விநாயகர் என்ற பெயரில் நாயகருக்கு முந்தி ‘வி’ இருக்கிறது. சிவகணத் தலைவரான பிள்ளையார் ‘நாயகர்’ என்ற பேருக்கு ரொம்பவும் பொருத்தமுடையவர் என்று தெரிகிறது. அதற்கு முந்தி ‘வி’ போட்டால் என்ன அர்த்தம்?
ஸம்ஸ்கிருதத்தில் வார்த்தைகளுக்கு முன்னே சேர்க்கிற prefix (முன்னடை) களில் ‘வி’ என்பது ஒன்று. இந்த ‘வி’ யின் விசேஷம் என்னவென்றால் அது பின்னாடி என்ன வார்த்தை சேருகிறதோ அதன் அர்த்தத்தை இரண்டு விதங்களில் மாற்றக்கூடும். ஒன்றுக்கொன்று முழுக்க வித்தியாஸமான இரண்டு விதங்கள்! ‘மலம்’ என்றால் அழுக்கு. ‘வி’ சேர்த்து ‘விமலம்’ என்றால் சுத்தம். இந்த இடத்தில் ‘வி’ என்பது பின்னே வரும் வார்த்தைக்கு ‘ஆப்போஸிட் மீனிங்’ உண்டாக்கும்படிச் செய்கிறதென்று தெரிகிறது. ஆனால் – ‘சுத்த’த்துக்கு ‘வி’ போட்டு ‘விசுத்தம்’ என்று வார்த்தை இருக்கிறது. அதற்கு சுத்தமாக இல்லாதது என்று ஆப்போஸிட் அர்த்தம் பண்ணிக் கொண்டால் தப்பு. இந்த இடத்தில் ‘வி’ என்பது பின்னே வரும் வார்த்தையை எதிர்ப்பதமாகப் பண்ணாது; அதற்கு மேலும் வலிவும் உயர்வுமே கொடுக்கும். ‘விசுத்தம்’ என்றால் பரம சுத்தமானது எனறு அர்த்தம்! விபரீதம் என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். ‘பரீதம்’ என்றால் முறையாகச் சுற்றிக் கொண்டிருப்பது. ‘விபரீதம்’ முறைகெட்டுத் தாறுமாக இருப்பது. இங்கே ‘வி’ எதிர்ப்பதமாக்கிவிடுகிறது. ‘ஜயம்’ – வெற்றி என்றால் ‘விஜயம்’ அதற்கு எதிர்ப்பதமான தோல்வியா என்றால், அப்படி இல்லையல்லவா? விசேஷமான, அதாவது சிறப்புப் பொருந்திய வெற்றியே விஜயம்.
விசேஷம் என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்ளலாம். சேஷம்-விசேஷம். ‘சேஷம்’ என்றால் மீந்துபோனது என்றே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதுவும் ஸரிதான். அதைவிட சிறந்த உள்ளர்த்தமும் உண்டு. மற்றதோடு சேராமல் தன்னுடைய உயர்வினால் அவற்றிடமிருந்து பிரிந்து நிற்பதும் ‘சேஷம்’ தான். ‘சிஷ்டர்’ என்று சான்றோர்களைச் சொல்கிறோமல்லவா? ‘சேஷ’த்திலிருந்துதான் ‘சிஷ்ட’ பதம் வந்தது. ஸமூஹத்தில் சராசரி ஜனங்களில் ஒருவராக இல்லாமல் பிரிந்து உயர்ந்து, [சிரித்து] distinct- ஆக இருந்து distinction பெற்றவர்களே சிஷ்டர்கள். சேஷம் என்பதற்கு ‘தன்னுடைய சிறப்பால் தனிப்பட்டு நிற்பது’ என்ற இந்த அர்த்தத்தைவிட ‘மீந்து போனது’ என்ற அர்த்தமே வியாபகமாக ஆனதால்தான், அந்தச் சிறப்பை வலியுறுத்திக் காட்டுவதற்காக ‘வி’ சேர்த்து விசேஷம் என்பது.