தூமகேது : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘தூமகேது’ என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். பஞ்சோபசாரத்தில் தூபம் காட்டுகிறோம். தூமம் : புகை. கேது என்றால் கொடி. புகையைக் கொடியாக உடையவர் தூமகேது. நெருப்பிலிருந்து புகை எழும்பிக் காற்றில் கொடி படபடவென்று அடித்துக் கொள்வதுபோலப் பரவுவதால் அக்னி பகவானுக்கு தூமகேது என்று பேர் இருக்கிறது. ஆனால் பொதுவில் தூமகேது என்றால் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல் உத்பாதகாரகமாகவே [உற்பாதம் விளைவிப்பதாகவே] எடுத்துக் கொள்கிறோம். காரணம் தூமகேது என்றால் வால் நக்ஷத்ரம் என்றும் அர்த்தம் இருப்பதுதான். வால் நக்ஷத்ரம் லோகத்துக்கு அமங்களத்தைக் குறிப்பது. லோக மங்கள மூர்த்தியான பிள்ளையாருக்கு அப்படிப் பேர் இருப்பானேன் என்று புரியாமலிருந்தது.

விநாயக புராணத்தைப் பார்த்தேன். விநாயகரைப் பற்றி இரண்டு புராணங்கள் இருக்கின்றன. ஒன்று ப்ருகு முனிவர் சொன்னது. அதனால் அதற்கு பார்கவ புராணம் என்று பேர். ‘ரகு’ ஸம்பந்தமானது ‘ராகவ’ என்பது போல ‘ப்ருகு’ ஸம்பந்தமானது ‘பார்கவ’. முத்கலர் என்ற ரிஷி உபதேசித்ததால் முத்கல புராணம் எனப்படும் இன்னொரு விநாயக புராணமும் இருக்கிறது. ப்ருகு – பார்கவ என்கிற ரீதியில் முத்கலர் ஸம்பந்தமானது ‘மௌத்கல்ய’. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் முத்கல புராணம் என்றே சொல்கிறார்கள். நான் இப்போது தூமகேது விஷயமாகக் குறிப்பிட்டது பார்கவ புராணத்தை.

அதில் உபாஸனா காண்டம், லீலா காண்டம் என்று இரண்டு பாகம். லீலா காண்டத்தில் ரொம்பவும் ஆச்சர்யமாக விக்நேச்வரருக்குப் பன்னிரண்டு அவதாரங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது. அதன்படி கணேசர் என்பது ஒரு அவதாரம்; கணபதி என்பது இன்னொரு அவதாரம். ஷோடச நாமாவில் வரும் வக்ரதுண்டர், பாலசந்திரர், கஜானனர் என்பவை அதில் வெவ்வேறு அவதாரங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் பெயர்கள். அவற்றில் தூமகேது என்ற அவதாரத்தைப் பற்றிய கதையும் இருக்கிறது. அதைப் பார்த்தபின்தான் இந்தப் பெயர் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்று புரிந்தது.

கதை என்னவென்றால்….. ரொம்ப நாளுக்கு முந்திப் பார்த்தது, நினைவு இருக்கிறமட்டில் சுருக்கமாகச் சொல்கிறேன். [சிரித்து] சுருக்கமாகச் சொன்னால்தான் ரொம்பத் தப்புப் பண்ணாமல் தப்பிக்க முடியும்.

தூமாஸுரன் என்று ஒருத்தன். பாகவதத்தில் வரும் வ்ருத்ராஸுரன், மஹாபலி மாதிரி சில அஸுரர்களிடம் மிக உத்தமமான குணங்களும் பக்தியும் இருக்கும். ஆனாலும் அஸுரப் போக்கும் தலை தூக்கிக் கொண்டுதானிருக்கும். அப்படி ஒருத்தன் இந்த தூமாஸுரன். அப்போது ஒரு ராஜா இருந்தான். கர்ப்பிணியாயிருந்த அவனுடைய பத்னிக்கு மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் புத்ரன் பிறந்து அந்தப் பிள்ளையினாலேயே தனக்கு மரணம் என்று தூமாஸுரனுக்கு தெரிந்தது. உடனே அவன் தன் ஸேநாதிபதியை அழைத்து நல்ல ராவேளையில் அந்த ராஜாவின் சயனக்ருஹத்திற்குப் போய் ராஜ பத்னியைத் தீர்த்துக்கட்டிவிட்டு வரும்படி சொல்லியனுப்பினான். ஆனால், அங்கே போன ஸேநாதிபதிக்கு ஒரு உத்தம ஸ்த்ரீயை, அதுவும் கர்ப்பிணியாக இருப்பவளைக் கொல்ல மனஸ் வரவில்லை. அந்த தம்பதியைப் பிரிக்கவும் மனஸ் வரவில்லை. ஆனபடியால் அவன் ஸதிபதிகளாகவே அவர்களைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டுபோய் ஒரு காட்டு மத்தியில் போட்டுவிட்டான். அங்கே விநாயக பக்தர்களான அந்த இரண்டு பேரும் ஸதா அவரை த்யானித்துக்கொண்டு அவரால்தான் கஷ்டங்கள் தீர்ந்து நல்லபடியாக ப்ரஸவமாகி ராஜ்யத்திற்குத் திரும்ப வேண்டும் என்று ப்ரார்த்தித்து வந்தார்கள்.

