குரு உபதேசமின்றி ஞானமில்லை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘இது’ என்று கிட்டத்திலும் கிட்டேயாக ஆத்மாவைக் ‘கண்டு கொண்ட’ ஜீவன் ‘இதம் த்ரன்’ ஆகிறான். கிட்டே உள்ளதை ‘இதம்’ என்று குறிப்பிடுவது. ‘த்ர’ என்பது த்ருஷ்டி ஸம்பந்தப்பட்டது. ஆகையால் ‘இதம் த்ரன்’ என்றால் ஆத்மாவை தனக்கு அத்யந்தமான உள்வஸ்துவாகக் கண்டு கொண்டவன் என்று அர்த்தம். கண்டுகொண்ட பூர்ண ஞானி ‘இதம் த்ரன்’.’ஆனாலும் பெரியவர்களுடைய பேரை அப்படியே சொல்லக்கூடாது. ரொம்பவும் பூஜிக்கத்தக்கவர்களின் பேரை அப்பட்டமாகச் சொல்வதற்கு பயப்பட வேண்டும்1. அதனால் ‘இதம் த்ரன்’ என்பதை ஒரு எழுத்து எடுத்து விட்டு “இந்த்ரன்” என்று பேர் கொடுத்திருக்கிறது – இப்படி அந்த [ஐதரேய] உபநிஷத் சொல்கிறது.

உயிர் ஒரு உடம்பிலே உச்சந்தலை த்வாரத்தின் வழியாக உள்ளே போய் ஜன்மா எடுப்பது; அப்புறம் வஸ்துக்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது; அப்படிப் பார்த்து, ப்ரஹ்ம ஸ்வரூபமான தானேதான் எங்கேயும் வியாபித்திருப்பது என்று தெரிந்து கொண்டு, ‘ப்ரஹ்மத்தை இதோ இங்கே கண்டு கொண்டேன்’ என்பது; அப்படிச் சொன்னதால் ‘இதந்த்ரன்’என்று பெயர் பெறுவது; அப்புறம் மரியாதைப் பண்பு காரணமாகவும், தேவர்களுக்கு ஒளிவு மறைவாயிருப்பதிலேயே ப்ரியமாதலாலும் ‘இதந்த்ரன்’ என்பது ‘இந்த்ர’னானது – என்றிப்படி உபநிஷத்து சொல்லிக் கொண்டு போகிறது. அந்த இடத்தில் குருவைப் பற்றி ப்ரஸ்தாவமே இல்லை.

ஆனால் ஆசாரியாள் பார்த்தார். ‘அதெப்படி ஒரு உயிர்தானே அலசி ஆராய்ந்து பார்த்து ப்ரஹ்ம ஞானம் பெற முடியும்? குருவின் உபதேசமும் அநுக்ரஹமும் இல்லாமல் அது நடக்காதே!’ என்று பார்த்தார். சொல்லாமலே ஸகலமான பேருக்கும் தெரிந்த விஷயந்தானே என்பதால்தான் சொல்லாமல் விட்டிருக்கிறது. ஒரு பையனுக்குக் கலெக்டர் வேலை ஆச்சு என்றால், ‘ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணி’ என்று சொல்லாமல் தெரியுந்தானே? அப்படி ப்ரஹ்ம ஞானம் வந்தது என்றால் ‘குரு உபதேசத்தால்’ என்பது அதிலேயே ‘அன்டர்ஸ்டுட்’ தான். இருந்தாலும், ‘நாம் பாஷ்யத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துவிட வேண்டும்’ என்று ஆசார்யாள் நினைத்தார். அதனால், ‘ஒரு சரீரத்தில் தலைக்குழி வழியாகப் பிரவேசித்துப் பிறவி எடுத்த உயிரானவன் வஸ்துக்களை அலசி ஆராய்ந்து பார்த்தான்’ என்று வருவதற்கு அப்புறம், ‘ப்ரஹ்மமே எல்லாவற்றிலும் வ்யாபித்திருப்பதைக் கண்டு கொண்டான்’ என்று வருவதற்கு முன்னால், குருவின் அநுக்ரஹத்தையும் உபதேசத்தையும் சேர்த்து, அதனாலேயே அவன் கண்டு கொண்டான் என்று முடித்திருக்கிறார். ரொம்பவும் சக்தி வாய்ந்த வார்த்தைகளில் குரு மஹிமை நன்றாகத் தெரியும்படி இங்கே பாஷ்யம் செய்திருக்கிறார். ‘பரம கருணை வாய்ந்த ஆசார்யன் ஆத்ம ஞான விழிப்பை உண்டாக்கும் உபநிஷத் மஹாவாக்ய சப்தங்களை அந்த ஜீவனின் கர்ண மூலத்தில் – செவிப்பறைக்குள் – பறையறைந்து, பேரிகை கொட்டி’2 அவன் ப்ரஹ்மத்தின் ஸர்வ வியாபகத்வத்தைக் காணும்படி செய்கிறார் என்று சொல்லியிருக்கிறார். தூங்குகிற கும்பகர்ணனை பேரிகை கொட்டி எழுப்பின மாதிரி, அஞ்ஞான தமஸில் ஆழ்ந்து நித்ரை செய்கிற சிஷ்யனின் காதுக் குருத்திலேயே பேரிகை அடிக்கிறாற்போல, ஜீவ ப்ரஹ்ம அபேதத்தைச் சொல்லும் உபநிஷத் மந்த்ரத்தை குரு உபதேசிக்கிறார்; பரம கருணாமூர்த்தியான ஆசார்யர் உபதேசிக்கிறார்; உபதேசித்து ஆத்ம விழிப்பை உண்டாக்குகிறார். விழித்துக் கொண்டவுடன் நாம் வஸ்துக்களைக் காண்பதுபோல சிஷ்யன் ப்ரஹ்மத்தைக் கண்டுகொள்கிறான்…..

