விக்நேச்வரருக்குப் பதினாறு பேர் முக்யமாக சொல்லியிருக்கிறது.
ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்று பதினாறு பேர். “ஷோடச நாமா” என்று விசேஷமாகச் சொல்வது. ஸுலபமாக ஞாபகம் வைத்துக்கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு வாகாக இந்தப் பதினாறு பேர்களை இரண்டு ச்லோகங்களாக வைத்துக் பண்ணியிருக்கிறது.
ஸுமுகச் – சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: ||
தூமகேதுர் – கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந: |
வக்ரதுண்ட: சூர்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||
இதற்கப்புறம்தான் நான் முதலில் சொன்ன ச்லோகம். வழக்கமாக உள்ள இரண்டு வரி ச்லோகத்துக்கு வித்யாஸமாக மூன்று வரி ஸ்லோகம்.
ஷோடசைதாநி நாமாநி ய: படேத் ச்ருணுயாதபி |
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிர்கமே ததா ||
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே ||
விக்நேச்வரர் அநேக ரூபங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலே ஷோடச கணபதி என்று பதினாறு ரூபங்கள் ஒரு ‘க்ரூப்’ பாக உண்டு*. அந்தப் பதினாறு மூர்த்திகளுடைய பெயர்கள்தான் இந்தப் பதினாறு நாமாவா என்று பார்த்தேன். அப்படி இல்லை என்று தெரிந்தது. ஷோடச நாமாக்களில் மூன்றாவது கபிலர் என்பது. அப்படியென்றால் பாக்கு மாதிரி சிவப்பு நிறமாயிருப்பவரென்று அர்த்தம். ஆனால் ஷோடச ரூபங்களில் மூன்றாவதாக வருகிறவரையோ சரத்கால சந்திரன் மாதிரியான நிறமுள்ளவரென்று த்யான ஸ்லோகம் சொல்கிறது. ஷோடச ரூபங்களிலோ பதினொன்றாமவராக வருகிறவருக்கே ‘ஹேரம்ப கணபதி’ என்று பெயர் கொடுத்திருக்கிறது. இப்படிப் பல வித்யாஸங்கள். வரிசைக் க்ரமமாக இந்த ஷோடச நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும், ஷோடச கணபதிகளில் ஒவ்வொருவர் என்று இல்லை. இது வேறே. அது வேறே ‘க்ளாஸிஃபிகேஷன்’ என்று தெரிந்தது.
பதினாறு நாமாக்கள்தான் இப்போது நமக்கு விஷயம்.
* ராமேச்வரம் அக்னி தீர்த்தக் கரையில் ஸ்ரீசரணர்கள் எழுப்பியுள்ள ஆதி சங்கர விமான ஆலயத்தில் ஷோடச கணபதி மண்டபம் கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.