குண்டலிநீ ரூபத்தில் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இதற்கப்புறம் சில ச்லோகங்களில் அம்பாளைக் குண்டலிநீ முதலான யோகங்களாலும் மந்த்ர யோகத்தாலும் வழிபடுவது, அப்படி வழிபடுவதால் கிடைக்கிற பலன் முதலியவற்றைச் சொல்லியிருக்கிறது.

குண்டலிநீ ஆறு சக்கரங்களில் (அந்த சக்ரங்களையே கமலங்கள் என்றும் சொல்வதுண்டு. அந்தக் கமலங்களில்) கீழேயிருந்து மேலே போகிற க்ரமத்தில் முதல் ஐந்தில் பிருத்வி முதல் ஆகாசம் முதலான ஐந்து தத்வங்களாகவும், ஆறாவதில் மனஸ் தத்வமாகவும் அம்பாள் இருக்கிறாளென்றும், [அச்சக்ரங்களுள்ள] ஸுஷும்நா நாடி முடிவில், சிரஸில் இருக்கிற ஸஹஸ்ர தள பத்மத்தில் பதியான சிவனோடு ஐக்கியமாகிறாளென்றும் — அதாவது அங்கே ஒரு ஜீவன் குண்டலிநீ சக்தியைக் கொண்டு சேர்க்கிறபோது அத்வைதானந்தம் ஸித்திக்கச் செய்கிறாளென்றும் — அடுத்த ச்லோகத்தில் சொல்கிறார்1. ”அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்” என்பார்கள். அப்படி, ப்ரபஞ்சமாக அம்பாள் விரிந்திருக்கும்போது அதில் பஞ்ச மஹா பூதங்கள் என்றும், அந்த லோகங்களைக் கல்பித்த மஹா மனஸான மஹத் என்றும் இருப்பவையே ஒரு ஜீவனுடைய குண்டலிநீ சக்ரங்களிலும் முறையாக யோகம் பண்ணினால் அநுபவத்திற்கு வந்துவிடுகின்றன. அந்த மஹா மனஸும் மேலே ஸஹஸ்ர தள பத்மத்தில் சிவமான ப்ரம்ம ஸ்வரூபத்திலே ஐக்யமாகி அத்வைதாநுபவம் ஸித்திக்கிறது.

அத்வைத ரஸாநுபவம் அம்ருத ரஸாநுபவமாகக் கிடைக்கிற ஸமாசாரத்தை அதற்கடுத்த ச்லோகத்தில் சொல்கிறார்2. ஸ்வச்சமான அத்வைதாநுபவத்தில் ரஸம் என்று ஒன்று, அதைத் தருகிற ஒன்று (அதுதான் அம்பாள்), பெறுகிற ஒன்று (ஜீவன்) என்ற வித்யாஸங்களில்லை. அது வர்ணனாதீதம். உபசாரத்துக்கு ‘ரஸாநுபவம்’ என்பது. ஆனாலும் அது ஏற்படுவதற்கு முன்னாலும், கலைந்த பிற்பாடும் கிட்டத்தட்ட அந்த அநுபவத்திற்கு ஸமமான ஒரு ஸ்திதியில் ரஸம் என்றும், அதைத் தருகிறவர் என்றும், பெறுகிறவர் என்றும் ஒரு த்ரிபுடி [மும்மை] இருக்கும். கமலங்கள் சொன்னேனே, அவை நம்மூர் குளத்துத் தாமரைப் பூக்கள் இல்லை. குளத்துத் தாமரை ஸூர்ய வெளிச்சத்தில்தான் மலரும். சந்திரிகையில் கூம்பிப் போகும். அக்னிச் சூடு பட்டால் வாடிப்போகும். ஆனால் இந்த [குண்டலிநீ] கமலங்களிலோ அக்னி கண்டம், ஸூர்ய கண்டம், சந்த்ர கண்டம் என்று இருக்கிற மூன்றிலுமே அந்தந்த கண்டத்திற்கான தாமரைகள் மலர்ச்சியடையும்! முடிவில் ஸஹஸ்ர தள பத்மத்தை மலர்த்துவதாக பூர்ண சந்த்ரனே சிரஸிலே இருக்கும். அதிலிருந்து சந்த்ரிகையாக அம்ருதம் பெருகும். அதுதான் ரஸம். அந்த ரஸத்தைத் தருவது யார் என்று பார்த்தால் அம்பாளாயிருக்கும். சந்திர பிம்பத்தில் ஸத்குரு சரணமாக அவளுடைய திவ்ய சரணமே இருக்கும். அதிலிருந்துதான் வாஸ்தவத்தில் அம்ருதம் பெருகுவது. அதையே சந்திரன் பெருக்குவதாகக் காட்டுவது. அந்த அம்ருத ரஸத்தைப் பெறுபவனாக, அறிபவனாக ஜீவன் இருக்கிறான். ஆனாலும் ‘அவளேதான் ரஸமாயும், ரஸாஸ்வாதம் பண்ணும் தானாகவும் இருப்பதும்’ என்ற அத்வைத பாவமும் இருந்து கொண்டிருக்கும்…..


1ச்லோ. 9 (‘மஹிம் மூலாதாரே’)

2ச்லோ. 10 (‘ஸூதாதாரா ஸாரை:’)

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அம்பிகையின் இருப்பிடம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  எந்த உபாஸனையிலும் யோகாநுப   வ, ஞானாநுபவ, ப்ரேமாநுபவங்கள்
Next