விக்ந ராஜர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அடுத்த பேர் ‘விக்நராஜர்’. அதாவது விக்நேச்வரர். விக்ந ஈச்வரரேதான் விக்நராஜா. ஈச்வரன் ராஜாவுக்கு ரொம்ப மேலே என்று தோன்றும். ஆனாலும் ‘ரூட் மீனிங்’ பார்த்தால் ஈச்வரனும் ராஜா செய்கிறதைச் செய்பவன்தான். ‘ஈச்’ என்கிற தாதுவுக்கு ஆட்சி பண்ணுவது என்றே அர்த்தம். ஆட்சி பண்ணுகிறவன் ஈச்வரன். ஸ்வாமி பெயர்களில் ராஜா, ஈச்வரன், நாதன் என்கிற வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில்தான் வரும். நடராஜா என்ற பேரையே நடேசன், நடேச்வரன் என்றும் சொல்கிறோம். ரங்கராஜா என்ற பேரையே ரங்கநாதன், ரங்கேசன் என்றும் சொல்கிறோம். ‘திருநாவுக்கு அரசர்’ என்பதையே ‘வாக்-ஈசர்’ என்கிறோம். அப்படி விக்ந ராஜா என்றாலும் விக்நேச்வரர் என்றாலும் ஒன்றுதான்.

பிள்ளையாருக்கு இருக்கப்பட்ட ப்ரத்யேகமான அதிகாரத்தைக் காட்டுவது விக்நராஜா என்ற பேர்தான். அவர் ப்ரத்யேகமாக எதற்காக ஏற்பட்ட ஸ்வாமி? ப்ரம்மா ஸ்ருஷ்டிக்கு; விஷ்ணு ஸ்திதிக்கு: ருத்ரன் லயத்துக்கு; துர்க்கை வெற்றிக்கு; லக்ஷ்மி செல்வத்திற்கு; ஸரஸ்வதி படிப்புக்கு; தன்வந்தரி வியாதி நிவாரணத்திற்கு என்றெல்லாம் பரமேச்வரனின் ப்ரபஞ்ச ஸர்க்கார்களில் ஒவ்வொருத்தருக்கு ஒரு ஆபீஸ் இருக்கிற மாதிரி, பிள்ளையாருடைய ஆபீஸ் என்ன? விக்னங்களைப் போக்குவதுதான். எடுத்த கார்யம் எதுவானாலும் அதில் விக்னம் – இடையூறு – உண்டாகாமலிருக்கவே எடுத்த எடுப்பில் அவரைத் தொழுகிறோம். விக்ன நீக்கத்திற்கென்றே ஏகப் பரம்பொருள் எடுத்துக்கொண்ட ரூபம்தான் விக்நேச்வரர் அல்லது விக்நராஜா.

விக்னத்துக்கு ஈச்வரர், ராஜா என்றால் விக்னங்களை உண்டாக்குவதில் தலைவர் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. விக்னங்களை அடக்கி அழிப்பதால் அவர் விக்ன ராஜாவாக இருக்கிறார். ஒரு ராஜாவுக்கு முக்யமான வேலை சத்ருக்களை அடக்கி வைப்பது. அப்படி விக்னங்களை அடக்கி வைக்கும் விக்ன ராஜா அவர்.

ஆராய்ச்சிக்காரர்கள் ஆதியில் உக்ர தேவதையாகப் பிள்ளையார் இருந்தபோது அவர்தான் விக்னங்களை உண்டு பண்ணுபவராக இருந்தாரென்றும், அதனால்தான் விக்நேச்வரர் என்ற பேர் ஏற்பட்டதென்றும், அப்புறம் ஸெளம்ய மூர்த்தியாக அவரை வழிபட ஆரம்பித்த பிறகும் அந்தப் பெயர் நீடித்து விட்டதென்றும் சொல்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is விகட சக்ர விநாயகர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  விக்னம் செய்வதும் உயர்நோக்கத்திலேயே
Next