விகட சக்ர விநாயகர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

தோப்புக்கரணம் என்றதும் ஞாபகம் வருகிறது. அவர் விகடம் பண்ணிய சில க்ஷேத்ரங்கள் சொன்னேன். காஞ்சீபுரத்திலேயே ‘விகட சக்ர விநாயகர்’ என்ற பெயரில் அவர் இருக்கிறார். தம்பி மூலவராகவுள்ள குமரக் கோட்டத்தில் அந்த விகட சக்ரர் இருக்கிறார். அதென்ன விகட சக்ரரர் என்றால், சக்ரபாணியான மாமா விஷ்ணுவிடமும் practical joke-ஆகப் பிள்ளையார் விகடம் பண்ணியிருக்கிறார். ஒரு விநாயக சதுர்த்தியன்று ‘மருமான் பிறந்த நாளாச்சே!’ என்று மஹாவிஷ்ணு நிறைய ப்ரஸென்ட்களோடு கைலாஸத்துக்கு வந்தாராம். குழந்தை ஸ்வாமியானால் அந்த ப்ரஸன்ட்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு மாமாவின் சக்ரத்தைப் பிடுங்கிக் கொண்டு விட்டாராம். அந்த ஸுதர்சனம் இல்லாமல் மஹாவிஷ்ணு இருப்பாரா? பிள்ளையாரைப் பிடித்து அவரிடமிருந்து திரும்பி வாங்கிக் கொள்ள முயற்சி செய்தாராம். பிள்ளையார் ‘லபக்’கென்று அதை வாயில் போட்டு அடக்கிக் கொண்டு விட்டாராம்! மஹாவிஷ்ணு தம்முடைய சதுர்புஜத்தால் இரண்டு காதையும் பிடித்துக்கொண்டு தொப்புத் தொப்பென்று தோப்புக்கரணம் போட்டாராம்.1 அதைப் பார்த்துப் பிள்ளையார் குபீர் குபீரென்று சிரித்தாராம். அப்போது வாயில் அடக்கிக் கொண்டிருந்த சக்கரம் வெளியில் வந்து விழுந்ததாம். விஷ்ணு அதை எடுத்துக்கொண்டு விட்டாராம்.

விஷ்ணுவின் சக்கரத்தைத் தம்மிடம் வைத்துக் கொண்டு விகடம் செய்தவர்தான் விகட சக்ர விநாயகர்.

அவரிருக்கும் குமரக் கோட்டத்திலே மூலவரான குமாரஸ்வாமி பிரம்ம சாஸ்தா என்கப்பட்ட ரூபபேதத்தில் இருக்கிறார். ப்ரஹ்மாவை ப்ரணவர்த்தம் கேட்டு அவருக்கு ஸரியாகச் சொல்லத் தெரியாததால் ஜெயிலில் போட்டு விட்டு பாலஸுப்ரஹ்மண்யரே ஸ்ருஷ்டி பண்ணினாரென்று கதை இருக்கிறதல்லவா? அந்த ஸமயத்தில் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தாமே ப்ரஹ்மாவுக்குரிய ஜபமாலை கமண்டலுகளைக் கையிலே தரித்துக் கொண்டிருந்தார். குமரக் கோட்ட மூலவர் அப்படித்தான் இருக்கிறார். ப்ரஹ்மாவுக்கு ஆக்ஞை பிறப்பித்துத் தண்டித்ததால் ப்ரஹ்ம சாஸ்தா என்று அந்த அவஸரத்திற்குப் பேர். தம்பி ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரஹ்மாவின் கையிலுள்ள வஸ்துக்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் கோவிலில் அண்ணாக்காரர் பாலனகர்த்தாவான விஷ்ணுவின் சக்ரத்தை அபஹரித்த விகட சக்ர விநாயகராக இருக்கிறார்!

கஜகர்ணகர் விசிறிக் காதால் வண்டை விரட்டி விளையாடிச் சிரிக்கப் பண்ணுகிறவர். லம்போதரர் தொங்குகிற தொப்பையாலேயே பார்த்த மாத்ரத்தில் சிரிக்கப் பண்ணுகிறவர். விகடர் அநேக தமாஷ்கள், சேஷ்டைகள், குறும்புகள் செய்து சிரிக்கப் பண்ணுகிறவர். ஸுமூகராக சிரித்த முகத்தோடு முதல் பேரில் வந்தவருக்கு அடுத்தடுத்து இப்படி மூன்று பேர்கள் – கஜகர்ணகர், லம்போதரர், விகடர்.

ஸதா ஏதாவது கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிற லோக ஜனங்களை ஸந்தோஷப்படுத்த விக்நேச்வரருக்கு மிஞ்சி தெய்வமில்லை.


1 தோப்புக்கரண விளக்கம் “தெய்வத்தின் குரல்”, நான்காம் பகுதியில் ‘பெரிய இடத்துப் பிள்ளை’ என்ற முதல் உரையில் ‘திருமால் செய்த கோணங்கி‘ என்ற உட்பிரிவில் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is கேலிக் கவிதைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  விக்நராஜர்
Next