஸாகக் கேட்டுவிட்டு ”என்றன் நெஞ்சகமோ?” என்று முடித்திருக்கிறார்1. இன்னொரு பாட்டில்2, “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகம் முழுவதுமாக வியாபித்திருப்பவள், அந்த உலகமெல்லாம் அடிபட்டுப் போன பின் நிற்கும் ஆத்ம ஸ்வரூபமாகவும் இருப்பவள், எப்படியோ என் இத்தனூண்டு நெஞ்சுக்குள்ளே ஸ்திரவாஸம் செய்கிறாளே!” என்று ஆச்சர்யப்படுகிறார்.

சிந்தாமணி க்ருஹத்திற்குள்ளே சிவ ஸ்வரூபமான மஞ்த்திலே — பஞ்ச ப்ரஹ்மாஸனம் சொன்னேனே, அதன் மேலே —

அந்த ஐந்து பேருக்கும் மேலே பரசிவம் என்றும் பரமசிவம் என்றும் பர ப்ரஹ்ம ஸ்வரூபமாக இருக்கப்பட்ட காமேச்வரனின் மடியிலே – ”பரமசிவ பர்யங்க” என்று சொல்லியிருக்கிறது. ”அங்க” (anka) என்று மாத்திரம் சொன்னால்தான் ‘மடி’. ‘பர்யங்க’ என்றால் பொதுவாக படுக்கை, கட்டில், இடுப்பையும் மடியையும் சேர்த்துக் கட்டின வஸ்திரம் என்றெல்லாம் அர்த்தம். படுக்கை, கட்டில் என்ற அர்த்தம் நீண்டு கொண்டே போய், சிவிகையில் போகிறவவர்கள் அதிலேயே படுத்துக் கொள்வதால் அதற்கும் பர்யங்கம் என்று பேர் வந்து, அது திரிந்து திரிந்து ‘பல்லக்கு’, palanquin என்றெல்லாம் ஆகிவிட்டது. ”சயநம், மஞ்ச, பர்யங்க, பல்யங்கா:” என்று ‘அமர’த்திலேயே வருகிறது. அந்தப் ‘பல்யங்கம்’ தான் palanquin என்றும் பல்லக்கு என்றும் ஆனது. வைநாகரம் ராமநாதன் செட்டியார் என்று பெரிய சிவ பக்தராகவும் புலவராகவும் ஒரு பிரமுகர் இருந்தார். அவர் ‘பல்லக்கு’ என்பது ‘பல் அக்கு’ என்பதிலிருந்து வந்தது; அதாவது ‘பல அக்ஷங்கள்’ [பல கண்கள்] ஒரு பல்லக்கில் போகிறவரின் மேல் குவிந்திருக்குமாகையால் அந்த வாஹனத்திற்கே அப்படிப் பேர் வந்து விட்டது என்று சாதுர்யமாகப் பாடினார்3. வாஸ்தவத்தில் ‘பர்யங்கம்’ தான் பல்யங்கம்-பல்லங்கம்-பல்லக்கு என்றானது…….

காமேச்வரனின் மடியான மெத்தை அம்பாளுக்குப் பர்யங்கம்.

அதில் உட்கார்ந்திருப்பவளை காமேச்வரி, ராஜேச்வரி என்று ச்ருங்கார ஸுந்தரியாகவோ, ராணியம்மாளாகவோ சொல்லாமல் ஞானத்தின் உச்சிக்குத் தூக்கி ”சிதாநந்த லஹரி” என்று பெயர் கொடுத்திருக்கிறார்! அதுதான் ஆசார்யாள் வாக்கின் பெருமை! ச்ருங்கார ஸ்வரூபமாக அவள் ஸ்வாமியோடு இருக்கிறாளென்றாலும் அது ஆத்ம ச்ருங்காரம் அல்லவா? ஸத்தை விட்டுப் பிரியாத சித்தின் ஆனந்த வெள்ளமாக இருக்கும் ப்ரேமையல்லவா? அதனால்தான், இப்படியிப்படி ஆகப்பட்ட லோகத்தில், ஊரில், க்ருஹத்தில், இன்ன ஆஸனத்தில் உட்கார்ந்திருப்பது வாஸ்தவத்தில் சிதானந்த ப்ரவாஹமேயாக்கும் என்று முடித்திருக்கிறார்.

இப்படியொரு வாஸ ஸ்தானத்தில் சிதாநந்த லஹரியாக உள்ள உன்னை யாரோ சில பாக்யசாலிகள் வழிபடுகிறார்கள் என்கிறார்: ”பஜந்தி த்வாம் தந்யா: கதிசந”. ஸரியாக ப்ரோஸ் ஆர்டர் பண்ணினால், ”கதிசந தந்யா: த்வாம் பஜந்தி” – என்பதற்கு ‘ஒரு சில பாக்யசாலிகள் உன்னைப் பூஜிக்கிறார்கள்’ என்று அர்த்தம்.

”ஏன் ‘ஒரு சில’? தேவீ பூஜை பண்ணுபவர்களாக ரொம்பப் பேர் இருக்காளே! அதுவும் இப்ப நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிண்டு வரதே!”

பூஜை என்று ரொம்பப் பேர் பண்ணலாம். ஆனால் சும்மா ‘மொண மொண’ பண்ணிவிட்டு ஒரு கல்பூரத்தைக் காட்டி விட்டால் அது நிஜமான பூஜையாகி விடுமா?

”அப்படியானா எது நிஜமான பூஜை?”

