இருபொருளிலும் வி-நாயகர்! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘வி’ ப்ளஸ் ‘நாயகர்’ என்னும்போது ‘வி’ என்பது நாயகருக்கு எதிர் அர்த்தம் கொடுக்குமா?அல்லது அதை இன்னும் சிறப்புத் தந்து உசத்தி வைக்குமா?

இரண்டுந்தான்!

அதெப்படி என்று ஆச்சர்யமாயிருக்கலாம், சொல்கிறேன்.

‘தவன்’ என்றால் பதி. ‘மாதவன்’ என்றால் மா என்கிற மஹாலக்ஷ்மியின் பதி. ‘விதவா’ என்றால் பதி இல்லாதவள். அதே போல ‘விநாயகர்’ என்றால் ‘தலைவன் இல்லாதவர்’. எல்லோருக்கும் அவர்தான் தலைவர். அவருக்குமேல் தலைவர் இல்லை. அதனால் தலைவன் இல்லாதவர் வி-நாயகர்.

ஒரு பக்தர் பகவானிடம் போனாராம். “நான்தான் அநாதன் [அநாதை] என்றால் நீயும் அப்படியே இருக்கியே!” என்றாராம். “என்னையா அநாதன் என்கிறாய்?” என்று ஸ்வாமி கேட்டாராம். “ஆமாம். என்னைக் காப்பாற்ற ஒரு நாதன் இல்லாமல் நான் அநாதனாக இருக்கிறேன் என்றால் நீயும் உனக்கு மேல் நாதன் இல்லாததால் அ-நாதனாகத்தானே இருக்கே?” என்றாராம் அந்த பக்தர்.

தம்மிலும் மேலான ஒரு தலைவர் இல்லாதவர் விநாயகர்.

இங்கே ‘வி’ எதிர் அர்த்தம் கொடுக்கிறது.

இதற்கு நேர் மாறாக அதே ‘வி’ சிறப்புக் குறியாகவும் இருக்கிறதல்லவா? அந்த விதத்திலும் விக்நேச்வரர் விநாயகராக இருக்கிறார். அவர் ஸாதாரணமான நாயகர் (தலைவர்) அல்ல. ரொம்பவும் சிறப்புப் பொருந்திய, விசேஷமான விசிஷ்டமான நாயகர் அதனால் விநாயகர்.

தமக்கு மேல் நாயகன் இல்லாததாலும் வி-நாயகர். தாமே மிக மேலான நாயகராக இருப்பதாலும் வி-நாயகர். இரண்டு அர்த்தத்திலும் பேர்ப் பொருத்தமுள்ளவராக இருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is 'M' என்னும் அடை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ' அமர 'த்தில் பிள்ளையார் பெயர்கள்
Next