எல்லா ஜாதியினருக்கும் உயர்வு மனப்பான்மை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

நாயகர் என்று ஒரு ஜாதிப் பெயர் இருக்கிறது.

ஜாதி முறையினால் தாழ்த்தப்பட்டவர்களும், அவர்களைத் தாழ்த்தி வைப்பவர்களும் வேரூன்றி விட்டார்கள் என்ற அபிப்ராயம் இப்போது இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதில் சலுகைகள், ஆதாயங்கள் கிடைக்கின்றன என்பதால் எல்லாரும் அப்படிச் சொல்லிக் கொள்வதாகவும் இருக்கிறது. ஆனால் முன்னாளில் இப்படிக் கொள்வதாகவும் இருக்கிறது! ஆனால் முன்னாளில் இப்படி இல்லை. அந்தந்த ஜாதியாரும் தாங்கள் ஜன ஸமுதாயத்தில் உயர்ந்த இடம் பெற்றிருப்பதாகவே கருதினார்கள். ஜாதிப் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். நாலாம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு ஜாதிக்காரர்களுக்கு முதலியார் என்ற பேர் இருக்கிறது. ஸமூஹத்தில் முதலிடம் பெற்றவர்கள்தான் முதலியார். அதே மாதிரி வடக்கே ‘அகர்வால்’ என்கிறார்கள். அக்ர ஸ்தானம் என்றால் முதல் இடம். அப்படி ஜன ஸமுதாயத்தில் அக்ரமாக இருப்பவர் அகர்வால். பிள்ளை என்றாலும் மதிப்புக்கு உரியவர் என்று அர்த்தம். ரொம்ப உயர்ஜாதித் தேங்காயைப் பிள்ளைத் தேங்காய் என்பது வழக்கம். ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையைப் பார்த்தால் ப்ராம்மணர்களும் முதலி என்றும், பிள்ளை என்றும் சொல்லப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். சைவ ஸம்ப்ரதாயத்தைப் பார்த்தாலும்-ஸம்பந்தர் வேத ப்ராம்மணர், ஸுந்தரர் ஆதிசைவர், அப்பர் வேளாளர்; இந்த மூன்று பேரையும் சேர்ந்து ‘மூவர் முதலிகள்’ என்று சொல்வது மரபு. ‘ராஜ’ என்ற வார்த்தைதான் ராய, ராவ் என்றெல்லாம் ஆயிற்று. தமிழ் தேசத்திலிருக்கிற நாம் ‘ராவ்’ என்றால் மாத்வ பிராம்மணரைத்தான் நினைக்கிறோம். ஆனால் மாத்வர்கள் அதிகமுள்ள கன்னட தேசத்திலும், அதே போல ஆந்திராவிலுள்ள நாலாம் வர்ணத்தவர்களும் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அதுவே வடக்கே ராய், ரே என்றெல்லாம் இருக்கிறது. வைச்யர்களைச் செட்டியார் என்கிறோம். ‘ச்ரேஷ்டி’ என்பதுதான் செட்டி ஆயிற்று. ச்ரேஷ்டமானவர்கள் – உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் – என்று அர்த்தம். ச்ரேஷ்டிதான் வடக்கே ‘ஸேட்’ ஆயிற்று. கன்னட தேசத்தில் அதையே ஷெட்டி என்பார்கள். ‘அவன் உசந்த ஜாதி, இவன் தாழ்ந்த ஜாதி’ என்ற அபிப்ராயங்களும் போட்டிச் சண்டைகளும் இல்லாமல், யாரானாலும் பாரம்பர்யமாக ஏற்பட்ட தொழிலைச் செய்து ஒரு ஜன ஸமுதாயத்திற்கு வேண்டிய எல்லாவிதமான பணிகளையும் போட்டி பொறாமை இல்லாமல் பண்ணிக் கொடுத்ததோடு அவரவரும் முதல் ஜாதிதான், உயர் ஜாதிதான் என்ற pride-ஓடு நம் ஜனங்கள் இருந்து வந்ததை இந்தப் பெயர்கள் காட்டுகின்றன. பல வகுப்புக்காரர்களுக்கிடையில் இருந்து வந்த ஸெளஜன்யமும் இதில் தெரிகிறது. எப்படியென்றால் ஒரு ஜாதிக்காரர்கள் தங்களுக்கு உயர்வாகப் பேர் வைத்துக் கொண்டதை மற்றவர்களும் ஆக்ஷேபிக்காமல், அவர்களுக்கு அந்த pride இருக்கட்டும் என்றே எடுத்துக் கொண்டு, தாங்களும் அவர்களை அப்படித்தான் கூப்பிட்டிருக்கிறார்கள்.

தலைவர் என்ற அர்த்தமுள்ள ‘நாயக’ பதம் எல்லா வர்ணத்தினருக்கும் உரிய பெயராக இருந்து இந்த ஸமத்வத்தை – தற்காலத்தில் சொல்லும் காரிய ஸமத்வத்தை அல்ல; அதைவிட அவசியமான மனோபாவ ஸமத்வத்தை – நன்றாகக் காட்டுகிறது மஹாராஷ்ட்ராவில் ‘நாயக்’ என்று இருப்பவர்களில் பிராம்மணர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூர் நாயக வம்சம், மதுரை நாயக வம்சம் என்கிற இடத்தில் நாயகர்கள் ராஜகுலத்தவர்கள். கன்னட தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த நாயக்கர்களும், ஆந்திரத்தில் இந்த ‘நாயக’ தாதுவின் அடியாகவே நாயுடு என்று சொல்லப் படுபவர்களும் நாலாம் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்.

‘நாயக’ என்காமல் ‘நாய’ என்றே சொன்னாலும் போதும். ‘பாலன்’ என்பதையே ‘பாலகன்’ என்றும் சொல்கிற மாதிரி அநேக வார்த்தைகளுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ‘க’ சேர்ப்பதுண்டு. நாயன் என்றாலும் தலைவர்தான். மலையாளத்தில் நாயர் என்கிறார்கள். அவர்களும் நான்காம் வர்ணம்தான். தமிழ் தேசத்தில் உத்தமமான அடியார்களை ‘நாயனார்’ என்கிறோம். ஒருத்தர் நாயனார், பலபேர் நாயன்மார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் இல்லாத ஜாதியே இல்லை! அறுபத்து மூவரையும் பற்றி ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடிய திருவாரூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கே நயினார் என்றுதான் பேர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பிரஸித்தமான பெயர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  'M' என்னும் அடை
Next