ரஸமாக ஒன்று தோன்றுகிறது:
இந்த ஷோடச நாமாக்களைச் சொல்கிறவருக்கு, “வித்யாரம்பே” [கல்வி கற்கத் தொடங்கும்போது] , “விவாஹே” [கலியாணத்தின் போது] “ப்ரவேசே” [ஓரிடத்திற்குள் செல்லும்போது] , “நிர்கமே” [ஓரிடத்திலிருந்து புறப்படும்போது] , “ஸங்க்ராமே” [சண்டை சச்சரவுகளில்] “ஸர்வ கார்யேஷு” [எல்லாக் கார்யங்களிலுமே] விக்கினம் உண்டாகாது என்று பலன் சொல்லியிருக்கிறது. இந்த ஒவ்வொன்றுக்குமே ஸ்கந்த சரித்திரத்தில் proof, சான்று, இருப்பதாகத் தெரிகிறது.
“வித்யாரம்பே:” பரமேச்வரனின் ஞான நேத்ர ஜ்யோதிஸிலிருந்து உண்டான ஸுப்ரம்மண்யருக்கு அக்ஷராப்யாஸம் என்ற அர்த்தத்தில் வித்யாரம்பம் அவசியமேயில்லை. அவரே “ஓம் இத்-யேகாக்ஷரம்” என்ற பிரணவத்திற்கு அர்த்தமாக இருந்து கொண்டு, அதைப் பிதாவுக்கு உபதேசம் பண்ணினவர். ஆனபடியால் அவர் விஷயத்தில் வித்யாரம்பம் என்பது ப்ரஹம் வித்யையை அநுபவமாக அநுஷ்டிக்கும் ஸந்நியாஸத்தை ஸ்வீகரிப்பதுதான். அப்படி அவர் ஸந்நியாஸி ஆனதற்கு விக்நேச்வரர் பழப் போட்டியில் ஜயித்ததுதான் காரணம்.*
“விவாஹே”: வள்ளி கல்யாண ஸமாசாரம். அதில் அண்ணாக்காரரின் முக்யமான பங்கை முன்னாலேயே பார்த்து விட்டோம்.
தம்பியின் இல்லறம், துறவறம் இரண்டிற்குமே அவர் தான் key கொடுத்திருக்கிறார்! தம்பி குழந்தையாயிருந்த போது அவரை ஸந்நியாஸியாக்கி, அப்புறம் யௌவனத்தில் கிருஹஸ்தராக்கியிருக்கிறார்! தம்முடைய பரமபக்தையான ஒளவையையோ அவள் நல்ல யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டிய ஸமயத்தில் கிழவியாக்கி ஒரு ஸந்நியாஸினி மாதிரி செய்திருக்கிறார்! பெரும்பாலும் பால ப்ரஹ்மசாரியாகவே நாம் பூஜிக்கும் ஸ்வாமியின் லீலை இப்படி வேடிக்கையாக இருக்கிறது!
“ப்ரவேசே”: இந்த லோகத்தில் இப்படி ஸுப்ரஹ்மண்யம் என்று ஒரு திவ்ய மங்கள் மூர்த்தி பிரவேசிப்பதற்கு-தோன்றுவதற்கு-காரணம் சூரபத்மாவின் நிபந்தனைப்படி விக்நேச்வரர் அவனுடைய ஸம்ஹாரத்திற்கு ‘டிஸ்க்வாலிஃபை’ ஆகியிருந்ததுதான். அதாவது, ‘நெகட்டிவ்’ ஆக ஸுப்ரஹ்மண்ய ப்ரவேசத்திற்குக் காரணம் அவர்தான்.
“நிர்கமே”: ‘ப்ரவேசம்’ என்றால் ஒன்றில் புகுவது, ‘நிர்கமம்’ என்றால் ஒன்றைவிட்டுப் போய்விடுவது. வள்ளி கல்யாணம், பிள்ளையார் நடத்திக் கொடுத்து முடிந்தவுடன் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தாம் பிரவேசித்திருந்த இந்த உலகத்தை விட்டுவிட்டு ஸ்கந்த லோகம் என்கிற தம்முடைய நித்யவாஸ ஸ்தானத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார். இரண்டு பத்னிகளோடும் புறப்பட்டுப் போய் விட்டார். வள்ளி கதை வருவதற்கு முந்தியே தேவஸேனா கல்யாணமாகி இருந்தது.
அவர் லோகத்தில் அவதாரம் பண்ணியதற்கு இரண்டு காரணம். சூரஸம்ஹாரம் ஒன்று. இன்னொன்று, அவருடைய மாமா மஹாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருத்தி தேவராஜன் பெண்ணாகவும், மற்றவள் வேடராஜன் பெண்ணாகவும் வளர்ந்து வந்தவர்களை அவர் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது.
