“சொந்த” அநுபவம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

புராண காலத்து த்ருஷ்டாந்தங்கள் இருக்கட்டும். சொந்தத்திலேயே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது. இரண்டு சொல்கிறேன்.1

வேலூருக்குப் போயிருந்தோம். அங்கே சேண்பாக்கம் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த கணபதி மூர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு பிள்ளையார், இரட்டைப் பிள்ளையார் இல்லை; பதினோரு பிள்ளையார்கள்! அதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் அவை சில்பி அடித்துப் பண்ணியவையல்ல; பதினொன்றும் ஸ்வயம்பு மூர்த்திகள். ஏகாதச ருத்ரர்கள் உண்டு. இங்கே ஏகாதச விநாயகர்கள் இருக்கிறார்கள். பதினொன்றும் அமைந்திருக்கும் அமைப்பு ப்ரவணவாகாரமாக இருக்கும்.

நடுவாந்தரத்தில் பூமி மட்டத்தோடு மட்டமாக அந்த மூர்த்திகள் மூடிப் போயிருந்ததாம். விக்நேச்வரர் ப்ருத்வீ தத்வத்துக்கு மூர்த்தி என்று காட்டவோ என்னவோ, இப்படி மண்ணுக்குள் புதைந்து விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்! துக்கோஜி என்ற மஹாராஷ்டிர மந்திரி அந்த வழியாக ஒரு ராத்ரி வேளையில் ஸாரட்டில் போய்க் கொண்டிருந்தாராம். ‘டக்’கென்று அச்சு முறிந்து வண்டி நின்றுவிட்டது. இறங்கிப் பார்த்தால் பூமியில் ரத்தக் கறை இருந்தது. ஆனால் ஆள் யாரையும் காணோம். என்னவென்று புரியாமல் மனஸ் கலங்கி ராத்ரி பூராவும் அங்கேயே இருந்தாராம். விடிந்துதான் ஸாரட்டுக்குத் தச்சுப் பார்த்து ரிப்பேர் பண்ண முடியுமென்பதால் அப்படி தங்கும்படி ஆயிற்று. பிரயாணத்துக்கு இப்படி ப்ரதிபந்தகம் (விக்னம்) வந்ததே என்று வருத்தப்பட்டு, விக்நேச்வரரை ப்ரார்த்தித்துக்கொண்டு தூங்கிப் போய் விட்டார். விக்நேச்வரர் ஸ்வப்னத்தில் வந்தார். “அந்த இடத்தில் என்னுடைய ஏகாதச மூர்த்திகள் புதைந்து போயிருக்கின்றன. அதன்மேல் உன் வண்டிச்சக்கரம் இடித்ததினால்தான் ரத்தம் வந்துவிட்டது. அதைப் பற்றி வருத்தப்படாதே! மூடிக்கிடந்தது போதும், கோவில் கட்டிக் கொண்டு எல்லோரும் வரப்ரஸாதியாகப் பிரகாசிக்க வேண்டும் என்கிற ஸங்கல்பத்தில் நானேதான் பண்ணுவித்தது! அங்கே கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணிப் பரம புண்ணியம் ஸம்பாதிச்சுக்கோ!” என்றார். துக்கோஜி எத்தனை வருத்தப்பட்டாரோ அதற்கு வட்டியும் முதலுமாக ஸந்தோஷப்பட்டுக் கொண்டு அப்படியே பண்ணினார்.

அந்தக் கோவில் இருக்கிற பக்கமாக நாங்கள் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தோம். அப்போது என்ன ஆச்சு என்றால் …

சின்ன ஸ்வாமிகள்2 யானை மேல் வந்து கொண்டிருந்தார். அந்த யானை இடத்தை விட்டு மேலே போகாமல் அங்கேயே சுழண்டு சுழண்டு வந்தது. யானைப்பாகனும் மற்றவர்களுக்கும் எத்தனை தாஜா பண்ணியும் கேட்காமல் ரொம்ப நேரம் இப்படி முரண்டு பண்ணிற்று. ‘மேலேயானால் ஸ்வாமிகள் இருக்கிறார். இது இப்படிப் பண்ணுகிறதே! மதம் பிடித்து விட்டதா என்ன? கூட்டமாக ஜனங்கள் சேர்ந்திருக்கிறார்களே!’ என்று எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அப்புறம்தான் சட்டென்று ஞாபகம் வந்தது. ‘பக்கத்திலே சேண்பாக்கம் பிள்ளையார் இருக்கிறார். அவருக்கு 108 சிதறுகாய் போடுவதாக வேண்டிக்கொண்டிருந்தோம். ஆனால் ஸமயத்தில் அது மறந்து போயிடுத்து’ என்று! மறந்து போச்சு என்றால் என்ன? அசிரத்தை என்றுதான் அர்த்தம்! பூர்ண கும்ப மரியாதை, மாலை மரியாதை, ஜனங்களுடைய நமஸ்காரம் எல்லாம் நிறைய வாங்கிக் கொள்வதற்காக பவனி வருவதற்கு மறந்து போகவில்லையே! பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டதைச் செய்ய மட்டும் மறந்து போகலாமா? ஜனங்களுக்கு ச்ரத்தா – பக்திகளை உண்டு பண்ண வேண்டிய பொறுப்புள்ளவர்களே இப்படிப் பண்ணலாமா என்று பாடம் கற்பிக்கிறதற்காகத்தான் ஸ்வாமி இப்படிப் பண்ணியிருக்கிறாரென்று புரிந்தது. எனக்கே ஏதாவது கஷ்டம் உண்டாக்கினால்கூட அவ்வளவு மனஸில் தைக்காது எனறுதான் சின்ன ஸ்வாமிகள் ஏறி வந்த தம்முடைய ஸ்வரூபமான யானை மூலமே இடக்குப் பண்ணியிருக்கிறார் என்று தோன்றிற்று. அவர் [சின்ன ஸ்வாமிகள்] ஒன்றும் பயப்படாமல் தைர்யமாகத்தான் இருந்தார். வேண்டிக் கொண்ட எனக்கும், அதைத் தெரிந்து கொண்டிருந்த கார்யஸ்தர்களுக்குந்தான் பயம், பாடம் எல்லாம்!