அவர்கள் வனாந்தரத்தில் தலைமறைவாக இருக்கிறார்களென்று தூமாஸுரனுக்குத் தெரிந்தது. உடனே அவனே அஸ்த்ரபாணியாக அங்கே போனான். அவன் ஸ்பெஷலைஸ் பண்ணியிருந்த அஸ்த்ரம் என்னவென்றால், அவன் பேர் என்ன? தூமாஸுரன்தானே? தூமம் என்றால் புகைதானே? அவன் ஒரே விஷப்புகையாகக் கக்குகிற அஸ்திரத்தைப் போடும் வித்தையிலேயே கைத்தேர்ந்தவனாக இருந்தான்.

இந்த நாளிலும் கண்ணீர்ப்புகை என்கிற ஆபத்தில்லாத tear gas-லிருந்து gas shell என்ற ப்ராணாபத்தான விஷவாயுக் குண்டுகள் வரை இருக்கிறதல்லவா? இப்போது கெமிகல்ஸை வைத்துப் பண்ணுவதை அப்போது மந்த்ர சக்தியால் பண்ணியிருக்கிறார்கள்.

தூமாஸ்திரத்தால் கர்ப்பிணியை அவள் வயிற்றிலிருக்கும் சிசுவோடும், பக்கத்திலிருக்கும் பதியோடும் சேர்த்து ஹதம் பண்ணிவிட வேண்டுமென்கிற உத்தேசத்துடன் அவன் போய்ப் பார்த்தால், அப்போதே அவள் மடியில் குழந்தை இருந்தது! பிள்ளையார்தான் அந்த தம்பதியின் ஸதாகால ப்ரார்த்தனைக்கு இரங்கி வைஷ்ணவாம்சமான புத்ர ஸ்தானத்தில் தோன்றிவிட்டார்! இதனால் தாம் ஸர்வதேவ ஸ்வரூபி என்று காட்டிவிட்டார். சிவகுமாரராகப்பட்டவர் விஷ்ணு அம்சமாகப் பிறந்தார் என்பதில் சைவ வைஷ்ணவ ஸமரஸமும் உசத்தியாக வந்துவிடுகிறது. ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்‘ என்று ஆரம்ப ச்லோகத்திலேயே வருகிறதே!

தூமாஸுரன் சரமாரியாக தூமாஸ்திரம் விட, சீறிக் கொண்டு பெரிய பெரிய மேகம் மாதிரிப் புகை அவர்களை நோக்கிப் பாய்ந்தது. அத்தனையையும் குழந்தைப் பிள்ளையார் தன்னுடைய சரீரத்துக்குள்ளேயே வாங்கிக் கொண்டு விட்டார். இனிமேல் அஸ்த்ரம் போட முடியாதென்று அஸுரன் களைத்துப் போய் நின்று விட்டான். அப்போது, அவனை ஸம்ஹாரம் பண்ணுவதற்கு பிள்ளையார் தீர்மானித்தார். ‘அதற்காக நாம் புதுஸாக அஸ்த்ரம் எதுவும் போடவேண்டாம். அவனே போட்டு நாம் உள்ளே வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் விஷப்புகையாலேயே கார்யத்தை முடித்து விடலாம்’ என்று நினைத்தார். உடனே உள்ளே ரொப்பிக் கொண்டிருந்த அத்தனை தூமத்தையும் ‘குபுக் குபுக்’ என்று வாயால் கக்கினார். அது போய் துமாஸுரனைத் தாக்கி அழித்துவிட்டது.

தூமத்தை அஸ்த்ரமாகக் கொண்டே வெற்றிக்கொடி நாட்டிக்கொண்ட பிள்ளையாருக்கு தூமகேது என்ற நாமா உண்டாயிற்று.

‘தூமம்’ என்பதை ‘தூம்ரம்’ என்றும் சொல்வதுண்டு. தூமகேதுவையும் தூம்ரகேது என்பதுண்டு.*


* ஒவ்வொரு யுகத்திலும் விக்நேச்வரர் ஒவ்வொரு பெயரும் உருவும் கொள்வதாகக் கணேச தந்த்ரங்கள் கூறுகையில் கலியுகத்திர்கான கணேசரின் திருநாமம் தூமகேது (தூம்ரகேது) எனத் தெரிவிக்கின்றன. பெயருக்கேற்ப அவர் புகை வண்ணராக இருப்பார். இரண்டே கரம் கொண்ட அவர் குதிரை வாஹனர் ஆவார்.

க்ருத யுகத்தில் நாமம் விநாயகர்; ஜ்யோதி வர்ணம்; பத்துக் கரம்; சிம்ம வாஹனம்.

த்ரேதா யுகத்தில் நாமம் மயூரேசர்; வெண்ணிறம்; ஆறு கரம்; மயில் வாஹனம்.

த்வாபர யுகத்தில் நாமம் கஜானனர்; சிவப்பு நிறம்; நான்கு கரம்; மூஷிக வாஹனம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ' அமர 'த்தில் பிள்ளையார் பெயர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கணாத்யக்ஷர்
Next