எதுவென்றால் — முன் ச்லோகத்திலே அவள் ரூபத்தை வர்ணித்ததோல்லியோ? அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது வர்ணித்த அவளுடைய வாஸ ஸ்தானத்திலேயே நாம் இருப்பது போல நினைக்க வேண்டும். அவளுடைய அருளே அம்ருத ஸாகரமாகவும், கல்பகக் காடாகவும் நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருப்பதாகவும், அந்த அருளில் நாம் இருக்கும் பூமியே ரத்னமயமாகி விட்டதாகவும், நம்முடைய பூஜா க்ருஹம் இஷ்டமானதையெல்லாம் தரும் சிந்தாமணியாலேயே கட்டியதாகவும் பாவனை ஏற்பட வேண்டும். அதுதான் ஸாலோக்யமோக்ஷம் என்பது. இஷ்ட தெய்வத்தின் லோகத்திற்கு நாம் ஸாலோக்யமோக்ஷம் என்று பொதுவில் சொல்வது. நாம் எங்கேயிருந்தாலும் அதுவே அந்த லோகம் என்று ஆக்கிக் கொண்டால் இன்னும் விசேஷம் என்று தோன்றுகிறது.

ஸாலோக்யத்திற்கு அப்புறம் ஸாமீப்யம்: ஸமீபத்திற்குப் போவது. அம்ருத ஸாகரக் கரையிலிருந்து வனம், உபவனம், ஊர் எல்லாம் தாண்டி அரண்மனையில் அவளுடைய மஞ்சம் இருக்கிற இடத்திற்கே போய்விட்டால் ஸாமீப்யம். மானஸிகமாக அந்த ஸாமீப்யத்தை ஸாதிக்க வேண்டும்.

ஸாலோக்ய-ஸாமீப்யங்களுக்கு அப்புறம் ஸாரூப்யம். குளவி ரூபத்தை நினைத்து நினைத்துப் புழுவும் அப்படி ஆகிறது போல அம்பாள் ரூபத்தை நினைத்து நினைத்து நாமும் அப்படி ஆகிவிடுவது ஸாரூப்யம். முன் ச்லோகத்தில் சொன்ன ரூப வர்ணனையில் ஊறி ஊறி, அந்த ரூபத்தைப் பரமசிவ பர்யங்கத்தில் உட்கார்ந்திருப்பதாக அப்படியே த்யானித்தபடி இருந்தால் ஸாரூப்ய முக்தி உண்டாகும்.

அப்புறம் முடிவாக ஸாயுஜ்ய முக்தி. ரூபத்தில் ஒரே மாதிரி இருப்பதற்கு முடிவாகத் தத்வஸாரத்தில் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. அந்தத் தத்வஸாரம் என்ன என்பதைத்தான் ‘சிதாநந்த லஹரி’ என்றார். அந்த லஹரியிலேயே வித்யாஸமில்லாமல் கரைந்து போய்விட வேண்டும். அதுதான் ஸாயுஜ்யம்.

கரைந்த பிற்பாடு பூஜையே இல்லை. அதனால் பூஜை என்று பண்ணும் நிலை இருக்கிறவரையில் மானஸிகமாக அந்த பாவனை — கரைந்து போகிற அத்வைத பாவனை — இருக்க வேண்டுமென்று அர்த்தம்.

வாஸ்தவமாக அவளுடைய லோகத்திற்குப் போவது, ஸ்வரூப தர்சனம் பண்ணுவது, தத்வத்தில் கரைவது எல்லாம் நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது மானஸிகமாக அதையெல்லாம் பாவனையில் பண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பூஜை என்று உட்கார்ந்தால் மனஸ் முழுக்க ஈடுபட்டிருக்க வேண்டும். ‘ஆபீஸுக்கு நாழியாச்சா? கான்டீனில் இன்னிக்குத் தவலை அடையா?’ என்ற ஞாபகம் எதுவும் வராமல் மனஸை அந்த அம்ருத ஸாகர அலையில் ஆரம்பித்து சிதாநந்த ஸாகர அலையாக இருக்கிற பரமதத்வம் வரையில் கொண்டு போய் அப்படியே முழுக்க வேண்டும்.

இப்படியா நாமெல்லாம் பூஜை பண்ணுகிறோம்? எவரோ சில பேர்தானே, பூர்வ புண்யசாலிகள்தானே அம்பாளின் ஸ்வரூபத்திலேயே சிதாநந்த ரஸத்தைத் தெரிந்து கொள்கிற அளவுக்கு மனஸொன்றிப் பூஜை செய்வது? அதனால்தான் ”கதிசந தந்யா:” என்றார்.


1 அபிராமி அந்தாதி’ பாடல் 20 (‘உறைகின்ற நின்றிருக் கோயில்’

2 பாடல் 56 (‘ஒன்றாயரும்பி’)

3 அவர் அவ்விதம் பாடியது 1926-ல் ஸ்ரீசரணர்கள் கடியாபட்டியில் பல்லக்கு பவனி முடித்து இரவு ஒரு மணியளவில் முகாமுக்கு எழுந்தருளிய போதாகும். பவனியின் போது செட்டியரைக் காணமுடியவில்லையே என்று ஸ்ரீசரணர்கள் வினவ, அவர் பல்லக்குத் தூக்கிகளில் ஒருவராகத் தாமும் திருமேனி தாங்கி வந்ததாலேயே ஸ்ரீசரணர்களின் திருஷ்டியில் படவில்லை எனக்கூறி உடனே அவர்கள் மீது ஒரு பஞ்சகம் பாடினார். அதில்தான் ‘பல்லக்கு’க்குப் புதுப் பொருள் கண்டிருந்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸ்வரூப வர்ணனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  குண்டலிநீ ரூபத்தில்
Next