முதலில் திருச்செந்தூர் தாண்டி ஸமுத்ரத்தில் போய் அஸுரஸம்ஹாரம் முடித்தார். அப்புறம் திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங்கே அவளோடு இருந்து கொண்டிருக்கும்போது நாரதர் வந்து சித்தூரில் வள்ளி அவரே நினைவாக ப்ரேமையில் உருகிக் கொண்டிருப்பதை சொன்னார். ஆகையால் திருப்பரங்குன்றம் கோவிலில் அவர் வல்லீ-தேவஸேனா ஸமேதராக இல்லாமல், ஒரு பக்கம் தேவஸேனையும், மறுபக்கம் வள்ளிக்குப் பதில் அவளுக்காகத் தூது சொல்ல வந்த நாரதருமாகத்தான் இருக்கிறார். ஸத்குருவானவர் ஜீவாத்மாவிடம் பரமாத்மாவின் க்ருபையை திருப்பி விடுவதற்கு ரூபகமாக நாரதர் வள்ளியிடம் ஸுப்ரம்மண்யரைத் திருப்பிவிட்டார். அதனால் சிவனுக்கும் குருவான ஸ்வாமி, நாரத குருவுக்குத் தன்னுடைய ஸந்நிதியிலேயே ஒரு பக்கம் இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
நாரதர் சொன்னதன் மேல் அவர் புறப்பட்டுப் போய் வேடன், விருத்தன், வேங்கைமரம் எல்லாமாக வேஷம் போட்டு அப்புறம் அண்ணாவின் அருளால் வள்ளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் புக்தி – முக்தி என்கிற இம்மை-மறுமைத் தத்வங்கள் இரண்டோடும் சேர்ந்துள்ள தம்முடைய ஸாந்நித்யம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என்று இரண்டு பத்னிகளோடும் ‘ஹனிமூன்’ மாதிரிக் கொஞ்சநாள் திருத்தணியில் இருந்தார். பிற்பாடு ஸ்கந்தலோகம் போய்விட்டார். அது தான் நிர்கமம். அதற்குப் படி போட்டுக் கொடுத்தது வள்ளி கல்யாணம். அதோடு அவருடைய அவதாரத்தின் இரண்டாவது ‘பர்ப’ஸும் நிறைவேறி விட்டது.
வள்ளி கல்யாணத்திற்குப் படி போட்டுக் கொடுத்தவர் யானையாக வந்து அவளைத் துரத்திய பிள்ளையாரேயாகையால், ஸுப்ரஹ்மண்யர் நம் லோகத்திலிருந்து ஸ்கந்த லோகத்திற்கு ‘நிர்கமம்’ பண்ணவும் அவர்தான் உதவி இருக்கிறார்.
“ஸங்க்ராமே:” ஸங்க்ராமம் என்றால் சண்டை, யுத்தம். “ஸங்க்ராம சிகாவல” என்று ‘கந்தரநுபூதி’யில்கூட வருகிறது. யுத்தத்தில் மஹா பராக்ரமம் காட்டிய ஸுர ஸேநாதிபதி ஸுப்ரம்மண்யர். அப்படி யுத்தம் ஆரம்பிக்கிறதற்கு முன்னால் அவர் நிச்சயமாக விக்நேச்வர பூஜை பண்ணித் தானிருப்பார். ஏனிப்படிச் சொல்கிறேனென்றால் விக்நேச்வர பூஜை செய்யாமல் த்ரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தகப்பனார், பண்டாஸுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தாயார் ஆகியவர்களுக்கும் விக்கினங்கள் ஏற்பட்டு, அவர்கள் அந்தப் பூஜை பண்ணிய பிறகுதான் விக்கினம் நிவிருத்தியாயிற்று என்பதால் தம்பிக்காரர் முதலிலேயே ஜாக்ரதையாக முழித்துக் கொண்டு பூஜை பண்ணித்தானே இருப்பார்? அது மாத்திரமில்லை. சூரஸம்ஹாரத்திற்கு இவர் புறப்படுவதற்கு முன்னாடி அவரோடு பழத்துக்குப் போட்டி போட்டு பந்தயம் வந்ததில் தோற்றே போயிருக்கிறார். அந்த விரக்தியில் ஆண்டியானார். அந்த ஆண்டி வாழ்க்கையிலாவது ஜயித்தாரா, அதாவது அது தக்கி நின்றதா என்றால் இல்லை. மாதா பிதாக்கள் வந்து கேட்டுக் கொண்டு, அஸுர ஸம்ஹாரத்திற்காகவே அவர் அவதரித்திருப்பதை ஞாபகப் படுத்தியவுடன், ஸந்நியாஸத்திற்கு முழுக்கு போட்டுவிட்டுச் சண்டைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. அதனால் அண்ணா அநுக்ரஹம் இருந்தால்தான் கார்யம் ஸித்தியாகும் என்று இப்போது அவருக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனபடியால் அவரைப் பூஜை பண்ணிவிட்டுதான் புறப்பட்டிருப்பார்.
