தூமகேதுர்-கணாத்யக்ஷ:. ஷோடச நாமங்களில் தூமகேதுவுக்கு அப்புறம் ‘கணாத்யக்ஷர்’. கண-அத்யக்ஷர். ‘அத்யக்ஷர்’ என்றால் ஸூபர்வைஸ் பண்ணுகிறவர், தலைவர். (‘தலை’யை வைத்தேதான் வெள்ளைக்காரர்களும் Head of the Government, Head-Priest என்றெல்லாம் சொல்கிறார்கள்!) ஸமீபகாலம் வரை வைஸ்சான்ஸலர்களை உப-அத்யக்ஷர் என்றே சொல்லி வந்தோம்.
கண-பதி, கணேசர் (கண-ஈசர்), கணாதிபதி (கண-அதிபதி), கணநாதர் என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தமோ அதுதான் கணாத்யக்ஷர் என்பதற்கும் அர்த்தம்.
பரமேச்வரன் தம்முடைய பூதகணங்களுக்கு அதிபதியாக விக்நேச்வரரையும், தேவகணங்களுக்கு அதிபதியாக இளைய பிள்ளை ஸுப்ரஹ்மண்யரையும் வைத்தார். “கஜாநநம், பூதகணாதி ஸேவிதம்” என்கிறோம். இளைய பிள்ளையை தேவஸேநாபதி என்கிறோம். அவர் இரண்டு விதத்தில் அப்படி இருக்கிறார்; தேவர்களின் ஸேனைக்கு அதிபதி; தேவேந்திரனின் குமாரியான தேவஸேனைக்குப் பதி! தேவர்களுக்கு ஆதிபத்யம் தாங்குவதைவிட, பூதங்களைக் கட்டி மேய்த்து அடக்கியாளுவதுதான் கஷ்டம். மூத்தபிள்ளை இந்தக் கஷ்டமான பொறுப்பை ‘ஈஸி’யாக ஆற்றிக் கொண்டு ஆனந்தமாயிருக்கிறார்.
தேவ கணம், மநுஷ்ய கணம் ஆகியவையும் அவருடைய மஹாசக்தியையும், அருள் உள்ளத்தையும் தெரிந்து கொண்டு அவருக்கு அடங்கிப் பூஜை பண்ணத்தான் செய்கின்றன. ஆனபடியால் அவர் கணாத்யக்ஷர் என்கிற போது ஸகலவிதமான ஜீவகணங்களுக்குமே அத்யக்ஷர் என்றும் சொல்லலாம்.