விகடர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அடுத்த பேர் ‘விகடர்’. அப்படிச் சொன்னாலே எல்லோருக்கும் வாரப் பத்ரிகை ஞாபகம்தான் வரும்! ஹாஸ்யத்திற்கு, பரிஹாஸம் – கேலி சிரிக்கச் சிரிக்கப் பண்ணுவதற்கு ‘விகடம்’ என்று பேர் சொல்கிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதுர்யமும் இருக்கும். ‘விகடகவி’ என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டுப் பண்ணுபவரைச் சொல்லியிருக்கிறது. அந்தப் பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திருப்பிப் பார்த்தாலும் ‘விகடகவி’ என்றே வரும்! ஸாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுப் பண்ணுவதை ‘அகடவிகடம்’ என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருக்கிற ஸாமர்த்தியத்தில் ஆச்சர்யப்பட்டு சிரிக்கும் படியும் இருக்கும். விகடக் கலை என்றே இருக்கிறது. அதிலே தேர்ச்சி பெற்று ‘மிமிக்ரி’ முதலான அயிட்டங்களைக் கச்சேரியாகவே செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஸம்ஸ்கிருத டிக்ஷனரியில் ‘விகட’ என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம், தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும் படியாக ஏமாற்று ஸாமர்த்தியம் செய்வது – இதெல்லாந்தான் விகடம். விதூஷகன் – ‘காமிக்’ பாத்திரமென்று இந்த நாளில் சொல்கிறார்கள் – அவன்தான் விகடன் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். டிக்ஷனரி அர்த்தப்படி ‘ப்ரதிநாயகன்’ அதாவது ‘வில்லன்’ என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் – கோர ரூபத்தோடும், க்ரூரமான கார்யத்தோடும் இருப்பவன்.

ஆராய்ச்சிக்காரர்கள், “ஆதிகாலத்தில் விநாயகர் க்ரூரமான உக்ர தேவதையாகக் குரூபமாகத்தான் இருந்தார். அப்புறந்தான் அவரை ஸெளம்ய மூர்த்தியாக்கியது” என்று சொல்வதுண்டு. நமக்கு அந்த ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்! நாம் உருப்பட, நம்முடைய உயிருக்கு ஒரு நிறைவும் நல்ல வழியிலான ஆனந்தமும் பெறுவதற்கு வேண்டியது பக்திதான். நம்முடைய அலைபாய்கிற அசட்டு மனஸை இழுத்து நிறுத்தி வைத்து அதற்கு நிறைவும், ஆனந்தமும் கொடுக்கிற ஒரு மூர்த்தி கிடைத்தால்தான் நமக்கு பக்தி சுரக்கிறது. விசாலமான யானை முகமும், தொப்பை வயிறுமாக இருக்கும் விநாயக மூர்த்தியைப் பார்த்தவுடனேயே நம் மனஸுக்கு இவை கிடைத்து தன்னால் பக்தி உண்டாகிறது. இந்த ப்ரத்யக்ஷமாகத் தெரிகிற ஸமாசாரம். விக்நேச்வர மூர்த்தியைப் பார்த்தால் ஒரு குரூபியை அல்லது க்ரூர ஸ்வபாமுள்ளவரைப் பார்க்கிற மாதிரியா அருவருப்போ பயமோ ஏற்படுகிறது? கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம். ப்ரத்யக்ஷ அநுபவத்திற்கு எந்த ஆராய்ச்சியைக் கொண்டும் நிரூபணம் வேண்டாம்! ஆகையால் அறிவாளிகள் என்கப்பட்டவர்கள் நம்மை மண்டு எனறு சொன்னாலும் சொல்லிவிட்டு போகட்டும். லோக வழக்கில் ‘விகடம் பண்ணுவது’ என்றால் ஹாஸ்யம் பண்ணுவது என்று இருக்கற அர்த்தத்திலேயே நாம் விக்நேச்வரரை விகடனாக வைத்துக் கொள்வோம். அவர் நம்மை ஆனந்தமாகச் சிரிக்கப் பண்ணுகிற அழகு மூர்த்தியாக ப்ரத்யக்ஷத்தில் தெரிகிறபோது, ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பதற்காக அவர் பயமுறுத்துகிறவர், அசிங்கமாகத் தெரிகிறவர் என்று ஒப்புக் கொண்டால் அதுவும் மண்டுத்தனம் தான்.

விக்நேச்வரர் நிறைய விகடம் பண்ணுபவர். அப்பா அம்மா ஸாக்ஷாத் பார்வதீ பரமேச்வராள் ஊடல் பண்ணிக் கொண்டு கோபமும் தாபமுமாக இருக்கும்போது அவர் ஏதாவது வேடிக்கை, குறும்பு பண்ணி அவர்களை ஒன்று சேர்த்து விடுவார்.* காக்காயாகப் போய் அகஸ்தியரை விகடமாக ஏமாற்றி நமக்குக் காவேரி கிடைக்கும்படிப் பண்ணுவார். பிரம்மச்சாரியாகப் போய் விபீஷணரை ஏமாற்றி காவேரி தீரத்தில் ஸ்ரீரங்கநாதர் ப்ரதிஷ்டையாகும்படி லீலை பண்ணுவார். கோகர்ண க்ஷேத்ரத்திலே அவனுடைய அண்ணாவான ராவணனையும் இதே மாதிரி அவர் ஏமாற்றி விளையாட்டுப் பண்ணிதான் சிவலிங்கம் பிரதிஷ்டையாகும்படிச் செய்திருக்கிறார். இதெல்லாம் விகடர் பண்ணின Practical jokes – அதாவது அவர் விளையாட்டாகப் பண்ணினதே இன்னொருத்தருக்கு வினையாக முடிந்தது. ஆனாலும் ஒரு அகஸ்தியர், ஒரு ராவணன், ஒரு விபீஷணன் ஏமாந்தாலும், இந்த லீலைக்கெல்லாம் நோக்கம், இந்த லீலைகளுடைய விளைவு லோக கல்யாணம்தான். காவேரியும், ஸ்ரீரங்கநாதரும், கைலாஸ லிங்கமும் யாரோ ஒரு தனி மநுஷ்யருக்கு உடைமையாக இல்லாமல் லோகம் முழுதற்கும் ப்ரயோஜனப்படுகிற விதத்தில் அவர் செய்த அருள் லீலை! விகடமாகப் பண்ணிவிட்டார்!


* “தெய்வத்தின் குரல்” ஐந்தாம் பகுதி, முதற் கட்டுரையான ‘தேவரும் தொழும் தெய்வ’த்தில் ‘மங்கள ச்லோகம்‘ என்ற உட்பிரிவும் அதைத் தொடர்ந்து வரும் சில உட்பிரிவுகளும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is லம்போதரர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  திருத்தலங்களில் விகட விநாயகர்கள்
Next