“ஸர்வ கார்யேஷு”: அண்ணாவுக்குப் போட்டியாகப் பழத்துக்குப் பந்தயம் புறப்பட்டது பலிக்கவில்லை. அவரைப் பிரார்த்திக்காமல் ஆண்டியானதும் நிற்கவில்லை என்பதால் யுத்தத்திற்குப் போகும் போது அவரைப் பூஜை பண்ணினாலும் பிற்பாடு வள்ளியை அடைவதற்காகப் போனபோது அவரை மறந்துவிட்டார். ஆசைவேகம் எத்தனை பொல்லாதது என்று லோகத்திற்குக் காட்டுவதற்காகவே இப்படி ஏற்பட்டது. விக்னமும் நிறைய வந்தது. அப்புறம் அவரை ப்ரார்த்தித்தே கார்யஸித்தி பெற்றார். அதனால் அதற்கப்புறம் “ஸர்வ கார்யேஷு” என்றபடி எந்தக் கார்யமானாலும் அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் விக்நேச்வர பூஜை பண்ணித்தானிருப்பார். அதைப் பற்றி ஸந்தேஹமேயில்லை.
ஆகையாலேயே பிள்ளையாரின் ஷோடச நாமாக்களை முடிக்கிறபோது, அதற்குப் பலச்ருதியில் சொல்லப்படும் அத்தனை விதங்களிலும் விக்நேச்வரரின் அநுக்ரஹத்தைப் பெற்ற ஸ்கந்தரைக் குறிப்பிட்டு, அவருடைய பூர்வஜரென்று பூர்த்தி பண்ணியிருக்கிறது.
* விக்நேச்வரருக்கு ‘குமார குரு’ என்று ஒரு நாமமிருப்பது ஸ்ரீசரணர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டு, இதிலிருந்து அவர் ஏதோவொரு சமயத்தில் முருகனுக்கு வித்யாரம்பம் செய்தவராகவே தெரிகிறதென விண்ணப்பிக்கப்பட்டது. உடனே அவர்கள் “குமார குரு என்று தூர்வாயுக்ம அர்ச்சனையில்தானே வருகிறது?” என வினவினார்கள். ஆம், இரட்டை அருகம்புற்களால் 21 முறை அர்ச்சனை செய்வதற்கு ஏற்பட்ட 21 நாமாவளியில்தான் இந் நாமம் வருகிறது. (தூர்வா – அருகம்புல், யுக்மம் – இரட்டை.)
தொடர்ந்து ஸ்ரீசரணர்கள், “பரமசிவனுக்கு ப்ரணவார்த்தம் தெரியாதா என்ன? ஆனாலும் லோகத்துக்கு அடக்க குணத்தையும், குரு பக்தியையும் தெரிவிக்கணுமென்றே பிள்ளையிடம் உபதேசம் வாங்கிக் கொண்டார். அதே மாதிரி, அப்பாவுக்கும் உபதேசித்தவர், தகப்பன் ஸ்வாமி என்றெல்லாம் கியாதி பெற்றுவிட்ட தாமும் சிஷ்யனாகி இன்னொருத்தரிடம் பாடம் கேட்டு லோகத்துக்கு விநயத்திலே பாடம் புகட்டணுமென்றே ஸுப்ரஹ்மண்யரும் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ‘அப்பா ஏற்கனவே தமக்கு சிஷ்யராகி விட்டதால் உபதேசிக்க மாட்டார். அவரிலே பாதியாகவே உள்ள அம்மாவும் மாட்டாள்’ என்பதால் அவர் தமையனாரிடம் பாடம் கேட்டுக்கொண்டு அவரை குமார குரு ஆக்கினார் போலிருக்கிறது! அவருடைய ஸந்நியாச ஸ்வீகரணத்திற்குப் பிள்ளையாரே காரணம் என்பதை வித்யாரம்பம் என்று நான் சுற்றி வளைத்து ஸம்பந்தப் படுத்தியதைவிட இது ‘டைரக்டா’க ஸுப்ரம்மண்யரின் வித்யாரம்பத்தில் அவரை குருவாகக் கொண்டு வந்து உட்கார்த்திவிடுகிறது” என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.