விக்னம் செய்வதும் உயர் நோக்கத்திலேயே! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அங்கங்கே அவர் விக்னமும் கொஞ்சம் உண்டாக்கித்தான் இருக்கிறார். பரமசிவனே திரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்படும்போது தம்மை நினைக்காமல் புறப்பட்டதால் அவருடைய ரதத்தின் அச்சு முறிந்து போகும்படிப் பண்ணியிருக்கிறார். ஆனால் இதெல்லாமும், பரமேச்வரனேயானாலும் அவருங்கூட லோக நிர்வாகத்தில் மற்ற தெய்வங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை மதித்து அதற்கு கீழ்படிந்து காட்டுவதுதான் முறை என்று புரிய வைப்பதற்குத்தானேயொழிய, கெடுதல் பண்ண வேண்டும் என்பதற்காகவே கெடுப்பதல்ல. சட்டத்திற்கு Obey பண்ணணும்; தனி ஆஸாமியைவிட – அவன் ஸாமியாகவே இருந்தால்கூட – சட்டந்தான் பெரிது என்று புரியச் செய்வதற்கும், அடங்கிப் போகும் அடக்க குணம் எவருக்கும் இருக்க வேண்டும் என்று பாடம் கற்பிப்பதற்காகவுந்தான் அவர் எப்போதாகிலும் விக்னம் உண்டாக்குவது. அதனால் அப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் முடிவிலே நாசமானதாகக் கதையே கிடையாது. ஏனென்றால் விக்னத்தை உண்டாக்கிய விக்நேச்வரரே தத்-த்வாரா [அதன் வழியாக] அதனால் பாதிக்கப் பட்டவருக்கு, ‘நாம் பராசக்தியின் ஆட்சியில் விக்ன நிவாரணத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகார புருஷரை மறந்து நாமே ஸாதித்துவிட முடியும் எனறு கார்யத்தில் இறங்கியதால்தான் இப்படி உபத்ரவம் உண்டாகியிருக்கிறது’ என்ற நல்லறிவையும் ஊட்டி, அவர் அடக்கத்தோடு ப்ரார்த்தனை பண்ணும்படிச் செய்து விடுவார். அப்புறம் ஒட்டிக்கு இரட்டியாக நிரம்ப அநுக்ரஹம் புரிந்து விடுவார். அவர்தான் விக்நராஜா.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is விக்நராஜர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ' சொந்த ' அநுபவம்
Next