வழி என்பது திசை ஸம்மந்தப்பட்ட விஷயம். ஒரு வழி இருந்தால் அது ஏதாவது திசையில் போய் ஒரு இடத்திற்குக் கொண்டுவிடும். இடம்-space-என்று ஏற்பட்டு விட்டால் உடனே திசையும் வந்துவிடும். வடக்குப் பக்கம், தெற்குப் பக்கம் என்றிப்படி திசை சம்பந்தப்படாமல் ஒரு இடமும் இருக்க முடியாது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்காகவே வழி என்பது இருக்கிறது. அதனால் அதுவும் திசையோடு ஸம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.
வாழ்க்கை நடத்துவதிலும் வழியைச் சொல்கிறோம். நல்ல வழியில் வாழ்க்கை நடத்த வேண்டும், கெட்ட வழியில் கூடாது என்கிறோம். வாழ்க்கையில் ப்ரச்னைகள் அநேகம் ஏற்படும்போது, ‘அது தீர என்ன வழி?’ என்று யோசிக்கிறோம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிறோம். இப்படி வாழ்க்கையையும் ஒரு பயணமாக உருவகப்படுத்திக் கொண்டு அதில் வழி என்பதைப் பற்றிப் பேசுகிறோம். வாழ்க்கை நடத்துவது என்று சொல்லும் போதே நடை ஸம்பந்தம் வந்து விடுகிறது! ‘நடப்பது’ என்றால் அதைச் செய்ய ஒரு வழி இருக்கத்தானே வேண்டும்? இங்கிலீஷிலும் ‘way of life’ என்று வழியை வைத்தே சொல்கிறார்கள். Space- இடத்தில் – ஒரு பாயின்டிலிருந்து இன்னொன்றுக்குப் போகிற மாதிரி, Time – காலத்தில் – ஒரு பாயின்டிலிருந்து இன்னொன்று, அப்புறம் இன்னொன்று என்று போய்க் கொண்டேயிருப்பதுதான் வாழ்க்கை. ‘போய்க்கொண்டே’ என்று சொல்கிற போதும் மறுபடி வழி என்ற ரூபகம் [உருவகம்] வந்து விடுகிறது. அதேபோல, எண்ணங்கள் ஒன்றிலிருந்து ஒன்றுக்குப் போய்க் கொண்டேயிருப்பதையும் வாழ்க்கையில் பார்க்கிறோம். இப்படி, இருந்தது இருந்தபடி இல்லாமல் மாறிக் கொண்டே போவது (‘போவது’ என்று சொல்வதை கவனிக்கணும்) – மாறிக்கொண்டே போகிற கார்யம் என்பது போட்ட இடத்தில் கிடக்காமல் சலனப்பட்டு ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டேயிருப்பதற்கு ஸமதையாகத் தெரிகிறது. சலனம், movement என்ற எண்ணம் வாழ்க்கையின் அமைப்பிலும் தெரிவதால் அதை ஒரு பயணமாகச் சொல்லி அதில் வழி வழி என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது.
திசை தெரிந்துதான் ஒரு வழியில் போக வேண்டும். தெரியாவிட்டால், போகவேண்டிய இடத்திற்கு போகாமல் எங்கேயாவது தப்பாகப் போய்ச் சேருவோம்.
வாழ்க்கையிலும் திசையிருக்கிறது! வாழும் வழி இல்லாதவர்களை ‘திக்கற்றவர்கள்’ என்கிறோம். திக்கும் திசையும் ஒன்றேதானே? ஸம்ஸ்கிருதத்தில் ‘திச்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் ‘திக்’ வருகிறது. ‘திச்’ நீண்டு ‘திசா’. அதாவது திசை என்றாகிறது. ‘திக்’ என்பதையே தமிழில் ‘திக்கு’ என்கிறோம்.