ஒருத்தருடைய பூர்வோத்தரம் என்னவென்று கேட்கிறோம். வாழ்க்கையில் அவர் முந்தி எப்படி இருந்தார், பிந்தி எப்படி இருந்தார் அல்லது இருப்பார் என்று விசாரிப்பதையே ‘பூர்வோத்தரம் கேட்பது’ என்கிறோம். பூர்வம் – முந்தி; உத்தரம் – பிந்தி. ஒரு புஸ்தகத்தில் கூட முன் பகுதியைப் பூர்வபாகமென்றும் பின் பகுதியை உத்தரபாகமென்றும் சொல்கிறோமல்லவா?’ ‘பூர்வ’ என்பதற்கு ‘முன்’ என்றும், ‘உத்தர’ என்பதற்கு ‘பின்’ என்றும் அர்த்தம் சொல்கிறபோதும் இடத்தின் ரூபகம் வந்துவிடுகிறது. ‘முன்னால்’, ‘பின்னால்’ ஆகியவை space -ல் ஏற்படுபவைதானே?
ஸம்ஸ்க்ருதத்தில் நன்றாகவே அந்த வார்த்தைகளை திசையோடு ஸம்பந்தப்படுத்தியிருக்கிறது. ‘பூர்வம்’ என்றால் கிழக்கு; ‘உத்தரம்’ என்றால் வடக்கு.
ஆனால் பூர்வம் (கிழக்கு) ‘முன்’ என்றால் பச்சிமம் (மேற்கு) அல்லவா ‘பின்’னாக இருக்கணும்? உத்தரம் எப்படிப் பூர்வத்திற்கு எதிர்ப்பக்கமாகும்? ஏனிப்படிப் ‘பூர்வோத்தரம்’ என்று வார்த்தை வந்தது?- என்று யோசித்தேன். அப்புறம் புரிந்தது.
வாழ்க்கைச் சகடம், life cycle என்கிறபடி அது ஒரு வட்டம் மாதிரிச் சுழன்று கொண்டு போவதாகத் தெரிகிறது. அதோடு, குறுக்காகப் போகாமல் ப்ரதக்ஷிணமாகப் போவதே மரியாதையைக் காட்டுவதால் வாழ்க்கை வட்டத்திலும் ப்ரதக்ஷிணமாகக் கிழக்கில் ஆரம்பித்துப் பார்வையை விட வேண்டுமென்றும் தெரிகிறது. கிழக்கேயிருந்து குறுக்காக நேர் எதிரே போனால்தான் மேற்கு. ப்ரதக்ஷிணமாகப் போனால் கிழக்குக்கு அப்புறம் தெற்கு, அப்புறம் மேற்கு, அதோடு முடிந்து விடாமல் அதற்கும் மேற்கொண்டு வடக்கு வந்து, அதற்கப்புறம் மறுபடி கிழக்கிலேயே சேர்ந்துவிடும். ஆகவே வாழ்க்கை ஆரம்பம் கிழக்கு என்றால் முக்கால் வட்டம் தாண்டி ரொம்பப் பிந்தி வருவது வடக்கு தான்!
எதிர்த்திசையிலிருந்தால் எதிரி! எதிரி, எதிர்ப்பது என்ற வார்த்தைகளே அப்படித்தான் உண்டாயிற்று. ஆகையால் [கிழக்கு-மேற்கு என்று அர்த்தம் கொடுக்கும் படியாகப்] ‘பூர்வ – பச்சிமம்’ என்று வைத்திருந்தால் அமங்களமாயிருந்திருக்கும். கிழக்கு – முன், மேற்கு – பின் என்னும்போது மேற்கு ப்ருஷ்ட பாகம், புறமுதுகு ஆகிய அஸந்தர்பமான விஷயங்களை ஞாபகமூட்டுவதாக வேறு இருக்கிறது. உத்தரம் – வடக்கு என்பதோ கிழக்கிலிருந்து செங்குத்தாக உச்ச நிலையைக் காட்டிக்கொண்டு இருக்கிறது! அதோடு ஆதியந்தம் ஒன்றாகிவிடும் மங்கள பூர்ணமாக மறுபடி கிழக்கிலேயே கொண்டுவந்து சேர்த்து விடுகிறது. அதனால் தான் ‘பூர்வோத்தரம்’ – ‘கிழக்கு – வடக்கு’ – என்று வைத்திருக்கிறார்கள் என்று ஊஹம் பண்ணிக் கொண்டேன். கிழக்கும் வடக்கும்தான் ஜபம் பண்ண, பூஜையை வைக்க எல்லாம் ‘எடுத்த’ திசைகள் என்பதும் ‘பூர்வோத்தரம்’ என்று சொல்வதன் பொருத்தத்தைக் காட்டுகிறது.
வாழ்க்கையில் ‘பூர்வோத்தரம்’ என்று வந்துவிட்டதாலேயே புஸ்தகம் முதலான எல்லாவற்றிலும் முன்-பின் என்பதற்கு அப்படியே சொல்லும் வழக்கும் ஏற்பட்டிருந்திருக்கிறது.