ஸ்கந்த சரித்திரத்திலே இது விவாஹம். அந்தச் சரித்திரத்திலே ஸந்நியாஸமும் உண்டு. ஆனால் விசித்ரமாக, ஸுப்ரம்மண்ய ஸ்வாமி விவாஹத்துக்கு முந்தி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டவர்! க்ருஹஸ்தாச்ரமத்துக்கு முந்தி ஸந்நியாஸாச்ரமம்! முதலில் ஸந்நியாஸம், அப்புறம் மஹாசக்திமானாக யுத்தம் செய்து சத்ரு ஸம்ஹாரம், அதற்கும் அப்புறம் அண்ணாவின் அநுக்ரஹ சக்தியைக் கொண்டு கல்யாணம் என்று ஸ்கந்த சரித்ரம் வேடிக்கையாக, புதுமையாகப் போகிறது.
அவர் ஸந்நியாஸியான நிலைதான் தண்டாயுதபாணி. “பழம் நீ-பழநி”க் கதை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். வாஸ்தவத்தில் அது தண்டாயுதமில்லை. தண்டம்தான். நாங்கள் வைத்துக் கொண்டிருக்கிற, ஆயுதமாயில்லாத, மூங்கில் கழிதான். தண்டாயுதம் என்று ஆயுதமாக இருக்கப்பட்டது ஸேநா நாயகனின் ஆயுதம். லலிதாம்பாளுடைய ஸேநாநாயகிக்கு தண்டினி என்றே பேர். அப்படிப்பட்ட ஆயுத தண்டத்தை வீசிச் சண்டை போடுவதற்கு முந்தியே மனஸை அடக்கி வைப்பதற்கு அறிகுறியான சாந்தி தண்டத்தைப் பிடித்துக் கொண்டு பழநி மலை உச்சியில் நின்றவர் தண்டபாணி. நமக்கு வேண்டுமானால் மனஸை அடக்குவதுதான் மஹாயுத்தமாயிருப்பதால் இந்த தண்டமும் ஆயுதமாயிருக்கலாம். அவருக்கு அது ஒரு அலங்காரம்தான். நமக்கு reminder-ஆக (ஞாபகமூட்டியாக) அவர் வைத்துக் கொண்டிருப்பதுதான்.
எந்த ஸ்வாமிக்குமில்லாத பரமஞானமான துறவறக்கோலம்! இப்படி அதிபால்யத்தில் மொட்டை அடித்துக் கொண்டு, ஒரு சின்ன கோவணத்தைக் கட்டிக் கொண்டு தண்டமும் கையுமாக வேறே ஸ்வாமி உண்டா? அழகுக்கு ஈடில்லாதவர், சக்தியில் ஈடில்லாதவர், ஸ்தானத்தில் ஈடில்லாமல். தேவ நாயகனாக அவதரித்தவர் ஆறு நாள் பால்ய லீலைக்குள்ளேயே இப்படி ஆண்டி ஆகி, “ஞானபண்டித ஸ்வாமீ!” என்று பாடி மனஸ் உருகும்படியான சாந்தி ஸ்வரூபமாக நிற்கிறாரென்றால், அதற்கு யார் காரணம்?
விக்நேச்வரர்தான்!
இவர் அப்பா-அம்மாவைப் பிரதக்ஷிணம் பண்ணிப் பழத்தை அடித்துக் கொண்டு போனதால்தான் அவர் தோற்றுப் போய் ஆண்டியாகி விட்டார்.
லோகத்துக்கெல்லாம் பரம சாந்திக்கும் ஞானத்துக்கும் மூர்த்தியாக அவரை இப்படி ஆக்கின ‘க்ரெடிட்’ பிள்ளையாருக்குத்தான்!
அப்புறம் தாயார்-தகப்பனார் போய் ஸமாதானம் பண்ணினார்கள். இதெல்லாம் ஒரு நாடகந்தானே? கோவணாண்டியும் தடபுடலாக யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு கமான்டர்-இன்-சீஃபாகக் கிளம்பினார். ஆனாலும் தாம் ஆண்டியாயிருந்த அவஸரம் [கோலம்] லோகத்தில் என்றைக்கும் இந்த்ரிய நிக்ரஹத்தையும், ஞானத்தையும், சாந்தத்தையும் ‘வைப்ரேட்’ செய்து கொண்டிருக்கட்டுமென்று கிருபை கூர்ந்து அந்த அவஸரம் என்றைக்கும் பிம்பரூபத்தில் ஜீவகலையோடு இருக்கும்படியாக “சார்ஜ்” பண்ணிவிட்டுக் கிளம்பினார்.
தேவஸேநா நாயகன் என்ற உச்சமான அப்பாயின்மென்டுடனேயே ஸுப்ரஹ்மண்யர் பிறந்தது;அவர் வள்ளி கல்யாண மூர்த்தி என்ற கோலத்தில் தம்பதியாக, நமக்கு ஒரு கருணைத் தாயாரைச் சேர்த்துக் கொண்ட பிரபுத் தகப்பனாராக ஆனது; ஞான வைராக்ய ஸ்வாமியாகப் பழநியில் நித்ய ஸாந்நித்யம் கொண்டது ஆகிய மூன்று முக்கியமான ஸம்பவங்களிலும் விக்நேச்வரரின் நெருங்கிய ஸம்பந்தமிருக்கிறது.
அதனால்தான் அந்தத் தம்பிக்கு இவர் தமையன் என்று தெரிவிக்கவே ஸ்பெஷலாக ஒரு நாமா இருக்கணுமென்று ‘ஸ்கந்த பூர்வஜன்’ என்று ஷோடச நாமாவளியில் கொடுத்திருக்கிறது.
பூர்வஜர் என்றால் முன்னவர், முதலில் தோன்றியவர் – ஆதி. இந்தப் பேரோ பதினாறில் கடைசியாக, அந்தமாக, வருகிறது. ஆதியையும் அந்தத்தையும் சேர்த்து ஸம்பூர்ணத்வத்தைக் காட்டுவதாகத் தோன்றுகிறது.