அடுத்த பேர் ‘லம்போதரர்’ ‘தொங்குகிற வயிற்றுக்காரர்’ என்று அர்த்தம். ‘லம்பம்’ – தொங்குவது. ‘உதரம்’ – வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். பிள்ளையார் என்றாலே வெள்ளைக்காரர்கள் ‘Pot-bellied’ என்று அவருடைய பானை வயிற்றைத்தான் சொல்கிறார்கள். ‘பேழை வயிறும்’ என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மோதகத்தை வைத்திருப்பவர், தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற்றோடு இருக்கிறார். நல்ல நிறைவைக் காட்டுவது அது. அண்டாண்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அதுவும் அண்ட ரூபத்தில் உருண்டையாயிருக்கிறது.
மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை மா(வு) மூடியிருக்கிறது. ‘மோதகம்’ என்றால் ஆனந்தம், ஆனந்தம் தருவது. விக்நேச்வரரே அப்படிப்பட்ட ஒரு மோதகம்தான். ஆனந்தமாயிருப்பவர். அன்பு என்ற தித்திப்பான வஸ்துவை (ப்ரேமையை மதுரம் என்று சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட மதுரமான ப்ரேமையை) மற்றவர்களுக்கும் வழங்கி ஆனந்தமூட்டும் மோதகம் அவர். ‘மா’ என்றால் ஆண் யானை என்றும் அர்த்தம். மோதகத்தில் மதுரமான வெல்லப் பூர்ணத்தை மூடிக்கொண்டு மா(வுச்) சொப்பு இருக்கிற மாதிரி ப்ரேம ரஸம் நிறைந்த பூர்ண வஸ்துவான ப்ரம்மத்தின் மேல் ஆனை என்ற ‘மா’வின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு ஆனந்த ஸ்வரூபியான விக்நேச்வரர் உருவமெடுத்துக் கொண்டிருக்கிறார்! உள்ளே பரம மதுரமான அன்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டவே உருண்டைக் கொழுக்கட்டை உருவத்தில் வயிற்றை லம்போதகராக வைத்துக் கொண்டிருக்கிறார். உருண்டைக்கு ஆரம்பம், முடிவு சொல்ல முடியாது. அதனால் அது ப்ரம்மத்துக்கு ரூபகம் [உருவகம்]. அதைக் காட்ட உருண்டையான தொப்பை வயிற்றோடு லம்போதரர் என்று விளங்குகிறார்.
தொப்பையும் தொந்தியுமாக உள்ள ஒருத்தரைப் பார்த்தாலே நமக்கு ஒரு புஷ்டி, ஸந்துஷ்டி உண்டாகிறது. அதிலும் ஒரு குழந்தை அப்படி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்! எலும்பும் தோலுமாக நோஞ்சானாக உள்ள ஒருவரைப் பார்த்தால் நமக்கு இப்படி ஸந்தோஷம் உண்டாவதில்லை. ஸ்தூல சரீரம், க்ருசமான (ஒல்லியான) சரீரம் ஆகியவற்றை குணங்கள் ஸம்பந்தப்படுத்தியும் சொல்கிறோம். தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர் வஞ்சனை இல்லாதவர், அப்பாவி, வெகுளி என்று சொல்வார்கள். அதோடு, தொப்பையும் தொந்தியுமாக இருப்பவரைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. சிரிப்பாக வருகிறது. ஸுமுகரான பிள்ளையார் நாமெல்லாமும் சிரித்துக்கொண்டு ஸுமுகமாக இருக்க வேண்டுமென்றே தொப்பையப்பராக இருக்கிறார். ‘எத்தனையோ தினுஸுக் கஷ்டங்களில் மாட்டிக் கொண்டு ஜனங்கள் தின்டாடுகிறதுகளே! அவர்களுக்கு ஃபிலாஸஃபி, கிலாஸஃபி சொல்லிக் கொடுத்தால் ஏறும், ஏறாதிருக்கும். அதனால் பார்த்த மாத்திரத்தில் ஒரு வேடிக்கை விநோதமாக அவர்கள் சிரித்து மகிழும்படி நாம் இருப்போம்’ என்றும் பிள்ளையார் லம்போதரராக இருக்கிறார்.
அதிலும் குழந்தைகளுக்குத்தான் பஹு ஸந்தோஷம். தொப்பைக் கணபதியைப் பார்ப்பதில். அதற்கேற்றாற்போல் (புரந்தர) தாஸர் ஸங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும் போது பிள்ளையார் கீதத்தை “லம்போதர லகுமிகரா” என்றே ஆரம்பித்திருக்கிறார். ‘லகுமிகரா’ என்றால் ‘லக்ஷ்மிகரா’; ஸெளபாக்கியங்களை உண்டாக்குபவர்.