அவர் பண்ணும் உபகாரம் யாரும் பண்ண முடியாது. “கடைத்தேற வேண்டுமானால் அம்மா நமக்கு சரணமாக மாட்டாள். (அதாவது அம்மாவிடம் அடைக்கலம் புகுந்தால் அவளால் நம்மை மாயைக்கு அந்தண்டை தூக்கிப் போட முடியாது. நம்மிடம் எவ்வளவோ ப்ரியம் காட்டி நமக்காக எத்தனையோ த்யாகங்களெல்லாம் செய்கிறவள்தான் அவள் என்றாலுங்கூட அவளும் மாயைச் சேற்றில்தான் இருப்பவளாகையால் அதிலிருந்து நம்மை அவளால் தூக்கிப் போட முடியாது. தூக்கினால் பளு கூடுவதில் இரண்டு பேரும் இன்னம் புதைவதாகத்தான் ஆகும்.) அதே மாதிரிதான் அப்பாவும் சரணமாக மாட்டார். கூடப் பிறந்தவர்கள், மற்ற பந்து மித்ராள் எவரும் சரணமாக மாட்டார்கள். குருபாதம் தான் சரணம்” என்று ஆசார்யாள் நெஞ்சைத் தொடுவதுபோலச் சொல்கிறார்.
சரணம் ந பவதி ஜநநீ
ந பிதா ந ஸோதராச்சாந்யே |
சரணம் தேசிக சரணம்.1
‘ச(sa)ரணம் தேசிக ச(cha)ரணம்’. Saranam என்றால் அடைக்கலம்; Charanam என்றால் பாதம். “அடைக்கலம் குரு பாதமே” என்பதை “ச(sa)ரணம் தேசிக ச(cha)ரணம்” என்று சொல்லியிருக்கிறார். ஆசார்யாள் இங்கே ‘தேசிக’ என்ற வார்த்தையை குருவுக்குப் போட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அவர் இப்படிச் சொல்லியிருப்பதைத்தான் அவரையே தோடகாச்சார்யாள் ஸ்தோத்ரம் செய்தபோது “பவ சங்கர தேசிக மே ச (sa)ரணம்’ என்று திருப்பியிருக்கிறார்?2
தாயார் தகப்பனார்கள் இஹ லோகத்தில் ஜன்மாவைக் கொடுத்து, இந்த லோகத்தில் நன்றாக வாழப்பண்ணி, இந்த லோகத்துக்கான ஸொத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இதெல்லாம் நிலையில்லாதவை. நிலையான ஸொத்தை – என்றும் அழியாத ப்ரஹ்மாநுபவத்தைத் தருபவர் குருதான். “ஸொந்தப் பிள்ளையாட்டமா நெனச்சு ஆத்ம வித்யையை உனக்குக் கொடுத்திருக்கேம்பா’, “ஸ்வஸுதவத் அஸக்ருத்-த்வாம் பாவயித்வா”: “ஸொந்தப் புத்ரனாக பாவித்து திரும்பத் திரும்ப (உபதேசித்திருக்கிறேன்)” என்று குரு சிஷ்யனிடம் உபதேச முடிவில் சொல்வதாக ரொம்பவும் touching-ஆக ‘விவேக சூடாமணி’யில் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.3 இந்த ச்லோகத்திற்கு ஒரு பாடபேதம் இருக்கிறது. அதன்படி ‘தத்துலம் அஸக்ருத்-த்வம் பாவயேதம்’ என்று இருக்கிறது. அதாவது சிஷ்யனிடம் குரு. “ஈடிணை இல்லாத இந்த உபதேசத்தை நீ திரும்பத் திரும்ப பாவனை பண்ணிக் கொண்டிரு” என்று சொல்வதாய் அர்த்தமாகும். எனக்கென்னவோ அதைவிட குரு தாமே சிஷ்யனுக்குத் தாயும் தந்தையுமாகி, அலுக்காமல், சலிக்காமல் அவனுடைய உள்ளத்தில் நன்றாகப் பதியும் வரையில் திரும்பத் திரும்ப உபதேசம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பாடம்தான் ச்லாக்யமாகத் தோன்றுகிறது. “திரும்பத் திரும்ப” என்பதைத்தான் ‘அஸக்ருத்’ என்று சொல்லியிருக்கிறது.
1 ஆசார்யாளின் ‘பால போத ஸங்க்ரஹம்’.
2 தோடகர் விஷயம் பிற்பாடும் வரும்.
3 ச்லோ. 575 (“ஸகல நிகம”)