அதிலே முதலில் ஸுமுகர். பதினாறில் முதலில், முகப்பில் வருகிற பேர் ஸுமுகர். வரவேற்கும்போது ஸுமுகமாக – ‘முகமன் கூறுவது’ என்பார்கள். அப்படி – அழைக்கிற மாதிரி முதல் பேர் அமைந்திருக்கிறது.
ஸமூஹத்தில் எல்லா ஜனங்களும் ஸுமுகமாக, அதாவது ஒற்றுமையுடன், வாழ வேண்டும் என்று சொல்கிறோம். ‘ஸு-முகம் என்றால் நல்ல முகம். அன்பும் ஆனந்தமும் பொங்கிக் கொண்டிருப்பதுதான் நல்ல முகம். ஸுமுகம். தமிழில் ‘இன்முகம்’ என்று சொல்லுவது. ஹ்ருதயத்தில் உள்ள அன்பும் ஆனந்தமும் முகத்திலே வெளிப்படுவது ஸுமூகம். Mind -க்கு index – ஆக face இருக்கிறது என்கிறார்களல்லவா? அப்படி உள்ளத்திலுள்ள ப்ரேமையை வெளியில் காட்டும் ஸுமூகத்தை உடையவராக விக்நேச்வரர் இருக்கிறார். நல்ல மனஸைக் காட்டும் நல்ல முகம் ஸுமூகம். அப்படிப்பட்ட முகம் படைத்தவர் விக்நேச்வரர்.
‘சுக்லாம்பரதரம்’ ச்லோகத்தில் ‘ப்ரஸன்ன வதனம்’ என்று வருகிறதல்லவா? அதுவேதான் ஸுமுகம் அன்பிலேயும், அன்பாக இருப்பதால் ஏற்படும் ஆனந்தத்திலேயும் உள்ளம் அப்படியே மலர்ந்து அது முக மலர்ச்சியாக வெளியே தெரிவதுதான் ‘ப்ரஸன்ன வதனம்’. தெளிவு, ப்ரகாசம் ஆகியவைதான் ‘ப்ரஸன்னம்’. ‘ஸுமுக’த்தில் வருகிற ‘ஸு’வும் அந்த ப்ரஸன்னத்தைக் குறிப்பதுதான்.
விக்நேச்வரர் எந்த ரூபத்திலிருந்தாலும் அவருடைய உள்ளத்தின் அன்பும் ஆனந்தமும் முகத்தில் வெளிப்பட்டு அவர் ஸுமுகராகத்தான் இருப்பார். ஆனை ரூபத்தில் அவர் இருப்பதாலோ இவை அஸாதாரணமான அளவுக்கு அவர் முகத்தில் பொங்கிக் கொண்டிருக்கின்றன. எத்தனை நாழி வேண்டுமானாலும் அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும்படியான ஏதோ ஒன்று ஆனைமுகத்துக்கென்றே விஷேசமாக உண்டு. விசாலத்திற்கு விசாலம். காம்பீர்யத்திற்கு காம்பீரம், பரம சாந்தம், இன்னும் இன்ன என்று சொல்லத் தெரியாத ‘ஏதோ ஒன்று’ (சொல்லக்கூடியதாயிருந்து விட்டால் இத்தனை பெருமை இல்லை!) இப்படிப் பலவிதமான லக்ஷணங்கள் சேர்ந்த அழகு ஆனைமுகத்துக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட ஆனைமுகராக இருப்பதால் விக்நேச்வரர் ‘ஸுமுகர்’ என்ற பெயர் விசேஷமாகப் பொருந்துபவராக இருக்கிறார்.