உடனே பிள்ளையாருக்குச் சிதறுகாய் போட்டது.

யானையும் சட்டென்று ஸரியாகித் தன் பாட்டுக்கு மேலே போக ஆரம்பித்தது.

இது ப்ரத்யக்ஷத்தில் பார்த்தது.

அப்புறம் ஒரு நாள் அந்தப் பிள்ளையாருக்குப் அபிஷேக ஆராதனைகளும் விசேஷமாகப் பண்ணினோம்.

சிதறுகாய், அபிஷேகம் ஆகியவற்றால் அவருக்கென்றும் நாம் புதுஸாக லாபம், ஸந்தோஷம் உண்டாக்கிவிடவில்லை. அவர் என்றைக்குமே ஆனந்த ஸ்வரூபி, நித்ய த்ருப்தர். இந்த வழிபாடுகள் தனக்குப் பண்ண வைத்து நமக்கேதான் ஆனந்தம், ஆத்ம லாபம் ஏற்படுத்துகிறார்.

நிர்விக்னமாக ஒரு கார்யம் நடந்தால் நல்லபடி நடந்தது என்று த்ருப்தி ஏற்படுகிறது. அது வாஸ்தவந்தான். ஆனாலும் அதைவிட த்ருப்தி, ஸந்தோஷம் எப்போது உண்டாகிறதென்றால், ஒரு விக்னம் உண்டாகி அப்புறம் அது நிவர்த்தியாகிக் கார்யம் நிறைவேறுகிறபோதுதான்! வெய்யில் இருந்தால்தான் நிழலருமை தெரியும். ஜரிகையை கறுப்புத் துணியில் ‘அட்டாச்’ பண்ணினால்தான் இன்னும் பளிச்சென்று தெரிகிறது. அப்படி விக்னத்தோடு சேர்ந்து கார்யபூர்த்தி வருகிறபோதே அதிலே கூடுதல் ஸந்துஷ்டி ஏற்படுகிறது.

கார்ய பூர்த்தி இருக்கட்டும். அதோடு, அதைவிட பக்தியானந்தம் உண்டாவது விசேஷம். ‘நாம் மறந்து போனாலும் அவ்வளவு பெரிய ஸ்வாமி – எதுவும் தேவை இல்லாதவர், நம் தேவைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவர் – நம்முடைய அல்பப் பிரார்த்தனையை மறந்து போகாமல் நினைவு வைத்துக் கொண்டு, தெய்வ ஸஹாயமில்லாமல் நம்மால் முடியாது என்ற அறிவு அடக்கங்களையும் நமக்கு உண்டாக்கும் விதத்தில், இடைஞ்சல் என்ற பெயரில் பெரிய அநுக்ரஹமே பண்ணியிருக்கிறார்’ என்று பக்தியான ஒரு ஆனந்தம் உண்டாகிறது!

இடைஞ்சலைப் போக்குகிறவர், பின்னாடி போக்குவதற்காகவே எப்போதாவது இடைஞ்சலை உண்டு பண்ணுகிறவர் — அவர்தான் விக்நராஜா.


1 இவற்றிலொன்று “தெய்வத்தின் குரல்” நான்காம் பகுதியில், ‘பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார்’ என்ற உரையில் ‘ஸமீப கால ஸம்பவத்தில் புராண நிரூபணம்‘ என்ற பிரிவில் வெளியாகியுள்ளது.

2 1966 மே – ஜூனில்

3 ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is விக்னம் செய்வதும் உயர்நோக்கத்திலேயே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  விநாயகர் ; இரட்டைப் பிள்ளையார்
Next