ஆசார்யாள் உபநிஷத்திடம் ரொம்பவும் ஸ்வதந்திரம் எடுத்துக் கொண்டு, இல்லாததை, சொல்லாததை ஸப்ளை பண்ணியதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. ஆசார்யன் மூலமாகத்தான் ஞானம் என்பதே உபநிஷத் மதம். பல இடங்களில் அப்படி இருக்கிறது. ‘கண்காணா காட்டிலே கண்ணைக் கட்டிக் கொண்டுவிடப் பட்டவனுக்கு எப்படி ஏற்கனவே வழி கண்டவர்களே வழி சொல்லித் தந்து காப்பாற்ற முடியுமோ அப்படி அஞ்ஞான ஜீவிக்கு ஞானியான குருதான் ஞான ஸித்திக்கு வழி சொல்லித் தர முடியும்’ என்று சாந்தோக்யத்தில் இருக்கிறது.3 அந்த இடத்தில்தான், “ஆசார்யவானான மனிதனுக்கே ஞானம் உண்டாகும் – ஆசார்யவான் புருஷோ வேத” என்று வருகிறது.

“குருமேவாபிகச்சேத்” – “குரும் ஏவ அபிகச்சேத்” – “குருவையே தேடிக்கொண்டு போய் அடையவேண்டும்” என்று முண்டகோபநிஷத் சொல்கிறது.4 வஸ்துக்களை அலசி ஆராய்ந்து பார்த்தவனை ஐதரேயத்தில் சொல்லியிருக்கிறதென்றால் இங்கே லோகங்களைப் பரீக்ஷித்துப் பார்த்தவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இரண்டும் ஒன்றுதான் அப்புறம் அவனுக்குத் தானாக ஞானம் வந்தமாதிரி விஷயம் தெரியாதவர்களுக்குத் தோன்றும்படி ஐதரேய மந்திரங்கள் போகின்றன. ஆனால் இங்கேயோ, “லோகங்களைப் பரீக்ஷித்துப் பார்ப்பவன், ‘இவையெல்லாம் கர்ம ஸம்பந்தப்பட்டவையே. ஆத்ம தத்வமோ கர்ம ரஹிதமானது [கர்மம் இல்லாதது] . அதைக் கர்ம ஸம்பந்தமுள்ளவற்றால் அடையமுடியாது’ என்று புரிந்து கொண்டு லோகத்திடம் வைராக்யமடைய வேண்டும்; அப்புறம் ஆத்மாவை அடைந்து, அறிந்து, அநுபவிப்பதன் பொருட்டு குருவையே தஞ்சம் புகவேண்டும் – குருமேவாபிகச்சேத்” என்று ஸ்பஷ்டமாக இருக்கிறது.

‘குருவையே அடையவேண்டும்’ என்று இருப்பதற்கு ‘குருவை அடைந்தேயாகவேண்டும்’ என்று அர்த்தம். வேறே வழி கிடையாது என்று அர்த்தம். அடுத்த மந்திரத்தில் ப்ரஹ்ம ஞானியான அந்த குரு அவனுக்கு ப்ரஹ்ம வித்யையை உள்ளவாறு உபதேசித்து உய்வு தருவார் என்று வருகிறது. ஆகையால் [ஐதரேய பாஷ்யத்தில்] ஆசார்யாள் unwarranted-ஆக எதையோ சேர்த்துச் சொல்லிவிட்டதாக நினைப்பதற்கு இடமில்லை.

“குருமேவாபிகச்சேத்”துக்கு பாஷ்யம் செய்யும்போது “நன்றாக சாஸ்திரங்களறிந்த சாஸ்த்ரஜ்ஞன்கூட ஸ்வதந்திரமாகத் தானே ப்ரஹ்மஞான ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது என்று வலியுறுத்தித் தெரிவிப்பதற்காகத்தான் ‘குரும் ஏவ’ – குருவையே – என்று போட்டிருக்கிறது” என்று ஆசார்யாள் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கண்டவரே நமக்கு வழிகாட்டியாக இருந்து காணச் செய்யமுடியும். அவர்தான் spiritual guide-ஆன தேசிகர்.


1 “பூஜ்யதமத்வாத்-ப்ரத்யக்ஷ-நாம-க்ரஹண பயாத்” என்று ஆசார்ய பாஷ்யத்திலிருப்பதை அப்படியே அடியொற்றி மொழிந்தது.

2 “பரம காருணிகேன ஆசார்யேண ஆத்மஜ்ஞான ப்ரபோதக்ருத் சப்திகாயாம் வேதாந்த மஹாவாக்ய பேர்யாம் தத் கர்ண மூலே தாட்யமானாயாம்…”

3 vi 14.1-2 தாத்பரியம். “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “குரு பக்தி” என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is குருவின் பிரியமும் தியாகமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ' தேசிக ' பதத்தின் சிறப்புக்கள்
Next